யாரும் யாரையும்
கண்டுக் கொள்ள நேரம் இல்லாத
தருணத்தில் தான்
எனை அந்த தென்றலும்
நிலவின் கிரணமும் தீண்டியது...
நெடுநாட்களாக சந்தித்து கொள்ள
நேரம் இல்லாத
மனிதர்கள் வரிசையில்
அப்படி ஒன்றும் நாங்கள் இல்லை
என்றாலும்
நாங்கள் அனுதினமும் காதலோடு
கசிந்துருகி சிறிது நேரம்
அணைத்துக் கொண்டு தான்
அத்தனை கதைகளையும்
பேசுவோம்...
நாங்கள் எப்போது வருவோம் என்று
இந்த இரவும் இந்த நேரத்தை
தவம் போல யாசித்து காத்திருப்பதை
அங்கே இருந்த மரங்களும்
அந்த மரத்தின் கிளையின்
கூடுகளில்
வாழ்ந்த சில பறவைகளும்
ஆச்சரியமாக தலை நிமிர்ந்து
சிறிது நேரம் கூர்ந்து பார்த்து விட்டு
கூடுகளில் புதைந்து உறங்கி விடும்...
நாங்களோ இது எது பற்றியும்
அறியாமல் பேச்சின் சுவையில்
அமிழ்ந்து இந்த பிரபஞ்சத்தின்
வெட்டவெளி மடியில் சுகித்து விட்டு
அப்படியே உறங்கி விட்டு
அதிகாலையில் நான் மட்டும் எழுந்து
ஓடுகிறேன்
அந்த நெடுஞ்சாலையில்...
என் காலடி சத்தத்தில்
அங்கே இரவின்
நிழலில் இளைப்பாறி
கூடுகளில் முடங்கிய பறவைகளும்
சிலிர்த்தெழுந்து வானத்தின் மீது
பெரும் காதல் கொண்டு பறக்கிறது..
இது எதையும் உணராமல் அங்கே
சில பல மனிதர்கள்
கிசுகிசுக்கிறார்கள் எனை பற்றி
பலவாறு...
இது எப்போதும் நடப்பது தான் என்று
அலட்டிக் கொள்ளாமல் காலம்
என்னோடு புது உற்சாகத்துடன்
பயணித்து அந்த விடியலுக்கு
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
கற்பித்து ஓடுகிறது தன் வழியில்
நானும் என் வழியில் பயணிக்கிறேன்
எந்தவித சலனமும் இன்றி...
அந்த சில பல மனிதர்களும்
பயணிக்கிறார்கள் தனது
கிசுகிசு சுபாவம் மாறாமலேயே...
இப்படி தான் இந்த பிரபஞ்சம்
சத்தம் இல்லாமல் இயங்குகிறது
என்று அங்கே ஒரு ஞானி
எங்கள் அனைவரை பற்றியும் பேசி
ஞான உரை நிகழ்த்திக் கொண்டு
திருப்தி அடைகிறார்..
இதை எல்லாம் கவனித்து விட்டு
இந்த பிரபஞ்சம் சிறிதும் சலனம்
இல்லாத நதியாக சத்தம் இல்லாமல்
பயணிக்கிறது
பல நீங்காத வடுவோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 20/01/25/திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக