அவன் அந்த நகரத்தின் மேம்பால ஒரு மூலையை தனது இருப்பிடமாகக் கொண்டு அந்த சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு நசுங்கிய பிச்சை பாத்திரத்தை மட்டும் உடமையாக கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக வாழ்பவன்.. உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் அவன் ஒரு பைத்தியக்காரனாக அடையாளம் காணப்படுகிறான் இந்த சமூகத்தில்... இப்படி உங்களிடம் புரிவதற்காக சொல்கிறேனே தவிர அவனை போல வாழ்வை புரிந்து கொண்டவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்..அப்படி தான் அன்று அந்தி மங்கிய வேளையில் தனது பிச்சை பாத்திரத்தில் விழுந்த சில்லறையை எடுத்துக் கொண்டு அப்படியே பிராக் பார்த்து கொண்டு மெதுவாக அந்த தெருவோர தள்ளுவண்டியை நோக்கி தனது இரவு உணவை முடித்துக் கொள்வதற்காக நடக்கிறான்..அப்படி போகும் வழியில் தான் அங்கே ஒரு கட்சி பிரமாண்டமாக நடத்தி கொண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கிறான்..இதை கவனித்த அந்த கூட்டத்தை கூட்டிய அரசியல் பொறுப்பாளர் இவரை வேகமாக விரட்டி அடிக்கிறார்..இவரும் பதிலேதும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு சற்று விலகி கொஞ்ச தூரம் தள்ளி நின்று அந்த நிகழ்வை கூர்ந்து கவனித்து பார்க்கிறார் .. அங்கே பரபரப்பாக இங்கேயும் அங்கேயும் ஓடி ஏதேதோ வேலைகளை செய்து வரும் கட்சி அடிபொடிகளை பார்த்து விட்டு சமூகத்தால் மனம் பிறழ்ந்த மனிதன் என்று அடையாளம் காணப்பட்ட அவன் சிரித்து வைக்கிறான்...
இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது அந்த தள்ளுவண்டியில் இரவு சிற்றுண்டி கிடைக்க.. அதனால் அவன் இந்த நிகழ்வை மெய் மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான்... அங்கே கூட்டத்திற்கு இடையில் தற்போது யாரோ ஒரு முக்கியஸ்தர் எழுந்து வந்து மைக் அருகே நின்று தனது குரலை செறுமி மைக் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்து விட்டு பேரன்பு கொண்ட மக்களே வணக்கம்..தற்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டது எதற்காக என்றால் நமது ஆட்சியை சிறப்பிக்கும் வகையில் கல்வி கண் திறந்து இளைஞர்களை நல்ல பாதையில் கூட்டி செல்லும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டுவதற்காகவும் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.. இரத்தத்தின் இரத்தங்களே! உடன்பிறப்புகளே! தாய்மார்களே! மற்ற மாநிலங்களே நமது அரசாங்கத்தின் கல்வி துறை சார்ந்த செயல்களை கூர்ந்து கவனித்து பாராட்டுகிறது...மேலை நாடுகளில் ஒன்று நமது அரசாங்கத்திற்கு விருது தர திட்டமிட்டு இருக்கிறது என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே காசுக்கு கூடி இருந்த கூட்டம் கைத்தட்டி ஆராவாரம் செய்து அடங்கிய போது சமூகத்தின் பார்வையில் இந்த மனம் பிறழ்ந்த மனிதனோ இவற்றை எல்லாம் கேட்டு விட்டு ஓஹோ என்று வேகமாக சத்தமிட்டு சிரித்தது மட்டுமல்லாமல் பையில் புத்தக அடுக்குகள் மத்தியில் குவார்ட்டர் பாட்டில் மற்றும் போதை பொட்டலங்களை எவருக்கும் தெரியாமல் திணித்து கொண்டு பள்ளிக் கூடம் போகும் வழியில் போதையை ஏற்றிக் கொண்டு அங்கே பள்ளிக்குள் அடாவடி செய்து வரும் மாணவர்கள் இந்த மாநிலத்தின் மாணவர்கள் இல்லையோ..நான் நேற்று கூட ஒரு பள்ளி சிறுவனை அருகில் அழைத்து அவனிடம் ஒரு சாதாரண கேள்வி கேட்டால் அவன் என்னை மானாவாரியாக திட்டி விட்டு தனது புத்தக பையில் கையை விட்டு எதையோ எடுத்து வாயில் போட்டுக் கொள்வதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து அவன் பையை பிடுங்கி பையை பார்த்தால் அதில் கஞ்சா மற்றும் குவார்ட்டர் பாட்டில் என்று பார்த்தேனே என்று சத்தமாக சிரித்தான்...இதை கவனித்த அங்கிருந்த மக்கள் பலரும் இந்த மனிதரை திரும்பி பார்த்தார்கள்..மேலும் அங்கிருந்த கூட்டத்தில் இருந்த பலரும் இவனை திரும்பி பார்த்ததை பார்த்து மிகவும் கடுப்பான அந்த கட்சி பொறுப்பாளர் வேக வேகமாக வந்து அவனை தரதரவென இழுத்து அந்த கூட்டத்தில் இருந்து அகற்றியதை அங்கே இருந்த மீடியா அனைத்தும் படம் பிடித்துக் கொண்டதை அந்த மோசமான நிலையிலும் அந்த மனிதன் பிடியுங்கள் நன்றாக படம் பிடியுங்கள்... நீங்கள் எடுத்த படம் நாளை உங்கள் பத்திரிகையில் வெளியாகிறதா என்று பார்ப்போம் என்று மேலும் மேலும் சத்தமாக சிரித்தான்...
இதென்னடா பெரும் தலைவலியாக போய் விட்டது என்று அந்த கட்சி பொறுப்பாளர் சோர்ந்து உட்கார்ந்து விட்டார்...
அங்கிருந்த நடுநிலையாளர்கள் அந்த பொறுப்பாளரை சூழ்ந்துக் கொண்டு அந்த மனிதர் அப்படி என்ன தவறு செய்து விட்டார் என்று அவரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்று வெளியே தள்ளி இருக்கிறீர்கள்... இங்கே அவர் சொன்னது தானே நிஜம் என்று ஆளுக்கொரு புறம் பேசவும் அங்கே மேடையில் இருந்த தலைவர் கீழே இறங்கி வர எத்தனிக்கும் போது அங்கிருந்த தீவிர கட்சி விசுவாசி தலைவரே நீங்கள் ஏன் அங்கே சென்று கொண்டு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று முகத்தில் வியர்வை படர வேக வேகமாக தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்... ஆனால் தலைவர் கேட்காமல் போய் அந்த பொறுப்பாளரை என்ன இங்கே நடக்கிறது என்று கோபமாக கேட்டார்.. அதற்கு அந்த பொறுப்பாளரோ தலைவரே நாம் கூட்டம் போடும் போதெல்லாம் இந்த எதிர் கட்சிகள் சேர்ந்து ஏதாவது அசிங்கப்படுத்த இப்படி சதி செய்கிறார்கள் என்று பரபரப்பாக வியர்வை வழிய தயங்கி தயங்கி சொல்லி முடிப்பதற்குள் அங்கே வெளியே தள்ளி விட்ட மனிதர் நொண்டி நொண்டி காலில் வழியும் இரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அந்த தலைவரை பார்த்து ஐயா இங்கே நடக்கும் பல விசயங்களை உங்கள் கவனத்திற்கு எடுத்து வரவில்லை என்று நினைக்கிறேன்... அதனால் தான் இவர்கள் பயப்படுகிறார்கள்... நான் இவர்கள் சொல்வது போல எதிர் கட்சி ஆளும் இல்லை...பைத்தியக்காரனும் இல்லை... நான் சொன்ன விசயத்தை எத்தனையோ ஊடகங்கள் சொல்லி கொண்டே தான் இருக்கிறது... ஆனால் நீங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் என்று சொல்ல சொல்ல அவனை பேச விடாமல் அங்கிருந்த கட்சிக்காரர்கள் இழுத்து செல்கிறார்கள்... அந்த கட்சி தலைவரோ இந்த மனிதர் சொன்ன விசயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் மேடையேறி தனது இருப்பிடத்தில் உட்கார்ந்துக் கொண்டு பேச்சை தொடர சைகை செய்கிறார்.. அந்த முக்கியஸ்தரும் பேச்சை தொடர்கிறார் இப்படியாக அதாகப்பட்டது மக்களே இங்கே உண்மை எது பொய் எது என்று புரியாத யாரோ ஒரு மனம் பிறழ்ந்த மனிதனின் பேச்சைக் கூட மதித்து நமது முதல்வர் எந்தவித ஆராவாரமும் இல்லாமல் நிதானமாக அவரது பேச்சை கேட்கிறார்..இந்த எளிமை எதிர் கட்சி தலைவருக்கு வருமா என்று தொடர்கிறார்...
அந்த பிச்சைக்காரரோ சரிதான் இந்த பைத்தியக்கார காசுக்கு கூட்டம் கூட்டி பிழைக்கும் அரசியல்வாதிகள் உண்மைவாதிகளாம் என்று கடகடவென்று சிரித்துக்கொண்டே போகிறார்.. காலில் வழியும் இரத்ததை கூட பொருட்படுத்தாமல்... அங்கே எப்போதும் அவர் வாங்கும் சிற்றுண்டி தள்ளுவண்டி கடையில் இட்லி சூடாக காத்திருக்கிறது..அவர் தனது கையில் உள்ள சில்லறைகள் கொடுத்து இட்லியை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாக எங்கிருந்தோ வந்த அவரோடு இட்லியை பங்கு போட்டு சாப்பிடும் ஜீவனான தெருவோர நாய் அவர் காலில் வழியும் இரத்த வாடையை பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்து அவரது இரத்ததை தனது நாவால் வருடி துடைத்து விடுகிறது ...அவரோ அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் வா இந்தா இந்த இட்லியை ஆறுவதற்குள் சாப்பிட்டு விடு என்று சட்னி சாம்பார் தோய்த்து அதனிடம் போடுகிறார்... அதுவும் ஆவலாக சாப்பிட்டு விட்டு அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அவரை பாவமாக பார்த்து கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு படுத்து இருக்கிறது... இந்த நிலையில் அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஓடோடி வந்து அந்த கட்சி தலைவர் உங்களை அழைக்கிறார் என்று சொல்ல அந்த நாயோ எவரையும் அந்த பிச்சைக்கார மனிதனிடம் அண்ட விடாமல் குரைத்து விரட்டி அடிக்கிறது...
அந்த மனிதரும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்த குடத்தில் உள்ள தண்ணீரை பருகி விட்டு தனது இருப்பிடமான பாலத்தின் அடிப் பகுதிக்கு செல்கிறார்.. இப்போது அந்த நாயும் வாலை ஆட்டிக் கொண்டு அவர் பின்னால் செல்கிறது விசுவாசியாக... அவர்களோடு சற்று முன் தரதரவென இழுத்து இவரை வெளியே தள்ளிய அந்த கட்சி முக்கியஸ்தரும் ஐயா நில்லுங்கள் நில்லுங்கள் உங்களை முதல்வர் அழைக்கிறார் என்று கூக்குரலிட்டுக் கொண்டு வேக வேகமாக ஓடி வருகிறார்...
அவரது குரலை கேட்டு திரும்பிய அந்த நாயோ தற்போது அவரை துரத்தி வேகமாக வர அவரோ மிரண்டு போய் அந்த சாலையில் தடுக்கி விழுந்து எழுந்து ஓடுவதை எதேச்சையாக அந்த பிச்சைக்கார மனிதர் பார்த்து விட்டு கடகடவென்று சிரித்துக்கொண்டே முன்னே போகிறார்... அந்த நாய் அந்த கட்சி முக்கியதஸ்தரிடம் தனக்கு சோறு போட்டு காத்த மனிதரை காப்பாற்றிய திருப்தியில் மீண்டும் இவரோடு கம்பீரமாக நடக்கிறது...
இங்கே யார் பிச்சைக்காரர்கள் யார் பைத்தியக்காரர்கள் என்று ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு தனது கிழிந்த கம்பளியை அந்த தரையில் விரித்து வா ராமா... இன்றைய பொழுது மிகவும் வேடிக்கையாக போனதல்லவா நாளைய பொழுதை உற்சாகமாக வரவேற்க தற்போது கொஞ்சம் இளைப்பாறுவோம் என்று சொல்ல அந்த ராமு ஜீவனும் கிழிந்த கம்பளியின் மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டதை அங்கே வழக்கமாக போய் வரும் வாகனங்களின் இரைச்சலை கண்டுக் கொள்ளாமல் உறங்கியது இரண்டு ஜீவன்கள் எந்த கவலையும் இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/08/25
சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக