ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

சிறுவெளிச்சத்தின் தேடலாக -சிறுகதை..

 


ஒன்றிற்கும் அடங்காத வெளிச்சத்தின் வீரியத்தை இங்கே முழுவதும் அறிந்தவர்கள் எவரும் இல்லை என்ற போதும் இங்கே நான்

அந்த பெரிய வெளிச்சத்தின் வீதியில் உலாவின நாட்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்...

அந்த அற்புதமான நாட்கள் எல்லாம் கடந்த காலங்களாக மாறி விட்டதா என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நகர்கிறேன்...

இங்கே ஒரு பெண்ணின் சுதந்திரம் எவ்வளவு என்பதை எவராலும் அவ்வளவு துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியாது..

அதை பற்றி உங்களுக்கு ஏதேனும் துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியும் என்றால் என்னிடம் ஓடோடி வந்து சொல்லுங்கள்...

ஏன் இப்படி அதிகாலையில் ஒரு புலம்பல் என்று நீங்கள் மட்டும் அல்ல..இதோ இந்த குளிர்ந்த இரவிற்கு விடை கொடுத்து விட்டு பகல் பொழுதிற்கு வழி விட்டு போய் கொண்டு இரவை கேளுங்கள்.. அது என் வேதனையை சொல்லும்...

ஏனெனில் நானும் அதுவும் தான் வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.. தற்போது என் மீது பெரும் பரிவுக் கொண்டு பிரிகிறது.. இப்போது நீங்கள் என்னிடம் மாட்டிக் கொண்டீர்கள்..

ஏன் இத்தனை பீடிகை என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. ஏனெனில் இரவே இவ்வளவு நேரம் எனது இம்சையை சகித்துக் கொண்டு என் புலம்பலை கேட்டு விட்டு தான் விடை பெற்று செல்கிறது... பிறகு நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா என் புலம்பலில் இருந்து தப்பிப்பதற்கு...

சரி விசயத்திற்கு வருகிறேன்...

நான் தமிழ் அரசி..நான் ஒரு படைப்பாளி என்று சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா என்று எனக்கு தெரியாது.. ஆனால் நான் எனது பார்வையில் ஒரு படைப்பாளி.. நான் ஏதோ எனக்கு தெரிந்த கற்பனையில் கதைகளை கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்..

ஆனால் பாருங்கள் எனக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்து விட்டார்கள்... நான் முன்பு போல எழுதுவேனா என்று கவலை அதிகமாக இருக்கிறது... இங்கே எழுதுவது என்பது எல்லாம் என்னை பொறுத்தவரை பள்ளி மாணவ செல்வங்கள் போல ஏதோவொன்று எழுதி பக்கத்தை நிரப்பி விடுவதாக நான் நினைப்பதில்லை..

அது ஒரு அற்புதமான வாழ்வியலை பற்றி அசைப்போடும் தருணத்தை எழுத்தில் கொண்டு வரும் கலை..

இதோ நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதை முழுவதுமாக என்றால் நான் வாழ்வின் ரசனையை அழகான பார்வையில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன்...

திருமண பந்தத்தில் நுழைந்து விட்டால் நான் இதே போல ஒரு கற்பனையை எப்படி வடிப்பேன் என் படைப்புகளில்...

எப்போதும் காலையில் இட்லி தோசை சட்னி மதியம் சாப்பாடு அதை தொடர்ந்த வீட்டில் ஏற்படும் சண்டைகள்.. என் பக்கத்து

வீட்டுக்காரரோடு இருக்கும் அக்கப் போர்கள் எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை... இப்படி தான் நான் எழுத உட்காரும் போதெல்லாம் தோன்றும்.. இதெல்லாம் இங்கே நீங்களும் தான் அனுபவித்து வருவீர்கள்..அதே நிகழ்வை எழுத்திலும் வாசிக்கும் போது உங்களுக்கு முதலில் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே வாசிப்பீர்கள்.. பிறகு...

அதை விடுங்கள்.. நீங்கள் என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு படைப்பாளி பக்கத்தில் சென்று உங்களுக்கு பிடித்த எழுத்து நடையை வாசிக்க தான் போவீர்கள்.. அதுவல்ல என் கவலை...

நீங்கள் தற்போது கூட என் படைப்புகளை பெரிதாக வாசித்து விடவில்லை.. அதனால் எனக்கு அதன் பாதிப்பு குறைவு தான்..

மேலும் நான் என் ஆத்ம திருப்தி எனக்காக நான் வடித்து வைத்த வாழ்வியல் ஓவியத்தை என் எழுத்தில் வடித்து எனக்கு ஒரு துன்பம் வரும் போது நானே எனக்கு ஆறுதலாக என் படைப்பில் ஆறுதல் தேடிக் கொள்வேன்.. அப்படி தான் என் படைப்புகள் இருக்க வேண்டும் என்று நான் ஒரு விதி வகுத்து இருக்கிறேன்..

ஆனால் தற்போது நினைத்தாலே தலை சுற்றுகிறது..

நான் பாட்டுக்கு எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கிறுக்கி கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று இது நாள் வரை வந்த வரன்களை ஏதோவொரு சாக்கு வைத்து தட்டி கழித்து வந்தேன்..

ஆனால் தற்போது விடாப்பிடியாக ஒரு வரனை காட்டி நல்ல குடும்பம் நல்ல பையன் நன்றாக சம்பாதிக்கிறான் குறிப்பாக அவர்கள் வீட்டில் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று பேசி பேசி நீ சம்மதித்து தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று இல்லை.. நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று அவர்கள் வீட்டில் பேசி நிச்சயதார்த்தமும்  முடித்து விட்டார்கள்..நீ தான் பெரிய எழுத்தாளினி ஆயிற்றே..நீ உன் ரசனையை சொல்லி வரன் தேட சொல்லலாமே வீட்டில் என்று கேட்கலாம்.. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுலபமான காரியமல்ல எங்கள் வீட்டில்.. அதுவும் எங்கள் வீட்டில்.. நினைத்துக் கூட பார்க்க முடியாது.. பிறகு எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டால் நான் வீட்டில் அமர்ந்து எதையோ கிறுக்கிக் கொண்டு இருப்பதை அவர்கள் இடத்தில் காட்டினாலும் அதை வாசிக்காமல் போய் சமையல் கற்றுக் கொள்.. அது தான் போகிற வீட்டில் எங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று சொல்லி விடுவார்கள்.. இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என்று கேட்காதீர்கள்.. இப்படி தான் இங்கே சமூகம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது..

அதை ஒட்டி தான் என் குடும்பமும்..

நான் அதற்காக சமைப்பது பெண் வேலை இல்லை என்று பெண்ணியம் பேசும் கூட்டத்தில் கொடி பிடிப்பவள் அல்ல... ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நினைப்பவள்...

சரி அதை விடுங்கள்..இதோ இந்த விடியலில் என்னை பார்த்து விட்டு சென்ற அந்த பையன் இன்று சாதாரணமாக வந்து பார்த்து விட்டு செல்ல வருவதாக தகவல் என் குடும்பத்தாரிடம் இருந்து எனக்கு நேற்று மாலை வந்தது..

நீங்கள் கேட்கலாம்.. இங்கே எங்களிடம் நீங்கள் புலம்புவதற்கு பதிலாக அலைபேசியில் அந்த பையனிடம் உங்கள் எழுத்து கனவை பேசலாம் இல்லையா என்று...

அதில் தான் ஒரு சிக்கல்...

நான் அலைபேசி எண்ணை கூட வாங்கவில்லை.. எனது குடும்பத்தாரும் என்னிடம் கொடுத்து பேசு என்று சொல்லவில்லை.. அதான் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதே என்று கொடுக்கலாம் இல்லையா..

ஆனால் அவர்களுக்கு ஒரு பயம்.. ஏதாவது பேசி திருமணத்தை இவள் நிறுத்தி விடுவாள் என்று...

பாருங்கள் இந்த விஞ்ஞான உலகில் நான் எந்தளவிற்கு என் குடும்பத்தை நேசித்து அவர்கள் பேச்சிற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்று உணர்கிறீர்களா...

இதோ காலை பத்து மணிக்கு வரன் பையன் வர போகிறான்..

நான் அவனிடம் எப்படியாவது நான் இதுவரை எழுதி வைத்த கிறுக்கல்கள் பற்றி அவனிடம் சொல்லி ஒரு புத்தகம் போட்டு விட உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள போகிறேன்... அவனுக்கு அந்த ரசனை இருந்தால் எழுத்தின் மீதான தீராத காதல் இருந்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் தான்...

அந்த அதிருஷ்டம் மட்டும் எனக்கு கிடைத்து தொடர்ந்து எழுத அந்த வீட்டில் ஒரு சுதந்திரம் நிம்மதியான சூழல் கிடைத்து விட்டால் போதும்.. நான் ஆனந்தமாக உணர்வேன்..

பார்ப்போம்... ஆனால் ஒன்று நிச்சயம்.நான் திருமண பந்தத்தில் நுழைந்தாலும் வீடு சூழலை கதை களமாக ஆக்காமல் எனக்கான தனி தன்மையில் தான் எழுதுவேன்... அதனால் அதை எதிர் பார்த்து வராதீர்கள்...🤷.

இதோ இங்கே நன்றாக வெளிச்சம் பரவுகிறது சூரியனின் கருணையால்.. எனது வாழ்விலும் நான் எனக்கான சிறு வெளிச்சத்தை இங்கே தேடி அலைகிறேன்...

ஆம் நான் சொல்ல மறந்து விட்டேன் வரன் பையனின் பெயர் தமிழ் அன்பன்... நல்ல முறையில் என் கனவு பலிக்க நீங்களும் இந்த விடியலில் எனக்காக பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்களேன்..புண்ணியபாக போகும்..😌.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.



சனி, 22 நவம்பர், 2025

அந்த ரசிக்கப் படாத இரவொன்று...


அந்த ரசிக்கப் படாத இரவொன்று 

மெல்ல மெல்ல சத்தம் இல்லாமல்

விடைபெறுகிறது...

இங்கே அதன் முடிவில் நான்

எனக்கான அத்தியாயம் எழுத

அமர்ந்து விட்டேன்...

இன்னும் நம்பிக்கை இழக்காமல்

அந்த இரவின் எச்சம்

அது பற்றிய அழகிய நொடிகளின் 

குறிப்புகளை

எனக்காக அனுப்பிக் கொண்டே

இருக்கிறது...

தீராத எழுத்தின் மீதான

அதீத மோகம் கொண்ட

இளம் எழுத்தாளனை போல...

அந்த குறிப்புகளை நான்

எந்த பக்கத்தில் சேர்த்தாலும்

அதன் சுவை குறைந்து விடும் என்று

தனியாக சேகரித்து வைக்கிறேன்...

இது தெரியாமல் அதுவோ

என் மீது ஊடல் கொண்டு

குறிப்புகளை அனுப்பி வைப்பதை

நிறுத்தி விட்டது...

நான் என் அத்தியாயங்கள்

எழுதுவதையும் அது குறிப்புகள்

அனுப்பும் வரை தற்காலிகமாக

நிறுத்தி வைக்கிறேன்...

இது பற்றி அதனிடம் தூது செல்ல

இங்கே இந்த அதிகாலை வேளையை

கெஞ்சி கூத்தாடி அனுப்பி வைக்கிறேன்...

இதோ அதுவும் அதன் சுழற்சியில் 

இருந்து

தற்காலிகமாக விடுப்பட்டு 

இரவின் எச்சத்தின் வாசலில்

நிற்கிறது மெல்லிய கூப்பாடு

போட்டுக் கொண்டு...

அங்கே இப்போது தான் விழித்த 

பறவைகள்

அந்த கூப்பாட்டின் ஓசையில்

சிறிது பயந்து சிறகை சிலிர்த்து

மெலிதாக முணகுகிறது...

எப்படியேனும் இன்று அந்த இரவின்

ரசனை மொழிகளை 

தனி புத்தகமாக பதிவேற்றம் செய்து

அதனை கொண்டாடி விட வேண்டும்

என்று அந்த தூதுவராக பொழுதை

எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...

இன்னும் சில பல குறிப்புகள்

எப்படியேனும் அதனிடம் உரிமையோடு

சண்டைப் போட்டு

வாங்கி விடுவான் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.













அறிவிக்கப்படாத சலிப்பொன்று...


அந்த அறிவிக்கப்படாத

சலிப்பொன்று 

என்னுள் அகண்டு விரிந்து

ஒரு நதி போல ஓடுகிறது...

அதன் போக்கில் சிறு பிழையும்

என்னால் சொல்லி விட முடியாதபடி 

ஓடி களிப்போடு நகர்கிறது...

நான் தான் இங்கே நீச்சல் தெரியாத

மனிதனாக கரையில் நின்று

அந்த நதியில் நீராட பாதுகாப்பு 

கருவியாக 

சிறு துரும்பாக ஏதேனும்

என் கைகளுக்கு தட்டுப்பட்டு விடாத 

என்று இங்கும் அங்கும்

தேடி அலைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.














ஞாயிறு, 16 நவம்பர், 2025

மனதின் காயங்கள்...

 


கிருஷ்ணா அன்று இருந்ததை போல எப்போதும் மனம் உடைந்து போனதில்லை... அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான் என்று அந்த நிறுவனம் அவனை பணியில் இருந்து வெளியேற்றினார்கள் என்று அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது... அடுத்து என்ன என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போலவே இருந்தது... அதனால் சற்று தேநீர் தயாரித்து பருகலாம் என்று சமையல் அறைக்கு சென்றான்...

ஆம் சொல்ல மறந்து விட்டேன் கிருஷ்ணா ஒரு திருமண பந்தத்தில் இன்னும் இணையாத மிகவும் ஒழுக்கமான மனிதன்... அவன் அப்படி எவரிடமும் மனதை பறி கொடுக்காமல் இருந்ததற்கான காரணம் சமூகத்தில் அங்கங்கே நிகழும் திருமண பந்ததத்தின் சீர்குலைவுகள் தான் காரணம் என்று மற்றவர்களிடம் அவனது திருமணம் பற்றி பேச்சு எடுத்தால் சிரித்துக்கொண்டே சொல்லி விட்ட போதிலும் அவனுக்கு உண்மையில் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று மட்டும் சொல்லலாம்.. ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது...ஏனெனில் அவனை நிறைய பேர் காதலித்தார்கள்..ஆனால் அவனோ ஒரு வார இறுதி நாளில் அவர்களை அவனுக்கு பிரியமான தேநீர் விடுதிக்கு வரவழைப்பான்..அவர்களும் மிகவும் ஆவலாக கனவுகளோடு வருவார்கள்..அவர்களிடம் பலவிதமான கேள்விகள் கேட்பதற்கு முன்னால் தேநீர் முழுமையாக ரசித்து அதிலேயே ஒன்றி பேசாமல் அங்கிருந்த மரங்களை பறவைகளை ரசித்து பருகுகிறார்களா என்று முதல் தேர்வு அவர்களிடம் சொல்லாமலேயே வைப்பான்..ஆனால் அது அவர்களுக்கு தெரியாது அல்லவா..அதனால் தேநீர் பருகிக் கொண்டே அவன் வேலை எவ்வளவு சம்பளம் உங்கள் வீட்டில் எத்தனை பேர் நீங்கள் எனக்கு முழு சுதந்திரம் வேலைக்கு செல்வதற்கு கொடுப்பீர்களா..இப்படி இத்யாதி இத்யாதி கேள்விகள் அவனை கேட்பார்கள்..அவனோ எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அந்த தேநீரை பருகுவதிலேயே மிகவும் நுட்பமாக இருப்பான்..அதை பார்த்து விட்டு பொறுமை இழந்து சென்ற பெண்கள் தான் அதிகம்..அப்படியே பொறுமையாக இருந்தவர்களில் அவன் தேநீர் பற்றி மட்டும் நிறைய பேசுவான்..இதில் மீதி பாதி பேர்கள் இவனை கிறுக்கன் என்று முத்திரை குத்தி கோபமாக சென்று விடுவார்கள்...ஆக மொத்தம் இவனுக்கானவள் இவன் எதிர் பார்த்த மாதிரி இன்னும் அமையவில்லை..அப்பாடா எப்படியோ அவன் தேநீர் தயாரிக்க சென்ற இடைவெளியில் உங்களுக்கு அவனை பற்றிய தகவல்களை சொல்லி விட்டேன்..உங்களில் யாரேனும் முயற்சி செய்து பாருங்கள்..அவனை திருமணம் செய்ய..

தற்போது அவன் வந்து விட்டான்.. பிறகு பேசலாம்...🤫

அப்படியே கிருஷ்ணா சோஃபாவில் அமர்ந்து கொண்டு அந்த தேநீரை பருகினான் மிடறு மிடறாக..

வாசல் கதவு திறந்து இருந்ததால் அவன் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டே அந்த தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை பருகி முடித்து அதை அப்படியே அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு விட்டு வெறுமனே கைகளை தலைக்கு மேலே கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்...

சாலையில் பரபரப்பாக செல்பவர்களை மிகவும் நிதானமாக ரசித்து பார்த்தான்.. அவனுக்கு சிறிது சிரிப்பு வந்தது... நேற்று வரை நான் கூட இப்படி தான் சாலையில் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டு இருந்தேன்... ஆனால் இன்று என் நிலை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைத்து இருக்கிறது...ஏதோ அந்த நிறுவனத்தின் முக்கால் வாசி பங்கு தன் பெயரில் அவர்கள் எழுதி வைத்து விட்டதாக அல்லவா நான் ஓடிக் கொண்டிருந்தேன் என்று தற்போது அந்த ஓட்டத்தை நிறுத்தியவுடன் நிதர்சனம் புரிந்தது..

ஆனால் நல்ல வேலையாக எந்த கடனும் இந்த வேலையை நம்பி வாங்கவில்லை...

அவர்கள் கை நிறைய சம்பளம் கொடுத்தார்கள்...

இந்த கடன் வேண்டுமா அந்த கடன் வேண்டுமா என்று ஒரு நாளில் எத்தனை அலைபேசி அழைப்புகள் அதை எல்லாம் மிகவும் நிதானமாக பதில் சொல்லி கடந்தான்... அது அவனுக்கு வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்ட மனிதன் என்பதை காட்டியது...

தற்போது வங்கியில் வீட்டு செலவுகள் போக ஒரு பெரிய தொகை இருந்தது..

அதனால் இன்னும் சில மாதங்களுக்கு ஏன் ஓரிரு வருடங்களுக்கு போதும்.. ஏனெனில் அவன் வீட்டை கூட நகர் புற வெளியில் இயற்கை சூழ்ந்த ஒரு எளிமையான வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தான்.. ஆனாலும் சாலையில் எப்போதும் பரபரப்பு உள்ள வீடு அது...

அதனால் வாடகை நகர் புறத்தை விட மிகவும் குறைவு..

தற்போது சாப்பாட்டிற்கோ மற்ற வீட்டு வாடகைக்கோ பெரிதாக பிரச்சினை இல்லை.. ஆனால் இப்படியே சும்மா இருப்பது இயலாத ஒன்று..

என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது மீரா அலைபேசியில் அழைத்து இருந்தாள்..

என்ன கிருஷ்ணா என்ன செய்கிறாய் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டாயா என்று கேட்டாள்..

ஆமாம் மீரா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டேன்..இனி அலுவலகம் செல்ல தேவையில்லை என்று சொன்னான்...

அப்படி என்றால் வீட்டில் இருந்து வேலை செய்ய சொல்லி விட்டார்களா என்று ஆவலாக கேட்டாள்..

இல்லை இல்லை கொஞ்சம் பொறுமையாக கேள்..வேலை போய் விட்டது என்றான்..

என்ன வேலை போய் விட்டதா.. உங்கள் நிறுவனம் தானே மிகவும் பிரசித்தி பெற்ற டாப் டென் நிறுவனத்தில் எப்போதும் இருக்கும்.. அந்த நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கையா என்று ஆச்சரியமாக கேட்டாள்...

ஆம் மீரா பெரிய பெரிய நிறுவனங்கள் தான் ஏதோவொரு சாக்கு சொல்லி ஆட் குறைப்பு நடவடிக்கைகள் செய்கிறார்கள்.. இதில் என்ன அதிசயம் என்று கேட்டான்...

சரி சரி நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே.. நான் எங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலி பணியிடங்கள் உனக்கு தகுந்தார் போல உள்ளதா என்று பார்க்கிறேன்..நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே..சரியா என்று கேட்டாள்..

சரி மீரா.. நான் அது பற்றி சிறிது மன வருத்ததோடு தான் இருந்தேன்.. ஆனால் தற்போது அந்த வருத்தம் இல்லை.. ஏனெனில் எனக்கு இந்த இடைவெளியை கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன்...

ஹே.. மிகவும் மகிழ்ச்சி..நாளை நான் விடுப்பு சொல்லி விட்டு வருகிறேன்.எங்காவது போகலாம் நீ முடியாது என்று சொல்லி விடாதே என்று உற்சாகமாக கேட்டாள்...

அதெல்லாம் முடியாது என்று சொல்ல மாட்டேன்..நீ இல்லை என்றாலும் நான் எங்காவது எனது இரு சக்கர வாகனத்தில் அது எங்கே போகிறதோ அங்கே போகலாம் என்று தான் நினைத்து இருந்தேன் என்றான் கொஞ்சம் சிரித்துக்கொண்டே..

சரி டா.. நான் நாளை வருகிறேன்..

நீ இரவு உணவு தயாரிக்க போ என்றாள்..

நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..நீ ஒழுங்காக வேலை முடிந்து சாலையில் எவர் மீதும் உன் வண்டியை இடித்து விடாமல் வீட்டுக்கு போ என்றான்..

உனக்கு என்னிடம் வம்பு இழுத்து பேசாமல் உறக்கம் வராது அப்படி தானே கிருஷ்ணா.. சரி நீ போனை வை என்று சொல்லி பொய் கோபம் கொண்டு அலைபேசியை தொடர்பை துண்டித்தாள்..

எப்படியோ அவனது நீண்ட கால பள்ளி தோழி வெகு நாட்களுக்கு பிறகு அலைபேசியில் அழைத்து பேசியதில் அவனது வேலை பறி போனதால் ஏற்பட்ட மனக் காயம் ஆறியது போல இருந்தது..

அப்படியே தனக்கு பிடித்த ரேடியோ மிர்ச்சி வானொலி ஒலிபரப்பை கேட்டுக் கொண்டே இரவு உணவாக சப்பாத்தி மாவு பிசைய ஆயத்தமானான்...

வானொலியில் வாகாய் வாகாய் வாழ்கிறேன்..என்ற வரிகள் கேட்டது...

உண்மை தானே.. இந்த பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமான பேரழகை தனக்குள் புதைத்து வைத்து உள்ளது.. அந்த புதையல் எவ்வளவு ஆசுவாசமான உணர்வுகளை நமக்கு இலவசமாகவே அளிக்க காத்து இருக்கிறது..அதை விடுத்து எப்போதும் ஓட்டம் ஓட்டம் என்று யாருக்காகவோ ஓடினால் எப்படி இதை அனுபவிப்பது... கொஞ்ச நாள் இந்த பிரபஞ்சத்தின் அழகை மிகவும் நிதானமாக பருக வேண்டும்.. அது நான் நேசித்து கிடக்கும் தேநீரின் சுவையை விட பிரமாண்டமானது...என்று நினைத்தபடியே மாவை பிசைந்து முடித்து விட்டு குருமா வைக்க தயாரானான்...

அங்கே இரவு மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.. கிருஷ்ணா மன பாரமோ மெல்ல மெல்ல குறைந்தது..

#இளையவேணிகிருஷ்ணா..

நாள்:16/10/25.

ஞாயிற்றுக்கிழமை.



புதன், 12 நவம்பர், 2025

வித்தியாசமான மனிதர்..

 


கண்ணன் ஒரு பழமைவாதி என்று அந்த ஊர் மக்களால் அறியப்படுபவர்.. அவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்ந்துக் கொண்டு வருபவர் என்று சொன்னால் அது மிகையில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகன் இவரை பார்த்து மிகவும் எரிச்சல் அடையும் அளவுக்கு அவர் எந்தவித டிஜிட்டல் கருவியையும் அவரோடு பயணிக்க விட்டதில்லை..

அவர் ஒரு பட்டன் போன் தான் வைத்திருப்பார்.. அதையும் இப்போது இருக்கும் மக்கள் போல ஒரு மூன்றாவது கையை போல எங்கேயும் எடுத்துக் கொண்டு செல்பவர் அல்ல.. சொல்லப் போனால் அந்த போன் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் தான் இருப்பார்... வெளியூருக்கு போகும் போது கூட அவர் அதை எடுத்துக் கொண்டு போவதில்லை...இது பற்றி அவரது மனைவி ஜானகி மகனிடம் குறைப்பட்டு கொண்டால் உடனே அவரை பார்த்து எங்காவது போகும் போது அந்த போனை எடுத்து கொண்டு போனால் என்ன அப்பா.. அந்த போனை நான் உங்களுக்கு வாங்கி கொடுத்ததே நீங்கள் எங்காவது போனால் குறிப்பாக உங்கள் நண்பர்கள் வீட்டுக்கு போனால் நேரம் தெரியாமல் பேசுவீர்கள்..பிறகு இரவு ஆகி விடும் அங்கேயே தங்கி விட சொன்னார்கள் என்று தங்கி விட்டு காலையில் தான் வருவீர்கள்... அப்போது உங்களை எந்த நண்பர்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்று வரிசையாக போன் செய்து கேட்பது எங்களுக்கு ஒரு சங்கடம் என்றால் அவர்கள் அதை வைத்து கேலி செய்து சிரிப்பது ஒரு சங்கடம் என்று சொல்லி சலித்துக் கொள்வான்... அப்போதெல்லாம் அவர் அட போப்பா வழி முழுவதும் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை..குறிப்பாக பேருந்து இங்கேயே ஏறி இருக்க மாட்டேன்.உனது அம்மா என்னங்க எங்கே இருக்கிறீர்கள்..பஸ் ஏறி விட்டீர்களா என்றும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை நான் கிரிக்கெட் லைவ் கமெண்ரி கொடுப்பது போல உங்கள் அம்மாவுக்கு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்..அதனால் நான் எனது நண்பர் காவல் துறையில் தான் இருக்கிறார்..அவரிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லி விட்டு தான் போவேனாக்ககும் என்று பெருமையாக சொல்லவும் இன்னும் அதிகமாக அவரது மகன் மதனுக்கு இன்னும் கோபம் அதிகமாக வந்தது..இது என்ன பா பெரிய சலிப்பு... இதெல்லாம்

கேலிக்குரிய விஷயமா போப்பா போய் வேலையை பார்... இந்த உலகம் எதையாவது குறைப்பட்டுக் கொண்டும் கேலி செய்துக் கொண்டும் தான் இருக்கும்..என்று சிரித்துக்கொண்டே அவர் வேலையை பார்க்க சென்று விடுவார்... இந்த பதில் எப்போதும் வரும் பதில் தான்.. அப்போதெல்லாம் மதன் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விடுவான்.. மேலும் அவரது தாய் ஜானகியிடம் அம்மா அவரை திருத்த முடியாது..அவரை பற்றி என்னிடம் சொல்லி என்னை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதே... அவர் எப்படியோ போகட்டும் என்று சொல்லி விட்டு போய் விடுவான்..

இப்படி தான் அவர் வாழ்க்கை அவருக்கு டிஜிட்டல் இம்சை இல்லாமலும் மற்றவர்களுக்கு அவர் ஒரு இம்சை யாகவும் காட்சி அளித்தார்...

ஒரு நாள் அவர் வீட்டில் இருக்கும் போது அவரது நண்பர் குமரேசன் அழைத்து இருந்தார்.. அப்போது அவர் முற்றத்தில் இங்கும் அங்கும் பறந்து திரிந்த குருவிக்கு அரிசியை ஒரு தட்டில் எடுத்து வந்து வைத்து அது சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தார்.. ஜானகி தான் எப்போதும் அவரது போனை எடுப்பார்.. அவர் அந்த போனை எடுத்து கொண்டு அவரிடம் வந்தார்... அவரது செயலில் தலையில் அடித்துக் கொண்டே ஏங்க உங்களுக்கு போன்.. உங்கள் நண்பர் குமரேசன் தான் தொடர்பில் இருக்கிறார்.. பேசுங்கள் ஏதோ அவசரமாக இருக்கும் போல அவரது குரல் பதட்டமாக இருந்தது என்று சொல்லி அவரிடம் அலைபேசியை தந்தார்.. அவர் டேய் கண்ணா என் போனுக்கு குறுந்தகவல் வந்து கொண்டே உள்ளது டா.. என் வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டார்கள் டா .. இது எப்படி டா நடக்கும் என்று குரலில் பதட்டமாக கேட்டார்.. குரல் தழுதழுத்தது... அவரது மகன் அரபு நாடு ஒன்றில் பணி செய்து வருகிறான்.. அவன் அனுப்பி வைத்த பணத்தை தான் இழந்து நிற்கிறார் என்று கண்ணன் புரிந்துக் கொண்டு சரி டா குமரேசா...பதட்டப்படாதே... கொஞ்சம் தண்ணீர் குடி... நான் வருகிறேன்.. நமது நண்பன் தண்டபாணி தான் காவல் துறையில் எஸ் ஐ ஆக இருக்கிறான் அல்லவா அவனிடம் போகலாம்.. அதற்கு முன்னால் உனது வங்கிக்கு தகவல் சொல்லி உனது கணக்கில் உள்ள தொகை மேலும் பறி போகாமல் இருக்க வங்கி ஏடிஎம் கார்டை லாக் செய்ய சொல் உடனடியாக.. நான் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு அவசரம் அவசரமாக ஜானகி என் சட்டையை எடுத்து வா என்று வேகமாக குரல் கொடுத்தார்... ஜானகி தனது அடுப்பில் உள்ள வேலைகளை விட்டு விட்டு இதோ வரேன்ங்க என்று சொல்லி கொண்டே அவரது சட்டையை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு என்னங்க என்னாச்சு என்றாள்...

அதெல்லாம் ஒன்றும் இல்லை.. எனது நண்பன் குமரேசன் இருக்கிறான் இல்லையா அவன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை யாரோ ஒரு லட்சம் வரைக்கும் திருடி விட்டார்களாம்.. நான் வந்து சொல்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்று அவசரப்படுத்தினார்... உடனடியாக சமையல் அறையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு பாட்டில் தண்ணீர் ஊற்றி அதை ஒரு சிறிய பையில் போட்டு அவரிடம் கொடுத்துக் கொண்டே என்னங்க இப்படி எல்லாமா நடக்கும் என்று ஆதங்கமாக கேட்டாள் ஜானகி...

ஆமாம் ஜானகி இது டிஜிட்டல் திருட்டு.. இதெல்லாம் தினமும் நான் செய்தித்தாளில் வாசித்து வருகிறேன்...

இப்படி எல்லாம் நடந்துக் கொண்டே இருந்தாலும் மக்கள் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா... இது வரை செய்தித்தாளில் வாசித்து வந்தேன் எனது நண்பனுக்கே இந்த நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...என்று சொல்லி கொண்டே தனது காலில் காலணி மாட்டிக் கொண்டே வரேன் ஜானகி.. நான் நாளை தான் வருவேன்..நீ என்னை எதிர்பார்க்காதே என்று முதன் முறையாக ஜானகியிடம் தனது வருகையை பற்றி சொல்லி விட்டு வேகமாக நடக்கிறார்... அந்த ஊருக்கு வரும் டவுன் பஸ் வரும் நேரம் தான் தற்போது.அதை  பிடிப்பதற்காக கொஞ்சம் நடையை கூட்டினார்... அவரது நண்பன் குமரேசன் ஊர் இவரது ஊரில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அந்த ஊரை சென்றடைய இதை விட்டால் மாலையில் தான் பேருந்து என்பதால்...

ஜானகிக்கோ தனது கணவன் எத்தனையோ உலக விவகாரங்கள் தெரிந்து இருந்தும் ஏன் பழமைவாதியாக இருக்கிறார் என்று  புரிந்தது...சே எப்படி எல்லாம் தனது கணவரை இப்படி பழமைவாதியாக இருக்காதீர்கள் என்று தானும் தன் மகன் மதனும் திட்டி இருப்போம்.. அது தான் தற்போது அவருக்கு பாதுகாப்பு போல.. அவர் பாட்டுக்கு அவர் உலகை சிருஷ்டித்து வாழ்ந்து விட்டு போகட்டுமே.. நமக்கு ஒரு கொள்கை என்றால் அவருக்கு ஒரு கொள்கை.. அந்த கொள்கையால் அப்படி ஒன்றும் பெரிய மோசமான நிகழ்வு நடக்க போவதில்லை.. பிறகு ஏன் அவரை கடிந்து கொள்ள வேண்டும் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு  தனது மீதி சமையல் வேலையை முடித்து கொண்டு முற்றத்தில் கொஞ்சம் காற்று வாங்க வந்தாள்... அங்கே அந்த இரண்டு குருவிகள் அவரது கணவர் வைத்த அரிசியை சாப்பிட்டு விட்டு இவளை பார்த்ததும் தனது சிறகை படபடத்து வேகமாக வெளியே பறந்து சென்றது...அவரை பார்த்து பயம் இல்லை என்னை பார்த்து பயம் என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே முணுமுணுத்து அங்கே உள்ள மரக் கட்டிலில் அமர்ந்து வெளியே உள்ள மரத்தின் இலைகள் அசைவதை முதன் முறையாக மிகவும் ரசனையோடு லயித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அங்கே அந்த இரண்டு குருவிகளும் அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கீச் கீச்சென்று தனக்குள் ஏதோ பாஷை பரிமாறிக் கொண்டதை வேடிக்கை பார்த்தாள் ஜானகி.. எவ்வளவு அழகு..அதை விடுத்து தனது மகன் வாங்கி கொடுத்த தொடு திரையில் நாம் யார் யாரோ போடும் ரீல்ஸ்ல் மனதை பறிக்கொடுத்தோமே என்று முதன் முறையாக கவலைப் பட்டாள் ஜானகி...

அதை அப்படியே ரசித்துக் கொண்டே சமையல் களைப்பு தீர கண்ணயர்ந்தாள்.. அந்த குருவிகள் இப்போது தாலாட்டியது ஜானகிக்காக தனது குரலில்....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

வியாழக்கிழமை.



செவ்வாய், 11 நவம்பர், 2025

மண் மணம்...🍂💫☔

 


தரண் பெங்களூரில் கணினி தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வரும் ஒரு முப்பது வயது இளைஞன்... தொடர்ந்து வேலை பார்த்து பார்த்து ஏதோவொரு அலுப்பு அவனுக்கு ஏற்பட்டதை உணர்ந்தான்... அப்போதைக்கு அப்போது ஓரிரு நாட்கள் கிடைக்கும் விடுப்பில் எல்லாம் அவன் பிறந்த கிராமத்திற்கு வந்து விடுவான்... ஆனால் போக ஒரு நாள் வர ஒரு நாள் என்று இடையில் தானாக விடுப்பு வாங்கிய இரண்டு நாட்கள் மட்டுமே அவனது கிராமத்தில் தங்குவதற்கு கிடைத்த வாய்ப்பாக அமைந்தது..

பணிக்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு அது பற்றி பெரிதாக தெரியவில்லை.. ஊருக்கு போகும் போதெல்லாம் அங்கே அவனுக்கு ஊர் மக்களால் நிறைய வரவேற்பு கிடைத்தது.. அது அவனுக்கு பெருமையாக இருந்தது.. மேலும் அப்பாத்தா அவன் வீட்டு வழியாக போவோர் வருவோரை கூப்பிட்டு பேசும் போதெல்லாம் அவர்கள் உங்கள் பேரன் பெங்களூரில் என்ன வேலை செய்கிறான் என்று கேட்கும் போதெல்லாம் மிகவும் உற்சாகமாக கண்களில் ஒளி தெரிய என் பேரன் பெரிய கம்யூட்டர் கம்பெனியில் பெரிய பதவியில் பணம் நிறைய சம்பாதிக்கிறானாக்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருப்பார்.. அப்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும்.. 

அந்த சமயத்தில் தந்தை இருந்தார் என்றால் அவரும் சிரித்துக்கொண்டே எப்போது பார்த்தாலும் இதே பேரன் பெருமை தானா என்று சென்று விடுவார்..

ஏனெனில் தரணின் குடும்பம் ஒரு விவசாய குடும்பம்.. இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் இரண்டு கறவை மாடுகள் வைத்து சிறிது வங்கியில் தேவைப்படும் போது விவசாய கடன் வாங்கி இப்படி தான் ஓடியது..கிணற்று பாசனம் தான் என்றாலும் நெல் கம்பு சோளம் வெங்காயம் கடலை என்று எதை போட்டாலும் நன்கு விளையும் பூமி..அதே சமயம் கிணறும் நல்ல ஊற்று ஊறி அவர்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தது.. நாளடைவில் பருவ மழை தவறியது...அருகே இருக்கும் நிலத்தில் எல்லாம் போர் போட்டு இவர்கள் நீர் மட்டம் குறைய காரணம் ஆனது... அப்போதும் அவர்கள் கலங்காமல் ஒரு ஏக்கர் நிலத்தை விவசாயம் பார்த்து வந்தார்கள்... தரண் பள்ளி முடிந்ததும் பையை வைத்து விட்டு நேராக வயலுக்கு சென்று மாட்டை கவனித்து வந்தான்..மாடு கன்றுகளுக்கு இரவு மற்றும் மறுநாள் காலைக்கு தேவையான பச்சை பயிர் தட்டையை அறுத்து வைத்து விட்டு மாடு கன்றுகளுக்கு தவிடு பிண்ணாக்கு வீட்டில் தயாரித்த ஊற வைத்த தானிய கலவை கலக்கி தொட்டியில் வைத்து அது ஆவலாக குடிக்கும் அழகை ரசிக்கும் போது அவன் பயிர் தட்டையை அறுத்த அலுப்பு போய் விடும்.. பிறகு வீட்டுக்கு அதை கூட்டி வந்து மாட்டை மாட்டு பட்டியில் அடைத்து விட்டு அதற்கு தேவையான தீனியை போட்டு விட்டு தனது கை கால்களை கழுவிக்கொண்டு படிக்க உட்காருவான்... பிறகு இரவு உணவு கொஞ்ச நேரம் வானொலி ஒலிபரப்பு கேட்டு ரசித்தல் உறங்குதல் .. மீண்டும் அதிகாலை எழுந்து படித்தல் பிறகு கறவை முடித்தவுடன் மாடு கன்றுகளை போய் வயலில் கட்டி விட்டு அதற்கு தேவையான தீனியை போட்டு விட்டு குளித்து முடித்து காலை உணவை சாப்பிட்டு விட்டு ஏழு கிலோ மீட்டர் அப்பால் உள்ள பேரூராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தனக்கு விருப்பமான முதல் குரூப் எடுத்து படித்து வந்தான்.. இது தான் அவனது தினசரி வேலை..

பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுத்தாலும் அவன் யார் எந்த பாடத்தில் சந்தேகம் கேட்டாலும் சொல்லி கொஞ்சமும் கர்வம் இன்றி சொல்லி கொடுப்பான்.. இதனால் இவனை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எப்போதும் பிரியமான மாணவனாக திகழ்ந்தான்.மேலும்அந்த மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து தனது பள்ளிக்கு வீட்டுக்கு ஊருக்கு பெருமை சேர்த்தான்.. இதனால் அவனுக்கு விருப்பமான கல்லூரியில் அவன் விருப்ப பாடம் எலக்ட்ரிக்கல்ஸ் &எலக்ன்ட்ரானிக் கிடைப்பதில் எந்தவித சிரமமும் இல்லை.. அந்த படிப்பு இறுதி ஆண்டில் இருக்கும் போது பிரபலமான கம்பெனியில்  உள் வளாக நுழைவு தேர்வில் வெற்றி பெற்றதால் அவனை தேர்வு செய்து பணி ஆணையை கொடுத்து விட்டு சென்றார்கள்.. கல்லூரியே இது பற்றி பெருமையாக நினைத்தது..

கல்லூரி முடிந்ததும் நேராக அந்த பிரபலமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான்.கல்லூரி முடிந்ததும் பணிக்கு சேர்ந்ததால் அவன் மாடு கன்றுகளை நினைவில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூழ்கி விடுவான்...

தற்போதும் மாடு கன்றுகள் அவன் வீட்டில் உள்ளது..அதை அவரது தந்தை தான் தற்போது காலை மாலை வயலுக்கும் வயலில் இருந்து வீட்டுக்கும்  அழைத்து சென்று வருகிறார்.. ஊரில் உள்ள உறவுகள் எல்லோரும் உங்கள் பையன் தான் நன்றாக சம்பாதிக்கிறானே பிறகு ஏன் ஏன் இந்த மாடு கன்றுகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்கும் போதெல்லாம் அவர் அதனை பெரிதாக நினைக்காமல் நான் இந்த மாடு கன்றுகள் இந்த மண் வாசனையோடு பழகி விட்டேன்..அதை விட மனசில்லை என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு செல்வார்..

தரண் தாயாரும் மாடு மீது ஈர்ப்பு உடையவர் ஆதலால் அவருக்கு ஒரு சிரமமும் இல்லாமல் இருந்தது.. ஏனெனில் வயலில் விஸ்தாரமாக வேளாண்மை தற்போது செய்ய இயலாது.. கிணற்று நீர் மாடு கன்றுகளுக்கு பயிர் தட்டையை தெளித்து அதற்கு நீர் பாய்ச்ச தான் போதுமானதாக இருந்தது.. அதனால் அவர் இதிலேயே தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.. இப்படியே வாழ்க்கை போனது..

அன்றொரு நாள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அந்த வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டே அப்படியே  இரவில் கண்ணயர்ந்து உறங்கி விட்டார் தரண் தந்தை மனோகரன்.. விடிந்ததும் வழக்கமான அதிகாலை விழிப்பு வந்ததும் தினமும் செய்ய வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு காலை உணவை முடித்துக் கொண்டு  வயலுக்கு சென்றார் மனோகரன்.. தரண் தாய் லட்சுமி வீட்டில் வேலைகள் முடித்துக் கொண்டு மாமியாருக்கு உணவை பரிமாறி விட்டு மதியம் உணவை மேசை மீது எடுத்து வைத்து விட்டு தனக்கும் கணவர் மனோகரனுக்கும் மதிய உணவை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றாள்..

வயலில் வேப்ப நிழலில் போனவுடன் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தாள்..மாடு கன்றுகள் இவளை காதை தீட்டி கொண்டு அவளை பார்த்து கத்திக் கொண்டே பார்த்தது.. ஏனெனில் லட்சுமி தீனி போடும் நேரம் வந்துவிட்டது..அதை பார்த்து லட்சுமி கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாயா என்று அன்பாக கடிந்துக் கொண்டே  இதோ வரேன் இரு என்று மெல்லமாக எழுந்து மாட்டிற்கு அறுத்து வைத்து இருந்த பயிர் தட்டையை எடுத்து போய் போட்டார் ..

அது தலையை ஆட்டிக் கொண்டே சாப்பிடும் அழகை அப்படியே நின்று ரசித்தாள்.. தற்போது மனோகரன் லட்சுமி என்ன அங்கே மாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்..இதோ வரப்பு மீது உள்ள பயிர் தட்டையை களத்தில் கொண்டு வை என்று வயலில் இருந்து வேகமாக குரல் கொடுத்தார்..இருங்க வரேன்.. கொஞ்ச நேரம் எதையும் ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள் என்று முணுமுணுத்துக் கொண்டே கணவர் இருக்கும் இடத்திற்கு அறுத்து வைத்த பயிர் தட்டையை எடுத்து வர செல்லவும் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது..போனை காதில் வைத்தாள் ஹலோ என்றாள்.. அம்மா நான் தரண் பேசுறேன்.. நீங்கள் நன்றாக உள்ளீர்களா சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான்.. வழக்கமாக இரவு நேரத்தில் போன் செய்யும் இவன் இந்த நேரத்தில் எப்படி என்று நினைத்தவாறே நன்றாக இருக்கிறோம் சாப்பிட்டு விட்டு இங்கே வயலில் தான் இருக்கிறோம் டா கண்ணா...நீ எப்படி இருக்கிறாய் நலமா.. ஆமாம் ஏன் இந்த நேரத்தில் போன்.. எப்போதும் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாயே ..வேலை நேரம் மாறி விட்டதாடா கண்ணா என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே சென்றாள்.. அம்மா கொஞ்சம் இருங்கள்.. நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்க வேண்டும்.. இங்கே எனக்கு வேலை போய் விட்டது அம்மா.. ஆள் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக என்றான்.. 

என்னடா கண்ணா சொல்றே வேலை போய் விட்டதா என்றாள்..

ஆமாம் அம்மா.. ஆனால் அதற்காக ஏன் இவ்வளவு அதிர்ச்சி... அமைதியாக இருங்கள் அம்மா போனை அப்பாவிடம் கொடுங்கள்..

அப்பா பேசினார்..என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று அமைதியாக கேட்டார்.. அப்பா ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக வேலை போய் விட்டது இனி மேல் புதிய வேலை கிடைக்கும் வரை நான் ஊருக்கு தான் வந்து தேர்வுக்கு படித்து தயாராக வேண்டும் என்றான்..

ஓ அப்படியா.. அதனால் என்ன வாப்பா.. பார்த்துக் கொள்ளலாம் இப்ப என்ன சோற்றுக்கு வழி இல்லாமலா இருக்கிறோம்.. இல்லை இருக்க இடம் இல்லாமல் இருக்கிறோமா சொல்லு என்று நிதானமாக சமாதானம் செய்தார்.. ஒரு தந்தையின் உள்ளம் எப்போதும் நிதானமாக அறிவுபூர்வமாக யோசிக்கும்.. ஆனால் தாய் உள்ளமோ உணர்வுபூர்வமாக யோசித்து நிலைதடுமாறும்... என்பது உண்மை தான் போல என்று நினைத்து கொண்டு தொடர்ந்தான்... நான் இரவு கிளம்பி வருகிறேன் அப்பா.. இங்கே பெரிதாக பொருட்கள் இல்லை..அதை இங்கேயே எவருக்கும் பயன்படுத்தி கொள்ள கொடுத்து விட்டு வருகிறேன் என்றான்.. அதுவும் சரிதான் ப்பா அப்படியே செய்து விட்டு வா.. பயணத்தில் கவனமாக வாப்பா.. ஒன்றும் கவலைப்படாதே என்று மீண்டும் ஒரு அக்கறையோடு சொல்லி விட்டு போனை வைத்தார்..

லட்சுமியோ என்னங்க இப்படி ஆயிடுச்சு என்று சோகமானாள்...

அட விடு லட்சுமி.ஏதோ காலம் காலமாக நம்ம பையன் அந்த வேலையிலேயே இருந்த மாதிரி.. இப்போது என்ன ஆகி விட்டது என்று கவலையுடன் இருக்கிறாய்..போ போ அங்கே பார் உன் மாடு கன்றுகள் உன்னையே பார்க்கிறது இந்தம்மா போனா போன இடம் என்று கோபமாக பார்க்கிறது பார் என்றார் கேலியாக...

லட்சுமி, உங்களுக்கு எதுவாக இருந்தாலும் கேலி தான் போங்கள் என்று சொல்லிக் கொண்டே நான் இப்போது தான் என் அண்ணன் கிட்ட அவர் பெண்ணை கேட்கலாம் என்று நினைத்தேன் என்றாள்.எல்லா தாயாருக்கும் பையனை பற்றிய கவலை இருக்கும் அல்லவா அது போல..

அட விடு லட்சுமி... நல்ல வேளை நீ இந்த பேச்சை எடுக்காமல் இருந்தது நல்லதாக போயிற்று.. ஏனெனில் உன் அண்ணன் நம்ம பையன் நன்றாக சம்பாதிப்பதால் கொடுக்க நினைத்து இருக்கலாம்.. தற்போது இவனுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்காமல் போனால் அதற்காக மட்டும் பெண் கொடுத்த உங்கள் அண்ணன் மனம் சங்கடப் படும் அல்லவா என்று கேட்டார் மனோகரன்..

அதற்கு லட்சுமி பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

சரி சரி மணி பார் ஒன்று ஆகி விட்டது.. நாம் சாப்பிடலாம் வா என்று சொல்லி விட்டு கடகடவென்று வரப்பில் நடந்தார்...

பின்னாலேயே கவலை தோய்ந்த முகத்துடன் லட்சுமி சென்றாள்...

திடீரென்று அங்கே ஒரு காற்று வேகமாக வீசியது.. அப்போது எங்கெங்கோ கலைந்து திட்டு திட்டாக இருந்த மேகம் ஒன்று சேர்ந்து சிறு தூரலாக வர அறிகுறியாக மண் வாசம் அற்புதமாக நாசியை துளைத்தது...

லட்சுமி இன்று வானம் நிற்காது போல.. பார் ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்த மண் வாசம்... என்றார் மனோகரன்..

ஆமாங்க... இந்த வாசத்திற்கு வேறு எந்த வாசனையும் ஈடு இணை இல்லை என்று உற்சாகமானாள் லட்சுமி..

ஒரு சில நிமிடங்களில் மழை நன்றாக பெய்தது... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிற்காமல் பெய்தது...

மனோகரன் அந்த மழையை கொட்டகையில் அமர்ந்து ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே லட்சுமி இங்கே பார் இந்த மழை நமக்கு நல்ல அறிகுறி காட்டுகிறது...நம்ம ஏரிக்கு நீர் வரத்து வரும் அருகில் உள்ள அந்த மலையில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது..நம்ம கிணறு ஊற்று ஊற இது நமக்கு கை கொடுக்கும் என்றார்... ஆமாங்க இறைவன் அனுகிரகம் நமக்கு இருக்கிறது போல... என்றாள் சிரித்துக்கொண்டே...

ஆமாம் ஆமாம் உன் கவலை தீர்ந்ததா என்றார்...

கூடவே எடுத்து வந்த  வானொலியில் வானிலை அறிக்கையில் இன்னும் இரண்டு நாட்கள் இந்த மழை நீடிக்கும் என்று சொன்னதில் இவர்கள் இருக்கும் பகுதியும் அடங்கும்..

இருவரும் பெய்யும் மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டார்கள்...இதை அங்கே கொட்டகையில் இருந்த மாடும் காதை முன்னோக்கி வைத்து பார்த்துக் கொண்டு இருந்ததை எதேச்சையாக பார்த்த மனோகரன் அப்படி பார்க்காதே... அந்த மழையை ரசி அது தான் உனக்கு எங்களுக்கு ஏன் இந்த பிரபஞ்சத்தின் ஜீவராசிக்கு சோறு போடும் கடவுள் என்றார் கொஞ்சம் குரலை உயர்த்தி.. அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்... உன் தோழன் நாளைக்கு வந்து விடுவான் அவன் கொஞ்ச நாள் உங்களோடு தான் இருக்க போகிறான் என்றார் சற்றே குரலை உயர்த்தி அந்த மாடு கன்றுகளிடம்...

இவர் பேசுவதை கூர்மையாக கேட்ட அந்த மாடு கன்றுகள் உற்சாகமாக தலையை ஆட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்ததை லட்சுமியும் மனோகரனும் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள்...

அங்கே தரணும் இங்கே இருக்கும் மாடு கன்றுகளை நினைத்துக் கொண்டே தனது அறையில் உள்ள நண்பர்களிடம் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டு ஏதாவது அப்பாத்தா அப்பா அம்மாவிற்கு வாங்கலாம் என்று கடைத் தெருவிற்கு செல்ல ஆயத்தமானான்...இதை பார்த்த அந்த அறை நண்பர்கள் உனக்கு வேலை போனது கவலையாக இல்லையா என்று ஆச்சரியமாக கேட்டார்கள்... இல்லை நான் கவலை மறக்க எனக்கு அங்கே என் மண் வாசமும் நான் அன்போடு வளர்த்த மாடு கன்றுகளும் பேரன்போடு காத்திருக்கிறது என்றான் மிகவும் உற்சாகமாக...

இந்த பதிலை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஏனெனில் அவர்கள் இந்த வேலையை நம்பி நிறைய கடன் வங்கியில் வாங்கி இருந்தார்கள்... அது அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறது..நானோ இந்த வேலையை நம்பி எந்த கடனும் வாங்காமல் இருந்ததால் தப்பித்தேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சோடு கடை வீதிக்கு சென்றான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/10/25

புதன்கிழமை.



திங்கள், 10 நவம்பர், 2025

நானும் கங்காவும்... சிறுகதை

 


இந்த குளிர் காலத்தில் படுக்கையை விட்டு எழுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல..ஆனால் அன்றாட வாழ்க்கையை அதற்கான நிகழ்வோடு பயணிப்பதை தவிர்க்க இயலாது..அதனால் கொஞ்சம் சோம்பலை முறித்து என்னருகே உள்ள மேசை மீது இருந்த சிறிய கடிகாரத்தில் மணியை பார்க்கிறேன். விடியற்காலை ஐந்து மணி என்று காட்டியது.

இப்போது எழுந்தால் தான் இல்ல பணிகளை முடித்து விட்டு எனது அலுவலக பணிக்கு செல்ல சரியாக இருக்கும்... எப்போதும் வழக்கமாக அந்த விடியற் பொழுதை ஒரு சில நிமிடங்கள் வீட்டு புழக்கடையில் வந்து நின்று ரசிக்காமல் என் கடமையை நான் செய்தது இல்லை.. அப்படியே நான் வளர்த்து வரும் செடிகளை மெதுவாக நோட்டமிட்டேன்.. அங்கே சில ரோஜாக்கள் பூத்து மணம் வீசியது.. அது தலையசைத்து வா வா என்று உற்சாகமாக அழைத்தது.. அதனருகில் சென்று மெல்ல அதன் இதழ்களை வருடி விடும் போது அந்த இதழ்களில் இருந்து வழிந்த பனித்துளிகள் என் விரல்களின் வழியாக படர்ந்து ஓடியது..அதை அப்படியே சிறிது நேரம் ரசித்துக் கொண்டே என் காலை கடன்களை முடித்துக் கொண்டு தேநீர் தயாரிக்கும் பணிக்காக செல்கிறேன்...

அந்த தேநீர் கோப்பையை எடுத்து கொண்டு மீண்டும் புழக்கடை பக்கம் வருகிறேன்.. அங்கே ஓரிரு காக்கை குருவின் சத்தம் தற்போது கேட்கிறது.. மெல்ல மெல்ல மேலே சூரியன் எழ ஆயத்தமாகும் அறிகுறிகள் கிழக்கு வானம் சிவப்பதில் உணர்ந்து ரசிக்கிறேன்..

என்ன இருந்தாலும் இந்த இயற்கை தனது நியதியை மாற்றாமல் எப்படி பயணிக்கிறது என்று எப்போதும் போல ஆச்சரியம் கொண்டு பருகுகிறேன் என் கையில் உள்ள தேநீரை அதே ரசனை மாறாமல்..

பிறகு குளித்து முடித்து விட்டு என் நாளின் தொடக்கத்தௌ இனிமையாக்கும் வானொலி ஒலிபரப்பு சேவையை ரசித்துக் கொண்டே காலை உணவு தயாரிக்கும் பணிகளுக்கு இடையே அலுவலக பணிக்கான ஒத்திகையும் செல்கிறது ஒரு ஓரமாக மனதின் மூலையில்..

ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்தது...

அலுவலகம் செல்வதற்காக எனது அலுவலக பையை எடுத்துக்கொண்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்...கதவை பூட்டி விட்டு எனது இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு பயணிக்கும் போது தான் அந்த அசாதாரண நிகழ்வை கண்டேன்...

ஒரு இளம் பெண் அங்கே கண்ணீரோடு கதறி அழுதுக்கொண்டே சாலையின் இடது புறத்தில் அந்த பேக்கரி பக்கம் கிழிந்த உடையோடு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதை கவனித்து மீண்டும் எனது வாகனத்தை திருப்பி அவள் அருகில் வந்து அவளை தொட்டு திருப்புகிறேன்... நான் தொட்டதில் மீண்டும் பயந்து நடுங்கி மிரண்டு ஒதுங்கி போகிறாள்...

ஏன் இந்த அவஸ்தை அவளுக்கு என்று சொல்லாமலேயே புரிந்தது எனக்கு..

அவளை பார்வையாலேயே அமைதிப் படுத்தி விட்டு அங்கிருந்து அவளை நேராக எனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்...

வழி நெடுக அவளும் எதுவும் பேசவில்லை நானும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை..

இந்த சமுதாயத்தில் நிகழும் அற்பத்தனமான நிகழ்வில் இதுவும் ஒன்று தானே...

இங்கே இதை பற்றி நிறைய பேசுவார்கள் எழுதுவார்கள்.. ஆனால் செயல் என்று வந்து விட்டால் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நமக்கேன் வம்பு என்று ஓரமாக ஒதுங்கி போய் விடுவார்கள்.. இங்கே பல பெண்களுக்கு நிகழும் அநியாயம் எல்லாம் அவளுக்கு எதிராக அவள் மீது வேண்டும் என்றே பழி சுமத்தி பழக்கப்பட்ட சமுதாயத்திற்கு இந்த அலைகளின் வலியை எப்படி உணர்த்தினாலும் உணர போவதில்லை.. அப்படியே உணர்ந்தாலும் உணராதது போல கடந்து தான் செல்வார்கள்..

இது காலம் காலமாக அவள் நிகழ்த்தப்படும் ஒரு தீராத வன்முறை..

இப்படியே யோசித்துக் கொண்டே சாலையில் பயணித்து எனது வீட்டிற்கு வந்து விட்டேன்..

அந்த பெண் மெல்லமாக இறங்குகிறாள்..

அவளை வீட்டுக்கு அழைத்து சென்று குளியலறையை காட்டி குளிக்க சொல்கிறேன்.. அதற்கு முன் என்னிடம் உள்ள எனக்கு மிகவும் பிடித்த ஒரு பிங்க் கலர் சுடிதாரை அவளிடம் கொடுத்து குளித்து முடித்து விட்டு வா என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு அவளுக்காக சில உணவுகளை ஆர்டர் செய்கிறேன்.. பிறகு அவள் வந்தவுடன் இஞ்சி தட்டி போட்ட தேநீரை சூடாக அவளிடம் கொடுத்து பருகு என்கிறேன்..

அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்..

நான் அவளை அழக் கூடாது என்று சமாதானம் கண்களாலேயே சொல்லி விட்டு நகர்ந்து சென்று இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்கிறேன்.. எதிர் முனையில் எனது மேலதிகாரி கதிரவன் என் விடுப்பு தகவலை காதில் வாங்கியவுடன் ஏனம்மா என்னாச்சு இன்று தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் நிறைய உள்ளது.. எம் டி கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று கொஞ்சம் சலிப்போடு கேட்டார்...

நான் உங்களுக்கு என் விடுப்பு பற்றிய விபரங்களை நாளை அலுவலகம் வந்து சொல்கிறேன் சார்.தற்போது கொஞ்சம் எதிர் பாராத நிகழ்வு நேர்ந்து விட்டது புரிந்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சரிம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் பாருங்கள் என்று சொல்லி அலைபேசி இணைப்பை துண்டித்தார்...

நான் மீண்டும் அவளின் அருகில் சென்று சோபாவில் அமர்ந்தேன்.. அவள் கைகளுக்குள் முகத்தை புதைத்து கொண்டு தேம்பி தேம்பி அழுகிறாள்...

அவள் கொஞ்சம் அழட்டும் என்று விட்டு விட்டேன்..

அப்போது வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்டது..

கதவை திறந்தேன்.நான் ஆர்டர் செய்த உணவு வந்து இருந்தது..அதை வாங்கி டைனிங் ஹாலில் இருந்த மேசை மீது வைத்து விட்டு அவளிடம் வந்தேன்..

தற்போது அவள் அழுகை கொஞ்சம் நின்று இருந்தது..

நான் அவளிடம் என்ன படித்து இருக்கிறாய் என்றேன்.. நான் பள்ளி படிப்பு மட்டுமே முடித்து இருக்கிறேன் அக்கா என்றாள்..

வேறு என்ன கைத் தொழில் தெரியும் என்று கேட்டேன்.. எனக்கு தையல் சமையல் மிகவும் அற்புதமாக செய்வேன் என்றாள்..

எப்படி இது நிகழ்ந்தது என்று கேட்டேன்.. நான் நினைத்தது போலவே தான் அவள் கதையும் இருந்தது.தன் காதலனே தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லும் போது மீண்டும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை..

அவன் படித்து பணியில் இருப்பதாகவும் தன்னை தவிர வேறு எவரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று காதல் மொழிகளால் அவளை கட்டி போட்டு இருப்பதையும் என்னிடம் சொல்லி சொல்லி அழுதாள்.. இங்கே இவள் மேல் பிழை இல்லை..

ஆனால் இந்த சமுதாயம் இப்படி நம்பிக்கையோடு தான் நேசித்தவன் கரம் பிடிப்பான் ஏமாற்ற மாட்டான் என்று தன்னை முழு காதலோடு ஒப்படைத்தவளை கேலி பேசி தூற்றும்.. என்ன அநியாயம் என்று நினைத்தேன்...

அவள் என்னிடம் நான் என்ன பிழை செய்தேன் அக்கா என்றாள்..

அவள் வயது பதினெட்டு தான் என்று அவள் சொன்னதில் தெரிந்து கொண்டேன்..

தற்போது பதினெட்டு வயது என்பது அறியாத பருவம் இல்லை என்றாலும் அவள் உணர்வுபூர்வமாக தோற்று இருக்கிறாள் என்பது தான் வேதனையான விஷயம்..

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..நீ பிழை இல்லை மா இந்த சமுதாயம் அவர்கள் கொண்ட பார்வை பல ஆண்களின் வக்கிர குணம் இது தான் பிழை என்று சொல்லி விட்டு அவளை சாப்பிட அழைத்தேன்..

இல்லை அக்கா வேண்டாம் ..நீங்கள் இந்தளவுக்கு என்னை பார்த்து கொண்டதே போதும்.. நான் வருகிறேன் என்று எழுந்தாள் கரம் கூப்பி கும்பிட்டு.. நான் அவள் கரம் மென்மையாக பற்றி  உட்கார வைத்தேன்..எங்கே செவ்வாய் என்று கேட்டேன்..

நான் ஒரு ஆதரவற்றவள்.. எங்கே என்று தெரியவில்லை.. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று அந்த நிலையிலும் தீர்க்கமாக சொன்னாள்..

எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது அவள் கூற்று..

அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்தேன்..

பிறகு நீ இங்கேயே இரு.. மாலையில் பேசலாம்.. எங்கேயும் தயவுசெய்து போய் விடாதே.. எனக்கு அவசர அலுவல் பணிகள் உள்ளது.. மாலையில் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.. தயவுசெய்து செய்து போய் விட மாட்டாய் தானே என்று அவளிடம் கேட்டேன்.. இல்லை இல்லை அக்கா போக மாட்டேன்.. தங்களது இந்த அன்பிற்கு நான் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் அல்லவா.. இங்கே என்னை போன்றவர்கள் வாழ்வது நரக வேதனை என்றால் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையில் நான் கூனி குறுகி போய் விடும் அளவுக்கு அணு அணுவாக சாகடிப்பார்கள்.. என் கதையை கேட்பவர்கள் என்றாள்.. அதெல்லாம் விடு..நீ உன் கதையை ஏன் தம்பட்டம் அடித்து சொல்கிறாய்.. அந்த நிகழ்வு பற்றிய நினைவுகளை அழி.. நான் உனக்கு இருக்கிறேன் என்று அவள் முகத்தை கையில் ஏந்தி சொல்லி விட்டு மீண்டும் அலைபேசி எடுத்து என் மேலதிகாரியிடம் சொன்னேன் நான் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறேன் என்று.. அவர் ஆச்சரியம் அடையாமல் வாங்கம்மா நீங்களாவது விடுப்பு எடுப்பதாவது என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே..

நான் அவளிடம் திரும்பி நான் வரட்டுமா என்று கேட்டுக் கொண்டே சில பல எளிய புத்தகங்கள் அவள் வாசிக்க ஏதுவாக வரவேற்பு அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு வானொலியை போட்டு விட்டு உனக்கு மதியம் சாப்பாடு ஆர்டர் செய்கிறேன் என்றேன்.. இல்லை அக்கா வேண்டாம்.. நான். தேநீர் வைத்து சில பிஸ்கட் எடுத்து கொள்கிறேன் என்றாள்.. அவள் ஏன் மறுக்கிறாள் என்று புரிந்தது.. சரி அங்கே சமையலறையில் ஏதாவது வேண்டும் என்றால் சமைத்து கொள் என்று சொல்லி விட்டு உன் பெயரை கேட்க மறந்து விட்டேனே என்றேன் சிறிது புன்னகைத்து..

என் பெயர் கங்கா என்றால் வறண்ட சிரிப்போடு..

உங்கள் பெயர் என்று அவசரமாக கேட்டாள்.. என் பெயர் நதி என்றேன்..

உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா என்று கேட்டாள் அவசரமாக.. நான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு லேசாக முறுவலித்து விடை பெற்று கொண்டு வெளியே வருகிறேன்.. என் முன் வாசலில்  தொட்டியில் உள்ள ரோஜாக்கள் அசைந்து என்னை கூப்பிட்டது.. நான் அதை அலுவலகம் செல்லும் அவசரத்தில் லேசாக வருட அதன் முட்களில் ஒன்று பதம் பார்த்தது..

நான் அது ஏற்படுத்திய வலியை பொறுத்து அதனிடம் உரிமையோடு மாலை வந்து கவனித்து கொள்கிறேன் உன்னை என்று சொல்லி விட்டு எனது வாகனத்தை எடுக்கும் போது எனது வீட்டில் உள்ள வானொலியில் காலம் மாறலாம் என் காதல் மாறுமா என்று மெல்லிய ஓசையில் கேட்டது.. அந்த பாடல் இங்கே எனக்கும் அந்த ரோஜாவுக்கும் உள்ளே உள்ள கங்காவுக்கும் பொருத்தமாக தான் இருக்கும் என்று தலையை இடம் வலம் அசைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக சாலையில் பயணிக்கிறேன்.. அலுவல் வேலைக்காகவா அல்லது வேறு கங்கா கண்களில் பட்டு விடக் கூடாது என்றா என்று என் ஆழ் மனம் என்னை கேள்வி கேட்டு கிண்டல் செய்வதை கொஞ்சம் புன்னகைத்து ரசித்தபடியே....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:11/10/25.

செவ்வாய்க்கிழமை.

செவ்வாய், 4 நவம்பர், 2025

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

 


#இன்றையதலையங்கம்:

#குற்றம் செய்தவர் யார்?

கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமாக புரையோடிய போதை வஸ்து கலாச்சாரம் தான் முழுமுதற் காரணம் என்று சொல்வேன்.. அந்த பெண் தனியாக அங்கே ஏன் போகிறார் அப்படி இப்படி என்று கேள்வி எழுவதை ஒரு பக்கம் வைத்து விட்டு மிகவும் தீவிரமாக ஆராய்ந்தால் அங்கே நடந்த விஷயம் தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்..ஒரு பெண் ஒரு வேளை அங்கே அவரோடு வந்த இளைஞனால் பாதிக்கப்பட்டு இருந்து காவல் துறைக்கு புகார் மனு கொடுத்து இருந்தால் அந்த பார்வையில் வழக்கை எடுத்துச் செல்லலாம்.. ஆனால் அங்கே நடந்தது என்ன என்று பாருங்கள்..மூன்று இளைஞர்கள் போதையால் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவரை கீழ்தரமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்..இதை விட்டு விட்டு வழக்கை ஆரம்பிக்கும் போதே அந்த பெண்ணை குற்றவாளியாக வைத்து காவல் துறை வழக்கை கொண்டு செல்லக் கூடாது..முதலில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைத்தாலே பாதி குற்ற செயல்கள் குறைந்து விடும்... மேலும் கிராமப் புறங்கள் வரை மிகவும் மோசமான நிலையே உள்ளது இந்த விஷயத்தில்... மக்கள் ஏழு மணிக்கு மேல் அவர்கள் ஊரிலேயே நடமாட முடிவதில்லை.இது பற்றி பல நாளிதழ்களில் செய்தி வந்தாலும் ஒரு மெத்தன போக்கே உள்ளது... அந்த பெண்ணை விடுங்கள் நேற்று யூடியூப் சேனலில் ஒரு வக்கீல் கேட்கிறார் ஒவ்வொருவரும் காவல் துறை பாதுகாப்பு தர முடியுமா என்று.. முதலில் நீங்கள் சொல்வது போல முதலமைச்சர் அந்த துறையை வைத்துக் கொள்ள தான் வேண்டுமா என்று கேள்வி எழுந்தாலும் எங்கே குற்ற செயல்கள் கட்டவிழ்ந்து நடக்கிறதோ அங்கே யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வியும் எழுகிறது.. அதனால் காவல் துறை முதலமைச்சர் வசம் வைத்துக் கொள்கிறார்கள்.. ஆனால் யார் வசம் இருக்கிறது என்பது பிரச்சினை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் இருப்பது தான் தவறு.. இது பற்றி நிறைய பேசியாகி விட்டது... காவல் துறை தமிழ் நாட்டை பொறுத்தவரை கைகள் கட்டிப் போடப்பட்டு தான் இருக்கிறது... ஏனெனில் அவர்களுக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லை...யாரோவர் போதையில் காவல் துறையினரை அடிக்கும் நிகழ்வு நடக்கும் போது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நேர்மையான காவல் துறை முடிவெடுக்க முடிகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை... இந்த மாநிலமும் மாநிலத்து மக்களும் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக மாறி வருகிறார்கள் என்பது தான் முகத்தில் அறைந்த உண்மை... இங்கே சாதாரண பொது மக்களுக்கு எத்தனை இடையூறுகள் போதை வஸ்துவால் சீரழிந்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களால் என்று ஆட்சியை நடத்திக் கொண்டு வரும் தலைமைக்கு உரைக்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை...

பார்ப்போம் வழக்கை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:04/11/25

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...