அந்த இரவின் சூழல் எனக்கு புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தது... திடீரென கனத்த மழை இடியோடு பல மணி நேரங்கள் நிற்காமல் தொடர்ந்து பெய்து தனது வலிமையை இங்கே வாழும் ஜீவராசிகளுக்கு காட்டி விட வேண்டும் என்ற முனைப்பாக தான் இருந்தது அந்த மழை பொழிவு...மின்சாரம் தடைப்பட்டு ஒளி இல்லாத இரவை ரசிக்க கிடைத்த தருணமாகவே அதை நான் நினைத்தேன்...
நான் ஒரு படைப்பாளி என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள விழைகிறேன்... ஏனெனில் நான் என்னை இங்கே வேறு எந்த முகமாகவும் அறிமுகம் செய்து கொண்டால் அது உங்களுக்கு துயரமாக கூட இருக்கலாம் அல்லவா அதற்காக தான்... ஏனெனில் நான் இங்கே அடையாளங்கள் ஏதுமற்ற ஜீவனாக என்னை காட்டிக் கொள்ளவே எனக்கு பிடித்தமான விஷயம் என்று சொன்னால் நீங்கள் நான் தற்போது இங்கே எழுதி வரும் படைப்பை தற்போது நிறுத்தி விட்டு வேறு செயல்கள் செய்து விட போய் விடுவீர்கள் அல்லவா அதற்காக தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
மெதுவாக போய் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி நான் தற்போது இருக்கும் அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மாலைப் பொழுதில் நான் தயாராக வைத்திருந்த சப்பாத்தி குருமாவை மிகவும் நிதானமாக ரசித்து சாப்பிட்டேன்... சன்னல் கதவு நன்றாக திறந்து இருந்ததால் அந்த மழையின் சலசல ஓசை மட்டும் நுண்ணியமாக எனது காதுகளில் விழுந்தது... நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா... மின்சாரம் தடைப்பட்டு இப்படி ஒரு மழை வந்து உங்கள் சன்னல் கதவை இலேசாக நனைத்த நாட்களை... அந்த மழையின் ஓசையை எந்தவித இடையூறும் இல்லாமல் ரசிக்க ஒரு தனிப்பட்ட ரசனையான மனம் வேண்டும்... எங்கே இதை எல்லாம் ரசிப்பது... இங்கே ஆயிரம் ஆயிரம் சம்சார வேலைகள் என்னை அலைகழிக்கிறது... நீங்கள் வேறு என்று நீங்கள் அங்கே புலம்புவது என் காதில் விழாமல் இல்லை... அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களை புறக்கணிக்கவும் மனம் இல்லை... ஏனெனில் எனக்கு சம்சாரிகளை பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும்.. முழுவதும் தெரியாது... ஏனெனில் நான் சம்சாரி அல்ல... அதனால் அது பற்றி ஓரளவு ஞானம் இருந்ததால் உங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி நினைக்கிறேன்...இதோ எனது படைப்பின் இடுக்கின் வழியே உங்களை வந்தடைந்த இந்த மழையையாவது கொஞ்சம் அலட்சியம் செய்யாமல் பிடித்துக் கொள்ளுங்கள்...ஏதோ சில ரசனைகளாவது உங்களோடு பயணிக்க இதை விட்டால் வேறு வழி இல்லை...
இருக்கட்டும் அதை விடுங்கள்...
நான் உங்களுக்கு அந்த மழையின் ரசனையை உணர்த்திக் கொண்டே இதோ எனது இரவு உணவை முடித்துக் கொண்டேன்... கொஞ்சம் இந்த மழைக்கு இதமாக இஞ்சி சாறோ மற்றும் எழுமிச்சை சாறு கலந்த தேநீர் தயாரித்து பருகினால் நன்றாக இருக்கும் என்று எனது மனம் ஏங்கியது... சரி என்று மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு சமையல் அறையில் சென்று தேநீர் தயாரித்து அதை எனது நீல நிற கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு எனது அறைக்கு வந்து மிகவும் நிதானமாக ரசித்து ஆவி பறக்க பறக்க மிடறு மிடறாக பருகினேன்..
அந்த மிடறு உள்ளே இறங்க இறங்க ஒரு இதத்தை கொடுத்தது... உங்களுக்கு தெரியுமா ஒரு தேநீர் கோப்பை ஒரு கனத்த மழை போதும் வாழ்வின் பெரும் ஆனந்த அதிர்வை உங்களுக்குள் உணர முடியும்... அது தரும் ஆனந்தம் எப்படி இருக்கும் என்றால் தில்லையில் ஆனந்த கூத்தாடி சிரிக்கிறானே அந்த தாண்டன் அவனை போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
அந்த மெழுகுவர்த்தி ஒளியில் தான் நான் உங்களுக்கு இந்த வர்ணனையின் ரசனையில் நனைய வைக்கிறேன்...
இதோ அலைபேசியில் தாயாரின் அழைப்பு வருகிறது... எடுத்து காதில் வைத்தேன் சொல்லுங்கள் அம்மா...
அங்கே மழையா என்று கேட்டேன்...
எதிர் முனையில் அம்மா இங்கே மழை இல்லைடா கண்ணா... அங்கே அதிகமான மழை என்று தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்... மின்சாரம் பல பகுதிகளில் இல்லை என்று சொன்னார்கள்.. உனது பகுதியில் எப்படி என்று கேட்டார்..
ஆமாம் அம்மா இங்கே கடும் இருள் சூழ்ந்த நிலையில் மழை அடர்ந்து பொழிகிறது...
நான் இந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உங்களோடு பேசுகிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்...
அடடா என்ன கொடுமை இது.. ஏதேனும் சாப்பிட்டாயா இல்லையா என்று கேட்டார் கொஞ்சம் கவலையோடே..
நான் நன்றாக இந்த மழையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு சுட சுட தேநீர் பருகி முடித்து விட்டு தான் உங்களோடு பேசுகிறேன் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றேன் சிறிது சிரித்துக்கொண்டே...
நான் கவலைப்படாமல் எப்படிடா இருக்க முடியும்... உனக்கென்று ஒரு வாழ்க்கை துணை இருந்தால் நான் இங்கே இப்படி அமைதி இல்லாமல் உன்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்க மாட்டேன்..
நீ தான் பிடிவாதமாக திருமண பந்தமே வேண்டாம் என்கிறாய் என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார்...
அம்மா இப்போது உங்களுக்கு வேறு ஏதாவது என்னோடு பேச வேண்டும் என்று நினைத்தால் பேசுங்கள்...மழையை பற்றி ஏதாவது பேசுங்களேன் நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றேன் சிறிது புன்முறுவலோடு...மழையை பற்றி என்ன பேச... என் பிள்ளையை அங்கே படாய் படுத்துகிறதே என்று சலிப்போடு சொல்லி விட்டு பார்த்து பத்திரமாக இருடா கண்ணா.. விடிந்ததும் அங்கே உள்ள நிலையை சொல் என்று வைத்து விட்டார்...
இந்த சம்பாஷணைகள் எல்லாம் தினமும் ஏதோவொரு வகையில் நடப்பது தான்...
சரி அதை விடுங்கள்...
ஒரு மனிதன் தனியாக பயணித்து இறப்பது ஒரு குற்றமா என்று எனக்கு தெரியவில்லை... அந்த காலத்தில் மனித இனம் அழிந்து போகாமல் இருக்க மற்றும் தான் செய்து வந்த தான் தருமங்கள் அழியாமல் தொடர சந்ததி அவசியம் என்று சாஸ்திரம் சொன்ன விஷயத்தை இந்த காலத்தில் எந்தளவுக்கு மதிக்கிறார்கள்... மனித இனம் தான் கணக்கற்ற வகையில் பெருகுகிறதேயொழிய தனது சொத்தை அடுத்தவர்கள் எந்த வழியிலும் அனுபவித்து விடக் கூடாது தனது சந்ததியை தவிர என்று கணக்கு போட்டு அல்லவா இந்த காலத்தில் மனித இனம் ஓடிக் கொண்டு இருக்கிறது...இதை பற்றி பேசினால் நம்மை ஒரு கூட்டம் சரியான கிறுக்கு பிடித்த ஆள் இவன் என்று ஒதுக்கி விட்டு மீண்டும் விட்ட பாதையில் பயணிக்க தொடங்கி விடுமே தவிர இதை பற்றி கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசிப்போம் என்று எவரும் யோசிக்க மாட்டார்கள்... இந்த மக்களின் குறை ஞானத்தை எப்படியோ அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடை செய்து கொண்டு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி விடுகிறார்கள்... இது கூட புரியாமல் தானே இந்த சன கூட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது... இது பற்றியும் பேசினால் இன்னும் கிறுக்கு பட்டம் நமக்கு கூடுமே தவிர குறையாது...
சரி அதை விடுங்கள்...
இதோ ஏதோவொன்றை எழுத வந்து ஏதோவொரு பாதையில் பயணித்து இப்பொழுது உங்களுக்கு ஏதோவொரு வகையில் வாசிக்கும் ரசனையை கொடுத்து கொண்டு இருக்கும் போது அந்த கனத்த மழை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்துக் கொண்டு இருந்தது...
இதோ நான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியும் நான் ஏதோவொரு வகையில் உலகத்தின் ஒரு மூலையில் வசிக்கும் யாரோவொவரின் வாசிப்பு அனுபவித்திற்காக எழுதி கொண்டு இருப்பதை அது அதன் பாணியில் உருகி எனக்கு ஆறுதலாக மேசையில் என்னை வேடிக்கை பார்க்கிறது...
நான் இந்த அபூர்வ இரவை கழிக்க உதவி செய்த மழைக்கும் இந்த மெழுகுவர்த்திக்கும் அந்த தேநீர் ருசிக்க தந்த தேநீர் கோப்பைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு எழுகிறேன்...
இதோ மணி பத்தை கடந்ததாக எனது கைக் கடிகாரம் சொல்கிறது... அனைத்தையும் அதனதன் இடத்தில் வைத்து விட்டு படுக்கை விரிப்பை சரி செய்து உறங்க ஆயத்தம் ஆகும் போது எனக்காக மௌனமாக ஒளி உமிழ்ந்து இந்த படைப்பை எழுத உதவிய மெழுகுவர்த்தி தனிமையில் இவ்வளவு ஆனந்தம் அமிர்தமாக கிடைக்குமா என்று ஆச்சரியமாக பெருமூச்சு விட்டதில் எங்கோ இருந்த மழை நனைத்த காற்று சாரலாக வந்து அதை நடனம் ஆட வைக்கவும் அங்கே சுவரில் இருந்து பல்லி ஒன்று இதனை ஆமோதித்து சத்தம் போடவும் சரியாக இருந்தது...
இங்கே இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொல்லி கொண்டே மழை நனைத்த இரவிற்கு ஒரு வணக்கம் தெரிவித்து விட்டு விடை பெற்றுக் கொண்டு உறக்கம் எனும் உலகத்திற்கு செல்கிறேன்... அங்கே இந்த விழிப்பு நிலையில் விட்டு போன இந்த ரசனையான நிகழ்வு கொஞ்சமும் சிதறாமல், கனவில் கூட தனிமையின் இந்த மழை ரசனை தொடர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக் கொண்டு...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 16/09/25/செவ்வாய்க்கிழமை.