பக்கங்கள்

வியாழன், 14 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (4).

 


இதோ இரவின் ஆரம்பத்தில் இருக்கிறேன்.. இன்று நிறைய நாவல்கள் படித்தேன்.. அந்த நாவல்கள் எல்லாம் பெரும்பாலும் குடும்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.. குடும்ப தலைவியின் வேலை பொறுப்பு இப்படி தான் அந்த கதையை எடுத்து சென்று இருந்தார்கள்..இதை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் போதே கதவை யாரோ தட்டுவது கேட்டது.. திறந்த போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.அங்கே எனது  சித்தப்பா மகள் நின்று இருந்தாள்..

அட என்ன சொல்லாமல் கூட வந்து இருக்கிறாய் மது என்றேன் ஆச்சரியமாக.

ஏன் எனது சகோதரன் வீட்டுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் வர எனக்கு உரிமை இல்லையா என்றாள் சிரித்துக்கொண்டே..

அப்படி எல்லாம் இல்லை மது.நீ எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்..என்று சொல்லி விட்டு அவளை உள்ளே அழைத்து வந்தேன்..

அவள் அப்படியே நோட்டம் விட்டாள்.ஹாலை..அட என்ன ஓர் கலை ரசனையோடு வைத்து இருக்கிறாய் மதி. மிகவும் அழகு.. ரம்மியமான ஓவியம் மனதிற்கு இதத்தை தருகிறது என்று சொல்லி விட்டு தனது பையை எங்கே வைப்பது என்று யோசித்தாள்.. இங்கே ஓர் அறை உள்ளது மது.இதை நீ போகும் வரை பயன் படுத்தி கொள்ளலாம் என்று ஓர் அறையை காண்பித்தேன்.அந்த அறையை பார்த்ததும் அவளுக்கு இன்னும் பிரமிப்பு அதிகமானது.. ரொம்ப நன்றாக வைத்து உள்ளாய் மதி.. மிகவும் சந்தோஷமாக உள்ளது.. என்றாள் உற்சாகமாக.

நீ அப்படியே குளித்து முடித்து வா.. அப்போது தான் பிரயாண கலைப்பு போகும்.. நான் அதற்குள் இரவு உணவை தயார் செய்கிறேன் என்றேன்..

நான் பேசிய வார்த்தைகள் அவளுக்கு இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.என்ன நீ சமைப்பாயா என்றாள்..

ஆம்.. சமையல் என்ன அவ்வளவு கஷ்டமா என்ன என்று கேட்டேன்.

உன்னை சந்தித்த இந்த சில நிமிடங்களில் இவ்வளவு சுவாரஸ்யம் தருகிறாய்.இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டாள்..

நான் அவள் வருவதற்குள் சப்பாத்தியும் குருமாவும் தயார் செய்ய ஆயத்தம் ஆனேன்..

அதற்குள் அவள் வந்து நான் உதவுகிறேன் என்று சொல்லி சப்பாத்தியை தேய்த்து கொடுத்தாள்.. நான் அதை கல்லில் போட்டு எடுத்தேன்..ஒரு மணிநேரத்தில் எங்கள் இரவு உணவு தயாரானது.

இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டோம்.. உண்மையில் குருமா மிகவும் அருமை மதி..என் அம்மா இவ்வளவு நன்றாக குருமா வைக்க மாட்டார்கள் என்றாள்..

பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் மாடிக்கு போனோம்..

அங்கே இருவரும் அமர்ந்து கொண்டோம்..மதி உனது வீடு மிகவும் நன்றாக உள்ளது என்றாள்..

மிகவும் மகிழ்ச்சி மது.. ஆனால் ஓர் திருத்தம்..நமது வீடு என்றேன் சிரித்தபடியே..

ஆம் மதி..நமது வீடு என்றாள் சிரித்துக்கொண்டே..

அதுசரி என்ன இவ்வளவு தூரம் என்றேன்..

ஏதோ உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.. அதனால் தான் வந்தேன்.. வந்தது தவறு ஒன்றும் இல்லையே என்றாள்..

அதெல்லாம் இல்லை மது.நீ எப்போது வேண்டும் என்றாலும் என்னை பார்க்க வரலாம் என்று சொன்னேன்..

அப்போது ஏதோவொரு ஓர் பறவை 🐦 வானில் கத்திக் கொண்டே பறந்தது..வழி தவறி இருக்கக்கூடும்.. எந்த ஜீவராசிக்கும் இரவு அடைக்கலமாக ஏதோவொரு இருப்பிடம் தேவைப்படுகிறது.. பகலில் நாடோடிகளாக சுற்றி திரிந்தாலும் இரவில் தங்க இருப்பிடம் சிறிதாகவேனும் வேண்டும் என்று யோசித்தபடியே அந்த 🐦 விரைவில் கூட்டை அடைய வேண்டும் என்று யோசித்தேன்..

எனது யோசனை பார்த்து என்ன அந்த பறவையையே பார்த்து கொண்டு இருக்கிறாய் மதி என்றாள்..

ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டு உனது வேலை எல்லாம் எவ்வாறு போகிறது..மது.. எந்தவித பிரச்சினையும் இல்லையே என்றேன்..

ஐடி என்றால் பிரச்சினைக்கா பஞ்சம்..ஏதோ ஓடுகிறது.. நான் வேலையை விட்டு விடலாம் என்று யோசிக்கிறேன் என்றாள்.

உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தால் விட்டு விட வேண்டியது தானே.. என்றேன்.

எனக்கு வேலையை விட்டு விட்டால் வாழ்க்கையில் ஏதோவொரு வெறுமையை உணர்வேன்.. அதுதான் பார்க்கிறேன் என்றாள்.

உனக்கு பிடித்த துறையில் வேலை தேடு மது.. அப்போது தான் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்.. என்றேன்..

சரி மதி உனக்கு வேலை எவ்வாறு போகிறது.. என்றாள்.

எனது வேலை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. நாடோடி வேலை தானே நமது வேலை.

பலதரப்பட்ட மனிதர்கள் அவர்கள் வாழ்வியல் என்று சுவாரஸ்யம் குறையாமல் போகும் என்றேன்..

நீ எப்போதும் வித்தியாசமான மனிதன் தானே.. உனக்கு தகுந்த வேலை தான் என்று சிரித்தாள்..

உனக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பதாக சொன்னார்கள்.. என்னவாயிற்று மது..

மதி எனக்கு இந்த ஐடி துறை மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.. எந்த வேலையாக இருந்தாலும் வருமானம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை.. வாழ்க்கையை இருவரும் ரசித்து வாழ வேண்டும் அவ்வளவு தான்.. எனக்கு ஆசை என்றாள்..

நீ ரொம்ப புத்திசாலி மது என்றேன்.

ஆம் மதி.. சும்மா பணத்தின் பின்னே ஓடிக் கொண்டே இருந்தால் நான் எனது வாழ்வை எப்போது ரசித்து வாழ்வது.. வாழ்வியல் தேவைகளை குறைத்து வாழ்ந்து கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கையை சுவாரஸ்யம் இல்லாமல் வாழ்வது கடினம் எனக்கு என்றாள்..

அட மது என்னை போலவே யோசிக்கிறாளே என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன்.பிறகு அவள் எனது தங்கை அல்லவா..என்னை போல தான் யோசிப்பாள் என்று பெருமைப்பட்டுக் கொண்டேன்..

உனது கனவை எல்லாம் வீட்டில் மதிக்க மாட்டார்களே என்றேன்.

ஆம் மதி..நீ சொல்வது எல்லாம் யதார்த்ததிற்கு ஒத்து வராது.. நாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்கள்.. நான் தற்போது அவர்களிடம் சண்டை இட்டு கொண்டு தான் இங்கே வந்து இருக்கிறேன் என்றாள்..

எனக்கு சிரிப்பு வந்து விட்டது.நீ என்ன கோழையா ஓடி ஒளிவதற்கு என்றேன்.

நான் எங்கே ஓடி ஒளிந்தேன்.எனது சகோதரன் வீட்டுக்கு தானே வந்து இருக்கிறேன் என்றாள்..

சொல்லி கொண்டு இருக்கும் போதே அலைபேசி அழைத்தது..சிற்றப்பா தான்..எடுத்து பேசினேன்..

மதி எப்படி இருக்கிறாய் நலமா என்றார்.நான் நலம் நீங்கள் நலமா என்றேன்..

நான் இங்கே நலம்.அங்கே மது வந்து இருக்கிறாளா என்றார் பரபரப்பாக.

ஆமாம் வந்து இருக்கிறாள்.ஏதேனும் பிரச்சினையா என்றேன் தெரியாதது போல்..

ஒன்றும் பிரச்சினை இல்லை.இங்கே நான் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு கோபமாக வந்து விட்டாள் அங்கே என்றார்..

சித்தப்பா நீங்கள் அவளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அவள் தான் ஐடி துறையே வேண்டாம் என்கிறாள்.நீங்கள் ஏன் பிடிவாதமாக அதையே திணிக்கிறீர்கள்.. வாழ்க்கை நடத்த போவது அவள்.அவள் வாழ்க்கை பற்றி கனவு காண அவளுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. அதற்கு நீங்கள் தடை போட முடியாது என்றேன்.

அதற்கு அவர் அதெல்லாம் இல்லை மதி.. அவளுக்கு வாழ்க்கை பற்றி என்ன தெரியும்..சின்ன குழந்தை அவள் என்றார்..

நீங்கள் சொல்வது போல அவள் குழந்தை இல்லை... அவள் வாழ்க்கை பற்றிய நல்ல புரிதலோடு தான் இருக்கிறாள்.நீங்கள் தான் அவளை புரிந்து கொள்ளாமல் அவள் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள் என்றேன்.

பணம் நிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.. அவள் சமுதாயத்தில் ஓர் அந்தஸ்தோடு வாழ பணம் வேண்டாமா என்றார் மிகவும் கோபமாக.

நான் சொன்னேன் சித்தப்பா..இல்லற வாழ்க்கை என்பது வெறும் பொருளாதாரத்தை வைத்து தான் என்றால் அதுவொரு போலி வாழ்க்கை.. இவள் தேவைகளை குறைத்து கொண்டு வாழ்வை ரசித்து வாழ்வேன் என்கிறாள்.நீங்களோ பணம் நிறைய இருந்தால் தான் சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ முடியும் என்கிறீர்கள்.

இல்லறம் என்பது இருவருக்கும் ஓர் ஆழ்ந்த புரிதல் மற்றும் வாழ்வை நடத்தி செல்ல கொஞ்சம் பணம் போதும்.நீங்கள் நினைப்பது போல எல்லாம் இல்லை.. அப்படி நீங்கள் நினைத்தால் மது வாழ்வை ஒப்பந்த வாழ்க்கை வாழ தயார் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.இப்படி ஓர் புரிதல் உள்ள மகள் உங்களுக்கு ஓர் வரம்..உங்களை விட திருமணம் செய்து கொள்ள போகிற மாப்பிள்ளைக்கு தான் அதிருஷ்டம்.ஏனெனில் வாழ்க்கையில் பொருளாதாரத்தை பெரிதாக நினைக்காமல் வாழ்க்கை பயணத்தை ஓர் ரசனையோடு வாழ நினைக்கும் வாழ்க்கை துணை கிடைப்பது அரிதிலும் அரிது என்றேன்.

இப்படி ஓர் நீண்ட உரையாடலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.. நான் அவளை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்து விடுவேன் என்று நம்பினார் போல.. எதிர் திசையில் அமைதி.. நான் மீண்டும் அவரை அழைத்தேன்.. சித்தப்பா..என்று..

நினைவு வந்தவர் போல சொல் மதி என்றார் சுவாரஸ்யம் இல்லாமல்..

மேலும் அவர் எனது பேச்சை ஆழ்ந்து கவனித்ததன் விளைவு  நீ சொல்வதும் சரிதான் மதி.. சரி..அவளை நன்றாக பார்த்து கொள்.. ஓரிரு நாட்களில் அனுப்பி வை.என்றார்..

அவர் பயந்து இருக்கக் கூடும்..

இவன் இஷ்டத்திற்கு அவளை போட்டு குழப்பி விட்டால் என்ன செய்வது என்று.. அதனால் ஓரிரு நாட்களில் அவளை அனுப்பி வைத்து விடு என்கிறார் என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டேன்.. அவளும் என்னை போல திருமணம் செய்து கொள்ளாமல் போய் விட்டால் என்ன செய்வது என்று.. அதனால் ஒத்து கொண்டார்..

அலைபேசியை வைத்தவுடன் எனது தந்தை என்ன சொன்னார் மதி.என்மேல் குற்றம் சுமத்தினாரா என்றாள் ஆவலாக.

அப்படி இல்லை மது.. உனக்கு ரசனை உள்ள மாப்பிள்ளை தேடுவதாக சொன்னார் என்றேன்..

நிஜமாகவா என்றாள் ..நம்ப முடியாமல்..

ஆம் மது.. அவருக்கு சில விளக்கங்கள் கொடுத்தேன் அல்லவா.‌அதை அவர் புரிந்து கொண்டார்.அதனால் இந்த முடிவு என்றேன்.

வேகமாக வந்து என்னை கட்டி அணைத்து கொண்டாள்.. நானும் எனது தங்கை வாழ்க்கை ரசனையோடு இருக்க போவதை நினைத்து நிம்மதி அடைந்தேன்..

சரி மது உறங்க போகலாமா என்றேன்.. அதற்கு அவள் ஓ.. நிச்சயமாக..மதி.. நிம்மதியான இரவாக்கிய எனது சகோதரனுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் என்றாள்..

நன்றி எல்லாம் சொல்லி என்னை தள்ளி வைக்காதே என்றேன் கோபமாக..

சரி சரி.. கோபம் வேண்டாம் எனது சகோதரனுக்கு என்று சொல்லி வா மதி கீழே போகலாம் என்று எனது கையை பிடித்து அழைத்து சென்றாள்.நானும் அந்த பாச பிணைப்பில் இருந்து விடுபட நினைக்கவில்லை

..

மீண்டும் பிரிதொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊⛱️🌺.

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக