பக்கங்கள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தாய் மரமும் அந்த பறவையும்...

 


அந்த கிளை படர்ந்த

மரத்தின் பழங்கள்

கனிந்து

மண்ணில் தஞ்சம்

புகுகிறது...


அதோ உணவை

தேடி திரிந்து

எதுவும் கிடைக்காத

பறவையொன்று

இந்த மரத்தின் கீழேயுள்ள

பழத்தில் தன் பசி எனும்

அக்னியை தணிக்கிறது...

அந்த பறவை இட்ட

எச்சத்தில் இருந்து 

அந்த கனியின் விதை

அந்த மரத்திற்கு அருகிலேயே

விழுந்து கிடக்கிறது...

அந்தவொரு அந்தி மாலையில்

பெய்த மழையில்

மண்ணில் புதைந்து

பக்குவமடைந்து

சில நாட்கள் கழித்து

சில துளிர் முட்டி மோதி

வெளியே தலைக் காட்டுவதை

பார்த்த அந்த தாய் மரம்

மௌனமாக 

ஆனந்த கண்ணீரோடு

அந்த பறவைக்கு தன் இலைகள் அசைத்து சிறு ஒலியால்

நன்றி சொல்வதை பார்த்து

அந்த பறவை 

தன் சிறகுகளை படபடத்து

குதூகலித்து

என் பசியை தீர்த்த தாய் நீ

உன் நிழலில் நான்

இளைப்பாறுகிறேன்...


எனக்கு என்று 

பெரும் வசிப்பிடத்தை

தாயுள்ளத்தோடு கொடுத்து

உணவும் கொடுத்து

ஆதரிக்கும் நீ

அந்த சிறு துளிரோடு

கூடிய செடிக்கு மட்டுமா தாய்

எனக்கும் தான் என்று

சிறு கண்ணீரில்

அந்த கிளையை நனைத்தது...


இந்த அற்புதமான தருணத்தை

வேடிக்கை பார்த்துக் கொண்டே

நகர்ந்த காலம் 

இயற்கையின் சூட்சமம்

எப்போதும் கருணையாக 

இப்படி ஒன்றோடொன்று 

பின்னிப் பிணைந்து இருக்க

மனிதர்கள் மட்டும் ஏன்

மனம் முழுவதும் வஞ்சம் 

நிறைத்து கருணை என்ற

குணாதிசயம் வறண்டு

இந்த பூமியில்

இங்கும் அங்கும் ஓடி

பெரும் அதிர்வில்

இந்த பிரபஞ்சத்தை

நடுக்கத்தில் உழல

செய்கிறார்கள்...என்று

யோசித்தபடியே

பெரும் மூச்சோடு

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா‌

நாள்:07/02/16.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக