பக்கங்கள்

சனி, 29 ஏப்ரல், 2023

ஒரு குட்டிக் கதை

 


ஓர் இரவு... ஓர் கனவு:-நல்ல உறக்கத்தில் அந்த தந்தையும் அந்த சிறு வயது மகளும் அந்த வீட்டை விட்டு வெளியே தள்ளப்படுகிறார்கள்... மிகவும் மோசமான ஏழ்மை நிலை... நடந்துக் கொண்டே இருக்கிறார்கள்.. அவர்கள் சாலை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது திடீரென மேகம் சூழ்ந்து இடி மழை... அந்த பெண் குழந்தை தந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. ஆழ்ந்த பயம் அவள் மனதை ஆக்கிரமித்து இருந்தது அவள் தந்தையை இறுக்கமாக பிடித்த பிடியில் தெரிந்தது.. தந்தை மெல்லமாக அவள் பிடியை விடுவித்து அவளிடம் சொல்கிறார்...மகளே... இந்த இடியை பார்த்து ஏன் இவ்வளவு நடுக்கம்? இதுதான் வாழ்வின் சூட்சுமத்தை உனக்கு உணர்த்தும் முதல் புள்ளி... இதுதான் உனக்கு வாழ்வின் சூட்சுமத்தை எதிர் கொள்ள கற்றுத் தரும் முதல் பாடம்.. கவனமாக தைரியமாக கற்றுக் கொள் என்றார்.. மகளும் சரி தந்தையே...என்று பயம் விலகியவளாக சிறிது சிறிதாக தன் தந்தையின் பிடியில் இருந்து தனித்து நின்று அந்த சூட்சம பாடத்தை கற்க தயாரானாள்...

இப்படி தான் வாழ்வின் சூட்சம பாடம் நமக்கு நிறைய தனியாக எதிர் கொள்ள கற்றுத் தருகிறது...அதை நாம் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை மிகவும் அழகாகும்...

#வாழ்வியல்கதை

வியாழன், 27 ஏப்ரல், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் செல்வக்குமார் அவர்களின் கவிதை தொகுப்போடு அருமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

இது இசையோடு நெடுந்தூர பயணம் மட்டும் அல்ல நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த தருணமிது என்றால் அது மிகையல்ல 🎸💃📻🎶✨🎉🦋🍁🥳

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🤝

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 26 ஏப்ரல், 2023

சமுதாயத்தின் போக்கு

 

இன்றைய தலையங்கம்:-

சமுதாயத்தில் பல நிகழ்வுகளை நாம் எதிர்கொள்கிறோம்... ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வகை... அதில் திருமணம் ஆன தம்பதிகள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்ன விஷேசம் ஏதேனும் இருக்கிறதா விசேஷம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு கேட்டு அவர்களை ஏதோ குற்றம் செய்ததை போல நடத்தாதீர்கள்... மேலும் தற்போதைய காலகட்டத்தில் ஏன் மருத்துவமனை போகவில்லை... ஏன் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள்... முதலில் வீதிக்கு வீதி கருத்தரிப்பு மையம் திறந்ததே மனிதர்களை அவமானப்படுத்தும் செயல்.. இதில் இதற்கு விளம்பரம் வேறு... அது ஏதோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட முடியவில்லை... தற்போது பல கருத்தரிப்பு மையத்தில் நடக்கும் அவலங்கள் மிகவும் மோசமாக உள்ளது...அதிருக்கட்டும்... குழந்தை இல்லாத தம்பதிகளிடம் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் எத்தனை என்றோ குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றோ சமுதாயத்தில் மிகவும் யதார்த்தமாக கேட்கப்படும் கேள்வி..இதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன்... ஆனால் அந்த பெண்ணோ ஆணோ எங்களுக்கு குழந்தை இல்லை என்று கொஞ்சம் சிரிப்போடு சொல்லும் போது கூட விடாமல் உச் கொட்டி செயற்கையாக முகத்தில் வர வழைத்த சோகத்தோடு ஸாரி என்று சொல்வது தான் கொடுமையின் உச்ச கட்டம்.. அதுதான் அவர்கள் இயல்பாக முகத்தில் இயற்கையான சிரிப்போடு தானே சொல்கிறார்கள்.. பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அவர்களின் உணர்வோடு விளையாடுகிறீர்கள்..

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்வியல் உள்ளது.. எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லையே... அது இறைவன் வகுத்த நியதி அல்லது வேறொரு சிறப்பான வாழ்க்கை வாழ இந்த பூமிக்கு வந்தவர்கள் என்று தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

தனிமை

 

'தனிமை'_தனிமை இந்த வார்த்தை உங்களுக்கு பிடித்திருக்கிறதா.எனக்கு இந்த உணர்வு மிகவும் பிடிக்கும். நீங்கள் என்றாவது முழுமையாக தனிமையை அனுபவித்திருக்கிறீர்களா?

நான் கேட்பது யாரும் இல்லாத தனிமை .உங்களுடன் அலைபேசி இல்லாத தனிமை.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட இல்லாத தனிமை.உங்கள் நினைவுகள் கடந்ததை நினைத்து அசைப்போடாத தனிமை.

மற்றவர்கள் உங்களை என்றோவொரு நாள் ஏமாற்றி இருக்கலாம். அவை எல்லாம் நினைவுகுவியலாக இல்லாத தனிமை.மொத்தத்தில் நிகழ்காலத்தில் ரசித்து வாழ தெரிந்த தனிமையை நான் சொல்கிறேன்.

நான் உங்களிடம் உரிமையுடன் ஒன்றை சொல்லட்டுமா?கடந்த கால கசப்பான அனுபவமோ இனிப்பான அனுபமோ எதுவாக இருந்தாலும் ஒதுக்கி தள்ளுங்கள். எந்த கசடுகளையும் உங்கள் மனதில் தேக்காதீர்கள்.உற்சாகமாக இருங்கள். இப்போது கிடைக்கும் தனிமையை இன்பமான தருணங்களாக மாற்றுங்கள். சூழல் மோசமாக இருந்தாலும் நொடிக்குள் அதை நல்ல சூழலாக மாற்றுங்கள். பொருட்களை நம்பிதான் உங்களுக்கு இனிமை என்பது இல்லை.

எந்த வஸ்துவோ நபரோ பொருளோ ஏன் பணமோ உங்களுக்கு இனிமையை தரமுடியாது.

நீங்கள் மட்டுமே உங்களுக்கு இனிமையை தரமுடியும். தனிமையை அனுபவியுங்கள்.உங்களை சுற்றி உள்ள இயற்கையை கூர்ந்து கவனியுங்கள். ரசிக்க செய்யுங்கள். மிக மிக அமைதியாக மனதை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தனிமையில் இனிமையான புல்லாங்குழல் இசை வீணை இசையை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்.நான் சொன்னதை ஒரு மாதம் மட்டும் உங்கள் வேலை நேரம் போக கடைபிடித்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாபெரும் சக்தி உருவாவதை காண்பீர்கள். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. என்ன ஆனந்தமான வாழ்க்கைக்கு இப்போது நீங்களும் தயாராகிவிட்டீர்கள் அப்படி தானே.!!

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

நான் ஒரு வேடிக்கை மனுஷி

 


சும்மா இப்படியே வேடிக்கை

பார்த்து விட்டு நகர்ந்து விட

போகிறேன் இந்த பிரபஞ்சத்தை

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்

நான் ஒரு வேடிக்கை மனுஷி...

உங்களால் என்னை

புரிந்துக் கொள்ள முடியாது!

என்னோடு எவரும் 

அவ்வளவு எளிதாக

தொடர்ந்து பயணிக்க இயலாது...

அப்படி பயணிக்கும்

 பிரயத்தனத்தை விட்டு விட்டு

சும்மா என்னை வேடிக்கை 

பாருங்கள்!

இது தான் வாழ்வின் புரிதல்!

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை ✨

 


இந்த பிரபஞ்சத்தில் இந்த இரவு 

மிகவும் அழகானது!

இங்கே பாருங்கள்...

இந்த இரவு அங்கே

சில நட்சத்திரங்களை 

என்னோடு உரையாட அனுமதித்து

இருக்கிறது!

இங்கே காலையில் ஒரு மனிதர்

என்னோடு சில வார்த்தைகள்

பேசிக் கொண்டு இருக்கும் போதே 

அங்கே அவர் சம்பந்தப்பட்ட 

யாரோயொருவர் அவரை 

கோபமாக அழைத்தார் 

அங்கே அந்த வெட்டி மனிதனோடு

உங்களுக்கு என்ன பேச்சு

என்று கேட்பது போல இருந்தது

இப்போது சொல்லுங்கள்

இந்த பிரபஞ்சத்தில் இந்த இரவு

சில விண்மீன்களை

பேச அனுமதித்து இருக்கிறதே!

இது உண்மையில்

பெருந்தன்மை தானே மனிதர்களே!!

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 24 ஏப்ரல், 2023

இரவு சிந்தனை ✨

 


வாசனைகள் தொடரும் வரை பிறவிகள் தொடரும்... வாசனையை விடும் வைராக்கியம் வாய்த்து விட்டால் அந்த நொடியே உள்ளொளி பெருகி ஆத்ம ஞானம் எனும் ஜோதியில் கலந்து விடுவோம்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

வணக்கம் நேயர்களே 🎻🙏🎻.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படைப்புகள் இவருடையது... ஆம்.. கவிஞர் ராஜீ ஆரோக்கியசாமி அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

இது இரவை இனிமையாகும் தொடர் பயணமிது...

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/.



சனி, 22 ஏப்ரல், 2023

ஆழ்ந்த அமைதியை சுவீகரித்து

 


அந்த அந்திமாலை

நேரத்தில்

பெருக்கெடுத்து ஓடும்

ஏதோவொரு நினைவலையை

அந்த கடல் அலையில்

மிதக்க விட்டு விட்டு

ஆழ்ந்த அமைதியை

சுவீகரித்து

சுத்த சைதன்யத்தில்

திளைத்திருக்க

முனைந்திருக்கிறேன்...

என்னை சுற்றி நடக்கும்

எந்தவித சலனத்தையும்

சங்கடப்படுத்தாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

தேனாமிர்த குயில் நாயகி

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐.

குரல் என்பது இறைவனின் அருள்... வயதானாலும் அதே குரல் இருப்பது எல்லாம் நிச்சயமாக ஒரு வரம்... தங்களது குரலில் ஏதோவொரு மயக்கம் எனக்கு இருக்கும்... அது எந்தவித உணர்வுகளையும் மிகவும் எளிதாக வெளிப்படுத்தும் கலை எல்லாம் நிச்சயமாக மிக சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்... அந்த வகையில் தங்களது ஜலரஞ்சக உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களது பாடல்கள் எல்லாம் இசையை ரசிப்பவர்களுக்கு ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐. நீண்ட ஆரோக்கியத்துடன் இன்னும் இன்னும் பல வருடங்கள் நீடித்து வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துக் கொள்கிறோம் தங்களது தேனாமிர்த குரலை நேசிப்பவர்கள் சார்பாக 🎻🦋🍁🎉💃🎙️🎸🎶🎧📻

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 20 ஏப்ரல், 2023

தேடல்...


தொடர்ந்து எதையாவது

தேடிக் கொண்டே தான் இருக்கிறேன்

அந்த தேடலில்

எதுவும் 

அகப்படாத போது

என் மனதை உடைத்து

நொறுக்கி விடுகிறேன்..

இதற்கான நஷ்டத்தை

நானே சுமக்கும்

தருணத்தில்

மீண்டும் என் மனதை

நொறுங்காமல் 

வைத்துக் கொள்ள

நான் போராடிக் கொண்டிருக்கும் போது

என் வாழ்க்கை

மெல்ல மெல்ல

என்னை விட்டு

நழுவிக் கொண்டு

இருக்கிறது

சத்தம் இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஒரு பாலினத்தவர் திருமணம்

 


இன்றைய தலையங்கம்:-ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்கின்ற விசயம் தற்போது நமது நாட்டில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது... ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் இது குறித்து நீதிமன்றத்தில் உள்ளது என்பதை அறிந்து வியந்து போனேன்.. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நேற்று முன்தினம் நடந்து உள்ளது... அதாவது இது குறித்து பாராளுமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்றும் இதில் நீதிமன்றம் விலகி இருக்க வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சொல்லியது தலைமை நீதிபதியை கோபம் அடைய வைத்துள்ளது... நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்று இங்கே யாரும் கட்டளையிட அனுமதிக்க மாட்டேன் என்று மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இங்கே திருமணம் என்பது காலம் காலமாக ஆண் பெண் இருவருக்கும் தான் நடக்கிறது.. அதுதானே சரியான விசயம்... ஒரு சமுதாயம் கட்டமைக்க திருமண சடங்கு தேவைப்படுகிறது.. அதில் விளையும் தாம்பத்தியத்தில் நல்ல பண்புள்ள குழந்தையை இந்த சமுதாயத்திற்கு அர்பணித்து தொடர்ந்து சந்ததி நல்ல பண்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் வகுத்து வைத்த முறை.... தற்போது திருமண பந்தத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மனிதர்களை ஒரு குடும்பத்தை அந்த நிகழ்வில் இணையும் தம்பதிகளை பைத்தியம் பிடிக்க வைக்கிறது என்பது வேறு விஷயம்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்..

தற்போது விசயத்திற்கு வருவோம்.. ஏற்கெனவே நமது நாட்டில் திருமணம் முடிந்து சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நீதிமன்றத்தில் போய் நிற்கும் தம்பதிகள் ஏராளம் ஏராளம்... இதில் நீதிமன்றம் நிச்சயமாக ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடுகின்ற அளவுக்கு விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது... விவாகரத்திற்கான காரணம் கேட்டால் நமக்கே தலை சுத்துகிறது.. இதில் நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அதை தம்பதிகள் எதிர்கொள்ளும் மனநிலை இதெல்லாம் நிச்சயமாக உயிர் நாடியை சுடும் விசயம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது...


இதில் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்து கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்து நின்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... எவ்வளவு அருவருக்கத்தக்க விசயம்... நான் கேட்கிறேன்.. அவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? அவர்கள் இறக்கும் வரையோ அல்லது ஏதோவொரு சில கட்டுப்பாடுகளை விதித்து விதிகளை வகுத்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழ்வதே சரியான விசயம்..அதை விடுத்து திருமணம் தான் செய்துக் கொண்டு வாழ்வேன் என்றால் அது சரியான விதிமுறை இல்லை... இது சமுதாயம் சார்ந்த விசயம்.. கலாச்சாரம் சார்ந்த விசயம்... ஆண் ஆணோடோ பெண் பெண்ணோடோ தனிப்பட்ட முறையில் வாழ்ந்து விட்டு போக இங்கே ஒரு தடையும் இல்லை..அதை திருமணம் என்கின்ற பந்தத்தில் தான் வாழ்வோம் என்று சொல்வது மிகவும் மோசமான முரணான விசயம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 19 ஏப்ரல், 2023

சுயத்தின் அடையாளம் ✨


 ஒரு சுயத்தை தொலைத்து விட்டு அப்படி என்ன தான் சாதிக்க போகிறீர்கள்.. இங்கே நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நீங்கள் ஏன் பிணைந்து கொள்ள வேண்டும்? ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோவொரு சூட்சமம் அடங்கி தான் உள்ளது.. அந்த சூட்சுமத்தை நீங்கள் ஏன் தெரிந்துக் கொள்ள அவ்வளவு துடிக்கிறீர்கள்? அதன் முடிச்சு தானாகவே அவிழ்ப்பதற்கான காத்திருப்பு கூட ஓர் வாழ்வியலின் அங்கம் தான் என்று ஏன் உங்களுக்கு புரிய மறுக்கிறது??

இப்படியே வாழ்வியலை தொலைத்துக் கொண்டே நீங்கள் பயணித்தால் வாழ்வியலின் சுவையை எவ்வாறு உங்களால் உணர முடியும்??

இப்படியாக உங்களுக்குள் நீங்கள் கேட்டு கொண்டு இருக்கிறீர்களா??

அந்த கேள்விகள் எப்போது உங்களுக்குள் எழுகிறதோ அதுவே வாழ்வின் சுயத்தை அடையாளம் கண்டு கொண்ட பயணம்...🦋🍁🦩✨

நேரம் கிடைக்கும் போது இன்னும் பேசலாம்.. காத்திருங்கள் 🤝.

#வாழ்வியல்

#காலை சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

காலை சிந்தனை ✨

 


ஆழ்ந்த மௌனத்தில்

ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்

ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்

உங்கள் சுயத்தை பிரகாசமாக

உணர்வீர்கள்!

#காலை சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

சுயத்தை மதிக்கிறேன் கொண்டாடுகிறேன்✨


 நான் இப்படி தான் என்றால்

ஏற்றுக் கொள்ளுங்கள்

அல்லது விலகிச் செல்லுங்கள்

அதை விடுத்து 

பக்கம் பக்கமாக அறிவுரை கூறி

என் நேரத்தை என் வாழ்வின் 

பெரும் பகுதியை தின்று தீர்க்க 

நினைக்காதீர்கள்!

அதற்கு ஒரு போதும் 

நான் அனுமதி தர மாட்டேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

குரங்கும் நமது சம்சாரமும்

 

ஒரு குரங்கு 🐒 எப்படியோ ஜன்னல் வழியாக வீட்டில் புகுந்து விட்டது... அந்த ஜன்னலை தெரியாமல் மூடி விட்டு எமது வீட்டு வாசல் கதவை அகலமாக திறந்து வைத்தேன்... ஆனால் அது மூடி இருந்த ஜன்னல் பக்கம் போவதும் வருவதுமாக வீட்டின் உள்ளே சுற்றி சுற்றி வருவது மட்டுமல்லாமல் என்னை அப்போதைக்கு அப்போது முறைத்தும் பார்க்கிறது...எனக்கோ இதற்கு தான் இவ்வளவு பெரிய கதவை திறந்து வைத்து வழி ஏற்படுத்தி உள்ளேனே... இதன் வழியில் வெளியே சென்றால் தான் என்ன என்று ஆச்சரியம்... பிறகு சிறிது நேரத்தில் அது வந்த ஜன்னலை திறந்து விட்டது தான் தாமதம்...ஒரே தாவலில் வெளியே ஓடோடி சென்று விட்டது...இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நமக்கும் கூட மிக பெரிய பிரமாண்டமான வாசல் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார் நம்மை படைத்த இறைவன் நாம் பிறவி சூழலில் இருந்து விடுபட்டு முக்தி அடைவதற்காக...நாமோ மீண்டும் மீண்டும் கருவறை வாசலிலேயே தவம் கிடக்கிறோம் மீண்டும் மீண்டும் பிறந்து இந்த சம்சார காட்டில் பித்து பிடித்து அலைவதற்காக... ஏன் எனில் நமக்கு தெரிந்ததெல்லாம் கருவறை வாசனை தான் அல்லவா... எத்தனை கோடி பிறவி எடுத்து எடுத்து பிறந்தும் நமக்கு இதில் ஒரு வைராக்கியம் வரவில்லையே என்று நினைத்தால் அது தான் மாயை என்று நமக்கு நன்றாக புரிகிறது அல்லவா நேயர்களே 🎻✨🎉.

#இசைச்சாரல்வானொலி.

#இரவுசிந்தனை.

இந்த பிரபஞ்சத்தின் உயிர் நாடி

 

ஒன்றுமில்லாத விசயத்தில்

ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அடையும் 

மனதை உடையவர்களா நீங்கள்... 

நிச்சயமாக நீங்கள் 

இந்த பிரபஞ்சத்தின் உயிர் நாடி...

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 17 ஏப்ரல், 2023

இரவு கவிதை 🍁

 


விடியும் வேளையில்

 சாப்பாட்டிற்கு

வழி இல்லை...

அது பற்றி கொஞ்சமும்

கவலை இல்லாமல்

உனது வழக்கமான பணிகளில்

நிதானமாக செயல்படுகிறாயே

எப்படி இது சாத்தியம் என்றது காலம்

எனக்கு எனது பணிகள் முடிந்ததும்

அடுத்த தேவை உறக்கம்...

அது இதோ இன்னும் சற்று நேரத்தில்

பிரியமாக என்னை தழுவ

காத்திருக்கிறது என்றேன்...

காலம் புரிந்துக் கொண்டு

தன் தலையில் செல்லமாக 

அடித்துக் கொண்டு 

என்னை கடந்து சென்றது...

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

நேயர்களே இன்று இரவு இந்திய நேரம் (9:00-10:00)ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இன்று எழுத்தாளர் ஶ்ரீ வில்லிபுத்தூர் முத்துவேல் அவர்களின் கவிதை தொகுப்போடு இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻🎻🎻🎻.


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

சனி, 15 ஏப்ரல், 2023

இசைச் சாரல் வானொலி

 


கீழேயுள்ள லிங்கில் நீங்கள் எமது போட் காஸ்ட் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻 தொடர்ந்து இணைந்து இருங்கள் இது இசையோடு ஒரு நெடுந்தூர பயணம் நேயர்களே 🎻

https://open.spotify.com/show/3xF6iVIfLrnlN8uY1Fghr9

கோடையின் நீட்சி


வசந்த காலம் தோறும்

புதுப்பிக்கப்படுகிறது

எனக்கும் 

இந்த நட்சத்திரங்களுக்குமிடையே

தொடரும் இந்த

 தீராத காதல் !

அதனால் இந்த கோடையின் வெப்பத்தை

சகித்துக் கொள்கிறோம்!

சொல்லப் போனால் இன்னும் கொஞ்சம்

நீளாதா இந்த கோடைக் காலம்

என்று நாங்கள் ஏங்கி கிடக்கிறோம்!

எங்களுக்குள் இருக்கும்

இந்த அதீதமான காதலை

இங்கே எவர் புரிந்துக் கொள்ளக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இசைச் சாரல் வானொலி

 


இரவு நேர இசைப் பயணத்தில் இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻

இசைச் சாரல் வானொலி https://open.spotify.com/episode/5uHQiwrEmwgPt7YWq0coyC

நிகழ்வுகளோடு ஒரு போராட்டம்

 


இங்கே பல நிகழ்வுகள் என்னை 

கடந்து செல்கிறது..

சில நிகழ்வுகள் வலுக்கட்டாயமாக

என்னை வம்புக்கு இழுத்து 

வேடிக்கைப் பார்த்து 

சிரிக்கிறது..

நான் அதை எல்லாம் 

புறம் தள்ளி விட்டு 

பயணிக்கும் போது

எனக்கு சம்பந்தமே இல்லாத

அந்த நிகழ்வு  என்னை

ஒரு நிழல் போல தொடர்கிறது...

இத்தனை நிகழ்வுகளும் 

தேவையே இல்லை 

எனது வாழ்விற்கு....

ஒரேயொரு நிகழ்வு மட்டுமே

போதும்..

அது நான் இருக்கிறேன் என்பதே...

மற்றபடி என்னை சுற்றி நடக்கும்

நிகழ்வுகள் எல்லாமே

வெறும் சச்சரவுகளே...

எனக்கு துளியும் தேவைப்படாத

அந்த நிகழ்வுகளை

ஒரு குப்பையை போல 

அகற்ற நான் படும் பாட்டை

இங்கே யார் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.




இரவு சிந்தனை ✨


 உங்கள் வாழ்வில்

எந்தவித உணர்வுகளும்

அளவுக்கு அதிகமாக

அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!

உணர்வுகளில் சமநிலையே

வாழ்வின் அற்புதமான சூட்சமம்! 

அதனால் உணர்வுகளோடு 

போராடாதீர்கள்!

அதை அப்படியே கடந்து செல்ல 

விட்டு விடுங்கள்!

இரவு சிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 13 ஏப்ரல், 2023

சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு செய்தி

 

பிறத்தல் ஒரு நிகழ்வு;

இறத்தல் மற்றொரு நிகழ்வு;

இடைப்பட்ட காலத்தில்

நிகழ்கின்ற இன்ப துன்பங்களில் மூழ்கி விடாமல் சும்மா மிதந்து விட நீங்கள் தெரிந்துக் கொண்டால் அது போதும்

உங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்திற்கு...

#அனைவருக்கும் #இனிய #சித்திரை #திருநாள் #தமிழ் #புத்தாண்டு #வாழ்த்துக்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

வணக்கம் நேயர்களே 🎻🙏🎻

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் கவிஞர் ஶ்ரீ.வி.முத்துவேல் அவர்களின் தன் முனை கவிதைகளோடு இனிமையான பாடல்களும் ஒலிபரப்பாகிறது... கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

இது இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி.. படைப்பாளிகளின் படைப்புகளை உலகம் முழுவதும் உள்ள வானொலி நேயர்களிடம் எடுத்துச் செல்ல காத்திருக்கும் இனிமையான நிகழ்ச்சி 🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻.

https://liveradios.in/krishna-fm.html

புதன், 12 ஏப்ரல், 2023

இரவின் நேசன்

 


இங்கே பல வேடிக்கை மனிதர்கள்

இரவை நேசித்து நெடுந்தூரம்

தனிமையில் சாலையில்

நடந்து அந்த இரவின்

நுண்ணிய இசையில்

தன்னை கரைத்துக் கொண்டு

இருளின் வேடிக்கையை

புன்னகைத்து ரசித்து

சாலையில் சற்று முன்

பெய்த மழையின் ஈரத்தை

மறந்து விடாமல் வெறும் பாதங்களில்

இலேசாக முத்தமிட்டு

சாலையோர தெரு விளக்கின்

மென்மையான ஸ்பரிசத்தில் 

நனைந்து

காலத்தின் நிகழ்வில் கரைந்து விட

மனமில்லாமல் கரைகிறார்கள்..

யார் இவர்கள் என்று 

இரவு பூச்சிகள்

யோசனையோடு 

ஆச்சரியமாக கவனிக்கிறது...

அவர்கள் எந்த நிகழ்விலும் தொலையாமல்

பயணிக்க கற்றுக் கொண்ட

விசித்திரமான மனிதர்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

சீனா குரங்குகளை என்ன செய்யும்??

 


இலங்கையில் மட்டும் இல்லை... இங்கே தமிழ் நாட்டில் கூட தான்.. ஆனால் அந்த குரங்குகளை சீனா என்ன செய்யும்..இறைச்சிக்காக என்றால் அது சரியான விசயம் இல்லை..அதை பணிகள் செய்வதற்கு ஒரு பயிற்சி பட்டறை ஆரம்பித்து அதற்கு பயிற்சி கொடுத்து உணவிட்டு பணியில் அமர்த்தினால்நன்றாக இருக்கும்.. இது பற்றி முதலில் இந்தியா யோசிக்க வேண்டும்..தங்க நாற்கர சாலை போட்டது சரியென்றால் குரங்குகள் தஞ்சம் அடைந்த புளிய மரங்களை வெட்டி விட்டு அதற்கு பதிலாக எந்த பழங்களோ காய்களோ இல்லாத மரங்களை சாலையோரம் நட்டு வைத்து வளர்ப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. அது பசிக்காக இலைகளையும் ஏன் பல சமயங்களில் அடுப்பு கரியையும் சாப்பிடுவதை பார்க்கும் போது பாவமாக உள்ளது.. இதற்கு ஒரே தீர்வு அரசாங்க வன பகுதிகளில் பலதரப்பட்ட பழங்கள் உள்ள மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.. அப்போது 🐒 மட்டும் அல்ல.. மயில்கள் மற்றும் வனவிலங்குகள் வயல் பகுதிகளை ஆக்கிரமிக்காமல் இருக்கும்..யோசிக்குமா அரசு.. ஆயிரம் ஆயிரம் வினாக்கள்..மன் கி பாத்தில் இதை பற்றி தெரிவிக்க வேண்டும் பிரதமரிடம்... அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

#குரங்குகளின்பரிதாபநிலை

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

இன்று தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் தன்முனை கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி 🎻

https://liveradios.in/krishna-fm.html


சனி, 8 ஏப்ரல், 2023

அந்த ☔ குடை படுத்தும் பாடு

 


அந்த கொட்டும் மழை நாளில்

நீ கொடுத்த குடையொன்று

இங்கே உன்னை 

ஞாபகப்படுத்திக் கொல்கிறது..

அதை என்னிடம் இருந்து

மீட்டு சென்று விடு...

அந்த குடையை 

காண நேரும் போதெல்லாம் 

காயமடைகிறது

என் காதல் மனது...☔ 

உன் நினைவை விட 

அதிகமாக என்னை

கொன்று தின்று தீர்க்கும்

குடையை மீட்க எப்போது

நீ வருவாய்???

#இளையவேணிகிருஷ்ணா.

இறைவனுக்கு நன்றி 🙏

 


எப்போதும் இணையத்தில் அந்த இறைவனின் பூரண அனுகிரகத்தால் என் குரலும் எழுத்தும் பயணித்துக் கொண்டே இருக்கும்.. நான் இறக்கலாம்... என் படைப்புகள் எப்போதும் இணையத்தில் உயிர்ப்புடன் சுற்றிக் கொண்டே இருக்கும்.. எல்லாம் வல்ல இறைவனுக்கு எப்போதும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்..🙏🎻🎉✨🎶📻🎸🎙️🔥🎧


கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 ✨ 🎉

https://open.spotify.com/episode/2nTOrBHiMcBA6s3fOY82lf


இசைச் சாரல் வானொலி🎉

 


இனிமையான பாடல்களோடு படைப்பாளிகளின் கவிதைகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே கீழேயுள்ள லிங்கில் 🎻

இசைச் சாரல் வானொலி https://open.spotify.com/episode/6d2Hs8VA4xJXmYjp2qAyJZ

நானும் நதியும்

 


நதியின் போக்கில்

நான் போகிறேன்..

என்னை சுமக்கும் நதியும்

நானும் அறிந்த ஒரு ரகசியம் 

வாழ்வின் சுவை என்ன என்பது

மட்டுமே...

இதை பற்றி எங்களை தவிர

வேறு எவர் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

துன்பம் வரும் போது என்ன செய்ய

 


நமது வாழ்வில் ஆயிரம் ஆயிரம் துன்பங்களை எதிர் கொள்கிறோம் தானே..இன்பங்களை மிகவும் அமைதியாக ஏற்றுக் கொள்ளும் மனம் துன்பத்தை ஏன் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை என்று யோசித்து பார்த்து இருக்கிறோமா.. அப்படி எல்லாம் ஏன் யோசிக்க போகிறோம் என்கிறீர்களா?😊 எங்களுக்கு துன்பம் மட்டுமே மூட்டை மூட்டையாக வருகிறது..நீங்கள் வேறு காமெடி பண்ணாதீர்கள் பாஸ் என்று நீங்கள் சொல்வது என் செவிகளுக்கு எட்டி விட்டது..😊அதுவும் சரிதான்...

வள்ளுவர் துன்பம் வரும் போது சிரிங்க என்று சொல்வார்.. அதாவது இடுக்கண் வருங்கால் நகுக என்று அவர் சொல்கிறார்.. நான் ஒன்று கேட்கிறேன்.. வடிவேலு பாணியில் கீழேயுள்ள வரிகளை வாசித்து கொள்ளுங்கள் வாசகர்களே! ஏன் ஏன்கிறேன்.. சும்மா அது பாட்டுக்கு ஏதோ போற போக்கில் துன்பத்தை கொடுத்து விட்டு போய் விட்டது..அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே..அதை விட்டுவிட்டு அதை பார்த்து சிரித்து வைத்தால் அது யூ டர்ன் எடுத்து என்னடா உனக்கு இது பத்தலையா என்று கேட்டு நன்றாக வைத்து செய்வதற்கா...🤾நல்லா சொன்னீங்க ஐடியாவ.. உன் கிட்ட வந்து ஒரு ஐடியா கேட்க வந்தேன் பாரு என்று நாம் வடிவேலு மாதிரியே புலம்பி தள்ளி விடுவோம்..

அதனால் நேயர்களே.. நீங்கள் துன்பத்தை பார்த்து பெரிய வீராவேசமாக சிரித்து எல்லாம் வைத்து விட வேண்டாம்.. அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு..

அதனால் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அதை பொறுத்துக் கொண்டு பயணியுங்கள்.. இல்லை இது நமக்கு இல்லை என்று வலிக்காத மாதிரி கண்டுக் கொள்ளாமல் பயணியுங்கள்..அதை விடுத்து அதனோடு நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா வா ஒரு கை பார்த்து விடலாம் என்று நீங்கள் அதை எதிர் கொண்டால் நிம்மதியின்றி தான் அலைவீர்கள்..சரியா..ஏதோ எனக்கு சொல்ல தோன்றியது.. பிறகு இதை கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காமல் போவதும் உங்கள் விருப்பம் நேயர்களே 🤾🏃🏃🏃

#இளையவேணிகிருஷ்ணா.


வெள்ளி, 7 ஏப்ரல், 2023

வாழ்க்கையை பற்றிய புரிதல்...

 


நாம் அனைவரும் வாழ்க்கையை பற்றி எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.. ஆனால் நான் ஒன்றை மட்டும் மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.. அதாவது ஆழ்ந்த புரிதலில் வாழ்க்கை பேச்சற்ற மௌனத்தை நமக்கு கற்றுத் தருகிறது.. சலனமற்ற மனநிலையை கற்று தருகிறது.. எல்லாமே இங்கே ஒரு புரிதல் தான்.. அந்த புரிதலில் ஆயிரம் ஆயிரம் விசயங்கள் மௌனமாக நமக்குள் கடத்தி விடுவதை பல முறை பல பேர் எத்தனை வகையிலும் பேசி புரிய வைக்க முடியாது..

#இளையவேணிகிருஷ்ணா.

ஓஷோவின் தத்துவம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

கீழேயுள்ள லிங்கில் ஓஷோவின் தத்துவம் 

https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e21uu55

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻

இசையோடு கொஞ்ச நேரம் பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻

இது நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும் 🎻

கீழேயுள்ள லிங்கில் தற்போது நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻

இந்திய நேரம் இரவு 8:00-9:00pm.

https://liveradios.in/krishna-fm.html

வாழ்வியல்

 


பல நேரங்களில்

பைத்தியக்காரத்தனமான

செயலில் ஈடுபடும் போது தான்

நாம் நாமாக பயணிக்கிறோம்

உங்களை எவரும் பைத்தியமாக

நினைத்தால் நிச்சயமாக

அவர்களை நீங்கள்

கொண்டாடி தீருங்கள்..

ஏனெனில் 

வித்தியாசமான மனிதர்கள்

அனைவருக்கும் கிடைக்கும் 

பட்டம் தான்

பைத்தியக்காரர்!!!

#இளையவேணிகிருஷ்ணா.

கவலையை மறக்க...

 


சிலபேர் கவலை என்று ஒன்று இருந்தால் அதைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பார்கள்.அவர்களை அவ்வளவு எளிதாக சமாதானப்படுத்த இயலாது.. நான் அவர்களிடம் கேட்கிறேன் நீங்கள் அந்த கவலை தரும் விசயத்தை யோசித்துக் கொண்டே இருந்தால் கவலை தீர்ந்து விடுமா.. இல்லை தானே.. பிறகு ஏன் பிடிவாதமாக அதை உங்கள் மனதில் தேக்கி வைத்து மனதை துன்புறுத்துகிறீர்கள்.. நான் அதற்கு ஒரு தீர்வு தருகிறேன்..

அதாவது கவலை உங்களுக்கு இருக்கும் போது அதை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.. அப்போது அந்த கவலை தரும் விசயத்தை நீங்கள் கண்டிப்பாக மனதில் இருந்து தூர எறிந்து விட வேண்டும்..

நன்றாக உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வாருங்கள்.. மிகவும் நிதானமாக அந்த உணவை ருசித்து சாப்பிடுங்கள்.. பிறகு நிச்சயமாக அந்த கவலை தரும் விசயத்தை எங்கே என்று தான் தேடுவீர்கள்..

இங்கே உயிரோட்டமான விசயங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளது.. இந்த மாதிரி கவலை உணர்வுகளை சுமந்து திரியாதீர்கள்.. இங்கே எதுவும் பெரிதல்ல.. வாழ்வின் சுவையை தவிர..சரியா நேயர்களே 🎻✨🎉

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 6 ஏப்ரல், 2023

காலத்தின் பரிசு


 நம்பிக்கையற்ற நொடிகளில்

பயணிக்கும் வலியை

இங்கே பெரும்பாலும் அனைவரும்

 அறியக் கூடும்...

எனக்கோ வேறு வித அனுபவமாக..

அங்கே ஆள்அரவமற்ற பாதை

ஏதோவொரு நம்பிக்கை கொடுத்து

என்னை சச்சரவுகள் இல்லாத

பயணத்தில் திளைக்க 

செய்துக் கொண்டு

இருக்கும் அனுபவத்தை

எனக்கு அந்த காலத்தை தவிர

யார் பரிசளிக்கக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நிலவும் பிரபஞ்சமும்

 


இரவின் நிழலில்

நிலவே அழகு...

நிலவின் பார்வையில்

இந்த பிரபஞ்சம் அழகு...

இந்த பிரபஞ்சத்தின் ஸ்பரிசத்தில்

தீண்டும் தென்றல் அழகு...

இங்கே அன்றாட நிகழ்வின்

அடையாளத்தை தற்போது

தொலைப்பது அழகோ அழகு!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் காலமும்

 


நான் மிகவும் அமைதியாக இங்கே ஒளிரும் நிலவில் என் சம்சார நிகழ்வை ஒத்தி வைத்து விட்டு அமர்ந்திருக்கிறேன் எனது வீட்டின் மாடியில்...எல்லா நிகழ்வையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பயணிக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்று மனதிற்குள் அசைப் போட்டபடி...எங்கோ சில தெருநாய்கள் சத்தம் மட்டும் கேட்கிறது..அதையும் தொந்தரவாக நினைக்க தோன்றவில்லை..இயற்கையின் படைப்பில் அதன் சத்தம் கூட அழகு தான் என்று புன்னகைத்து திரும்பிய போது காலம் என் தோளில் கை வைத்தபடி ஆறுதலாக கேட்கிறது..என்னாச்சு என்று..ஒன்றுமில்லை காலமே..சும்மா கொஞ்ச நேரம் நானும் என் வாழ்வியல் நகர்வும் ரசித்து கொண்டு இருக்கிறேன்..இங்கே அருகில் அமர்ந்து கொள்..நீயும் கூட சற்றே ஆறுதல் அடைவாய் என்றேன்..ஆம்..ரொம்ப நாளாகிவிட்டது உன்னை சந்தித்து அல்லவா..உன் ஞாபகம் வந்தவுடனேயே இங்கே வந்து விட்டேன் என்றது உற்சாகமாக..மிகவும் மகிழ்ச்சி காலமே..உன் ஆறுதல் தற்போது எனக்கு தேவைதான் என்று புன்னகைத்தேன்..

ஆயிரம் சஞ்சலங்கள் என் மனதை அமைதி இழக்க செய்கிறது காலமே.. சம்சார வாழ்க்கையின் விலகலை நாடி..தேவையில்லாத வாழ்வியல் போராட்டத்தில் ஈடுபடாத வாழ்வியல் நகர்வுகள் வேண்டும்.. எனக்கான தேடல் ஏதோவொரு மிக பெரிய பொக்கிஷம் என்று தோன்றுகிறது... ஆனால் அதன் சுவடு தான் அகப்பட மாட்டேன் என்கிறது என்றேன்..

காலமோ சற்றே என் கைகளை பிடித்து ஏன் இந்த சஞ்சலம்..இத்தனை நாட்கள் பொறுத்து வாழ்வியலை பயணித்தாய் மிகவும் பொறுமையாக.. இப்போதும் அதை தொடர்ந்து வா.. இங்கே ஞானிகள் கூட தருணத்திற்காக காத்திருந்திருக்கிறார்கள்.. ஏன் இங்கே எப்போது எப்படி அது நிகழும் என்று படைப்பின் ரகசியம் என்பதை உனக்கு நான் சொல்லி தான் புரிய வேண்டுமா என்ன என்றது..

உண்மை தான் காலமே.. ஆனால் சில நிமிட சஞ்சலங்கள் கூட பல யுகங்களின் வலியை தந்து விடுகிறது.அதிலிருந்து மீள என்ன தான் வழி என்று யோசித்து கொண்டு இருக்கும் போது நீ வந்து விட்டாய் என்றேன்..

காலமோ நான் உனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் கலங்காதே என்று என்னை அரவணைத்துக் கொண்டது..

நான் அதன் அணைப்பில் என் சஞ்சலங்களை வடித்தேன்...

ஒளிர்ந்து கொண்டு இருக்கும் நிலவோ எங்கள் இருவரையும் அதிசயமாக வேடிக்கை பார்த்தது..

#காலமும்நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நீயும் நானும்...

 


என் இணையைத் தேடி

அலையாமல்

எனக்கான காதலை

இருந்த இடத்தில் இருந்து

நினைக்கின்றேன்...

நொடிப் பொழுதில்

சுவாசமாக கலந்து

உன் இணை நானே என்று

உணர்த்தி விட்ட தருணத்தில்

நீயும் நானும் இருவேறு நிலையை கடந்து

திளைக்கும் இந்த நொடியை

எவர் அறியக் கூடும்???

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நான் யார்?

 

அங்கே கூட்டம் கூட்டமாக

யாரோ பலபேர்

என்னை நேசிக்கிறார்கள்..

அதே விகிதத்தில் கூட்டம் கூட்டமாக

என்னை வெறுக்கிறார்கள்..

இங்கே இந்த 

இருவித கூட்டங்களிலும் சிக்காமல்

வெகுதொலைவில் பயணிக்கிறேன்...

அதை கண்டு அங்கே

சில பேர் வியக்கிறார்கள்....

காலதேவனின் கைகளில் கூட 

சிறையாகாமல் 

பயணிக்கும் என்னை

கண் இமைக்காமல் பார்க்கும் கூட்டத்தை

சிறு சலனமும் இல்லாமல்

கடக்கிறேன்...

நான் யார் என்று

என்னை நானே வியந்தபடி...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 3 ஏப்ரல், 2023

ஆத்ம தத்துவம்

 

கடும் குளிரை 

யார் ஒருவரால்

பொறுத்துக் கொள்ள 

முடிகிறதோ

அவரால் கடும் வெயிலையும் 

பொறுத்துக் கொள்ள முடியும்..

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு சிந்தனை ✨

 


நிம்மதியும் ஆனந்தமும் எங்கே இருக்கிறது என்று கேட்டால் உடனே மனதில் இருக்கிறது என்று சொல்லும் மனிதர்கள் அத்தனை பேரும் அதை வெளியே தேடி அலைகிறார்கள்... அதற்கு பெயர் தான் மாயை...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 1 ஏப்ரல், 2023

நானும் என் பயணமும்

 


எல்லோரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள்..நான் அவர்கள் பயணிக்கும் திசையை கூர்மையாக நோக்கி விட்டு சாவகாசமாக அதற்கு எதிர் திசையில் பயணிக்கிறேன்...அதை பார்த்து விட்டு ஏன் இப்படி என்று கேட்கிறார்கள்... அது தான் எனக்கு சரியாக வருகிறது என்று நிதானமாக சொல்லி விட்டு பயணிக்கிறேன் தனியே தன்னந்தனியே...

இது என்ன மாடலாக இருக்கும் என்று என்னை கடப்பவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்... நானும் அதைத் தான் என்னிடம் கேட்டு வருகிறேன் என்றேன் அவர்களிடம்...

#நானும்என்பயணமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் பெருந்தன்மை..

 

காலத்தின் பெருந்தன்மை

என்னை அரவணைத்து

பயணிக்கிறது...

நான் அந்த பெருந்தன்மையின்

நிழலில் என் வாழ்விற்கு

உயிரூட்டிக் கொள்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த நதியும் நானும் அந்த பறவையும்..

 

ஏதோ நடந்து விட்டு போகட்டும்..

எதையும்

கண்டுக் கொள்ளும் மனநிலையில் நான் தற்போது இல்லை...

குறிப்பாக சொல்ல போனால் அதற்கும் எனக்கும் எந்த ஜென்மத்திலும் சம்பந்தமே இல்லாத போது நான் ஏன் அதை பற்றி அவ்வளவாக யோசிக்க வேண்டும்?

இங்கே ஒரு நதியில் நிச்சலனமாக பயணிக்கிறேன்...

அதற்கு ஏதேனும் வலி உள்ளதா என்று கேட்க கூட தோன்றவில்லை எனக்கு..

அதுவும் அதைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்ல தோன்றாமல் சுகமாக சுமக்கிறது...

இந்த பிரபஞ்சத்தின் தனித்துவத்தை நாங்கள் சூட்சமமாக விவாதிக்கிறோம்..

அங்கே ஒரு பறவை எங்களை பார்த்து கேட்கிறது...

கொஞ்சம் என்னையும் சேர்த்துக் கொண்டு பயணியுங்கள் என்று கொஞ்சம் தயக்கமாக கேட்கிறது.. அதன் சிறகுகள் எங்களை பார்த்து சிநேகமாக படபடப்பதை எங்களால் உணர முடிகிறது...

நான் சொல்கிறேன் அதனிடம்... இந்த நதி எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை பறவையே... உன்னை சுமப்பதால் அது மூழ்கப் போவதும் இல்லை... இங்கே இதன் தனித்துவமே அதன் பெருந்தன்மை தான்..

உன்னை எப்படி அது நிராகரிக்கும்..வா என்னருகில் அமர்ந்துக் கொள் என்று அழைக்கிறேன்..

நதியும் சிநேகமாக கை குலுக்கி அனுமதித்தது...

இங்கே நாங்கள் மூவரும் பயணிக்கிறோம்... வாழ்வின் சூட்சுமத்தை இங்கே உங்களால் உணர முடிந்தால் நீங்களும் இங்கே வரலாம்... இங்கே நதி எவரையும் நிராகரிப்பது இல்லை... அதன் பெருந்தன்மை உங்களுக்கு அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஆனந்தமாக பயணிக்கலாம் அதில் எந்த வித சஞ்சலங்களும் இல்லாமல்...

#நதியும்நானும்அந்தபறவையும்.

#இளையவேணிகிருஷ்ணா.

டாஸ்மாக் அலப்பறைகள்

 


இன்றைய தலையங்கம்:- தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் டாஸ்மாக் ஏற்கெனவே உள்ளது.. அதற்கு எதிர் திசையில் இன்னொரு டாஸ்மாக் திறந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் நமக்கு.. அதுதான் அந்த பக்கம் ஒரு டாஸ்மாக் இருக்கிறதே பிறகு ஏன் இந்த பக்கம் எதிர் திசையில் இன்னொன்று என்று கேட்டால் அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சாலையை கடந்து இந்த பக்கம் மதுபிரியர்கள் ஆர்வ கோளாறில் சாலையை கடந்து வரும் போது விபத்தில் சிக்கி இறந்து விடக் கூடாது என்று தான் என்று பொறுப்பாக பதில் அளித்தார்கள்... எனக்கு தலையே சுற்றி விட்டது... ஆமாம் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் திறப்பதே தவறு.. அதில் நேர் எதிரே இரண்டு டாஸ்மாக்..அதை கேட்டால் விபத்தை தவிர்க்க தான் என்று சொல்கிறார்கள்..

நான் அந்த மதுபிரியர்கள் சார்பாக கேட்கிறேன்... இப்படி நடந்து விட்டால்.. அதாவது இந்த கடையில் சரக்கு வாங்கி குடித்து விட்டு இந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய சரக்கு போதை சரியாக ஏறவில்லை என்று சாலையை கடந்து எதிர் திசையில் நல்ல போதையில் கடந்து அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றால் விபத்து ஏற்படாதா? இங்கே மதுபிரியர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையே.. மேலும் அவர்கள் வருமானத்தில் தான் அரசு அதிகாரிகள் ஊதியம் வேறு வழங்கப்படுகிறது...இதை பற்றி கொஞ்சம் அக்கறையோடு அரசாங்கம் சிந்தித்து மதுபிரியர்களின் உயிரை காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்...

#இன்றையதலையங்கம்.

#மதுபிரியரின் மீது அக்கறை கொண்ட சாதாரண குடிமகன்.

#இளையவேணிகிருஷ்ணா.