இயற்கையை ரசித்துக்கொண்டே
நகர்கிறேன்...
அந்த வயல் வெளியினூடே
படர்ந்து கிடந்த புல்வெளி
பாதத்திற்கு இதத்தை கொடுக்க
புல்வெளியில் படர்ந்த பனித்துளியை
ரசித்துக்கொண்டே...
அந்த பனி படர்ந்து கிடந்த
காலை வேளையை
அப்படி என்னால் மறந்து விட
முடியாது...
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு தெரியாமல் கரைகின்ற
காலத்தின் இடைவெளியில்
எங்கே தொலைந்தது
அந்த பனிக் காலம் என்று
தேடி அலைகிறேன்...
இதோ இப்போது சுட்டெரிக்கும்
வெயிலின் தாக்கத்தில்
அந்த புல்வெளியில் படர்ந்த
பனித் துளி
என் தாகம் தீர்க்காமல்
எங்கே மறைந்துக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறது என்று
கேள்வி கணைகள்
என் நெஞ்சில் எழுகிறது...
அந்த பயிர் அறுவடை
செய்த வெற்று காட்டில்
வெயிலின் வெம்மை தாங்காமல்
அந்த தென்னங்கீற்றின்
ஒற்றை நிழலில்
ஒடுங்கிக் கொள்ள
பெரும் பிரயத்தனப்படும் போது
எங்கெங்கோ சிதறிக் கிடந்த
கருமேகங்கள் ஒன்று திரண்டு
நான் உழைத்த அந்த மண்ணை
நனைத்தது
அந்த கோடை மழை...
இங்கே இயற்கை அன்னையின்
பெரும் அமுதின் திரளில்
நான் நனைந்து
பெரும் உற்சாகம்
அடைவதை பார்த்து
என் பரவசத்தின் உச்சத்தில்
அந்த கோடை மழையும்
கொஞ்சம் சிலிர்த்து தான் போனது..
இங்கே இயற்கையின்
பெரும் கருணையின் சூட்சமத்தை
அந்த நொடியில் உணர்ந்து
பெரும் அமைதிக் கொண்டு
அந்த மழையாடலை
ரசித்துக் கிடக்கிறேன்
மணிக்கணக்கில்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:07/02/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக