ஒரு உயிர் பூவின் வாசம்: அத்தியாயம்:(1)
நான் ஒரு கணினி பொறியாளர்..ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்...மதியம் தொடங்கி இரவு வெகுநேரம் உட்கார்ந்த நிலையிலேயே மடிகணினியை ஒரு குழந்தையை போல கூடவே வைத்துக் கொண்டு இருக்கும் வேலை...எனது ஊதியம் தற்போது அதிகம் தான்...மறுக்கவில்லை...ஆனால்எனது ஆன்மாவிற்கான ஊதியமா என்று கேட்டால் அங்கே நான் ஆழ்ந்த அமைதியை தான் உங்களுக்கு பகர முடியும்.. சும்மா எதையாவது உளறிக் கொண்டு இருக்காதீர்கள் பாஸ்...பணம் மட்டும் இருந்தால் போதும் இங்கே எதையும் சாதிக்கலாம்.. என்று என்னிடம் பெரும்பாலானவர்கள் உரிமையோடு சண்டை இடவும் கூடும்...ஆனால் உங்களுக்கு எப்படியோ எனக்கு அது மட்டும் மன நிறைவை தரவில்லை என்று மிகவும் ஆணித்தரமாக சொல்வேன்...மேலும் நான் ஒரு திருமண பந்தத்தில் இணையாத சாதாரண மனிதன்...ஆயிரம் ஆயிரம் ஜாதகங்கள் மற்றும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்த பெண்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும்...ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை...சரி எனது கதையை கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்..ஏதாவது திரைப்படம் எடுக்க வா போகிறீர்கள்...இதோடு அதை முடித்துக் கொள்ளலாம்...🙅
விஷயத்திற்கு வருவோம்..அலுவலக மேலதிகாரியிடம் விடுப்பு கேட்டு இருந்தேன் அல்லவா அதை நான் ஒரு நீண்ட விடுமுறை நாட்களை
பெரும் பாடுபட்டு மேலதிகாரியிடம் போராடி வாங்கி இருந்தேன்... அந்த நாளும் இதோ வந்தே விட்டது எனது கனவுகளை நிறைவேற்ற ...
அலுவலகத்தின் எனக்கான இப்போதைய பணி வரை எல்லா முடித்து விட்டு கிளம்பி விட்டேன்... அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர் என்னை பார்த்து சார் நீங்கள் பெரிய ஆள் தான் சார்.. எப்போதும் விடுப்பு என்றாலே முகத்தில் அஷ்ட கோணலை காட்டி நம்மை வெறுப்பேற்றும் வசைவுகளை பாடி அனுப்பி வைப்பார்...ஆனால் நீங்கள் எப்படியோ அந்த அதிகாரியிடம்
போராடி விடுப்பு அதுவும் நீண்ட விடுப்பு வாங்கி இருக்கிறீர்கள்..வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்றார்... அவரது பேச்சை கேட்டு விட்டு அதெல்லாம் ஒன்றும் இல்லை சார் நீங்கள் நினைத்தாலும் விடுப்பு அவரிடம் வாங்கலாம்... ஆனால் உங்கள் பணியில் இதுவரை எந்த தோய்வும் இல்லாமல் சென்று இருக்க வேண்டும்... மேலும் அவரது கோபத்தை நீங்கள் மனதிற்குள் ரசிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்றேன்...அவரோ சார் நீங்கள் வேற லெவல் சார்... எனக்கு அதெல்லாம் வராது என்றார் கொஞ்சம் சிரித்து... சரி அலுவலகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நான் வரும் வரை அவர் என்ன திட்டினாலும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்... ஏனெனில் உங்களுக்கு ஆறுதல் சொல்லி புலம்ப நான் இங்கே இல்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது என்று தோளில் தட்டி சொன்னதை அவர் ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் சார்... நீங்கள் இந்த அலுவலகத்தை பற்றி நினைக்காமல் எல்லாவற்றையும் மறந்து விட்டு தங்களது விடுமுறை நாளை மகிழ்ச்சியாக முடித்துக் கொண்டு வாருங்கள் என்று கை குலுக்கி விடை பெற்றார்...
நானும் அவரிடம் இருந்து விடை பெற்று எனது புல்லட் சாவியை விரலில் சுழற்றிக் கொண்டு உலகம் பிறந்தது எனக்காக என்று வாய் விட்டு பாடிக் கொண்டே போவதை அங்கே ஏதேதோ ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டு இருந்த சிலர் தனது உரையாடலை நிறுத்தி விட்டு வாழ்றான் சார் என்று சொல்வதை நான் தலையசைத்து ஆமோதிக்கிறேன் கொஞ்சம் இதழ் வழியாக புன்னகையை காற்றில் அவர்களுக்கு பரிசளித்தபடி...
எனக்கு எனது புல்லட் ஏதோ ஒரு புதிய நண்பனாக இன்று காட்சி கொடுத்தது...அதை ஸ்டார்ட் செய்து சாலையில் மிகவும் நிதானமாக பயணிக்கிறேன்..
அடர்ந்த காற்று என்னை தழுவி தழுவி விலகி செல்வதை ரசித்தபடியே இல்லம் வந்து சேர்ந்தேன்...
அந்தி மாலைப் பொழுதை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ரசித்துக் கொண்டு வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு இறங்கி அப்படியே சுற்றுச்சூழலை நிதானமாக ரசனையோடு பார்வையிட்டேன்...
நான் வீட்டின் முகப்பில் ஆர்வமாக நட்டு வைத்த ஓரிரு மரங்கள் மற்றும் பூச்செடிகள் என்னை மௌனமாக பார்த்தது... இன்று காலையில் தானே தண்ணீர் நமக்கு விட்டான்... பிறகு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது ஏன் இப்படி ஒரு ஆழ்ந்த பார்வை என்று புரியாமல் பார்த்தது... நான் அருகில் சென்று ஒரு செடியை மெதுவாக வருடிக் கொடுத்தேன்... அந்த வருடலின் வாஞ்சையில் நெகிழ்ந்த அந்த செடி இவனுக்குள் இப்படி ஒரு மென்மையான உணர்வா என்று கிறங்கி தான் போனது.. அருகில் இருந்த செடிகள் எல்லாம் இந்த நிகழ்வை நெகிழ்ந்து வேடிக்கை பார்த்தது... என்னை பார்த்து அங்கே இருந்த ஒரு குருவி தனது சிறகை படபடத்து அருகில் உள்ள மரக்கிளையில் லாவகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது...
அந்த செடியிடம் மிகவும் கிசுகிசுப்பாக நான் நாளை வெளியூர் போகிறேன்... உங்களுக்கு தேவையான நீரை விட ஒருத்தரை நியமித்து விட்டு தான் போகிறேன்... தாங்கள் அனைவரும் இந்த இல்லத்திற்கு காவலாக இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன்... நமது வீட்டை நீங்கள் அனைவரும் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன அதிர்வை அந்த குருவி உணர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.. தமது சிறகை லேசாக படபடத்து கீச் கீச்சென்று கத்தியது உற்சாகமாக... அப்போது அதன் அசைவில் இருந்து உதிர்ந்த ஒரு இலை எனது தலையில் பறந்து வந்து விழுந்தது...அதை நான் இயற்கையின் சூட்சம ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டேன்..
பிறகு அவைகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டை எமது சாவியை கொண்டு திறந்தேன்...உள்ளே நுழைந்ததும் ஒரு பல்லியின் சத்தம் என்னை மிகவும் இயல்பாக வரவேற்றது...
இத்தனை நாட்கள் இதே வீட்டில் தான் நான் வசித்தேனா என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது.. ஏனெனில் இந்த நிகழ்வுகளை எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க முடியாத அளவிற்கு நான் உணர்வுகளும் இருந்தும் ஒரு உணர்வற்ற மனிதனாக இல்லை இல்லை எந்திரமாக வாழ்ந்து இருக்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு மின் விளக்கோடு மின்விசிறியையும் சுழல விட்டு
அங்கிருந்த சோஃபாவில் அமரவும் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது...
அதில் ஒளிரும் பெயரை பார்த்தேன்... நான் நினைத்ததை போல எனது பள்ளி தோழி ராதை தான் அழைத்து இருந்தாள்... அலைபேசியை காதில் வைத்து சொல் ராதா... இப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன்...நீ பயணத்திற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறாயா என்றேன்... ஆமாம் கிருஷ்ணா... முக்கால்வாசி வேலைகள் முடிந்தது... நான் அங்கே கிளம்பி கொண்டு இருக்கிறேன்.. எனக்கும் சேர்த்து சப்பாத்தி செய்து வை என்றாள் சிரித்துக்கொண்டே...
நிச்சயமாக.. எமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை பசியோடு எப்படி வைத்து இருப்பேன் என்றேன் லேசாக சிரித்தபடியே...
சரி அலைபேசியை வை..
எனக்கு இன்னும் சில பல வேலைகள் உள்ளது என்று அலைபேசியை துண்டித்து விட்டு நான் முதல் வேலையாக குளிப்பதற்கு சென்றேன்...
குளித்து முடித்து விட்டு முதல் வேளையாக சப்பாத்தி போட மாவு பிசைந்து வைத்து விட்டு வானொலியை கேட்பதற்காக அதை உயிர்ப்பித்தேன்... அப்போது அதில் நேற்று இல்லாத மாற்றம் என்னது என்ற பாடல் ஒலித்தது... உண்மை தான் சூழலுக்கு தகுந்தபடி பாடல் கூட அமைகிறதே என்று சிறுமுறுவலோடு குருமா வைப்பதற்காக தக்காளி கேரட் உருளை பெரிய வெங்காயம் என்று நான் நறுக்கிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பு மணி ஒலித்தது...கைகளை கழுவி விட்டு போய் வாசல் கதவை திறந்தேன்...
காத்திருங்கள் அடுத்த பகுதிக்காக...🏃🙋
இளையவேணி கிருஷ்ணா
நாள் 21/09/25
ஞாயிற்றுக்கிழமை.

இந்த தொடரின் இந்த முதல் பகுதி பற்றிய தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
வாசக நெஞ்சங்களே ✍️🎉🤝.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக