வெகுநேரம் உறக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்து நேரத்தை விரயமாக்க எண்ணம் இல்லை.. அப்படியே காலாற நடந்து வரலாம் என்று சாலையில் இறங்கினேன்.
என்னை ஓர் நாய் 🐕 பின்தொடர்ந்தது.நான் ஓர் தேநீர் கடையில் தேநீர் குடிக்க அதுவும் எனதருகே உட்கார்ந்து நான் பருகும் தேநீர் கோப்பையை பார்த்தது ஏக்கமாக.. வீட்டில் 🏡 இருப்பவர்களுக்கே இங்கே வெகுமரியாதையோடு ?உணவு கிடைக்கும் போது தெருநாய்களை கண்டுக் கொண்டு உணவிடுபவர்கள் வெகு சிலரே.. அதன் பார்வையில் பசி இருப்பது அது எனது தேநீர் கோப்பையை பார்க்கும் போதே தெரிந்தது.. நான் அந்த தேநீர் கடையில் உள்ள ரொட்டி இரண்டை வாங்கி போட்டேன்.ஒருசில நொடிகளில் ரொட்டியை காலி செய்து விட்டு இன்னும் ஏதேனும் போடுவேனா என்று பார்த்ததில் தெரிந்தது அதன் பசி அடங்கவில்லை என்று.. நான் தேநீர் குடித்து முடித்து விட்டு எனது வீட்டுக்கு செல்ல மீண்டும் சாலையில் இறங்கி நடந்தேன்.சாலையில் வெகு சில வாகனங்களே ஆக்கிரமித்து ரொம்ப வேகமாக பயணித்தது.. அந்த வாகனங்களுக்கு தெரியாது இரவின் அமைதியை சீர்குலைக்கிறோம் என்று..சாலைகள் மிகவும் பொறுமையாக அந்த வாகனத்தின் சீற்றத்தை தாங்கி இருக்கக்கூடும்..தனது சீற்றத்தை வெளிப்படுத்தாமல் பயணிப்பவர்களின் சுமைதாங்கியாக இருந்தது..
நான் சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் நனைந்து பயணித்தேன் இரவை ரசித்தபடி.. என்னுடன் யாரோ பயணிப்பதை உணர்ந்து சற்று திரும்பி பார்த்தேன்.அதே நாய் 🐕 வாலை ஆட்டியபடி பவ்யமாக என் பின்னால் ஓடி வந்தது.
நான் சற்றே புன்னகை பூத்து நடக்க துவங்கினேன்..சிறிது நேர நடைக்கு பின் வாசல் கதவை திறந்து உள்ளே போனேன்.. நாய் உள்ளே வரவில்லை.. வாசலுக்கு வெளியே நின்றது..அது ஏன் அதற்கோர் எல்லை வகுத்து கொண்டது தெரியவில்லை.. அப்படி அது செயல் பட எவரும் கற்றுக் கொடுக்கவில்லை..இரண்டோர் இடத்தில் அடி வாங்கி இருக்கலாம்.. அந்த பயம் அதை ஆட்கொண்டு இருக்கலாம்..
நான் வாசலை கடந்து உள்ளே இருக்கும் மெயின் கதவை திறந்து வேக வேகமாக சமையலறைக்கு சென்றேன்.. அங்கே நான் இரவு சாப்பிட்டு விட்டு வைத்திருந்த சாதம் இருந்தது.. பிரிட்ஜில் இருந்து தயிர் எடுத்து அதில் ஊற்றி நன்றாக பிசைந்து வெளியே வந்தேன்..
அந்த நாய் அங்கேயே உட்கார்ந்து இருந்தது.. நான் ஏதேனும் தருவேன் என்று அதற்கு தோன்றி இருக்கக்கூடும்.நான் தட்டில் இருந்து ஓர் பீங்கான் தட்டிற்கு மாற்றி அதனருகில் வைத்தேன்.. கொஞ்சம் தயக்கமாக உண்ண ஆரம்பித்தது..அது மிகவும் வேகமாக பின்பு பயம் இல்லாமல் உண்டு முடித்து என்னை ஏறெடுத்துப் பார்த்தது.அதன் பார்வையில் பசி தணிந்த மலர்ச்சி தெரிந்தது.பின்பு என் கையை தனது நாக்கால் சிநேகமாக வருடியது..பின்பு நான் அங்கே அதனோடு கேட்டுக்கு வெளியே நான் அமர்வதற்கு வைத்திருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டேன்.அதுவும் எனது காலடியில் அமர்ந்து கொண்டது.
அது ஏதோ முனகி என்னிடம் பேசியது.. நானும் அதனோடு பேசினேன்.. அதற்கு என் பாஷை புரிந்ததா தெரியவில்லை.அதன் பாஷையும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஆனால் நாங்கள் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. எங்கள் உரையாடலில் எவரை பற்றிய குறைகளும் இல்லை.புறம் பேசவே இல்லை நாங்கள் பேசிய அந்த நெடிய உரையாடலில்.. ஆனால் நாங்கள் இருவரும் மிகவும் உற்சாகமாக இருந்தோம்.
அந்த இரவும் கூட எங்கள் உரையாடலில் அகம் மகிழ்ந்து இருக்கக் கூடும்.. எங்கள் உரையாடலில் அதிக நட்சத்திர 🌟 காட்சிகளை பரிசளித்து கொண்டு இருந்தது.
மனிதர்களின் உரையாடல் ஏதோவொரு வகையில் புறம் கூறுவதாகவே போட்டி பொறாமையாகவே இருந்து விடுகிறது.. அகங்காரம் எப்படியேனும் ஒருவரை ஆக்கிரமித்து அந்த உரையாடல் சலிப்பில் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு விடுகிறது.
எங்கள் உரையாடலில் அந்த பேச்சிற்கு இடமில்லை.. அந்த ஜீவன் என்னோடு வெகுநேரம் பேசி அதன் ஏக்கத்தை பூர்த்தி செய்து கொண்டது..போலவே இருந்தது அதன் செயல்பாடு..
அதன் இனத்தோடு பேச நினைத்த பல விசயங்களை என்னோடு பேசி இருக்கலாம்.. ஓர் உணவுக்கே ஆயிரம் போட்டிகள் நிறைந்த உலகில் வேறு எந்த விசயத்தையும் பேச கூட நேரம் இருக்க போவது இல்லை.. அந்த ஜீவனை எத்தனையோ பேர் கடந்து இருப்பார்கள்.அதுவும் அவர்களோடே கொஞ்ச நேரம் பயணித்து இருந்து ஏமாற்றம் மட்டுமே பெற்று இருக்கக் கூடும்.
வெகு வேகமாக ஓடும் போட்டி உலகத்தில் ஓர் ஜீவனின் பசியை நிதானமாக கண்ணில் அறிந்து உணவு கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரமயமாக்கல் நிறைந்த நாட்டில் கருணை கிடைக்காது என்று அதற்கு தெரிய நியாயம் இல்லை தானே.அதனால் உணவும் கிடைத்து தன்னோடு பேசவும் ஒருவர் இருக்கிறார் என்று அது நினைத்து இருக்கக்கூடும்..
பல நாய்களுக்கு ஏசி மற்றும் பல மருத்துவ வசதிகள் பேரன்பு கிடைக்கும் போது இந்த தெருநாய்களுக்கு குறைந்த பட்சம் கருணை இல்லாமல் பசி போக்க உணவு கிடைப்பதே பெரும்பாடாவதை நினைத்து வேதனை தான் மேலோங்குகிறது.
எங்கள் உரையாடல் முடிந்தது.. முடிந்தது என்று சொல்வதை விட முடித்துக் கொண்டோம்.. நான் அதற்கு கையசைத்து விடை பெற்றேன்.. அதுவும் மெல்ல தனது வாலை அசைத்து நான் அமர்ந்த திண்ணை அடியில் படுத்துக் கொண்டது..அது அவ்வாறு செய்தது எனக்கு நன்றி கடன் செலுத்துவதாக நினைத்து கொண்டேன்.. பெரிய பல உதவிகள் செய்தாலும் ஓர் நன்றி உணர்வை கூட வெளிப்படுத்த தெரியாத உலகில் இன்னும் அந்த உணர்வை தனது கொள்கையில் இருந்து தளர்த்தாத இந்த ஜீவராசிகளும் கூட ஓர் அதிசயம் தான் என்று நினைத்து படுத்தேன்.. படுத்தவுடன் மனநிறைவில் உறக்கம் என்னை ஆட்கொண்டது ஆக்ரோஷமாக.. வெளியே இருக்கும் அந்த ஜீவராசிகளும் உறங்கி இருக்கக்கூடும் மனிதர்களின் இத்தனை வகையா என்று ஆச்சரியப்பட்டு கொண்டே..
மீண்டும் பிரிதோரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊.
#பயணத்தில் ஒரு சந்திப்பு (8).
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக