பக்கங்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

வாக்குறுதி

அன்பர்களே வணக்கம்.
              இப்போது நாம் பார்க்க இருப்பது வாக்குறுதி.நீங்கள் என்மேல் கோபமாக இருப்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் இந்த காலத்தில் எதெல்லாம் நடக்காமல் இருக்கிறதோ அதை எல்லாம் நீங்கள் பேசுவது என்று ஒரு முடிவெடுத்துதான் வந்திருக்கிறீர்கள் போலும். சரி கேட்பது எங்கள் தலைவிதி.சொல்ல வந்ததை சொல்லி விட்டு இடத்தை காலி செய்து விட்டு போவீர் ஐயா என்று தானே சொல்ல வந்தீர்கள். கண்டிப்பாக நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சென்று விடுகிறேன் .கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஐயா என்று நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா ஐயா?.
        சரி விசயத்திற்கு வருவோம். இன்று வயலில் விவசாயி விதைகளை தெளிப்பது போல வாக்குறுதிகள் அள்ளி தெளிக்கப்படுகிறது.நான் சொல்வது அரசியல்வாதிகள் மட்டும் இல்லை.பொதுமக்களும் இப்படி தான் தற்போது இருக்கிறார்கள்.
       ஒருகாலத்தில் ஒருத்தருக்கு ஒரு வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.சாமான்யமாக யாருக்கும் அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்கமாட்டார்கள்.அப்படி கொடுத்து விட்டால் கண்டிப்பாக அதை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள். ஒரு மனிதன் என்பவன் முழுமையடைவதே அவனுடைய சொல்லாலும் செயலாலும் தான். ஆனால் தற்போது அது ஒரு விளையாட்டு பொருளாகிவிட்டது மக்கள் மத்தியில். எளிதாக யாருக்கும் வாக்கு கொடுக்கிறார்கள். அதை நம்பி எதிராளியும் அமைதியாக இருக்கும் போது நம்பியவர்காலை தக்க சமயத்தில் வாரிவிடுகிறார்கள்.
       கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போகிறாயே என்று யாரையேனும் கேட்டால் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நான் அப்படி தான். இதுவொரு சின்ன விசயம். இதைப்போய் பெரிதுப்படுத்திக்கொண்டு என்பார்கள். இது ஒருவகையில் நம்பிக்கை துரோகம் இல்லையா.
   நான் சொல்ல வருவது அனைவரையும் இல்லை. ஏனெனில் வாக்கை நிறைவேற்ற எவ்வளவோ பிரயத்தனம் செய்து தோற்றவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் முயற்சி எடுத்தார்கள். ஆனால் அதற்கான பலன் இல்லை. இதற்கு பரிகாரம் தேவையில்லை. நான் சொல்ல வருவது முயற்சியே இல்லாமல் இருப்பவர்களை பற்றி தான். அதை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களைப்பற்றித்தான்.
       வாக்கு என்பது மிகவும் வலிமையானது.அதை நாம் போற்றி பாதுக்காக்க வேண்டும். புராணங்களை எடுத்துக்கொண்டால் எல்லாமே நிகழ்ந்தது வாக்கிறுதியாலே என்றே சொல்லலாம். ஏன் அவர்கள் வாக்கை கேலிப்பொருளாக நினைத்து தூக்கி போடவில்லை என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அதிலிருந்தே புரியும் வாக்கின் பெருமை.அப்படஅப்படிப்பட்ட வாக்கை நாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாலுபேருக்கு முன்னால் கேவலப்படுத்துகிறோம்.
   ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நேயர்களே. கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் எவனும் மனிதனே இல்லை. கொடுத்த வாக்கை இவர்கள் நிறைவேற்றாமல் போனால் இவர்கள் வேறொரு இடத்தில் அதே ஏமாற்றத்தை நிச்சயமாக சந்திப்பார்கள். இது உறுதி. அதனால் வாக்கு கொடுப்பதற்கு முன்னால் ஆயிரம் தடவை யோசிப்போம்.அப்படி யோசித்து கொடுக்கப்பட்ட வாக்கை நாம் உயிராக நேசித்து நிறைவேற்றி ஆனந்தமாக வாழ்வோம்.
     என்ன நேயர்களே நான் இதை சொன்னவுடன் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த வாக்குறுதிகள் ஞாபகம் வருகிறது அல்லவா.யோசியுங்கள். நன்றாக யோசியுங்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் இருந்தால் இதுதான் தக்க சமயம். நிறைவேற்றி விடுங்கள். நீங்களும் ஆனந்தமாக இருப்பீர்கள். வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதால் எதிராளியும் ஆனந்தப்பட்டு உங்களை நம்பிக்கைக்குரியவர் பட்டியலில் சேர்த்து கொள்வார்.
  சரி நேயர்களே. மீண்டும் ஒரு பதிவில் நாம் சந்திக்கும் வரை🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக