பக்கங்கள்

திங்கள், 1 செப்டம்பர், 2025

சில நேரங்களில் சில நிகழ்வுகளின் உரசல்கள்...


சில நேரங்களில் 

சில நிகழ்வுகளின் 

சிறு உரசல்களில் தான் 

ஆயிரம் ஆயிரம் காயங்கள் 

தோன்றி 

எரிமலையின் தகிக்கும் 

வெப்பத்தில் என்னை 

மூழ்க வைத்து வாழ்வின் பிரளயமாக 

என்னை மிரட்டி விடுகிறது...

அதில் நான் மயங்கி விழும் போது 

என்னை சூட்சமமாக 

ஒரு கை ஏந்திக் கொண்டு 

வெறும் உரசல்கள் தானே 

ஏன் இப்படி அதிர்ந்து 

மயங்கி கிடக்கிறாய் என்று 

இந்த பிரபஞ்சம் 

என் காதில் கிசுகிசுத்ததில்

நான் பிசுபிசுத்த விழிநீரோடு 

விழித்து பார்த்தேன்...

அங்கே ஒரு அபூர்வ நதி 

எந்தவொரு சலனமும் இல்லாமல் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது...

நான் காண்பது எல்லாம் இங்கே கானல் நீரா இல்லை 

என்னை பயமுறுத்துவதற்காக

சிருஷ்டித்து பயணிக்கிறதா 

இந்த பிரபஞ்சம் என்று 

மெல்ல எழுந்து நடக்க 

எத்தனிக்கும் போது 

அங்கே ஒரு பறவை தன் சிறகில் 

சில பல காயங்களை 

தாங்கி இரத்தம் சொட்ட சொட்ட 

வெகு ஆக்ரோஷமாக பறப்பதை 

பார்த்து நான் இன்னும் ஆழமான 

புரிதலோடு 

வேகமாக நடக்கிறேன்...

இங்கே நடக்கும் எதுவும் 

நிகழ்வுகளும் இல்லை...

உரசல்களும் இல்லை...

காயங்களும் இல்லை...

எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் 

சிருஷ்டி விளையாட்டு தான்...

அந்த வேடிக்கை விளையாட்டில் நடக்கும் எதுவும் வெறும் 

வேடிக்கை தான்...

அதற்கு போய் மூர்ச்சையாகி 

என் சிறந்த சில மணித்துளிகளை ஒன்றும் இல்லாமல் செய்து அதை வெறுமையாக்கி விட்டேனே என்று என்னை நானே நொந்துக் கொண்டு 

அந்த நதியின் கரையோரத்தில் 

சிறிது ஆசுவாசமாக அமர்ந்து 

அந்த மென்மையான 

பேச்சினை ரசித்து எனக்கு நான் 

உயிர் ஊட்டிக் கொண்டேன்...

அங்கே ஆதவனின் ஒளியோ 

நதிக்கு மேலும் அழகு சேர்த்து 

விடை பெறுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/09/25/செவ்வாய்க்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக