பக்கங்கள்

வியாழன், 20 ஏப்ரல், 2023

ஒரு பாலினத்தவர் திருமணம்

 


இன்றைய தலையங்கம்:-ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்கின்ற விசயம் தற்போது நமது நாட்டில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது... ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் இது குறித்து நீதிமன்றத்தில் உள்ளது என்பதை அறிந்து வியந்து போனேன்.. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நேற்று முன்தினம் நடந்து உள்ளது... அதாவது இது குறித்து பாராளுமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்றும் இதில் நீதிமன்றம் விலகி இருக்க வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சொல்லியது தலைமை நீதிபதியை கோபம் அடைய வைத்துள்ளது... நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்று இங்கே யாரும் கட்டளையிட அனுமதிக்க மாட்டேன் என்று மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இங்கே திருமணம் என்பது காலம் காலமாக ஆண் பெண் இருவருக்கும் தான் நடக்கிறது.. அதுதானே சரியான விசயம்... ஒரு சமுதாயம் கட்டமைக்க திருமண சடங்கு தேவைப்படுகிறது.. அதில் விளையும் தாம்பத்தியத்தில் நல்ல பண்புள்ள குழந்தையை இந்த சமுதாயத்திற்கு அர்பணித்து தொடர்ந்து சந்ததி நல்ல பண்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் வகுத்து வைத்த முறை.... தற்போது திருமண பந்தத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மனிதர்களை ஒரு குடும்பத்தை அந்த நிகழ்வில் இணையும் தம்பதிகளை பைத்தியம் பிடிக்க வைக்கிறது என்பது வேறு விஷயம்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்..

தற்போது விசயத்திற்கு வருவோம்.. ஏற்கெனவே நமது நாட்டில் திருமணம் முடிந்து சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நீதிமன்றத்தில் போய் நிற்கும் தம்பதிகள் ஏராளம் ஏராளம்... இதில் நீதிமன்றம் நிச்சயமாக ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடுகின்ற அளவுக்கு விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது... விவாகரத்திற்கான காரணம் கேட்டால் நமக்கே தலை சுத்துகிறது.. இதில் நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அதை தம்பதிகள் எதிர்கொள்ளும் மனநிலை இதெல்லாம் நிச்சயமாக உயிர் நாடியை சுடும் விசயம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது...


இதில் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்து கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்து நின்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... எவ்வளவு அருவருக்கத்தக்க விசயம்... நான் கேட்கிறேன்.. அவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? அவர்கள் இறக்கும் வரையோ அல்லது ஏதோவொரு சில கட்டுப்பாடுகளை விதித்து விதிகளை வகுத்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழ்வதே சரியான விசயம்..அதை விடுத்து திருமணம் தான் செய்துக் கொண்டு வாழ்வேன் என்றால் அது சரியான விதிமுறை இல்லை... இது சமுதாயம் சார்ந்த விசயம்.. கலாச்சாரம் சார்ந்த விசயம்... ஆண் ஆணோடோ பெண் பெண்ணோடோ தனிப்பட்ட முறையில் வாழ்ந்து விட்டு போக இங்கே ஒரு தடையும் இல்லை..அதை திருமணம் என்கின்ற பந்தத்தில் தான் வாழ்வோம் என்று சொல்வது மிகவும் மோசமான முரணான விசயம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக