ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 17 செப்டம்பர், 2026

யாரோ நான்?

 


ஒவ்வொரு கருவிலும் 

உலாவி உலாவி 

களைப்படைந்து...

ஒரு இளைப்பாறுதலுக்காக 

இங்கே எதுவும் 

பற்றிக் கொள்ள 

கிடைக்காதா என்று 

தேடி தேடி அலைந்து 

அதிலும் சோர்வடைந்து 

அமரும் போது ...


என் அருகில் வந்து 

ஒருவர் நீ யார் என்று 

கேட்டு கேள்வி கணைகளால் 

துளைத்தெடுக்கிறார்... 

நான் அவரை சற்றே 

நிமிர்ந்து அமைதியாக 

பார்த்து சொல்கிறேன் 

உனக்கு போன பிறவியில் 

ஏதோவொரு வகையில் 

உறவு என்று 

சலிப்பாக சொல்ல...


அவரோ நீயா அவன் என்று 

கோபமாக கேட்க 

நானோ அவரை பார்த்து 

மிகவும் நிதானமாக 

ஆம் நானே அவன் என்று 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 

அந்த காலம் 

எங்கள் உரையாடலை 

அமைதியாக கேட்டுக் கொண்டே 

நமட்டு சிரிப்பு சிரித்து 

எங்களை கடந்து செல்வதை 

நான் மட்டும் பார்த்து 

ரசித்து சிரிக்கிறேன்...


என் அருகில் அமர்ந்தவனோ 

உன் கிறுக்கு தனத்தை 

என் மீது படர விடாதே என்று 

சொல்லி எழுந்து செல்கிறார்...

நான் அவர் போகும் பாதையை 

சற்றே நிதானமாக 

வேடிக்கை பார்த்து 

நகைக்கிறேன்...


என்னை பார்த்து 

என் ஆன்மா பலமாக 

சிரிக்கும் சத்தத்தை கேட்டு 

உன்னை சுமந்துக்கொண்டு

நான் அலைகிறேன்...

உனக்கு என்ன 

கவலையில்லாமல் 

இந்த உடல் எனும் பல்லக்கில் 

அமர்ந்து என் செயல்களை 

வேடிக்கை பார்த்து 

என் வேதனையை 

அதிகரிப்பதை புரிந்துக் கொண்டும் 

புரியாதது போல 

நடிப்பதை நான் என்ன என்று 

சொல்வேன் என்று 

முணுமுணுத்துக் கொண்டே 

அவ்விடத்தை விட்டு 

மெதுவாக நகர்கிறேன்...

அந்த காலம் மட்டும் 

என்னை மிகுந்த கவலையோடு 

பார்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/09/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...