அந்த ஏதோவொரு
தேடலில் தான்
நான் தொலைந்து
போய் இருக்க வேண்டும்...
ஒரு முறை அந்த வழியில்
சென்றதற்காக இவ்வளவு
பெரிய தண்டனை வேண்டாம் என்று
என்னை நேசித்தவர்கள்
அங்கே கதறிக் கொண்டு
தன் நிலை மறந்து
கணத்த இதயத்தோடு
என் நிலைமையை
நினைந்து நினைந்து
உருகுகிறார்கள் வெகுநாட்களாக...
நானோ அங்கே யாரோ
ஒருவரால் வீசப்பட்ட
அழுதுக் கிடக்கும் சிறு குழந்தை
பொம்மையின் நிலையை நினைத்து
அதனை சமாதானப்படுத்த
அதை எங்கெங்கோ வேடிக்கை காட்டி
பரந்த பிரபஞ்சத்தில் ஓடிகளைப்பதை
பார்த்து காலம்
என் கால்களை கட்டிக் கொண்டு
பாசமழையை பொழிந்து
அணைத்துக் கொண்டு
பரிதவிக்கிறது...
இங்கே புரிதலின்
பல்வேறு நுணுக்கங்களின்
அதிசயத்தை கண்டு
சில நிமிடங்களில் சுதாரித்து
மீண்டும் தொலைந்து போகிறேன்...
அதோ அங்கே ஏதோவொரு தேடலில்
மீண்டும் நான்...
என்னை தேடுபவர்கள்
என்னை தேடுவதை
விட்டு விட்டு அதோ அங்கே நடக்கும்
தெருக் கூத்தில்
தன் மனதை பறிக் கொடுத்து விட்டு நாளைய பணி நாளுக்கான
ஓய்வை தேடி
அந்த இரவில் தொலைந்து
போகிறார்கள்...
இங்கே நிலையாமையின்
நிழல் மட்டுமே அழியாத
கோடாக தொடரும் என்பது
இந்த பிரபஞ்சத்தின் விதி என்று
அங்கே காலம் முணுமுணுப்பதை
யாரும் கேட்க நாதிகளற்று
காற்றில் கரைகிறது அதன் மொழி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 27/04/25/ஞாயிற்றுக்கிழமை.
அந்தி மயங்கி இரவு தொடரும் வேளையில்..