பக்கங்கள்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

அந்த பெருநகரத்தின் அகோர பசி...


அந்த பெருநகர வீதியில் 

மூச்சு திணற பிரயாணம் 

செய்கிறேன்...

என் மொத்த சக்தியையும் 

அந்த பெருநகரம்

ஒரு மோசமான அரக்கன் 

இரத்தத்தை ரசித்து உறிஞ்சி 

குடிப்பதை போல 

தனிப்பட்ட ரசனையோடு 

நின்று நிதானமாக உறிஞ்சி 

குடிக்கிறது என் உடலை 

கிழித்து ரத்தத்தை ...

இங்கே பெரும்பாலானவர்கள் கதியும் 

அதேதான் என்றாலும் 

நான் மட்டும் அதனிடம் 

கெஞ்சி மன்றாடுகிறேன்

என்னை மட்டும் விட்டு விடு என்று 

என் கண்களில் வழியும் 

கண்ணீரோடு...

அந்த பெருநகரமோ 

நீ உன் இச்சையின் படி தானே 

எனக்கு பலியாகிறாய் 

பிறகேன் இவ்வளவு கதறல் என்று கேட்டது...

நானோ தேன் கூட்டில் உள்ள தேனின் ருசியை உணர 

உன்னை தேடி வந்தேன்...

இங்கே தேன் ஒரு துளியும் இல்லாத 

வெறும் வறண்ட தேன் கூடு 

தான் இருக்கும் என்று 

இங்கே வந்தவர்கள் சொல்லவில்லை என்றேன் 

குரலில் அழுகை தோய்ந்து...

அந்த பெருநகரமோ 

என்ன நினைத்ததோ

என் வர்ணனையை கேட்டு 

பெரும் சத்தத்துடன் என்னை 

பலம் கொண்ட மட்டும் 

தூக்கி எறிந்தது

நானோ அந்த பெருநகரத்தின் 

எல்லையில் வீழ்ந்தேன்...

வீழ்ந்த கணத்தில் என் உடலில் 

அங்கங்கே வழியும் ரத்தத்தையும் 

துடைக்கவும் தோன்றாமல் 

எழுந்து வேகமாக 

அந்த சாலையில் ஓடுகிறேன்...

என் நிலையின் பரிதாபத்தை பார்த்து 

அங்கே காலம் 

கண் கலங்கியது...

பாவம் 

அதை தவிர அதனால் வேறு 

என்ன செய்ய இயலும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக