பக்கங்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

கிருஷ்ணா இணையதள வானொலி


 வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்துக் கொள்ளுங்கள்... 🎻 இது தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நேரம் அல்லவா 🙏✨🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 30 ஜூலை, 2023

ஆத்ம விசாரம் ✨

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

வாழ்க்கை சக்கரத்தில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் இது என்னடா வாழ்க்கை என்று நிச்சயமாக தோன்றும்; ஆனால் சிறிது நேரத்திலேயே நமக்கு பிடித்த விசயம் நடந்து விட்டால் நாம் அந்த விரக்தியில் இருந்து விடுபட்டு விடுவோம்; மீண்டும் விரக்தி வரும்; மீண்டும் ஏதோவொன்று நம்மை மாற்றும்;இது ஒரு சுழற்சி; இதில் இருந்து விடுபட முயலுங்கள்;அப்போது தான் ஆத்மஞானம் கிடைக்கும். இல்லை என்றால் கருவறை எனும் சிறை நம்மை பீடிக்கும்.

#ஆத்மஞானம்

#இளையவேணிகிருஷ்ணா.

காலை சிந்தனை 🐾✨🎻

 


வாழ்வில் நிற்க நேரம் இல்லாமல் ஏதேதோ காரிய பயணத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் போதும் உங்கள் மனதை ஆழ்கடலின் அமைதியை ஒத்து வைத்துக் கொள்ள முடிந்தால் நிச்சயமாக நீங்கள் வாழ்க்கையை பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பயணிக்க முடியும்...

#காலைசிந்தனை.

31/07/2023.

நேரம் காலை 9:20.

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வின் சுவை (3)

 

நீ அமைதியாக

வாசித்துக் கொண்டே இரு

நான் பேரமைதியோடு

நீ வாசிப்பதை கண்மூடி 

சுவாசிக்கிறேன் ...

இங்கே பெரும் இரைச்சலுக்கிடையே 

பயணித்து பயணித்து

அலுத்து விட்டது...

பேசு பேசு என்று

தொல்லை செய்யாத 

நம் இருவருக்கும் உள்ள 

நெருக்கத்தில் 

இந்த பிரபஞ்சத்தில்

கோடானுகோடி மக்கள் தேடும் 

ஆழ்ந்த காதலை

நாம் எளிதாக உணர்வோம்...

பேசுவதில் இல்லை காதல்..

கிருஷ்ணனின் ராச கிரீடையை 

இங்கே எவர் 

புரிந்துக் கொண்டார்கள்?

நீயும் நானும்

இங்கே அந்த ராதையும் கண்ணனும் 

என்பதை

இங்கே யாரும் அறிய போவதில்லை...

பேசாத மௌனத்தின்

நம் பெரும் காதலை

அங்கே பேசி பேசி அனுபவிக்கட்டும்...

இதென்ன புது வித காதல் என்று...

#வாழ்வின்சுவை(3).

30/07/2023.

இரவு 8:18.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 29 ஜூலை, 2023

வெற்று தேநீர் கோப்பை


எனது வாழ்வின் பயணத்தை

எப்போதும் 

வெற்று கோப்பையோடே தான்

தினமும் தொடங்குகிறேன்...

இடைப்பட்ட காலத்தில்

தேநீர் நிரப்பி நிரப்பி 

ஆத்மார்த்தமாக

பருகி விட்டு உறங்க செல்லும் போது

வெற்று கோப்பையை விட்டு விட்டு

நிம்மதியாக உறங்குகிறேன்...

இந்த கோப்பை எப்போதும்

என்னை விட்டு நீங்காமல்

காதலோடு பயணிக்கிறது...

நானும் அந்த தேநீர் கோப்பையை

காதலிப்பதை நிறுத்தி விடாது

பயணிக்கிறேன்..✨

காலை:10:16

 30/07/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு சிந்தனை ✨


கழிவுகள் நிறைந்த சாலையையும்

நிச்சலனமாக கடக்க

தெரிந்துக் கொள்ளும் 

அதீத மனநிலையில்

வாழ்வியல் பற்றிய அமைதியான

புரிதல் தொடங்கி விடும்!

30/07/2023.

காலை:8:37

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 28 ஜூலை, 2023

நான் இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன்..


 நான் இன்னும் 

வாழ்ந்துக் கொண்டு தான்

இருக்கிறேன்!

வெறும் சுவாசம் மட்டும் நான் 

வாழ்வதாக

அறிவித்துக் கொண்டே இருக்கிறது!

பெரும் பிரயத்தனத்திற்கு பிறகு

எந்தவித உணர்வுகளையும் 

வெளிக் காட்ட

தெரியாமல் வாழ கற்றுக் கொண்டது

எனக்கு பெரும் உதவியாக 

போய் விட்டது!

நம்புங்கள் நான் இன்னும்

 வாழ்ந்துக் கொண்டு தான் 

இருக்கிறேன்..

அத்தனை அவலங்களையும் 

என் மனதிற்கு அறிவிக்க தோன்றாமல்...

நான் இன்னும் 

வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

10:20இரவு..

28/07/2023.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளுங்கள் 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

எஞ்சிய தேநீர் துளிகளில்

 


நீ அருந்தி முடித்த 

அந்த தேநீர் கோப்பையில்

ஒரு சில எறும்புகள் அதில் உள்ள

இனிப்பு சுவையை தேடுவதாக

இந்த உலகத்தில் உள்ள 

மக்கள் நம்பலாம் !

நான் ஏன் நம்ப வேண்டும்?

அதில் எஞ்சி இருப்பது

என் மீது கொண்ட காதல் துளிகள் 

என்று

எனக்கு தெரியாதா என்ன?

#இளையவேணிகிருஷ்ணா.

காதல் ஒரு தருணத்தின் போதை ✨

 


அந்த அந்தி மாலைப் பொழுதில்

உனக்காக நானும்

எனக்காக நீயும்

காத்திருந்த தருணங்களை

இன்று நினைத்தாலும் 

சிரிப்பு தான் வருகிறது...

எனக்கு 

இங்கே நான்

ஆச்சரியம் அடைவது எல்லாம் 

எப்படி அந்த வித

பைத்தியக்காரத்தனத்தை 

நான் அனுமதித்தேன்

என் வாழ்வின் பயணத்தில் 

என்பதை தவிர

வேறெதுவும் தோன்றவில்லை 

அந்த இடத்தை நான் 

கடந்து செல்லும் போது...

காதல் ஒரு தருணத்தின் போதை 

என்று 

நான் முணுமுணுத்து 

புன்னகைத்து கடந்து செல்லும் போது

அங்கே சில பல ஜோடிகள்

அந்த போதையில் ஏதேதோ 

உளறிக் கொண்டு

ஒருவரையொருவர் 

கட்டி தழுவிக் கொண்டு 

பயணிப்பதை சிரமப்பட்டு

பார்வையை திருப்பிக் கடந்து 

செல்கிறேன்...

வேறு என்ன செய்ய?

#காதலெனும்போதை.

#இளையவேணிகிருஷ்ணா.

மாலை நேரம் 6:27.

28/07/2023.

வாழ்வின் சுவை (2)

 

எந்த உருகுதலும்

என்னிடம் இல்லை..

நான் எனக்கு பிடித்த 

நினைவுகளை கூட

உடனே குப்பைக்குள் சென்று

சேர்த்து விடுகிறேன்...

அதோ அங்கே ஒலிக்கும் பாடல் 

கொஞ்சம் என்னை

ஆசுவாசப்படுத்திக் கொள்ள 

காற்றால் என் செவிகளுக்கு

அனுப்பி வைக்கப்படுகிறது..

அதையும் ஒரு புன்முறுவலோடு கேட்டு விட்டு உணர்ச்சியற்று 

அமர்ந்து இருக்கிறேன்...

இங்கே இது தான் 

உனது 

தேவையா என்று

பல விசயங்களை சுட்டிக் காட்டி 

நச்சரிப்பதை கொஞ்சம் 

நிறுத்தி விடுங்கள்..

நான் நானாக இயல்பாக 

இருப்பதற்கு 

உங்கள் அனுமதி தேவையில்லை...

எவரின் உணர்வுகளும்

எனக்கு இடைஞ்சலாக இல்லை...

நான் நானாக பயணிக்க...

என் உணர்வுகளையே 

கொஞ்சம் களவாடி 

சென்று விடுங்கள்...

எல்லாமற்ற ஒரு அதீத நிலையில் 

இந்த பிரபஞ்சத்தில் கொஞ்சம் 

லயித்து கிடக்கும் போது

அதோ ஒரு தட்டாம் பூச்சி

என்னருகே பறந்து

மழை வரும் அறிகுறியை

என் காதில் சொல்லி சென்றது...

இதோ மழையும் வருகிறது..

நானோ நனைகிறேன்...

எந்தவித சலனமும் இல்லாமல்...

இது ஒரு நிலை...

இந்த நிலையை 

நீங்கள் 

எப்போதேனும் அனுபவித்து 

இருக்கிறீர்களா?

இதோ மழையில் 

நனைந்துக் கொண்டே 

உங்கள் அனுபவத்தை கேட்கும் நான்

ஒரு அதீத வாழ்க்கை பயணி ✨.

#வாழ்வின்சுவாரஸ்யம்(2).

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 27 ஜூலை, 2023

கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொள்வது சாத்தியமா?


கொஞ்சம் நிம்மதியாக

மூச்சு விட்டுக் கொள்வது

இங்கே கிடைத்து விடுவதே

மிக பெரிய பாக்கியம்!

ஒரு நிம்மதியான மூச்சு விடும்

நேரத்தில் அடுத்த கணம்

ஏதோவொரு விசயம்

மூச்சடக்கி நம்மை பலவந்தமாக

இழுத்து செல்வதை எவ்வளவு 

முயன்றும்

தடுக்க முடியவில்லை!

காலத்தின் கைகளில் நொறுங்கி

தூளாகிறேன்!

காலமோ இதென்ன சிறு துளி

இதற்கே பயந்து விட்டாய் என்று

போன போக்கில் சொல்லி 

செல்வது மட்டும் இல்லை 

அதன் சிரிப்பில் மேலும் 

நசுக்கி செல்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

27/07/2023.இரவு10:21..

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்துக் கொள்ளுங்கள்... இதில் இன்றும் கவிஞர் கண்ணன் அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் சேர்க்கும் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🦋.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

காதலோடு விடை பெறுகிறது..

 


கொஞ்சும் சாரல் மழையோடு

காபியின் இதமான காதல்

இந்த அந்தி மாலை வேளையில் 

என்னோடு

எனக்கு பிடித்த 

ஓஷோவின் புத்தகத்தில் 

என் மனம் லயித்து கிடக்க

வாழ்வின் பேரின்ப சுவையில் 

திளைக்கும்

இந்த தருணத்தை

அதோ அங்கே சிறகடித்து பறக்கும் 

பறவை ஒன்று

அருகே இருக்கும் மரத்தில்

தனது கூட்டில் புகுந்து

கொஞ்சம் தலை நிமிர்த்தி

என்னை வேடிக்கை பார்க்க

இதோ இந்த அந்தி சந்தி வேளை 

என்னிடம் இருந்து

கொஞ்சம் கொஞ்சமாக

விடை பெற மனமில்லாமல்

காதலோடு

விடை பெறுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

27/07/2023.

#அந்திமாலைநேரம்

#இளையவேணிகிருஷ்ணா.

எனக்கான போதையான தருணம்

 


சமுத்திரத்தின் சோர்வில்லாமல் 

நீந்தும் அலையின் ஒலியில்...

பறவைகள் சிறகடித்து பறக்கும் 

அந்த சிறகின் அசைவின் ஒலியில்...

இந்த பிரபஞ்சத்தின் 

ஆழ்ந்த அமைதியின் 

சூழலில் எல்லாம் 

எனக்கான போதையான தருணத்தை 

உணர்கிறேன்...

இங்கே நான் தேடும் 

வாழ்வின் சுவாரஸ்யமான 

தருணங்கள் எல்லாம்

இங்கே பரந்து விரிந்து

என்னை ஆராவாரித்து 

அணைத்துக் கொள்ள

துடிக்கிறது...

நானோ சம்சார தழுவலில்

மூச்சு திணறி கிடக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கலந்தும் கலக்காமலும் சில மணித்துளிகள்

 


ஒரு ஏகாந்தமும்

இன்னொரு ஏகாந்தமும் 

கலந்தும் கலக்காமலும்

சில மணித்துளிகள்

ஒன்றோடொன்று பயணித்து

எந்தவித சலனமும் இல்லாமல் 

விடைபெற முடிகிறது என்றால்

அது தான் வாழ்வின் மிக சிறந்த

பொக்கிஷம் ✨.

27/07/2023.

மாலை நேரம் 4:39.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 26 ஜூலை, 2023

இரவு சிந்தனை ✨

 


இருள் சூழ்ந்த நேரத்தில்

ஏதோவொரு திகில் கூட

சுவாரஸ்யம் தான்!

அதுவொரு மாயை என்று

தெரிந்த பின் மனம் அடையும்

அமைதி வார்த்தைகளால்

வர்ணிக்க இயலாது...

எல்லாமே இங்கே மாயை தான்

நம்மை பயமுறுத்தவில்லை 

என்பதற்காக நீங்கள் 

நம்பும் விசயங்கள்

எப்படி உண்மை ஆகும்?

கொஞ்சம் அமைதியாக 

ஆழ்ந்த தேடலில்

உள் நோக்கி பயணியுங்கள்!

விடை தெளிவாக கிடைக்கும்..

#இரவுசிந்தனை.

26/07/2023.

இந்திய நேரம் இரவு 8:50..


#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்துக் கொள்ளுங்கள்... இதில் இன்றும் கவிஞர் கண்ணன் அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் சேர்க்கும் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🦋.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 25 ஜூலை, 2023

காலை சிந்தனை ✨

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

தொடர் தோல்விகள் உங்களை பக்குவபடுத்ததானே தவிர உங்களுக்கு சோர்வை ஏற்படுத்த அல்ல; அதனால் தொடர் தோல்விகளால் மனம் கலங்காதீர்கள்.வாழ்க்கையில் உங்கள் இலட்சியத்தை எவருக்காகவும் விட்டு கொடுத்து விடாதீர்கள்; உங்கள் கனவுகளை காயப்படுத்தாதீர்கள்;ஏனெனில் இன்றைய கனவுகளே நாளைய நிஜம்.🎺🏆🥁📣📖💡🔦🔭✒️🖌️

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 24 ஜூலை, 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்களே வணக்கம் 🙏🎻🙏. இன்று இரவு இந்திய நேரம் (9:00pmto10:00pm)ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணன் அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் நிம்மதியும் சேர்க்க காத்திருக்கிறது...

இது நம்மை நாமே ஆசூவாசப்படுத்திக் கொள்ளும் நேரம் அல்லவா நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉..


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

என்னை நம்பாதீர்கள்


என்னை நம்பாதீர்கள் 

என்கிறேன் நான்

ஏன் அப்படி ஒன்றும்

நீங்கள் நம்பிக்கையற்றவர் அல்லவே 

என்கிறார்கள்!

என்னோடு பயணிப்பவர்கள்

ஒன்று சேர்ந்து ஒரே குரலாக...

தாங்கள் சொல்வது சரிதான்

நான் அப்படி யாரையும் 

ஏமாற்றவில்லை என்கிறேன்..

பிறகு ஏன் இப்படி பேசுகிறீர்கள் 

என்கிறார்கள்..

நான் ஒரு அதீத மனநிலையில் 

பயணிக்க தொடங்கி விட்டேன்..

உங்களுக்கு ஏதேனும் 

வாக்கு கொடுத்து இருந்தால்

அது கூட ஞாபகம் இருக்காது 

எனக்கு...

அப்போது நான் 

நம்பிக்கையற்றவள் தானே 

என்கிறேன்...

என் நிலையை

புரிந்துக் கொண்டு 

அமைதியானார்கள்...

நான் நம்பிக்கை நம்பிக்கையின்மை 

இரண்டுக்கும் இடையே

வெகு சாந்தமாக பயணிக்க 

தொடங்கி விட்டேன்...

இது ஒரு புதுவித பயணம் மட்டும் 

இல்லை

சுவாரஸ்யமான

பயணமும் கூட...

#இளையவேணிகிருஷ்ணா.

24/07/2023.

4:14மாலை நேரம்..

இரவு சிந்தனை ✨

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

தொலைந்த, தொலைக்க வேண்டிய 

எண்ணங்களை மீண்டும் 

புதுப்பிக்காதீர்கள்.

அப்படி நீங்கள் செய்தால் அது 

உங்களுக்கு தீராத 

தொல்லையாகிவிடும்.

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு சிந்தனை ✨

தைரியம்

 


நான் அசலனமானவள்!

புயலுக்கே பெரும் சேதாரத்தை 

விளைவிப்பவள்!

என் தேஜஸை 

உணர்ந்துக் கொள்ளுங்கள்!

என் தவத்தின் வலிமை

தெரியாமல் மோதினால்.......

ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சாது!

நான் அந்த வாமனனின் சக்தி!

#இளையவேணிகிருஷ்ணா.

24/07/2023.

திங்கட்கிழமை..

பிற்பகல் 3:43.


சனி, 22 ஜூலை, 2023

வாழ்வின் சுவை(1)

 


வசிக்க ஒரு நிரந்தரமான வீடு இல்லாமல் இருப்பது ஒரு வரம் என்று சொல்வேன்!

கிடைத்த இடத்தில் தங்கி கிடைத்த உணவை உட்கொண்டு 

கண்ணில் தென்பட்ட காட்சியில் நம்மை தொலைத்து...

இப்படி நகர்த்தி அடுத்து என்ன நடக்க போகிறது

நாம் எங்கே போக போகிறோம்.. இப்படியான கேள்விகளோடு பயணிப்பது ஒரு சுகம் என்பேன்...

என்னோடு இந்த பிரபஞ்சத்தின்

பஞ்ச பூதங்கள் பயணிக்க

நான் எந்த கேள்விகளும் எவரிடமும் கேட்காமல்

எந்த பதிலையும் எவரிடமும் பெற முயற்சி செய்யாமல்

ஆழ்ந்த பேரமைதியோடு

இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தின் இசையை

அனுபவித்துக் கொண்டு பயணிக்க போகும் நாள் வெகுதொலைவில் இல்லை...

நான் நானாக உணர்ந்த தருணத்தில் என் பெயரை தியாகம் செய்து விடுவேன்..

அதுவும் கூட சுமைதானே

என் நெடுந்தூர பயணத்தில்...

#வாழ்வின் #சுவை(1).

#இளையவேணிகிருஷ்ணா.

நான் புரிந்துக் கொள்வதில் இல்லை..

 


தனித்துவமான பயணத்தில் 

எப்போதும் நான் உற்சாகமாக

பயணிக்கிறேன்..

இங்கே அதை பற்றி புரியாதவர்கள்

கொஞ்சம் அமைதியாக இருங்கள்!

என்னை புரிந்துக் கொண்டு

என்னோடு பயணிக்க முடியாது..

நான் புரிந்துக் கொள்வதில்

எப்போதும் இல்லை

உணர்ந்து கொள்வதில் 

இருக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

22/07/2023.இரவு11:07.

மழை நனைக்கும் இரவொன்றில்...


அந்த மழைக் கால இரவொன்றில்

பெய்துக் கொண்டு இருக்கும்

சாரல் மழையின்

சத்தத்தை தவிர வேறெதுவும் 

எனக்கு தேவையானதாக இல்லை...

என்னோடு பயணிக்க 

அந்த மழை நனைக்கும்

இரவை தவிர...

#மழைக்கால கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு சிந்தனை ✨


சில தேவையற்ற விருப்பங்கள் 

நம்மோடு பயணிக்கலாம்!

நாம் அதை சுமக்காமல்

தனித்துவமாக உதறி 

பயணிக்க வேண்டும்...

அது தான் நமது வாழ்வின் 

பயணத்தை 

சுவாரஸ்யமானதாக்கும்...

#இரவுசிந்தனை.

22/07/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 21 ஜூலை, 2023

இலட்சமண ரேகை 🔥


 

எனக்கு நானே 

போட்டுக் கொண்டேன்

ஒரு இலட்சுமண ரேகை..

அந்த ரேகையை எப்போதும்

நான் மீற போவதில்லை..

அதன் மீது சிறிதும் 

மோதி விடாதீர்கள் நீங்கள்...

அந்த சிறு அதிர்வில் 

தங்களது அழிவு நிச்சயம்...

22/07/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

வேறென்ன பெரிதாக செய்து விட முடியும் என்னால்

 


சம்சாரம் எனும் பெரும் அலையில்

மூழ்கிக் கொண்டே

எனக்கு அங்கே பலபேர் 

கட்டளை இடுகிறார்கள்

நீ வாழ்வை வீணாக்கிக் கொண்டு

இருக்கிறாய் என்று...

பாவம் அவர்களுக்கு தெரியாது

அந்த குரல் 

அந்த அலையை தாண்டி

என் செவிகளுக்கு வந்து

 எட்ட போவதில்லை என்று..

அதையும் மீறி வந்தாலும்

அதே அலையில் அந்த குரலை

பரிசாக கொடுத்து விடுவதை தவிர

வேறென்ன நான் 

பெரிதாக செய்து விட முடியும்?

#இளையவேணிகிருஷ்ணா.


22/07/2023.

காலை 10:15.

சுகர் நிலையில் இருந்துகொண்டே எதிர் கொள்வேன்..


இங்கே அத்தனை 

சம்சார அலைகளும் ஓயாமல்

என்னை தாக்கி தாக்கி

ஓய்ந்து விட்டது போலும்...

எதற்கும் அசையாத 

என்னை பார்த்து 

கொஞ்சம் அதிகமாக 

சோர்ந்து விட்டது என்று தான் 

நினைக்கிறேன் 

இனி என்ன செய்யலாம் என்று

யோசிக்கிறது...

நானோ மனதை துவைத நிலைக்கு

இறங்க விடாமல்

அது கொடுத்த அவகாசத்தை

இன்னும் தீவிரமாக

பயன்படுத்தி கொள்கிறேன் !

நான் இதற்காக பெரிதாக

போராடவில்லை...

என் இயல்பு நிலையே கிட்டத்தட்ட

அதுவே எனும் போது

நான் அனைத்தையும்

சுகர் நிலையில் இருந்துகொண்டே 

வரும் அலைகளை எதிர் கொண்டு 

எதிர் கொள்வேன்...

என்னை பொருத்தவரை

நான் ஒரு அத்வைதியாக

தீவிரமாக  இருக்கிறேனா என்று

மிக பெரிய சோதனை காலம் இது

அவ்வளவே...

#இளையவேணிகிருஷ்ணா. 
22/07/2023.
காலை 10:06.

சூட்சம அமைதி ✨

 


பெரும் அழிவுக்கு முன்பு

ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..

அந்த ஆழ்ந்த அமைதியை

புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்

சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணன் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏🎻✨🎉.

இது நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருந்துக் கொண்டு இருக்கும் நெஞ்சங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் என்று சொன்னால் அது மிகையல்ல ✨🎻🎻✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 20 ஜூலை, 2023

நாட்டின் அவமான சின்னம் ஆள்பவர்கள்

 


எப்போதும் மதம் மதம் என்று ஒரு அரசாங்கம் வெறிப்பிடித்து அலைந்தால் இந்த தேசத்தில் தரக் குறைவான அசிங்கமான விசயங்கள் தான் நடக்கும் என்பதை மணிப்பூரில் அந்த இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரமான தரக் குறைவான அத்துமீறல் காட்டுகிறது... அங்கே கலவரம் மாதக் கணக்கில் நடக்கிறது.. அது பற்றி எதுவும் கவலைக் கொள்ளாமல் நாடு நாடாக ஒரு பிரதமர் சுற்றுகிறார்.. உள்துறை அமைச்சர் அங்கே நடக்கும் விசயத்தை வேடிக்கை பார்க்கிறார்.. இது நாடா அல்லது வேறு ஏதேனுமா என்று கேட்க தோன்றுகிறது... எப்போதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் தீவிர மத பிரசாரம் மத துவேஷ அரசியல்...இதையே கேட்டு கொண்டு இருக்கும் காதுகள் இப்படி தான் தரக் குறைவாக நடக்க தூண்டும்.. இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.. இந்த அசிங்கமான செயலுக்கு பிரதமரும் உள் துறை அமைச்சரும் அங்கே நடத்தும் அரசாங்கமும் இந்த நீங்காத பாவத்தை அனுபவிப்பார்கள்..அறிவுகெட்ட ஒரு அரசியல் கட்சி மனிதாபிமானமற்ற ஒரு அரசியல் கட்சி தேச மக்களின் #உணர்வுகளை #பொசுக்கும் தரக் குறைவான அரசியல் கட்சி என்று சொன்னால் நிச்சயமாக அது பிஜேபி தான்.. உள்நாட்டில் உங்கள் கௌரவத்தை உங்கள் மக்களின் கௌரவத்தை காப்பாற்ற முடியவில்லை..உலக தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.. அங்கே இருக்கும் மக்களுக்கு என்ன தெரியும்.. இங்கே நடக்கும் அட்டூழியங்கள்... மிகவும் அருவருக்கத்தக்க அரசாங்கத்தால் ஆளப்படுகிறோம் என்று நினைப்பது மிகவும் மோசமான விசயம்... பிரதமர் பேச அருகதையற்றவர்.... தேசத்தின் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் என்று மாறுமோ இறைவா 🔥😢..

#இன்றையதலையங்கம்.

#நாட்டின் #அவமான #சின்னமாக #ஆளும் #அரக்கர்கள்.

#மணிப்பூர் #தீ

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி 🎻🎉🐾🎸📻


நேயர்களே வணக்கம் 🎻 🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சியில் கண்ணன் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏 🎻 ✨ 🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏 🎻 ✨.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 19 ஜூலை, 2023

வாழ்க்கையும் நானும் 🔥

 


வாழ்க்கை எனக்கு கடினத்தை

கொடுத்தால்

நான் அதற்கே கடினத்தை கொடுத்து

திணறடித்தால் 

மஜாவா இருக்கும் இல்ல..🔥

அதைத் தான் நான் தொடர்ந்து

செய்ய போகிறேன்..

மிக மிக சாந்தமாக ✨

#இளையவேணிகிருஷ்ணா.

மெய்யிலே பொய்...

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

எது பொய் எது மெய் என்று பிரித்தறிய தெரியாமல் இங்கே ஆயிரம் ஆயிரம் மனிதர்கள்.மெய்யிலே பொய்யை தேடுவார்கள்; பொய்யிலே மெய்யை தேடுவார்கள். முட்டாள்த்தனமான மனிதர்களை நான் சந்தித்து அலுத்து விட்டேன்.. நீங்களாவது மெய் பொய்யை கண்டறிய முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.🤦🙏🤦

எனக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்...


வாழ்வின் சுவாரஸ்யங்கள்

நிச்சயமாக எதிர்ப்படும் 

போராட்டத்தில் தான் உள்ளது !

அடுத்து என்ன அடுத்து என்ன

என்று ஓடிக் கொண்டே

இருக்க வைக்கிறது 

இந்த மனநிலை....

இதை ரசித்து ஓடும் நிலை 

இங்கே எனக்கு கொடுக்கப்பட்ட

வாழ்வியல் தேர்வுக்கான

வினாத்தாள் பேப்பர்...

நான் இங்கே 

அனைத்து கேள்விகளுக்கும் 

சுவாரஸ்யமாக 

பதில் எழுதி விடுவேன்...

அதை நீங்கள் 

ஏற்றுக் கொள்ளவில்லை 

என்று எல்லாம்

மீண்டும் மீண்டும் அதை அழித்து 

எழுத மாட்டேன்...

நீங்கள் போடும் மதிப்பெண்ணுக்காக

அதை நான் எழுதவில்லை...

எனக்கு இங்கே மதிப்பெண் கொடுக்க

நீங்கள் யார்?

அந்த பதிலை வாசித்து சிரித்து விட்டு

போங்கள் அல்லது

எரிச்சலாகி என் வினாத்தாளை

முடிந்தளவு தவறு என்று

அந்த பதில் மீது ஆயிரம் முறை 

கிறுக்கி உங்கள் கோபத்தை

தீர்த்துக் கொள்ளுங்கள்..

அது பற்றி கவலை இல்லை

இங்கே எனக்கு..

முடிந்தவரை எனது வாழ்வெனும் 

விடைத் தாளில் நான் 

விரும்பும் வகையில் 

பதில் இருக்க வேண்டும் 

அவ்வளவே...

அதை தவிர உங்கள் மதிப்பெண்கள்

ஒன்றும் எனது வாழ்க்கையை 

சுவாரஸ்யமாக ஆக்கி விட முடியாது

அதை மட்டும் இங்கே உறுதியாக 

என்னால் சொல்ல முடியும்!

#இளையவேணிகிருஷ்ணா.

19/07/2023.

2:45பிற்பகல்..






நேசிக்காதீர்கள்!

 


நேசிக்காதீர்கள்...

எல்லா பைத்தியக்காரத்தனத்திற்கும்

இங்கே நேசம் தான் காரணம்..

அந்த ஒரு உணர்வை

கடந்து விட்டால்

ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள் எனும்

வண்ண பூக்கள் 

உங்கள் தலையில் கொட்டி

ஆசீர்வதிக்கப்படுவீர்கள்..

நேசம் எப்படி மிருதுவானதோ

அதே போல கடுமையானது..

நேசத்தின் கடுமையை

தாங்கிக் கொள்ள வேண்டும் என்று 

கட்டாயம் இல்லை என்று

நினைப்பவர்கள் நிச்சயமாக

நேசிக்காதீர்கள்!

19/072023.

மணி2:00பிற்பகல்...

செவ்வாய், 18 ஜூலை, 2023

ஒரு சுவாரஸ்யமான கதை ✨


 அலுவலகத்தில் மதிய உணவு வேளையில் மிகவும் ஆவலாக தனது சாப்பாட்டு டப்பாவை திறந்தவருக்கு ஒரு அதிர்ச்சி.. ஏனெனில் அதில் அவித்த புடலங்காய் பொறியல் மட்டுமே இருந்தது..அதை பார்த்தவுடன் கடும் பசியோடு இருந்தவருக்கு கடும் கோபம்..உடனே வீட்டுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டவர் நீ சாப்பாடு எடுத்து வைக்க மறந்து விட்டாயா என்றார் மிகவும் கோபமாக..எதிரே மனைவியோ இல்லை இல்லை.. நான் அவித்த புடலங்காய் பொறியல் மட்டும் தான் வைத்தேன் என்றார்.. அதான் ஏன் என்றார் கணவர்..

காலையில் நன்றாக தோசை சாப்பிட்டு விட்டு தானே போனீர்கள்.. அங்கே அப்படி என்ன கடுமையான பணி... இங்கே அரிசிக்கு வரி மேல் வரி போட்டு இன்று முதல் அமலுக்கு வந்ததை மறந்து விட்டீர்களா.. நாளை முதல் பச்சை காய்கறிகள் தான் உங்களுக்கு மதிய உணவாக.. சும்மா என்னிடம் சண்டை போடாமல் அதை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு வரவும்.. விலைவாசி ஏற்றத்தில் அதை அப்படியே எடுத்து வந்தால் அதையே குளிர் சாதன பெட்டியில் வைத்து நாளையும் அதையே கொடுத்து அனுப்புவேன்.. என்றார்..

கணவருக்கு அந்த அதிர்ச்சியை ஜீரணம் செய்வதற்குள் உடன் பணிபுரிபவர் வந்து சார் கேள்விப்பட்டீர்களா... மின் கட்டண உயர்வு செய்தி என்றார்..

கணவர் அலைபேசி அதற்குள் அழைத்தது..மனைவி தான்.. அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுங்கள்.. மின் கட்டண உயர்ந்து விட்டது.. சூரியன் மறைவதற்குள் சாப்பிட்டு விட்டு கொசுக்கடியை எல்லாம் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்..மழை வரும் போது கீழே வந்து விடலாம் என்றாள்..

கணவருக்கு தலை சுற்றியது...

#நாட்டுநடப்பு

#நையாண்டிகதை

#இளையவேணிகிருஷ்ணா.

குறைந்தபட்சம் தேடலுக்கேனும் பதில் தந்திருக்கலாம்?


ஒரு தேடலும் இல்லாமல்

விடை பெறுகிறது

இந்த நாள் ...

கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல்

என்னிடம் இருந்து விடைபெற

அதற்கு எப்படி மனம் வந்தது?

குறைந்தபட்சம்

நான் ஏங்கி தவிக்கும் 

அந்த தேடலுக்கேனும் 

பதில் சொல்லி இருக்கலாம்...

என்னை காயப்படுத்தி

அவ்வளவு அவசரமாக 

விடை பெறுவதற்கு முன்னால்..

#இளையவேணிகிருஷ்ணா.

18/07/2023.

இரவு 7:15...

நான் வாழும் வாழ்க்கை...


ஏதோவொரு அர்த்தம் 

இருக்க வேண்டும்

நாம் வாழ்வதற்காக என்று

பல பேர் எனக்கு 

அறிவுறுத்துகிறார்கள்

என்னை சந்திக்கும் போதெல்லாம்!

அவர்கள் பார்வையில் ஒரு அர்த்தம்

கற்பிக்கப்படுவதை எப்படி

எனக்கு அர்த்தமாக மாறும்?

நான் வாழ்வதற்கு அர்த்தம் எதுவும்

தேவையில்லை என்று

பயணிக்கும் நான் 

அர்த்தமே ஒரு சுமை தானே என்று

அவர்களுக்கு எப்படி 

புரிய வைப்பேன்?

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 17 ஜூலை, 2023

நானும் எனது எழுத்தும்

 

இப்படி தான் மா நானும் குப்பை மாதிரி எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்.. அதில் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் எனது எழுத்து எனக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம் அது பற்றி கவலை இல்லை.. சுந்தர் பிச்சை என்னை தேடி வருவார் ஒரு நாள் யாருமா நீ என்று... அது தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம் 🙄🏃🤫🏃😌

#என்எழுத்தும்நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 16 ஜூலை, 2023

விடியற்காலை உற்சாகம் 🎻


 விடியற்காலை வணக்கம் நேயர்களே 🙏🎻✨.

உற்சாகமாக இன்றைய பொழுது அமைய வாழ்த்துகள் 💐..

விடியற்காலையில் ஆன்மீக பாடல்கள் தான் உற்சாகத்தை கொடுக்கும் என்று இல்லை... அது திரையிசை கூட கொடுக்கும்.. விடியற்காலையில் இசையோடு எழுந்திருங்கள்.. உற்சாகத்துடன் தங்களது இன்றைய பயணத்தை தொடங்குங்கள் ✨🎻🎻🎻🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

நான் இங்கே யார்?

 

யோசிக்காமல்

இங்கே எனது கையில்

அதிகாரத்தை திணித்து விட்டு

சென்று விட்டார்கள்!

நான் என் மனதையே அதிகாரம் செய்து

பழக்கம் இல்லை!

இங்கே மற்றவர்களை எப்படி

என்னால் அதிகாரம் செய்ய இயலும்?

என்று குழம்பி போய் இருக்கும் போது

என் மனதோ என்ன இப்படி

சோர்ந்து விட்டாய் என்று

சத்தமாக கேட்டதை பார்த்து

இதோ வந்து விட்டேன் என்றேன்!

என் நிலை புரியாமல்

கொண்டாடி தீர்க்கிறார்கள் அங்கே

பல பேர்... நான் இங்கே யார்

அதிகாரியா அடிமையா?

யாரேனும் ஒருவர் இங்கே

சொல்லி விட்டு போங்கள்!😌

#இளையவேணிகிருஷ்ணா.

தீராத காதல் 💖

 


இந்த பிரபஞ்சத்தின் 

உற்சாகத்தை

புரிந்துக் கொள்ள

நேரம் கிடைத்தது !

இதோ இந்த நொடியின் அற்புதத்தை

உங்களுக்கு சொல்லி

எப்படி புரிய வைப்பேன்!

என்னை நேசிக்கும் பிரபஞ்சத்தின்

தீராத காதலை கடந்து செல்ல 

மனமின்றி

நாங்கள் ஒருவருக்குள் ஒருவர்

சங்கமித்து விளையாடி தீர்க்கிறோம்!

காதலின் பெரும் அமிர்தத்தை

சிதற விடாமல் அனுபவிக்கும்

இந்த நொடி ஒரு வரம் எனக்கு!

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 15 ஜூலை, 2023

ஞாயிறு கவிதை 🍁🐾☕

 


தற்போதெல்லாம் ம்ம்,சரி, ஆம்..

இப்படி இந்த வார்த்தைகளே 

எனக்கு போதுமானதாக

இருக்கிறது...

இது தெரியாமல் இத்தனை நாள்

அத்தனை பேசி பேசி

வாழ்வியலின் சுவாரஸ்யத்தை

குறைத்து இருக்கிறேன் என்று

நினைக்கும் போது

எனக்கே என்னை நினைத்து

ஆச்சரியமாக இருக்கிறது...

#ஞாயிறு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 14 ஜூலை, 2023

காலத்தை மென்று தின்று...

 

உருண்டோடும் காலத்தில்உள்வாங்கப்படுகிறேனா நான் காலப்புருஷனால்! கரைகிறது வாழ்க்கை கடைத்தேற வழியும் இல்லை! மூழ்கவும் அனுமதிக்கப்படுவது இல்லை! காலத்தை தின்று மென்று ஜீரணிக்க முயன்று தோற்று போகிறேன்! விடைதெரியாத,ஓர் பாதை தெரியாத பயணத்தில் பயணிக்கிறேன் கண்ணை நன்றாக மூடிக்கொண்டு! கண்ணை திறந்து பயணித்தாலும் அந்த பயணம் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை என்கிறபோது கண்ணைமூடி பயணிப்பதிலாவது ஏதோ கொஞ்சம் ஆனந்தம் இருக்கிறது! வாழ்க்கை கரடுமுரடு என்றானபிறகு கலங்கி ஓரிடத்தில் நின்று காலத்தை விரயம் செய்வதைவிட ...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞானத்தை உணர்த்தும் வெங்காயம்..

 

நெடுநாள் அழுதுகொண்டே

இருந்த விவசாயியை

சிரிக்க வைக்கிறது

வெங்காயம்!

எப்போதும் அதன் தோலை உரிப்பவர்களை மேலும்

அதிகமாக தற்போது

அழ வைக்கிறது

வெங்காயம்!

தேவை இங்கே சமநிலை!

இது நாள் வரை நஷ்டத்தை கொடுத்து இப்போது சிரிக்க வைத்து தனது முடிவில்லா விளையாட்டை விளையாடி விளையாடி எப்போதும்

ராணியாகவே கெத்து காட்டி

வாழ்வில் பூரணத்துவமான ஞானத்தை,தத்துவத்தை வெங்காயத்தை தவிர வேறு எதுவும் தர போவதில்லை!

#இளையவேணிகிருஷ்ணா.

#தீவிர வெங்காய விவசாயிகளுக்கு சமர்ப்பணம்.

வியாழன், 13 ஜூலை, 2023

காலை சிந்தனை ✨

 





வாழ்க்கை ஏன் பலபேருக்கு

சுவாரஸ்யம் இல்லாமல் 

போகிறது என்று

யோசித்து பார்த்தால் 

ஒரு உண்மை விளங்கும்!

பலவித ரசனைகள் 

இல்லாதவர்களுக்கு தான்

வாழ்க்கை சுவாரஸ்யமாக 

இல்லாமல் போகும்!

#இளையவேணிகிருஷ்ணா.