அந்த ஓரிரு வார்த்தைகளில் தான்
எல்லாமே உயிர்ப்போடு
பயணிக்கிறது...
அந்த ஓரிரு வார்த்தைகளில் தான்
எல்லாமே முடிந்தும் விடுகிறது...
இங்கே வார்த்தைகளால்
தீர்மானிக்க முடியாத
நிகழ்வொன்றில் தான்
நான் அகப்பட்டு கிடக்கிறேன்...
அந்த நிகழ்வும் சத்தமில்லாமல்
எந்த சலனமும் இல்லாமல்
பெரும் காதல் கொண்டு
பயணிக்கிறது
மிகவும் ரகசியமாக ...
அங்கே பலகோடி பேரை
வார்த்தைகள் வதம் செய்து
இளைப்பாறுகிறது...
இங்கே நானும் அந்த மௌனமும்
அந்த வதம் செய்யப்பட்ட
பலகோடி பேரை புதைப்பதற்காக
இடம் தேடி அலைகிறோம்...
அந்த வார்த்தைகளால்
வதம் செய்யப்பட்ட மனிதர்களின்
உடல்கள் மீது எங்கள் கால்கள்
கூச கூச நடந்து ...
எங்கள் இருவரையும்
அந்த தேவர்களின் பிள்ளைகள்
என்று வர்ணிக்கிறது ஒரு அசரீரி
நாங்களோ அதை செவி மடுத்தும்
பெருமைக் கொள்ள வழியில்லாமல்
செய்வதறியாது திரிகிறோம் ...
கண்களில் நீர் வழிய வழிய
இங்கே இறந்து கிடக்கும்
இத்தனை கோடி பேருக்குமான
இடத்தை தேடி அலைந்து...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/02/25/செவ்வாய் கிழமை.
அந்தி மாலைப் பொழுதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக