இங்கே குடும்பத்தோடு
ஏதோவொரு நிகழ்வில்
பிணைத்துக் கொண்டு
கொண்டாடும் சம்சாரிகளின்
ஒரு உலகம்...
அங்கே ஐபிஎல் ரசிப்பதை தவிர
இங்கே வேறு ஒரு நிகழ்வும்
பெரிதாக இல்லை என்று
சிலாகித்து எழும் இளைஞர்கள்
கூட்டத்தின் ஒரு உலகம்...
கடற்கரை மணற்வெளியில்
தனக்கு பிடித்த வீடொன்றை
கட்டி விட்டு அந்த வீட்டின் அருகே
ஏதோவொரு மரத்தின்
உடைந்த கிளையை
மரமாக பாவித்து நட்டு
வைத்து விட்டு தனக்கு பிடித்த
ஒரு சிருஷ்டியை உருவாக்கி விட்ட
பெருமிதத்தில் கை கொட்டி
குதித்து அந்த அலையில்
கால் நனைத்து
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
குதூகலித்து கொண்டாடும்
அந்த சிறுமியின் உலகம்...
இப்படி ஆயிரம் ஆயிரம் உலகங்கள்
நொடிதோறும் சிருஷ்டிக்கப்பட்டு
காலத்தின் பார்வைக்கு
எடுத்துச் செல்லப்படுவதை
பிரமிப்போடு வேடிக்கை மட்டுமே
பார்த்து விட்டு
என்னால் சிருஷ்டிக்கப்பட்ட
அந்த அதி அற்புதமான
விசேஷமான உலகத்தை
காலத்தின் பார்வைக்கு
எடுத்துச் செல்லாமல்
பெரும் பிரயனத்தோடு
மறைத்து வைக்கிறேன் நான்...
இங்கே எனது உலகத்தின்
விசேட பார்வை ஒன்று
அந்த காலத்தால்
சிருஷ்டிக்கப்பட்டு
களவாடப்படும் வரை
அதை தினமும்
நினைத்த போதெல்லாம்
எடுத்து ரசித்து
அதை என் சட்டை பைக்குள்
பெருமிதத்தோடு
சொருகி கொண்டு பயணிக்கும்
வாழ்க்கை பயணியாக ...
இல்லை இல்லை
விசேஷ வாழ்க்கை பயணியாக
அந்த காலத்தின் சாலையில்
இந்த பிரபஞ்சத்தின் வாசத்தை
உணர்ந்து மெது மெதுவாக
பயணிக்கிறேன் நான்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:14/04/25/திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக