பக்கங்கள்

வியாழன், 11 செப்டம்பர், 2025

அந்த பெரும் காதலின் அடையாளமாக_சிறுகதை.


அந்த அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து இருந்தேன்.. அங்கே பறவைகள் இங்கும் அங்கும் பறந்து திரிந்துக் கொண்டு இருந்தது...இதை எல்லாம் எந்தவித சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்... இங்கே வேடிக்கையை தவிர வேறு எதுவும் மிச்சம் இல்லை அல்லவா நமது வாழ்க்கை உட்பட வேடிக்கை தான்...இது புரியாமல் பல பேர் பல விசயங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்கள்..நாமே ஒரு வேடிக்கை மனிதராக பல பேருக்கு இருக்கிறோம் என்று தெரியாமல் என்று நினைக்கும் போது மிகவும் நகைப்பாக தான் இருக்கிறது...

அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் இங்கும் அங்கும் எதையோ பரபரப்பாக பேசிக் கொண்டே அலைகிறார்கள்... அங்கங்கே விடுமுறை நேரம் இன்னும் சற்று நேரத்தில் விடை பெற போகிறது என்று உணர்ந்து குழந்தைகள் மணலில் வீடு கட்டி மகிழ்கிறார்கள்...அதை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு பெரும் அலை வந்து அதை தீண்டி அழித்து சென்றதில் அந்த குழந்தையின் மனம் சிறுத்தது... பாவம் அந்த குழந்தைக்கு என்ன தெரியும்... இங்கே வளர்ந்த பிறகும் பல பல விசயங்கள் தான் நமக்கு நடக்க போகிறது என்று...

இந்த நிகழ்வுகளை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே எனது நினைவுகளை அசைப்போடுகிறேன்...

இதோ இதே மாதிரி ஒரு மாலைப் பொழுதில் தான் நீயும் நானும் கணக்கற்ற பொழுதுகள் பல பல கதைகளை பேசி திரிந்தோம்... நான் ஏதேதோ சொல்ல சொல்ல நீ வாய் விட்டு சிரிக்கிறாய்... அந்த கள்ளமற்ற சிரிப்பில் அங்கே இருந்த மனிதர்கள் மட்டும் அல்ல அலைகளும் உருகி தான் உனது பாதத்தை முத்தமிட்டு சென்றது..

அந்த பொழுதின் அடையாளத்தை இங்கே நான் தற்போது சத்தம் இல்லாமல் தேடிக் கொண்டு இருக்கிறேன்...

ஏன் என்னை பிரிந்தாய் என்று எனக்கு நீ உணர்த்தாமலேயே சென்று விடவும் இல்லை...

உனது சூழலின் அழுத்தத்தை எனக்கு சொல்லி தான் பிரிந்தாய்...பிறகேன் என்னோடு பெரும் காதல் கொண்டு பித்து நிலையை அடைய வைத்தாய் என்றும் நான் சராசரி மனிதனை போல கேட்கவும் மாட்டேன்... ஏனெனில் அந்த மாதிரியான காதலை இது வரை இந்த கடற்கரை சந்தித்தது கூட இல்லை என்று எத்தனையோ முறை அதன் முத்த மொழியில் அலைகள் எனக்கு உணர்த்தியதை நான் உணர்ந்துக் கொண்டு தான் இருந்தேன்...

என்றாலும் அந்த உன் சூழலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நம் பெரும் காதலின் உணர்வை நீ மதித்து இருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது... இது பிரிவின் தீயில் தகிக்க முடியாத எண்ணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட போதும் உன்னை குற்றம் சொல்ல என் ஆழ்மனம் ஒத்துக் கொள்ளவில்லை... இங்கே ஆழ்ந்த காதலின் உணர்வுகள் எல்லாம் இப்படி தான் கடற்கரை மணலிலோ அந்த நீலவானத்திலோ அங்கே வருடும் காற்றிலோ கரைந்து உருகுகிறது...

நீ என்னை நினைப்பாயா என்று நான் மலினமாக தற்போது மட்டும் அல்ல எப்போதும் நினைக்க மாட்டேன்... அது ஒரு ஆழ்ந்த புரிதல்... இங்கே நான் நினைக்கும் வேளையில் அதோ அந்த அலைகள் வேகமாக வந்து என் கால்களை கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்லி மௌனமாக நமது காதலுக்கு அஞ்சலி செலுத்துகிறது...அதை பொறுத்தவரை நமது காதல் கல்லறை காதலாக நினைத்து விட்டது போலும்...

இப்படி உன் நினைவுகளை நான் அசைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் தலையை உயர்த்தி மேலே பார்த்தேன்... அந்த நீல வானமும் நீ என்ன அலை கடற்கரை மணல் மட்டும் தான் உன் காதலை கொண்டாடுகிறது என்று நினைத்தாயா... இங்கே நீங்கள் அறியாமல் நானும் தான் ரசித்துக் கொண்டு இருந்தேன் என்றது மெல்லிய குரலில்...

நான் அதை பார்த்து என் கண்களில் வழியும் கண்ணீரோடு கை கூப்பி கும்பிட்ட போது என்னை கடந்து சென்ற ஒரு காதல் ஜோடி என்னை பார்த்து வேடிக்கை மனிதன் போல என்று கேலி செய்து சிரித்தார்கள்... அவர்கள் உண்மையில் பெரும் காதலின் உணர்வை உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை... ஏனெனில் இங்கே அபூர்வ காதலின் அடையாளங்கள் எல்லாம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை... அப்படியே கிடைத்தாலும் அதன் அருமை புரியாமல் அந்த காதல் ஜோடியில் யாரோவர் குப்பையில் தூக்கி வீசி எறிந்து விட்டு நடைமுறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு கடனே என்று சம்சாரியாக வாழ்ந்து விட்டு காணாமல் போனவர்கள்... ஆனால் இங்கே என் உயிர் காதலியே நீயும் அப்படி இல்லை நானும் அப்படி இல்லை...நீ இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் என்னோடு பயணித்த நினைவை அசை போட்டுக் கொண்டு இருப்பாய் அங்கே உள்ள கடற்கரையில்... ஏனெனில் நீ உன் சூழலை பகிர்ந்த போது என் வாழ்வின் மொத்தமும் நீதான்... சராசரி வாழ்வில் வேறொருவரோடு பந்தம் இல்லை என்றாய்... ஆனால் என் பெற்றோருக்கு மதிப்பளித்து உன்னோடும் இணைந்து வாழ்வை தொடங்க முடியாது என்றாய்...

அந்த பேச்சை நீ முடிக்க முடியாமல் திணறி கண்களில் தாரை தாரையாய் வழிந்த கண்ணீரோடு இதே கடற்கரையில் விடை பெற்று அயல் தேசத்திற்கு சென்று பணி செய்து வாழ முடிவெடுத்து விட்டதாக சொன்ன போது நான் அதை மறுத்து பேசக் கூட வாய்ப்பு அளிக்காமல் என் கைகளில் இறுக பிடித்துக் கொண்டு உன் பெரும் காதலின் அடையாளமாக ஒரேயொரு முத்தத்தை அழுத்தமாக பதித்து வேகமாக சென்றாய்... பதில் பரிசு எதையும் எதிர்பாராமல்...

இதை எப்படி ஒரு அல்ப காதலாக நினைக்க முடியும்... அந்த கண்ணீரின் அடையாளத்தை அப்போது உன் காலை இறுதியாக முத்தமிட போகிறோம் என்று தெரியாமல் வந்த அலையில் கலந்தது... இதற்கு சாட்சி அந்த நீல வானம் தானே என்று இப்போது தான் புரிகிறது...

இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பெரும் காதலின் அடையாளமாக இந்த கடற்கரையில் 

அந்த பறவைகளோடு பறவைகளாக திரிந்து கிடப்போம் என் பெரும் காதலின் அடையாளமான உயிரே....என்று நான் பெரும் மூச்சோடு கடற்கரையின் மணலில் இருந்து விடைபெறும் போது இருள் நெருங்கி போய் வா என் அருமை புதல்வனே என்று காதோடு கிசுகிசுத்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/09/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக