பக்கங்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

வாழ்வின் போக்கில் நான் யாராக?


ஒரு மலையின் உச்சியில் 

உருவான சிறு ஊற்று 

ஒரு நதியாக பரிணமித்து 

காலமெனும் ஓடத்தில் 

சலசலத்து 

ஓடிக் கொண்டிருக்கிறது

வாழ்க்கையாக...


அந்த ஓடிக் கொண்டிருக்கும் 

வாழ்க்கையெனும் நதியில் 

சில மனிதர்கள் 

தோஷத்தை கழிக்க 

கரையில் விடப்பட்ட 

அந்த பழைய 

ஆடைகளை கவர்ந்து 

இழுத்துக் கொண்டு 

ஓடும் நதியை போல 

நானும் இங்கே 

சில பல கிழிசலான 

நிகழ்வுகளை 

தேவையே இல்லாமல் 

இழுத்துக் கொண்டு 

ஓடுகிறேன் 

காலமெனும் சாலையில்....


ஒன்றுக்கும் உதவாத 

அந்த கடும் நாற்றமடிக்கும்

கழிவெனும் 

விஷய சுகத்தில் மூழ்கி 

மூச்சடக்கி பயணிக்கிறேன் 

மிகுந்த அருவெறுப்பாக 

இந்த வாழ்வெனும் 

தோணியில்...


என்றொவொரு நாள் 

அங்கே ஏதோவொரு 

நறுமண மலர்களால் 

சூழப்பட்ட புனித நீர் 

திடீரென பெருக்கெடுத்து 

ஓடி வந்து 

என்னை புனிதமாக்கி

அழகு பார்க்கும் நாளில்

என் வாழ்வின் போக்கு 

ஒரு நந்தவனத்தில் 

அமைதியாக உலாவும் 

தென்றலால் தீண்டப்பட்டு

நான் இந்த பிரபஞ்சத்தின் 

பேரழகில் லயித்து 

அங்கே கிடக்கும் 

மர பலகையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

கையில் ஏந்தி 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

தேநீரை மிடறு மிடறாக 

பருகி கிடப்பேன் 

என்னை மறந்து....


அந்த நாள் எப்போது 

என்று மட்டும் கேட்காதீர்கள்...

அது தெரியும் போது 

உங்களுக்கு அறிவிக்காமல் 

இந்த பிரபஞ்சத்தை விட்டு 

அப்படி ஒன்றும் 

அவசர அவசரமாக 

விலகி விட மாட்டேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/09/26.














1 கருத்து: