ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 25 செப்டம்பர், 2025

அந்த அலைபேசியின் ன் கவலை...


கூக்கூ என்று அலாரம் ஒலித்தது...பிரபு மெதுவாக அந்த அலைபேசியின் அலார சிணுங்கலை அணைத்து விட்டு தனது போர்வையை விலக்கி எழ ஆரம்பித்தான்...

எழுந்ததும் முதல் வேலையாக தனது மொபைலில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அம்மா என்னடா பிரபு இன்று சீக்கிரம் அலுவலகம் செல்ல வேண்டும் என்று சொன்னாயே எழுந்திரு டா என்று வேகமாக அறைக்கு வெளியே குரல் கொடுத்து விட்டு வேகமாக வேகமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் அவன் எழுந்தது தெரியாமல்... கொஞ்சம் சத்தம் போடுவதை நிறுத்துமா இதோ வருகிறேன் என்று சொல்லி கொண்டே அலைபேசியில் இன்னும் மூழ்கி போனான்... நேரம் ஆவது எப்படி தெரியும்... அது தான் ஒரு மாய திரையாயிற்றே...

அம்மாவும் அவளது வேலைகளில் மூழ்கி போனதால் அவனும் அவனது அலைபேசியில் மூழ்கி போனான்... அவன் அதில் வரும் ரீலீஸ் ஒவ்வொன்றையும் காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு ரசித்துக் கொண்டு இருந்தான்... காதில் ஹெட்போன் இருந்ததால் அம்மா கூப்பிட்ட சத்தமும் காதில் விழவில்லை அவனுக்கு...

பின்னர் அம்மா கதவை உடைக்கும் அளவுக்கு தட்டியது அவனுக்கு அந்த கதவை எதேச்சையாக பார்த்ததும் தான் தெரிந்தது...வேக வேகமாக ஹெட் போனை காதில் இருந்து கழற்றி விட்டு கதவை திறந்தான்...

என்னம்மா என்றான் எரிச்சலாக...

நான் இவ்வளவு நேரம் கதவை இடி போல தட்டுகிறேன்.. உனக்கு என்னடா அப்படி கும்பகர்ணன் தூக்கம்...

சரி சரி இதோ எழுந்து விட்டேன் அல்லவா... சொல் என்றான்.. உனது அப்பாவும் கிளம்பி விட்டார் இன்று ஏதோ கொஞ்சம் வெளியே வேலை என்று... வந்து தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்றார்.. சிலிண்டர் தீர்ந்து விட்டது வந்து மாற்றி கொடு என்று உன்னை அழைத்தால் நீ என்னடான்னா இப்படி தூங்குகிறாய் என்று கடிந்து கொண்டு வா வந்து சிலிண்டர் மாற்று... நான் பொறியலுக்கு காயை நறுக்குகிறேன் என்று சலிப்பாக சொல்லி விட்டு எனது பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாக சமையலறைக்கு சென்று விட்டாள்... அவனுக்கு அப்போது தான் இன்று மேலதிகாரி கொஞ்சம் விரைவில் அலுவலகம் வர சொல்லி இருந்தது ஞாபகம் வந்தது...மணியை பார்த்தால் மணி ஏழரையை காட்டியது... அவனுக்கு அட கடவுளே நமக்கு இன்று அலுவலகத்தில் ஏழரை தான்... நான் என்ன தான் கரடி போல கத்தினாலும் அந்த மனிதர் மண்டையில் ஏறாதே என்று வேக வேகமாக சிலிண்டர் மாற்றி அடுப்பு எரிகிறதா என்று பார்த்து விட்டு அம்மா சிலிண்டர் மாற்றி விட்டேன்... கொஞ்சம் சீக்கிரம் சமையல் செய்.. நான் தான் சீக்கிரம் போக வேண்டும் என்று நேற்றே சொன்னேனே என்று அம்மா மீது எரிந்து விழுந்து விட்டு பரபரப்பாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்...பைப்பை திருகி விட்டு நாலு குவளை தண்ணீர் மேலே ஊற்றிய பிறகு தான் துண்டை எடுக்காமல் குளியலறைக்குள் சென்றது ஞாபகம் வந்தது.. இதற்காக அம்மாவை கூப்பிட்டால் நிச்சயமாக கையில் எது இருக்கிறதோ அதில் நாலு என்ன பத்து மொத்து மொத்தி எனது முதுகில் வாலி இராமன் அம்பால் வாங்கிய ரணத்தின் தழும்பையே உண்டு செய்து விடுவாள் என்று எதையும் யோசிக்காமல் நனைந்த உடலோடு அங்கே இருந்த அழுக்கு கைலியை கன்னாபின்னாவென்று சுத்திக் கொண்டு கதவை திறந்து வேகமாக அவனது அறையை நோக்கி ஓடினான்... எதிர் பாராத விதமாக காலில் இருந்த ஈரம் அவனை நேரம் பார்த்து வழுக்கி கீழே விழ வைத்தது...ஐயோ அம்மா என்று கத்தினான்...என்னவோ ஏதோ என்று ஓடி வந்து அம்மா பார்த்தாள்... என்னடா செய்துக் கொண்டு இருக்கிற என்று தலையால் அடித்துக் கொண்டு அவனை கை கொடுத்து தூக்கி விட்டாள்... அம்மா துண்டு என்று முணகினான்...

என்னடா துண்டு என்று புரியாமல் விழித்து என்னை மேலும் கீழும் பார்த்தாள்...ஓ இதுவா சங்கதி... என்று ஒரு முறை முறைத்து விட்டு அவனது அறையில் சென்று துண்டை எடுத்து வந்து கையில் கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டாள்.. சீக்கிரம் வாடா உன்னை அனுப்பி விட்டு தான் நான் பக்கத்து தெருவில் உள்ள மங்கை வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு  போக வேண்டும்...நீ வழக்கம் போல குளியலறையில் நேரம் கடத்துவது போல கடத்தாதே நான் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று வேகமாக சொல்லி விட்டு நகர்ந்தாள்...

அவனோ காலை பிடித்துக் கொண்டே குளியலறைக்கு மெதுவாக போய் குளித்து விட்டு வந்து தயாராகி ஏதோ சாப்பிட்டு அம்மா போய்ட்டு வரேன் என்று கத்தினான்...ஏன்டா இப்படி வானம் இடிக்கிற மாதிரி கத்துற..நான் என்ன செவிடா பார்த்து பத்திரமாக போய் விட்டு வா...போகும் போது அந்த ஹெட்போனை காதில் மாட்டாமல் போடா...உனக்கு பின்னால் வரும் வண்டி உன் மீது இடித்து வீட்டில் விழுந்தது போல விழுந்து எழுந்து வந்தாய் என்றால் நான் அப்புறம் மனுஷியாகவே இருக்க மாட்டேன் என்று சத்தமாக சொன்னாள்..அதுவும் சரிதான் என்று ஹெட்போனை தனது பைக்குள் போட்டு விட்டு வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்தான்...வண்டி உடனே ஸ்டார்ட் ஆகவில்லை... இரண்டு மூன்று முறை நாலு உதை உதைத்தான் ஸ்டார்ட் ஆனது.. தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்தான்..தலையே சுற்றி விட்டது...மணி எட்டே முக்கால் என்று சத்தம் இல்லாமல் சொன்னது..சே என்ன இது என்று தன்னை தானே கடிந்துக் கொண்டு இனி காலையில் இந்த மொபைல் மூஞ்சியில் முழிக்கவே கூடாது..என்று சபதம் எடுத்துக் கொண்டு டாப் கியரில் சாலையில் பறந்தான்.. அவன் போகும் வேகத்தை சாலையில் பார்த்த சிலர் கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்தது அவன் காதில் விழவே இல்லை... இது மட்டும் தான் அவனுக்கு இன்று கிடைத்த வரமோ என்னவோ... ஏனெனில் அலுவலகத்தில் அவனுக்கு மேலதிகாரியிடம் அச்சில் ஏற்ற முடியாத வசவுகள் காத்திருக்கிறது...அதை அவன் எப்படி எதிர்கொள்வானோ என்று அவன் பேண்ட் பாக்கெட்டில் உள்ள மொபைல் கவலைப்பட்டது வேறு கதை...

இளையவேணி கிருஷ்ணா 

நாள்:26/09/25

வெள்ளிக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...