நேற்று கடற்கரை பக்கம் கொஞ்சம் காலாற நடந்து கொண்டு இருந்தேன்..இது ஓர் கதை.. அந்த காட்சியை மனக்கண் முன் விரிய விடுங்கள்.. இப்போது நீங்கள் கூட கடற்கரை மணலில் சிறு குழந்தையாக மாறி விளையாடுவீர்கள்..சரியா..😊
அப்படியே அலைகளை ரசித்தபடி மணலில் கால் புதைய புதைய நடந்து கொண்டே இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என்றே எனக்கு தோன்றும்.. அந்த கடற்கரை காற்று என்னை கொஞ்சம் வம்புக்கு இழுத்து என்னை தழுவி ஒருசில நிமிடங்களில் விடுவித்து செல்லும் அந்த விந்தை எப்போதும் ரசிக்கக் கூடியதே..இதை எல்லாம் அணுஅணுவாய் ரசிக்க ஓர் மனம் வேண்டும்.. நல்ல வேலையாக இறைவன் அந்த நல்ல மனதை எனக்கு அளித்திருக்கிறார்.. நன்றி இறைவா உனக்கு 🙏
கொஞ்ச தூரம் அந்த ஆனந்தத்தை அனுபவித்தபடியே நடந்து கொண்டு சென்ற போது கடல் அலையின் ஓசையையும் மீறி ஓர் விசும்பல் ஒலி எனது காது அருகே கேட்டது போல் இருந்தது.கொஞ்சம்தூரம் சென்று சற்று திரும்பி பார்த்தேன்.. அங்கே எனது தெருவிலேயே கடைசி வீட்டில் குடி இருக்கும் ஓர் இளம் பெண்ணின் விசும்பல் ஒலி அது.எனக்கு ஆச்சரியம்.இப்படி பொது இடத்தில் தனியே அழும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கொஞ்சம் குழம்பி போய் அவளிடமே கேட்டு தெரிந்து கொள்ள விரைந்தேன்..
மெல்ல அவள் பெயரை சொல்லி அழைத்தேன்.அட அவள் பெயர் உங்களுக்கு சொல்ல மறந்து விட்டேன்..அல்லவா.அவள் பெயர் மலர்.. அவள் பெற்றோர் கண்டிப்பாக தமிழ் ஆர்வாளராக இருக்க வேண்டும்..சரி இப்போது அதுவா முக்கியம்.. அவளை நோக்கி மலர் ஏன் இப்படி அழுகிறாய் என்றேன்.. அவள் அவசரம் அவசரமாக தனது துப்பட்டாவால் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. இவ்வளவு நேரம் இதே பொதுவெளியில் தன்னை மறந்து அழுது இருக்கிறோம் என்று இப்போது தான் உணர்ந்தாள் போலும்.ஒன்றும் இல்லை மதி..என்றாள்..
நான் அவளை விடாமல் கேட்டேன்.. ஒன்றும் இல்லை என்றால் நீ ஏன் இங்கே வந்து தன் நிலை மறந்து அழ வேண்டும்.. உனக்கு என்ன பிரச்சினை என்று சொல்.உனக்கு என்னிடம் சொல்ல விருப்பம் இல்லை என்றால் கடந்து சென்று விடுவேன் என்று மட்டும் நினைக்காதே.. நான் அப்படி ஒன்றும் செல்ல மாட்டேன்.நீ சொல்லும் வரை என்றேன்..
அவள் சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்..
நான் ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் மதி.. எங்கள் காதல் கடந்த ஏழு வருடங்களாக பயணிக்கிறது.தற்போது எங்கள் காதலில் பிரச்சினை நான் அதே நேசத்தை காட்டிய வேலையினால் தான் என்றாள்..
என்ன மலர் சொல்கிறாய் புரியவில்லை என்றேன்..
நான் நேசித்த அந்த வேலையை விட்டுவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எனது காதலன் சொல்கிறான் என்றாள்..
எனக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. ரொம்ப சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் என்னை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு.. ஒருசிலர் ஒரு கோபபார்வை பார்த்து கடந்து சென்றார்கள்.. அதில் கணல் தெரித்தது.. எனக்கு வேடிக்கை பார்த்தவர்கள் மேல் கூட கோபம் வரவில்லை.கோபத்தோடு கடந்தவர்கள் மேல் தான் கோபம் வந்தது.. அவர்களுக்கு என்னை பார்த்து பொறாமையாக கூட இருக்கலாம்.. ஏனெனில் இந்த காலத்தில் வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு பெரும்பாலும் வாழ்வியல் சூழல் இல்லை.. இந்த சூழலிலும் இவனால் மட்டும் எவ்வாறு இப்படி சிரிக்க முடிகிறது என்று கோப பார்வை பார்த்து இருக்கலாம்..சரி நாம் மலரிடம் செல்வோம்..
என்ன மலர் வேடிக்கை இது..நீ இதே வேலையை பார்த்து கொண்டு இருந்தபோது தானே உன்னை அவன் காதலித்தான்.இப்போது என்னவாம் அவனுக்கு.என்று கேட்டேன் சிரித்தபடியே..
அதற்கு காரணம் நான் ஐடி துறையில் இருப்பது தான் மதி.. என்றாள்.
அதனால் என்ன இப்போது ?
இந்த வேலையில் நிறைய ஆண் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.. அனைவரும் என்னோடு நாகரிகத்தோடு இருப்பவர்கள்.. ரொம்ப நல்ல மனிதர்கள்.. ஆனால் இப்போது இவர்களை பார்த்து சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு..என்றாள்..
இத்தனை நாள் அதே நட்போடு தானே பயணித்தாய்.அந்த நட்போடு இருக்கும் போது தானே உங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.இப்போது திருமணம் என்றவுடன் அந்த நட்பு எவ்வாறு இடையூறாக இருக்கும் ..ஒன்றுமே புரியவில்லையே என்றேன் கன்னத்தில் கை வைத்தபடி..
அதுதான் எனக்கும் புரியவில்லை மதி.. ஏன் இயல்பான விசயத்தை இவ்வளவு சிக்கலாக்கி பார்க்க வேண்டும் என்றாள்
இது தான் சுயநலம்..உன் மேல் ஓர் அதிகார கயிற்றை வீசி கட்டி வைப்பது.இது தான் திருமண பந்தத்தின் முதல் படி என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கும் தவறை உனது காதலனும் செய்கிறான் என்றேன்.. மேலும் பெண் என்றால் ஏதோ ஓர் அடிமை என்று அவர்களுக்கு தெரியாமலேயே மனதில் பதிந்து விட்டது .. அவர்கள் வளர்ந்த சூழல் கூட ஓர் காரணமாக இருக்கலாம் என்றேன்.
இப்போது இதை எவ்வாறு சரி செய்வது மதி..என்று என்னிடமே யோசனை கேட்டாள்..
நீ அவனை விட்டு விலகி இரு.. எல்லாவகையிலும்.. சமூக வலைத்தளம் மற்றும் அலைபேசி குறுந்தகவல் என்று எல்லாவிதத்திலும்.. என்றேன்..
எவ்வளவு காலம் மதி அப்படி இருப்பது.. அப்படி இருந்தால் பிரச்சினை மேலும் மேலும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது.. மேலும் அவன் என்னை மறந்து விட கூட வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னாள்.
அதை கேட்ட எனக்கு அவள் மீது கோபம் வந்தது.. பிறகு சமாளித்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன்..
இதற்கு எல்லாம் சண்டை போட்டால் உங்கள் காதல் காதலே அல்ல.என்றேன்..
என்னது ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?என்று பதட்டத்தோடு கேட்டாள்..
அவள் பதட்டத்தை பார்த்து எனக்கு பாவமாக இருந்தது.. இருந்தாலும் இப்படி ஓர் அப்பாவி பெண்ணை அவன் ஏன் இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கிறான் என்று அவன் மேல் இன்னும் கோபம் அதிகமானது..
மேலும் இந்த காதல் படுத்தும் பாட்டை நினைத்தால் சிரிப்பும் கூட வந்தது..
நான் ரொம்ப நிதானமாக கடலை ரசித்தபடியே சொன்னேன்.. எப்போதும் இந்த கருவி சாதனங்கள் துணையோடு தான் உங்கள் காதல் பயணிக்கிறது என்றால் அது காதலே இல்லை என்று மீண்டும் வலியுறுத்தி கூறினேன்..
நீங்கள் சொல்வது சரிதான்..
உண்மையான காதல் கருவிகளினாலே எப்போதும் வளர்வது இல்லை.. கருவிகள் இல்லாமல் கூட அமைதியாக எத்தனையோ காதல் கதைகள் அந்த காலங்களில் இருந்து தானே இருக்கிறது மதி..என்றாள்..
சரி மதி.. இதற்கு நான் சம்மதித்தாலும் அவன் சம்மதிக்க வேண்டுமே.. என்றாள்.
நீ எடுத்து சொல்லி புரிய வை.இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் உன்னை நிச்சயமாக உளவு பார்க்க கூடும்.அதை ஓர் டிடெக்டிவ் வைத்து அவனை கண்காணி.. அவன் உன்னை உளவு பார்ப்பது தெரிந்தால் நீ விலகி விடு உன் காதலை தியாகம் செய்து.. என்றேன்..சாவகாசமாக.
என்னது விலகுவதா என்றாள் பரபரப்போடு..விலகுவது எல்லாம் என்னால் முடியாது மதி.. நான் அவனை மிகவும் ஆழமாக நேசித்து தொலைத்து விட்டேன்.. இப்போது விலகி விடு என்று நீங்கள் மிகவும் சாதாரணமாக சொல்கிறீர்கள்.. எனக்கு அந்த வார்த்தையை கேட்டதும் அமிலத்தை உருக்கி என் காதில் ஊற்றியதை போல இருந்தது என்றாள்..
இவளை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று புரிந்து கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.ஆனால் அதை கொஞ்சம் அழுத்தமாக சொல்வது தான் சரி என்று எனக்கு பட்டது..
ஆமாம் விலகுவது தான்.. என்றேன் இன்னும் அழுத்தமாக.
என்னால் இயலாது.நான் அவனை நேசித்தது எவ்வளவு ஆழமாக என்பது உங்களுக்கு புரியாது என்றாள்..
நான் அவளிடம் சொன்னேன்..நீ மட்டும் நேசிப்பது என்பது சரியான வாழ்க்கைக்கு ஒத்து வராது..திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் ஒத்து வரும்.. ஆனால் திருமண பந்தத்தில் நீ அவனோடு இணைவது சரியாக இருக்காது.. என்றேன்.
அப்படி என்றால் நான் அவனை தவிர எவரையும் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை மதி.. அவன் என்னை உளவு பார்த்தால் நான் அவனை திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ளாமல் நேசிப்பேன்.. என் காதல் எப்போதும் அவனோடு மட்டுமே என்றாள் தீர்க்கமாக..
அது உன் விருப்பம்.. காதல் என்பது ஒருவரை நாம் தீர்க்கமாக நேசிக்கும் போது சம்பந்தப்பட்ட நபரோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்ற ஏக்கம் எல்லாம் இருக்காது.. அந்த பந்தம் எப்போதும் புனிதமானது.. மானசீக பூஜை செய்வது போல.. என்றேன்.. ஆனால் உன் காதலன் ஓர் சந்தேக பேர்வழியாக இருக்கும் போது அந்த காதல் தோற்று விடுகிறது.திருமண பந்தத்தில் இணையும் போது.. அப்போது திருமணம் ஆன புதிதில் எதுவும் தோன்றாமல் கூட இருக்கலாம்.நாள் நாளாக உனது காதல் அங்கே வலுவிழந்து விடுகிறது.. அதேசமயத்தில் நீ திருமண பந்தத்தில் இணையாத போது அந்த காதல் ஓர் வசந்தம் போல சுவை கூட்டுகிறது.. என்றேன்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மதி.. எனக்கு தேவையான தெளிவை தந்து விட்டீர்கள்.. இப்போது மனம் இலேசாகிவிட்டது..தங்களை போன்ற நட்பும் கூட புனிதமானது தான் என்று கைக்குலுக்கி விடைபெற்றாள்.
நான் அப்படியே கடற்கரை மணலில் அமர்ந்து அலையிடம் கேட்டேன்.. எவ்வளவு விந்தையான காதல் மனிதர்கள் என்று.. அதற்கு அலை ஆமாம்.. விந்தையான மனிதர்கள் தான் உன்னை போல இங்கே எவரேனும் வருகிறார்களா என்று தினம் தினம் தேடி அலுத்து விட்டேன் மதி..உன்னை ஏன் எவரும் நேசிக்கவில்லை மதி என்றது எனது கால்களை இரகசியமாக வருடியபடி..
அதற்கு நான் இதோ நீ தான் என்னை நேசித்துக் கொண்டே இருக்கிறாயே..எனது ஒவ்வொரு வருகையிலும் எனது கால்களை வருடியபடி என்றேன்..
அலையோ புன்னகைத்து உள்வாங்கியது.ஆமாம் உன்னை போல தந்திரகாரனை நேசித்து ஏமாந்து விடவில்லை என்று செல்லமாக கோபித்துக் கொண்டு..
எங்கள் ஊடலோடு விடைபெற்றேன் கடற்கரையில் இருந்து..இரவு மெல்ல மெல்ல மனிதர்கள் சுகங்களை சோகங்களை தன்னுள் புதைத்து கொள்ள துடித்தது..மனிதர்களோ பிடிவாதமாக எதையும் இரவிடம் எதையும் இழக்காமல் பத்திரப்படுத்தி கொண்டார்கள் மிகவும் இறுக்கமாக..
#மீண்டும் இன்னொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊⛱️🌺🌷⛱️
#இளையவேணிகிருஷ்ணா.
#பயணத்தில் ஒரு சந்திப்பு ( 6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக