அந்த வேடிக்கை மனிதன் மிக மிக மெதுவாக அந்த இளங்குளிரை அனுபவித்தபடியே
சாலையில் இறங்கி நடக்கிறான்...
எத்தனையோ வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்மணிகள் கொஞ்சம் சுவாரசியமாக வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் இட்டார்கள்...
இன்னும் சில பேர் கடனே என்று வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பயந்து எழுந்து அந்த குளிரை மனதிற்குள் திட்டிய படியே
வாசல் தெளித்து கோலம் இட்டார்கள்...
அப்போது ஒரு வீட்டின் வாசலில் ஒரு நாய் அந்த இளங்குளிரை தாங்க முடியாமல்
தன் உடலுக்குள் தலையை இறுக்கமாக புதைத்து படுத்து இருந்தது...
அந்த வீட்டில் உள்ள பெண்மணியோ ஏற்கனவே மிகவும் எரிச்சலாக இந்த இளங்குளிரில் சலிப்பாக
எழுந்தவள்...
அந்த நாயை அவள் வாசலில் பார்த்ததும் தமது வாளியில் உள்ள தண்ணீரை
வேகமாக அந்த நாயின் மீது தெளித்தாள்...
இதை பார்த்த அந்த வேடிக்கை மனிதனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது...
பிறகு இயல்பாகி தனக்குள் இப்படி பேசிக்கொண்டு சென்றான்...
அந்த இளங்குளிருக்கு இதமாக இந்த பெண்மணி
இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி விட்டு வந்து இருந்தால்
குளிருக்கு இதமளிக்கும் என்று நினைத்து படுத்து இருந்த
ஒரு ஜீவனுக்கு அவள் வாசலில் இடம் கொடுத்த புண்ணியமாவது அவள் கணக்கில் சேர்ந்து இருக்கும்..
இப்போது அவள் கணக்கில் அந்த இளங்கலைப் பொழுதில் எழுந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து அழகாக உள்ளூர வெறுப்போடு இட்ட அந்த கோலத்தோடு
வீட்டின் இரு புறமும் ஏற்றிய விளக்கு இட்டது புண்ணியம் சேர்க்குமா பாவம் சேர்க்குமா என்று யோசித்தப்படியே
அந்த வேடிக்கை மனிதன் தனது நடையை தொடர்ந்தான்... அப்போது அவன் காலருகே அந்த நாயின் மூச்சு காற்றின் வெப்பம் வந்து தீண்ட
நான் அந்த தேநீர் விடுதி அருகே நின்று இருந்தான்..
இதோ அந்த பெண்மணி செய்த பாவ கணக்கிற்கு சில ரொட்டி துண்டுகளை அதற்கு பசியாற கொடுத்து விட்டு
மறக்காமல் பிரார்த்தனை
செய்துக் கொண்டான்...
மறக்காமல் இந்த புண்ணிய கணக்கை அந்த பெண்மணி கணக்கில் சேர்த்து விடுமாறு அந்த இறைவனை....
#மார்கழிஅனுபவம்.
நாள்: டிசம்பர் 18/12/23.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக