பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில் 

வாழ்ந்து கொண்டு 

இருப்பவர் சில நாட்களில் 

உற்சாகம் இழந்து 

அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய 

அந்த வீட்டில் 

உள் அலங்காரமாக செதுக்கிய 

கலையை ரசிக்காமல் 

அது நாளடைவில் பொலிவிழந்து 

அவரின் ரசனைக்காக 

ஏங்கி கிடக்கிறது...

புதிதாக இருந்த போது 

தாம் எவ்வாறெல்லாம் 

புகழப்பட்டோம் என்று 

நினைத்து நினைத்து 

ஏக்க பெருமூச்சு விட்டு 

அந்த நாளின் நினைவுகளை 

அசைப்போட்டு ஆறுதல் 

தேடிக் கொண்டது...


அந்த வீட்டின் வெளி சுவரில் 

வரையப்பட்ட சாலையோர 

புழுதியில் நனைந்த 

ஓவியம் ஒன்று 

புதிதாக ரசிக்கப்பட்ட 

அதே சுவையோடும் பொலிவோடும்...

உற்சாகமாக இருக்கிறது ...

அந்த சாலையில் தினந்தோறும் 

நடந்து செல்லும் 

அந்த வீடற்ற மனிதரின் 

கலா ரசனையோடு கூடிய 

பார்வையால் தினமும் 

நின்று நிதானமாக 

தாம் காதலோடு 

ரசிக்கப்படுவதை பார்த்து...

#அந்தவீடற்றவரின்கலாரசனை

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த நதி என்னில் உமிழும் அமிழ்தம்...

 


ஒரு நதி இங்கே 

எந்தவித சலனமும் 

மனதில் கொள்ளாமல் 

சத்தம் இல்லாமல் நூல் பிடித்தது போல 

விதி எழுதிய போக்கில் 

பயணித்துக் கொண்டு தான் 

உள்ளது...

காலமாகிய நான் உங்களிடம் 

கேட்டுக் கொள்வதெல்லாம்

அந்த பயணத்தில் 

ஒரு சிறு கூழாங்கல் கூட எறிந்து 

சலனப்படுத்தாமல் 

அதை அதன் போக்கில் 

பயணிக்க விடுங்கள் என்பதே...

நீங்கள் அந்த நதியில் நீராடி 

கலங்கப்படுத்தி பாவத்தை அந்த நதியில் 

கலக்காமல் இருந்தாலே போதும் 

அது தனது தவ பலத்தால் 

சுவையான நீரோடு பயணித்து 

என்னில் கலந்து விடும்...

அது என்னுள் உமிழும் 

அமிர்தத்தை கொண்டே 

என் ஆயுளை நீட்டித்து 

உங்கள் வாழ்வில் 

உங்களோடு பயணிக்கும் 

பாவ புண்ணிய கணக்கை 

கணக்கிட்டு 

எனது பயணத்தில் சிறு பின்னமும் 

ஏற்படாமல் 

யுகம் யுகமாக பயணித்து 

தர்மத்தின் தாரையை 

இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவேன்..

#ஒருநதியின்சலனமில்லாதபயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.

காலை சிந்தனை ❣️🎉


ஒரு கோப்பை தேநீர்

ஒரு சில புத்தகங்கள்

எந்தவித சஞ்சலமும் இல்லாத 

ஒரு நாளை கடத்த 

போதுமானதாக இருக்கிறது...

இனிமையான பொழுதாக 

தங்களுக்கு அமைய 

வாழ்த்துகள் நேயர்களே ✨🎻💐.

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைசிந்தனை.

வாழ்வை சிறைப்படுத்த முயலாதீர்கள்...


தமக்கென்று ஒரு அடையாளம்;

தம் பெயரை சொல்ல பிள்ளை;

நாம் வாழும் வாழ்க்கைக்கு 

ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும் 

என்று ஆழ்ந்து நம்புவது 

இவை எல்லாமே மஹாமாயா...

வாழ்க்கை என்பது இந்த வட்டத்திற்குள் அடைபட்டு 

கிடக்க வேண்டும் என்ற 

விதிகளுக்கு அப்பாற்பட்டது...

வாழ்தல் தவம்...

அதை எந்த அடையாளத்திற்குள்ளும் 

வட்டத்திற்குள்ளும் 

திணிக்க முயலும் போது

அதன் உண்மையான சுதந்திரம் 

பறிக்கப்படுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/08/26.



அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்...

 


அந்த இலக்கியவாதி அன்றொரு நாள் நடுநிசி நெருங்கும் அந்த வேளையில் தனக்கு நெருக்கமான எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டு இருந்தார்...

தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் ஏதோவொரு கலை பயணத்தில் இணைத்துக் கொள்வது அவரது பொழுதுபோக்கு என்று சொல்லலாம்... அப்படி அந்த வாசிப்பில் மூழ்கியவருக்கு அவரது வீட்டின் அழைப்பு மணியோசை காதில் விழுந்தது... அந்த அழைப்பு மணி ஓசை கேட்டு சாதாரண மக்களாக இருந்தால் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தாரையே அலறி அடித்து எழுப்பி விடும் சுபாவம் உள்ளவர்கள் மத்தியில் இவர் அதை ஒரு முறை அப்படியே நோட்டமிட்டு விட்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

வெளியே ஒரு கூட்டமே அவரது கதவு திறக்காதா என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து விட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்தியது... இப்போதும் எந்த சலனமும் இல்லை அவரிடம்...

பிறகு பொறுமை இல்லாமல் ஒருவர் அந்த கதவின் மீது கையை வைக்க அது இலகுவாக திறந்து கொண்டது கண்டு வியப்படைந்தார்கள்... அப்படியே அவர்கள் அவரை நோக்கி வந்து ஒரு வணக்கம் செலுத்தினார்கள்... அவரும் தனது உடல் மொழியால் அவர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

இவர்கள் அனைவரும் நாங்கள் இங்கே அமரலாமா சார் என்று கேட்டார்கள்.. அவரும் தனது கண்ணசைவில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்...

இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அமர்ந்து கொண்டு எப்படி வந்த விசயத்தை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தார்கள்... பிறகு ஒரு வழியாக அவரது இலக்கிய படைப்புகளை வரிசையாக தரம் பிரித்து வைத்துக் கொண்டு இந்த இந்த படைப்புகள் எல்லாம் நாங்கள் திரைப்படமாக எடுக்க போகிறோம் அதற்கு தங்களது அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள்... அப்போது அங்கே அந்த மேசையில் உள்ள பொம்மை ஒன்று காதை தீட்டிக் கொண்டது..இவரிடம் போய் இந்த மனிதர்கள் வந்து இருக்கிறார்களே இவர்கள் கிறுக்கு தான் பிடித்து விட்டது போலும்..இவர் என்ன குணாதிசயம் உள்ளவர் என்று இத்தனை நாள் இவரோடு பயணிக்கும் எனக்கே கணிக்க தெரியாதே..சரி இவர் என்ன தான் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று தனது காதை கூர்மையாக்கி கொண்டது..இவர் அதை கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை... வந்தவர்கள் தங்களுக்குள் இந்த இந்த படைப்புகளுக்கு இந்த தொகையை பேசி விடலாமா என்று விவாதித்து கொண்டு இருந்தார்கள்.. குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் அந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்... ஒரு வழியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அவர் இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த இருக்கை காலியாக இருந்தது.. எங்கே சென்று இருப்பார் ஒரு வேளை கழிவறை சென்று இருக்கக் கூடும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அந்த இரவின் பேரமைதி வெளிப்படும் வகையில் அமர்ந்து இருந்தார்கள்... ஆனால் அவரை காணவில்லை..


ஒரு வேளை வெளியே தோட்டத்தில் உலாவ கூடும் என்று அந்த கூட்டத்தில் இருந்த இலக்கிய அறிவு சிறிது உள்ள ஒருவன் மட்டும் எழுந்து சென்று பார்த்தால் அவன் நினைத்தது போலவே அங்கே தான் அவர் அமைதியாக அந்த நடுநிசியில் நனையும் செடி கொடிகளை ரசித்தபடி மிகவும் மெதுவாக அதை வருடியபடியே அந்த தேய்பிறை நிலவின் மங்கிய ஒளியில் நடந்து கொண்டு இருந்தார்...

அவன் அதற்குள் உள்ளே ஓடோடி அவர் அந்த தோட்டத்தில் தான் இருக்கிறார் என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தான்..

எல்லோரும் அங்கே சென்று மீண்டும் தாங்கள் பேச நினைத்த அவர் எழுதிய இலக்கியத்திற்கான தொகையை சொன்னார்கள்... அவர் மிகவும் நிதானமாக நான் எப்போது என் கதையை உங்களிடம் கொடுப்பதாக சொன்னேன் என்று கேட்டார்..

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. சார் நீங்கள் உங்கள் இல்லத்தில் எங்களை அனுமதித்தது மற்றும் நாங்கள் வந்த காரணத்தை சொன்னபோது நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே... அதனால் தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம் என்றார்கள்..

ஓ அப்படியா... ஆனால் நான் நீங்கள் எல்லோரும் ஏதோ எனது வீட்டில் திருட வந்ததாக அல்லவா நினைத்து மௌனமாக வாசித்து கொண்டு இருந்தேன் என்றார் மிகவும் நிதானமாக...

அதற்கு அவர்களுக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சார் ஒரு திருமணம் ஆகாத இலக்கியவவாதியான உங்கள் வீட்டில் என்ன இருக்க போகிறது? நாங்கள் திருடர்களாகவே இருந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனால் இலக்கியவாதியான உங்கள் வீட்டில் சில பல இலக்கிய புத்தகங்களோ தத்துவ புத்தகங்களோ நீங்கள் எழுதிய புத்தகங்களோ இருக்க போகிறது... இதை எவர் வாங்குவார்கள்...அதை நீங்கள் நினைப்பது போல நாங்கள் திருடர்களாகவே இருந்து எடுத்து சென்று விலைக்கு போட்டாலும் ஒரு வேளை உணவு எங்களால் நிம்மதியாக உண்ண முடியாத அளவுக்கு வரியை வாரி இறைத்து எங்கள் வயிற்றின் சூட்டில் குளிர் காயும் அரசாங்கம் உள்ள நாட்டில் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களால் எங்கள் பசிக்கு கூட உதவ முடியாது... நாங்கள் இங்கே ஒரு பத்து பேருக்கு மேல் இருக்கிறோம்... அது சரி நீங்கள் எங்கோ வேறு உலகத்தில் வாழ்பவர் போல பேசுகிறீர்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரஜை தானே என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கேட்டான்..

அதற்கு அந்த எழுத்தாளர் ஆம் நான் இந்த நாட்டின் வரிக்கு உதவ முடியாத பிரஜை என்று நகைச்சுவையாக சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று தான் வாசித்து வந்த புத்தகத்தின் மீதி பக்கங்களை வாசிக்க தொடங்கினார்...

வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அப்ப நாங்க வரோம் சார் என்றார்கள்... ம்ம்... போகும் போது அந்த கதவை கொஞ்சம் நன்றாக சாத்தி விட்டு செல்லுங்கள் இன்னும் எவரும் உங்களை போல வந்து விட போகிறார்கள்... எனது வாசிப்பு தடை பட்டால் எனக்கு பிடிக்காது என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு அந்த புத்தகத்தில் வாசிக்க மூழ்கினார்...

#ஒருஇலக்கியவாதியும்

#அந்தநடுநநிசிமனிதர்களும்.

#கதையாக்கம்இளையவேணிகிருஷ்ணா.

புதன், 19 ஆகஸ்ட், 2026

நிஜ மரமும் பண மரமும் -சிறுகதை.


அந்த அதிஅற்புதமான 

பழங்களை கொடுத்து 

என்னை மகிழ்வித்து 

கொண்டிருந்த மரங்களை 

எல்லாம் 

அங்கே பணத்தை

குவித்து என்னை 

உச்ச நிலைக்கு 

அழைத்து சென்று விடும் 

மாயையில் 

அதை எல்லாம் 

சாய்த்து விட்டு

என் நிலத்தை கான்கிரீட் பணம் 

காய்க்கும் கட்டிட கிளைகளை 

உருவாக்கி சிறிது காலம் 

பெரும் செழிப்பில் 

மகிழ்ந்திருந்தேன்

சில காலம்...


அப்போது அங்கே 

வசித்த பறவைகள் 

எல்லாம் கீச் கீச் என்ற 

அடர்ந்த குரல்கள் 

காற்றில் கரைய 

வெகு தொலைவில் உள்ள 

மரங்களை சென்று 

தஞ்சமடைந்தது...


அந்த உணர்வுபூர்வமான நகர்தலை 

சிறிதும் கண்டுக் கொள்ளாமல் 

ஒரு சிரிப்பில் எகதாளமிட்டு 

அங்கே கூடி இருந்தவர்களிடம் 

சொல்லி சிரிக்கிறேன்...


இதோ காலங்கள் 

உருண்டோடி விட்டது...

இப்போது ஒரு பூகம்பத்தில் 

நான் உருவாக்கிய 

கான்க்ரீட் காடுகளாக 

காட்சி அளித்த இடங்கள் எல்லாம் 

தற்போது மயான பூமியாக 

காட்சியளித்ததை பார்த்து 

என் கண்களில் பெரும் நீருற்று 

பெருகி ஆறாக ஓடியது...


அப்போது என்தோளில் 

யாரோ அமர்வது போல 

சற்றே திரும்பி பார்க்கிறேன்...

அது வேறு யாருமல்ல 

என்றோ என் நிலத்தில் பசியாறிய குருவி ஒன்று தன் அலகில் 

ஒரு சிறிய பழத்தை 

சுமக்க முடியாமல் சுமந்து 

என் கவனத்தை திருப்பி 

என் உதட்டில் 

அந்த பழத்தை திணிக்க முயற்சி 

செய்கிறது...


செய்நன்றி மறவாத 

அந்த சிறிய குருவின் 

சின்ன கால்களை வருடி 

மன்னிப்பு கேட்கிறேன்...

சில கண்ணீர் துளிகள் 

அந்த குருவின் பாதத்தில் 

படர்ந்து என் பாவ மூட்டைகளை 

கரைக்க பெரும் பிரயத்தனங்களை 

அங்கே நிகழ்வித்துக் கொண்டு 

இருக்கிறது...


நான் சற்றே நிதானமாக பார்த்து 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

நிமிர்ந்து போது 

அந்த குருவி மீண்டும் 

என்னை ஒரு வித கவலை உணர்ச்சி பொங்க கீச் கீச் என்று 

மெல்லிய குரலில் குரல் எழுப்பியது...


நான் பேரன்பின் உணர்வுகளின் 

சக்தியை உணர்ந்து அங்கே 

பேச்சற்று அந்த குருவியை 

அணைத்துக் கொண்டு 

கண்ணீர் வழிய நிற்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/08/26.




அந்த பிரபஞ்சம் என்னை கூர்ந்து நோக்கியபோது...


எத்தனையோ 

சலசலப்பான நகர்வுகளுக்கு 

மத்தியில் 

ஒரு புழுதியென 

அங்கே பறந்து 

காலமெனும் வெளியில் 

கலக்கிறேன்...


இங்கே எனக்கென்று 

ஒரு அடையாளம் இருக்கிறது என்று 

அங்கே 

பலபேர் கூச்சலிட்டுக் கொண்டே 

இருக்கிறார்கள்...


நான் அவர்களின் 

கூச்சலை ஒரேயொரு 

பார்வையில் அடக்கி விட்டு 

அவர்கள் சொல்கின்ற 

அடையாளங்களை உதறி 

அந்த புழுதியில் 

கரைத்து விட்டு 

அந்த காலமெனும் சாலையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

ஏந்தி நிதானமாக 

கடந்து கடந்து செல்கிறேன்...


அந்த பிரபஞ்சமோ

என்னை கூர்ந்து 

கவனித்து 

எனக்கு ஒரு விருதை 

என் கைகளில் திணித்து விட்டு 

சென்றது...

அவள் ரசனையுள்ள 

கவலைகளற்ற 

வேடிக்கை பார்ப்பவள் என்று...


நான் அதையும் 

ஒரு புன்னகையோடு 

கடந்து செல்லும் போது 

என் கையில் உள்ள 

தேநீர் கோப்பையில் 

தேநீர் காலியாகி 

இருந்தது...

அதன் சுவை மட்டும் 

என்னோடு விடாப்பிடியாக 

பயணித்துக் கொண்டிருக்கிறது...

பெரும் காதலெனும் உணர்வோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/08/26.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வேடிக்கை பார்க்கும் சுகத்தில்...


வேடிக்கை பார்க்கும் சுகத்தில் தான் 

இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு 

இருக்கிறது 

மிகவும் உற்சாகமாக...

ஒரு மனிதனின் துக்கமும் இங்கே 

வேடிக்கை தான்...

நானோ அந்த இயல்புடைய

மனிதர்களின் 

அருகில் இருப்பதை தவிர்த்து 

என் கனவுகளுக்கு மெருகேற்ற 

சும்மா அப்படியே வேடிக்கை பார்க்கிறேன் 

அதோ அங்கே எதிர்பாராத விதமாக 

என் கனவுகள் அத்தனையும் 

சுமந்து அங்கே ஒரு கப்பல் 

மிதந்து வருகிறது...

நானோ என்னையும் மறந்து 

மூழ்கி போகிறேன் 

அந்த கப்பலின் பிரமாண்டத்தை பார்த்து...

அந்த கப்பலோ

என் கனவுகளை கரையில் 

இறக்கி விட்டு விட்டு 

என்னையும் வாரியணைத்து 

இந்த பிரபஞ்சத்தை

சுற்றிக் காட்ட பேரன்போடு 

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா

#நாள்18/08/26.



திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மனமெனும் மயக்கத்தில் நான்...



என்றோவொரு நாள் 

பார்த்த 

உன் முகத்தை 

இன்றும் தேடியலைகிறது

என் ஜீவன்...

மது மயக்கத்தில் 

மூழ்கி அலையும் 

வண்டை போல 

என் மனமெனும் சாலையில் 

உன் பாத வாசத்தை 

தேடி ஒவ்வொரு நொடியும் 

அலைந்து திரிகிறேன் 

ஒரு பித்தனை போல...


காலத்தின் கரைகளில் 

நீ எங்கே ஒதுங்கி 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

இருக்கிறாய் என்று 

யார் அறியக் கூடும்?

அது ஒரு மன மயக்கம் என்று 

எத்தனையோ முறை 

நான் என்னை தேற்றிக் கொண்டு 

சூழலை இயல்பு நிலைக்கு 

கொண்டு வர 

வெகு பிரயத்தனத்தோடு 

போராடி தோற்றுக் கொண்டு 

இருக்கிறேன் உன்னால்...


உண்மையில் நீ யார்?

நான் தேடும் காதலா 

இல்லை 

காதலின் மனமயக்கமா 

இது வரை ஏதும் 

பதில் இல்லையடி 

கண்மணி...

ஏ காலமே நீ சற்றே 

நின்று நிதானமாக ஆராய்ந்து 

என் கேள்விக்கு பதில் 

சொல்லி விட்டு போ...

இல்லை 

அதோ அங்கே சுடர் விட்டு 

கனலாக எரியும் 

அந்த தணலில் 

என்னை தள்ளி விட்டு போ...

அந்த அக்னியின் ஜீவாலையிலேனும் 

நான் அந்த மயக்கத்தில் இருந்து 

விடுபடுகிறேனா என்று 

பார்க்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/08/26.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

சுதந்திரம் என்பது யாதெனில்...

 


சுதந்திர தின சிறப்பு தலையங்கம்:-

தமிழ் நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போவதை இதோடு நிறுத்த சட்ட சபையில் மசோதா நிறைவேற்றி இதை மக்கள் இயக்கமாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும்... இது தான் சுதந்திர தின வாழ்த்து செய்தி...


அனைத்து ஜீவ ராசிகளும் வாழ தான் இந்த பிரபஞ்சம் சிருஷ்டிக்கபட்டு இருக்கிறது...


இங்கே நமது பாரதத்தில் இயற்கைக்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் நடந்துக் கொண்டு இருக்கிறது...அதை இதோடு நிறுத்திக் கொள்ள தீவிரமாக நாட்டை ஆள்பவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்...


அதை விடுத்து வெறும் பொருளாதாரம் மற்றும் வல்லரசு என்று சுதந்திர உரையில் மாய வித்தைகள் காட்சியாக மக்கள் மனதில் ஓட வைக்கும் பேச்சை நிறுத்துங்கள்...


இங்கே மக்களின் வாழ்வுரிமை மற்றும் பல ஜீவ ராசிகளின் வாழ்வுரிமையை காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்...


அதை விடுத்து வெறும் பாரத் மாதாவிற்கு ஜெ என்று முழங்குவதால் நிச்சயமாக ஒன்றும் நடக்காது...


ஆட்சியாளர்கள் இயற்கை சுரண்டலை விடுத்து மக்கள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் நிம்மதியாக வாழ இந்த சுதந்திர உரையில் சூளுரைக்க வேண்டும்...


வெறும் பொருளாதார பார்வையில் நாட்டை இது வரை வெறும் குட்டிச் சுவராக்கியது போதும்...


நதிகளை மலைகளை காடுகளை மீட்கும் உறுதி மொழியே தற்போதைய தேவை...

எங்கே பார்த்தாலும் கான்கிரீட் காடுகள் பெருகி மிக பெரிய அச்சுறுத்தல் உள்ளது... நிஜமாகவே கட்டிடங்களை பார்க்கும் போது அடர்ந்த பயம் ஒன்று மனதிற்குள் புகுகிறது...


ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு... அது கிராமமோ நகரமோ.. இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...


இருக்கும் தொழிற்சாலை தவிர புதிதாக வரக் கூடாது... கான்கிரீட் காடுகளுக்கு எதிரான போராட்டமே தற்போதைய தேவை...

நில உச்சவரம்பு சட்டம் போல வீடு உச்ச வரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும்...


இல்லை என்றால் காடுகள் காணாமல் போய் நரகத்தின் வாசலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும் இந்த நிலையை மாற்ற முடியாது...

இது தான் சுதந்திர தின செய்தி...

வாழ்த்துக்கள் மக்களே 🤝🙏🍂🦋😼🙊🥀🍃🪴🌴🪵🌲🌳🪾🌿☔❄️🌊🏖️🫎🐰🐭🐶🐺🐻🐗🐴🦎🐉🦖🦕🐊🐍🦕

#சுதந்திரதினசிறப்புதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/08/26.

புதன், 12 ஆகஸ்ட், 2026

காலமெனும் கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு...


காலமெனும் கதவிடுக்கில்

மாட்டிக் கொண்டு 

கண்ணீர் வடிக்கிறேன்...

காலமோ எதுவும் சொல்லாமல் 

என் நிலையை ரசித்து 

தன் முகத்தில் 

புன்னகையை ஏந்தி 

கடந்து செல்கிறது...

காலத்தை கொஞ்சம் 

பெரும் குரலெழுப்பி 

அழைக்கிறேன் நான்...

கொஞ்சம் நில் 

எப்போது என்னை 

நீ விடுவிப்பாய் என்று

பதில் சொல்லி விட்டு போ 

என்கிறேன் 

மிகவும் விரக்தியாக...

இது நாள் வரை 

எத்தனை கற்பத்தில் பத்தில்

பயணித்தாய் என்று 

உன் பிறவியை யோசித்து 

கணக்கிட்டு கொண்டே இரு...

அதற்குள் நான் 

வந்து விடுகிறேன் 

என்றது 

மிகவும் நிதானமாக...

நான் அந்த கணக்கீட்டிற்கான

புள்ளி விபரங்களை 

எங்கே தேடி சேகரிப்பது என்று 

குழப்பமாக பயந்து 

கண்ணீர் வடிக்கிறேன்...


அப்போது அங்கே 

சில பல மனிதர்கள்

மிகவும் சுதந்திரமாக 

ஒருவருக்கொருவர் 

பேசி சிரித்து செல்கிறார்கள்...

நான் அவர்களை 

எவ்வளவு பிரயத்தனங்கள் 

செய்தும் அழைக்க முடியவில்லை...

ஒரு வேளை அவர்கள் 

காலத்திடம் 

தமது பிறவி கணக்குகளை 

ஒப்படைத்து விட்டு 

சுதந்திரம் அடைந்து விட்டார்களா 

என்று தெளிவுப்படுத்திக் கொள்ள 

மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் 

காலம் வரும் பாதை பார்த்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/26.





சமூக நிகழ்வெனும் மாய ஓட்டப்பந்தயத்தில்...

 



நான் எது எதிலோ 

நிம்மதி என்று 

ஓடிக் கொண்டே 

இருக்கிறேன்...

எந்தவித கேள்வியும் 

கேட்க நேரமில்லாமல் 

ஒரு மாய ஓட்டப்பந்தயம் 

எனும் சமூக நிகழ்வில்...


சில குடும்ப உறவுகளில் 

நிம்மதியாக 

உணரும் தருணங்களின் 

அடுத்த சில கால 

இடைவெளியில் 

அதே உறவு...


சில துன்பங்களை 

தூக்கி நம் மீது சுமக்க 

வைத்து விடுகிறது...

அப்போது 

நம்மை நிழலாக 

தொடர்ந்து வந்த நிம்மதி 

எங்கே ஒளிந்துக்கொண்டு 

கண்ணாமூச்சி ஆடுகிறது 

என்று தேடி 

அலைகிறேன்...


சில பிடித்த விஷயங்களில் 

ஆழ்ந்து 

என்னை தொலைக்கும் 

காலங்களில்

என்னை சேரும் புகழில் 

ஆழ் கடல் முத்து 

கிடைத்து விட்டதென

ஆனந்த கூத்தாடி 

களிக்கிறேன்..


அதே பிடித்த விஷயம் 

சில சமயங்களில் 

நானே வெறுத்து ஒதுக்கி 

எதுவும் செய்யாமல் 

காரியமற்ற நிலையில் 

கிடக்கிறேன்...


இங்கே எது உண்மை 

எது பொய்யென 

நுட்பமான தேடலில் 

நான் தொலைந்து 

கால வெளியில் சோர்ந்து 

அமரும் போகும் போது 


காலம் என்னை தேற்றி 

கை பிடித்து 

அழைத்து செல்கிறது... 


இங்கே 'நான்' 

தொலையும் வரை 

பாதி உண்மை

பாதி பொய்யென 

காட்சி கொடுத்து 

காட்சி பிழையாக 

சுற்றும் 

உன் பிறவி சூழலை 

முடிக்கும் வரை 

பாதி உண்மை எனும் 

மாயா சூழல் 

உன்னை விட்டு 

பிரியாது பயணிக்கும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/26.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

இந்த பிரபஞ்சத்தின் நாடக மேடையில் அசல் நாயகன்...

 


அங்கே எத்தனை முறை 

வீடு முழுவதும் தேடியும் 

அந்த ஜீவன் 

அகப்படவில்லை...


எங்கே சென்று இருக்கும் 

என்று குழம்பிப் போய் 

ஒரு பைத்தியகாரியை போல 

தேடி அலைகிறேன் 

அது ஒரு குவளை பால் 

சாப்பிடும் இந்த நேரத்தில்...


அது அமைதியாக 

ஒரு கோரை பாயை போல 

வாலை சுருட்டி தலையை 

தன் உடலுக்குள் 

புதைத்துக் கொண்டு 

படுத்திருக்கும் 

மேசைக்கடியில் 

அந்த கட்டிலுக்கடியில் 

என்று வீடு முழுவதும் 

அலசி ஆராய்ந்து விட்டு 


அந்த சோஃபாவில் 

சோர்ந்து வீழ்கிறேன்...

மீண்டும் 

நான் மெல்ல எழுந்து 

தேடுதல் வேட்டையை 

வெளியே தொடங்க 

கதவை திறக்கும் போது 

கடற்கரையில் அமைதியாக 

அந்த ஜீவன் அலையை 

ரசித்து தன்னை மறந்து 

அசைவற்று அமர்ந்து இருக்கிறது...


இங்கே அந்த சத்தமிடும் அலையை 

நான் பார்த்து பல நாட்கள் ஆவதை 

உணர்ந்து 

அதன் அருகில் அமர்ந்து கொண்டேன்..


அது நான் வந்த சுவடை கூட 

அறிய விருப்பம் இல்லாமல் 

இமைகள் இமைப்பதை மறந்து 

லயித்து கிடக்கிறது 

அந்த அலையின் ஓட்டத்தில்...


அது இருந்த அந்த நிலையில் 

இதுநாள் வரை 

என்னோடு பின்னி பிணைந்து 

 பயணித்து வந்த 

என் கல்வி நான் வகித்து வந்த 

பதவி செறுக்கு எல்லாம் 

கொஞ்சம் கொஞ்சமாக 

சூரியனை கண்ட பனி போல 

உருகி வடிந்து 

அந்த சமுத்திரத்தில் 

மெல்ல மெல்ல கரைகிறது...


இங்கே இந்த நொடியில் 

பிரபஞ்சத்தின் நாயகனாக 

அந்த பூனையை 

பிரபஞ்சம் அறிவித்ததை 

நான் கண்களில் வழியும் 

கண்ணீரை துடைக்க 

மறந்து அந்த ஜீவனை 

ஓடோடி சென்று 

என்னோடு 

அணைத்துக் கொள்கிறேன்...

அது ஏ

ன் என்று மட்டும் 

கேட்காதீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/08/26.



இவர்கள் அஞ்ஞான வாசம் எப்போது முடியும்?


நாள் தோறும் இங்கே 

பல மனிதர்கள் அரங்கேற்றும் 

நாடகத்தை 

இந்த பிரபஞ்சம் 

கொஞ்சமும் சத்தம் இல்லாமல் 

ரசிக்கிறது...


அவர்கள் நாடகம் முடிந்ததும் 

களையும் ஆடையாக 

உடல்கள் இங்கே 

அங்கொன்றும் இங்கொன்றுமாக

பரவி கிடப்பதை பார்த்து 

அதை மிகவும் நிதானமாக 

சேகரித்து தீக்கு இரையாக

சிலவற்றையும் 

மண்ணுக்கு உரமாக 

சிலவற்றையும் 

பாகம் பிரித்து 

கொடுத்து விட்டு 


தனக்கென எதுவும் 

வைத்துக் கொள்ளாமல் 

மீண்டும் நாடக மேடையில் 

புதிதாக ஏறும் 

கலைஞர்கள் களையும் ஆடைகளுக்காக 

காத்திருக்கிறது 

எந்தவித பற்றுதலும் 

இல்லாத 

இந்த பிரபஞ்சம்...


நாடக காட்சிகளில் 

நடிப்பவர்களோ 

அந்த கதாபாத்திரம் தான் என்று 

அகங்காரம் பிடித்து 

இங்கும் அங்கும் 

அலைந்து திரிந்து விட்டு 

சோர்ந்து போய் 

அந்த காலனிடம் 

அடைக்கலம் ஆவதை 

பார்த்த பிரபஞ்சம் 


இவர்கள் அஞ்ஞான வாசம் 

எப்போது முடியும் என்று 

மிகுந்த பொறுமையோடு 

காத்திருக்கிறது 

யுகம் யுகமாக...

அவர்களோ மீண்டும் மீண்டும் 

அதே மாய புதைக் குழிக்குள் 

மூழ்குவதிலேயே குறியாக 

இருப்பதை பார்த்து 

எதற்காகவும் நடுங்காத 

இந்த பிரபஞ்சம் 

ஒரு சில விநாடிகள் 

சோர்ந்து தான் போய் விட்டது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/08/26.











அங்கே சிறைப்பட்ட பறவைகளின் ஏக்கம்...


ஒருத்தி இருக்கிறாள்...

அவளது இருப்போ 

கட்டற்ற ஆற்றை போல அல்லாமல் 

ஒரு மென்மையான நதியை போல 

மிகவும் சுதந்திரமாக 

வழி நெடுகிலும் கை குலுக்கி 

நீர் துளிகள் படர்ந்த பூக்களை

வழி நெடுகிலும்

மிகவும் ரசனையாக 

சிதற விட்டு போகிறாள்...

அவளது வாழ்வின் ரசனையான 

நகர்வுகளை 

துளி துளியாக 

ரசித்து பார்த்து கொண்டு 

இருக்கிறது 

அங்கே ஒரு அதிசய 

சுதந்திர பறவை...

இங்கே ஒரு பெரும் சிறைக்குள் 

அடைப்பட்டு கிடக்கும் 

ஏராளமான பறவைகள் 

அதில் சலித்து சிறகு படபடக்க 

ஏக்கமாக வேடிக்கை பார்த்து

சத்தமிட்டு 

அந்த சுதந்திர பறவையின் 

கவனத்தை திருப்ப முயற்சி செய்து 

தோற்று விடுவதை

பாவமாக இந்த பிரபஞ்சம்

கையறு நிலையில் 

வேடிக்கை பார்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/08/26.

புதன், 5 ஆகஸ்ட், 2026

அந்த சதுரங்க ஆட்டத்தில் நான்...

 



அந்த சதுரங்க ஆட்டத்தில் 

ஆடவே தெரியாத என்னை 

வலுக்கட்டாயமாக 

யாரொவரால்

நிறுத்தி வைக்கப்பட்டு 

தோல்வியடைந்து 

தலை சாய்ந்து கிடப்பதை 

ஜீரணிக்க முடியாத 

காலமோ 


என்னை இழுத்து அணைத்து 

அங்கிருந்து தூக்கி செல்கிறது...

இங்கே எல்லாம் தெரிந்து தான் 

வாழ வேண்டும் என்று 

பிரபஞ்சம் எழுதாத விதியை 


அங்கே யாரொருவர் 

யாருக்கும் தெரியாமல் 

ஒரு கடினமான திரையால்

அதை மறைத்து பலபேரை 

இந்த சதுரங்க ஆட்டத்தில் 

காவு வாங்க உதவுகிறார்கள்...


அந்த வழியே என்னை 

இழுத்து வந்த காலமோ 

அந்த மறைத்த விதியை 

கவனித்து 

ஒரு பெரும் புயலை வரவழைத்து 

அந்த திரையை கிழித்து 

எங்கோ சென்று போட்டு விட 

தற்போது பல பேரும் 

நிம்மதியாக இந்த பிரபஞ்சத்தில் 

பயணிக்கிறார்கள்...


நான் தற்போது சற்றே 

கண் விழித்து பார்க்கிறேன்...

அருகில் இருந்த காலமோ 

இங்கே நிம்மதியாக 

சுவாசிப்பது முக்கியமா 

சமூகத்தின் துரத்துதலுக்கு 

அடிபணிதல் முக்கியமா என்று 

காலம் என்னை பார்த்து 

கேள்வி கேட்கிறது...

நானோ நிம்மதியாக சுவாசிப்பதே

முக்கியம் இங்கே என்று கூற 


அது என் முதுகில் தடவிக் கொடுத்து 

சில தின்பண்டங்கள் 

பசிக்காக கொடுத்து 

அந்த தென்றலை 

வழி துணையாக அனுப்பி வைக்க 

நான் சற்றே ஆறுதலாக 

பயணத்தை தொடர்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/08/26.