கணந்தோறும்
எனை காலம் நலம் விசாரிக்காமல்
கடந்து செல்ல
நான் அனுமதித்தது இல்லை!
இன்னும் எவ்வளவு நாட்கள்
இந்த நலம் விசாரித்தல்
தொடரும் என்று
என்னால் சொல்ல இயலாது...
அநேகமாக அந்த நலம்
விசாரித்தல் குரல்
என் காதில் விழாத போது
நான் நிச்சயமாக அந்த காற்றோடு சற்று நிதானமாக
தீராத காதல் மொழி பேசி
இந்த பிரபஞ்சத்தில்
லயித்து இருப்பேன் சூட்சமமாக
அந்த நொடிப்பொழுதில்
காலம் என் மீது கொண்ட
தீராத காதலை கரைக்க
பெரும் நதியை தேடி
ஒரு பித்து நிலையில்
அலைந்து திரிந்துக் கொண்டு இருக்கும்...
நானோ எங்கோ இருந்து
ஒரு சிறு கண்ணீர் துளியை
வெட்டவெளியில்
உலாவ விட்டுக் கொண்டு இருப்பேன்
அது தேடும் நதியில்
அந்த பெரும் காதலின் சுமையை இறக்கி விட்டு
இலகுவான மனதோடு
அந்த சூட்சம உலகில்
பயணிப்பதற்காக காத்திருப்பேன்...
இங்கே இருபெரும் காதலின் சூட்சம தீண்டலை
வெகுஜன மக்களில்
யார் அறியக் கூடும்?
என்கின்ற கேள்வியோடே
மிகவும் நிதானமாக பயணிப்பேன்...
#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (2).
#இளையவேணிகிருஷ்ணா
நாள்:02/06/25
திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக