பக்கங்கள்

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (5)

 


அன்றொரு நாள் பௌர்ணமி நிலவில்✨✨✨✨✨ சாலையில் தனியே நடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.நான் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்.சாலையில் நடந்து செல்ல சக்தி உள்ளவர்கள் அத்தனை பேரும் தான்.எல்லோரும் ஏதோவொரு பரபரப்பு தொற்றிக் கொள்ள வேகமாக நடந்து தங்கள் இல்லத்தை அடைய செல்கிறார்கள்.அது இல்லம் என்று அப்படி சொல்லி விட முடியாது நிறைய பேருக்கு.அது புறா கூடு போல என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான் மட்டும் மிகவும் நிதானமாக நடந்து செல்கிறேன்.. ஏனெனில் என்னை தேடி எனது இல்லத்தில் வேறு எவரும் இல்லை.அதனால் கூட இருக்கலாம்.ஆனால் அப்படி எவரேனும் இருந்தாலும் நான் இவ்வளவு பரபரப்போடு நடக்க மாட்டேன்.. ஏனெனில் நடை என்பதும் ஓர் ஆனந்தம்.அந்த ஆனந்தத்தை சாலையில் சிதறடித்து நடக்க எனக்கு மனமில்லை.. என்று தான் சொல்ல வேண்டும்.


  அவ்வாறு நடந்து செல்லும் போது ஒருவர் மிகவும் பதட்டத்தோடு என்னை நெருங்கி உங்கள் வீடு அருகே உள்ளதா சார் என்று கேட்டார்.நானும் ஆமாம் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று விடலாம் என்று சொல்லி விட்டு ஏன் கேட்கிறீர்கள் என்றேன்.உங்களை பார்த்தவுடன் உங்களிடம் எனது ஆதங்கத்தை சொல்லி அழ வேண்டும் என்று ஏனோ தோன்றியது.அதனால் தான் என்றார்.. நானும் ஒன்றும் புரியாதவனாக அவரை பார்த்து கேட்டேன்.என்னை நீங்கள் பார்ப்பது இப்போது தான்.அதற்குள் என்னிடம் உங்கள் ஆதங்கம் சொல்லி அழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. நான் அவ்வளவு நல்லவன் என்று உங்கள் மனதிற்கு எவ்வாறு தோன்றியது என்று கேட்டேன் புன்னகைத்து கொண்டே!

அதற்கு அவர் நீங்கள் என்னை பார்ப்பது இது முதல் முறை..ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும்..இதே சாலையில் எத்தனையோ மனிதர்கள் பயணிக்கிறார்கள்..அத்தனைபேரும் எனக்கு நினைவில் இல்லை..ஆனால் எப்படியோ உங்கள் முகம் மட்டும் எனக்கு ஆழமாக பதிந்து விட்டது.உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்ம பந்தமாக தோன்றும்.. சரி சரி.அதனை விடுங்கள்.. நீங்கள் விசயத்தை நீங்கள் காது கொடுத்து கேட்பீர்களா மாட்டீர்களா என்றார் மிகவும் கலக்கத்தோடு.


சரி சரி வாருங்கள் என்னோடு என்றேன்.. அவரும் அதற்கு மேல் எதையும் பேசாமல் கூட நடந்து வந்தார்.எனது வீடும் வந்தது.நான் பாக்கெட்டில் உள்ள சாவியை தேடி எடுத்து எனது இல்லத்தின் கதவை திறந்தேன்.அவரை உடனடியாக எனது கொல்லைப்புறத்திற்கு அழைத்து சென்று கைகால் அலம்ப சொன்னேன்.. நானும் கைகால் சுத்தம் செய்து கொண்டு அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.அவர் வீட்டை ஆவலாக பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.நீங்கள் வீட்டை மிகவும் நேர்த்தியாக வைத்து இருக்கிறீர்கள் என்றார்.. மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு அவரை ஹாலில் அமர வைத்துவிட்டு நான் சமையலறை நோக்கி சென்றேன்.பிரிட்ஜ்ல் இருந்து தோசை மாவை எடுத்து வெளியே வைத்து விட்டு அவருக்கு பருக தண்ணீர் கொடுத்து விட்டு அவர் அருகில் அமர்ந்தேன்.என்ன விசயம் சொல்லுங்கள்.. என்றேன்.அதற்கு முன்னே உங்களை பற்றி சொல்லுங்கள் முதலில் என்றேன்..

அவரும் சொல்ல ஆரம்பித்தார்.. நான் இங்கே ஓர் சின்ன பெட்டி கடை ஒன்று நடத்தி வருகிறேன்.எனக்கு ஓர் மனைவி சத்யா மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் என்றார்.. அவர்கள் இருவரும் படிப்பை முடித்து தற்போது ஒரு சின்ன கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றார்.

ஓ.. அப்படியா.மிகவும் மகிழ்ச்சி.. தற்போது உங்களுக்கு என்ன பிரச்சினை என்றேன்..

எனக்கு கடந்த சில நாட்களாக எனது பெண் பிள்ளைகள் பற்றி தான் கவலை.. சார்.அவர்களில் மூத்தவள் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்கிறாள்.அப்படியே எப்படி பெண் பிள்ளையை விட்டு விட முடியும்.அவள் எவரையும் விரும்பவில்லை என்று வேறு சொல்கிறாள்.இதில் தான் பிரச்சினை ஆரம்பித்து தற்போது கோபித்துக் கொண்டு போய் தோழி வீட்டில் தங்கி விட்டாள்..அவளை நான் எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை சார்.மாப்பிள்ளை வீட்டில் இருந்து நாளை மறுநாள் வருவதாக சொல்கிறார்கள்..இவளோ மிகவும் பிடிவாதமாக வர மாட்டேன் என்கிறாள்.. எனக்கு வாழ்க்கை பெரும் சுமையாக தோன்றுகிறது சார்.. என்றார்..


இவ்வளவு தானே இதற்கு போய் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்.திருமணம் என்பது கட்டாயம் செய்துக் கொள்ள வேண்டும் என்று இல்லையே..அவளை அவள் விருப்பப்படி வாழவிடுங்கள்.. அதற்கு அவளுக்கு உரிமையும் உள்ளது என்றேன்..


அவர் என்னை பார்த்த பார்வையில் ஓர் கலக்கம் தெரிந்தது.. போயும் போயும் இவரிடம் வந்தோமே என்று நினைத்து இருக்கக் கூடும்.. தொடர்ந்து அவரிடம் பேசினேன்.. தற்போது அவளை கட்டாயப்படுத்தாதீர்கள்.அது உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினையை கொண்டு வந்து விடும் என்றேன்..

பிறகு என்ன தான் நான் செய்வது என்றார்.. மிகவும் சோகமாக..


அவள் திருமணத்தை தற்போது தள்ளி வைப்பது தான் என்று சொன்னேன்..

அவர், அவள் மனம் எதிர்காலத்தில் மாறாமலேயே போய் விட்டால் எனது இரண்டாவது பெண்ணின் கதி என்ன ஆவது சார் என்றார்.


இப்போது நிறைய சிந்தித்து உங்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்..என்று சொல்லி கொண்டே அவருக்கு படிக்க சில புத்தகங்களை அவர் கைகளில் கொடுத்து விட்டு சமையலறையில் சென்று தேங்காய் சட்டினிக்கு தேங்காய் துருவ சென்று விட்டேன்.. அவர் அதை ஆர்வமில்லாமல் வாங்கி ஒரு புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை புரட்டி பார்த்து படித்து கொண்டு இருக்கும் போதே தோசை ஊற்றி இரண்டு தட்டுகளிலும் தேங்காய் சட்டினியோடு எடுத்து வந்து அவரிடம் ஒரு தட்டை நீட்டி சாப்பிட சொன்னேன்.உங்களுக்கு எதற்கு சார் சிரமம் என்றார் சங்கோஜமாக.

அட இதில் என்ன சிரமம்.. அடுத்தவர் பசியை தீர்ப்பது எவ்வாறு சிரமம் ஆகும்.. நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றேன் சிரித்தபடி.


நீங்கள் பெரிய தத்துவாதியா என்று நான் கொடுத்த தோசையை வாயில் ருசித்தபடியே   கேட்டார்..


நான் தத்துவவாதி எல்லாம் இல்லை.. வாழ்வின் ரகசியங்களில் அமிழ்ந்து ஆனந்தத்தை அனுபவிப்பவர் என்றேன் புன்னகைத்து கொண்டே..

ரொம்ப நன்றாக பேசுகிறீர்கள் சார்.. உங்களோடு இருந்தால் ஏதோ மனம் இலேசானதாக உள்ளது என்று சாப்பிட்டு முடித்த கைய தட்டில் கழுவி விட்டு அப்படியே மீண்டும் புத்தகத்தில் சில பக்கங்களை படிக்க தொடங்கினார்.. நான் அவர் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்து விட்டு கொஞ்சம் மிளகு பாலை அவருக்கு கொண்டு வந்து கொடுத்தேன்.. அவர் ஆச்சரியம் கலையாமல் அதை வாங்கி ருசித்து விட்டு சொன்னார்.. நான் உங்களிடம் ஆதங்கத்தை சொல்லி அழ தான் வந்தேன்.ஆனால் நீங்களோ சாப்பிட உபசரித்து எனக்கு ஆறுதல் சொல்லி நெகிழ்வடைய வைத்து விட்டீர்கள்.. இப்போது நீங்கள் சொல்வது போல பெண்ணின் திருமண பேச்சை எடுக்கவில்லை சார்.. ரொம்ப நன்றி.. இந்த விசயத்தை எனது சொந்தக்காரர்களிடம் சொல்லி இருந்தால் பெண் பிள்ளைக்கு நீ ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாய்.. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லி அவள் பேச்சை கேட்டு நல்ல சம்பந்தத்தை கெடுத்து கொள்ளாதே என்று சொல்லி என் பெண்ணின் உணர்வுகளை தீயிட்டு பொசுக்கி இருப்பார்கள்.. நல்ல வேலையாக இறைவன் உங்களிடம் அனுப்பி வைத்தார்.. மிகவும் நன்றி சார்.. நான் உங்களை மீண்டும் எப்போது சந்திக்கலாம் சார்.. என்றார் மிகவும் ஆவலாக..

அதற்கு நானோ உனக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் என்றேன் புன்முறுவலோடு..

மிகவும் சந்தோஷமாக உள்ளது சார்.. நான் உங்களை எப்போதும் மறக்க மாட்டேன்.சார்...இந்த புத்தகம் நான் எடுத்து செல்ல ஆசை தான் சார்.. ஆனால் இதை படித்து புரிந்து கொள்ள எனக்கு புத்தி இல்லை.. இதன் கருத்துக்களை உங்களிடம் அவ்வபோது கேட்டு தெரிந்து கொள்கிறேன் சார் என்று சொல்லி விடைபெற்று செல்ல எத்தனித்த வரை வாசல் வரை வந்து கையசைத்து வழி  அனுப்பி வைத்து விட்டு கதவை தாழிட்டு வந்து படுத்தேன் அலைபேசியில் ஓர் வீணை இசையை உலாவ விட்டேன் எனது செவிகளுக்காகவும் அந்த அறையில் நிரம்பி வழிந்த காற்றுக்கு உணவிடுதல் பொருட்டும்...

#மீண்டும் ஓர் பயணத்தில்

 சந்திக்கலாம் ..🏜️🏖️⛱️🙋

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (5).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக