பக்கங்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2026

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...

 





இங்கே இறைவன் எனும் 

ஆட்டுவிப்பவரின் 

கைகளில் ஆனந்தமாக 

எனக்கென்று எந்தவித பற்றுதலும் இல்லாமல் 

நடனமாட தெரிந்த நான் 

அப்படியே என்னை 

வேடிக்கை பார்ப்பவர்களை 

பார்க்கிறேன்...


அவர்கள் கண்களில் 

ஏளனம் எகத்தாளம் 

என்று 

ஆயிரம் ஆயிரம் 

கீழ்மையான உணர்வுகளில்

கட்டுண்டு என்னை கேலி 

செய்கிறார்கள்...

இவர் ஒன்றுக்கும் உதவாத 

பைத்தியக்காரன் என்று...


அந்த ஏளனத்தை நானும் 

நகைப்போடே எதிர் கொள்கிறேன் 

புயல் வந்து அடித்தும் 

அதன் மீது மென்மையை 

பரவ விடும் மலர்களை போல எந்தவித கோபமும் இல்லாமல்...


சில காலத்திற்கு பிறகு நான் 

அதே நடனத்தை உற்சாகமாக 

ஆடிக் கொண்டே 

அங்கே என்னை ஏளனமாக பார்த்த 

மனிதர்களை தேடுகிறேன்...

அவர்கள் அங்கே இல்லை...


எங்கே மறைந்து விட்டார்கள் என்று 

கண்களில் படுபவர்களிடமெல்லாம்

விசாரித்தபோது 

அவர்கள் ஆட்டுவிப்பவனின் கைகளில் 

இருந்து திமிறி 

அதோ அங்கே தெரிந்த பாதாளத்திற்குள் புதைந்து விட்டார்கள் என்றார்கள்...


நானோ அவர்கள் 

என்னை ஏளனம் செய்த 

பாவத்தை மறந்து 

மனம் பரிந்து, 

கண்களில் வழியும் 

கண்ணீரோடே

ஒரு அற்புதமான நடனத்தை 

அவர்கள் புதைந்துக் கொண்ட 

இடத்திற்கு மேல் ஆடி 

இறுதி அஞ்சலி செலுத்துகிறேன்...


அந்த ஆட்டத்தின் அதிர்வில் 

உள்ளே புதைத்துக் கொண்ட 

மனிதர்களின் மௌனமான 

அழுகையினூடே 

மிக மிக மெலிதாக 

என் நடனமிடும் 

கால்களை வருடி 

மன்னிப்பு கேட்கும் ஓசை 

எனக்கும் மட்டும் கேட்க 

நான் அவர்களுக்கு 

கண்ணீர் துளிகளை சிந்தி 

மன்னிப்பு வழங்கி 

என் அஞ்சலி செலுத்தும் 

ஆட்டத்தை 

முடிக்கிறேன் 

கனத்த மனதினூடே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/08/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக