அந்த துயரமெனும் வீதியில் தான்
நான் இராப்பகலாக
காலம் காலமாக அலைந்து
திரிந்துக் கொண்டு இருக்கிறேன்...
அன்றொரு நாள் நான் ஏதோ என் கைகளில் விழுந்த உணவை
சாப்பிட்டு முடித்து சற்றே கண்ணயர
அந்த புழுதி படிந்த
கிழிந்த கம்பளியை உதறி
விரித்து போடுவதை பார்த்து விட்டு
அந்த அதிசய மனிதர் ஓடோடி வந்து
அந்த கம்பளியை பிடுங்கி
தூர எறிந்து விட்டு தன்னிடம் உள்ள
புது கம்பளியை விரித்து போடுகிறார்..
இதை தூர இருந்து கவனித்து வந்த
எனது உணவு பங்காளியான
அந்த ஜீவராசியோ
அந்த அதிசய மனிதர் மேல்
பாய்ந்து பதம் பார்த்ததில்
அந்த புழுதி படிந்த கம்பளியை
அப்படியே போட்டுவிட்டு
ஓடோடி மறைகிறார்
அந்த அதிசய மனிதர்...
அந்த ஜீவராசி அந்த புழுதி படிந்த
ஆயிரம் பொத்தல்கள் உள்ள கம்பளியை பெரும் நேசத்தோடு
தனது வாயில் கவ்வி என்னிடம்
தந்து விட்டு என் மேனியை நாவால்
தடவி தன் நேசத்தை வெளிப்படுத்தி
என் அருகே படுத்து ஆழ்ந்த
நித்திரை கொள்வதை பார்த்து
நான் என்னில் வழிந்த கண்ணீரை
துடைத்துக் கொண்டு
மெல்ல நகர்ந்து அந்த புது வாசம்
மாறாத கம்பளியை
அந்த குளிரில் குறுகி என் அருகே
படுத்து இருந்த
அந்த ஜீவராசியின் மீது போர்த்தி விட்டு ஆழ்ந்த நிம்மதி அடைகிறேன்..
இங்கே பெரும் நேசத்தின்
புரிதலுக்கான இலக்கணத்தை
யார் உணரக் கூடும்?
அந்த எனது பெரும் நேசமான
உணவு பங்காளியை போல ...
#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (6).
#இளையவேணி கிருஷ்ணா.
நாள்:21/06/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக