பக்கங்கள்

சனி, 2 ஆகஸ்ட், 2025

நானும் அந்த குருவியும் சிருஷ்டியும்...


நான் எனக்குள் சிருஷ்டித்து 

வாழும் உலகத்தின் கண்ணாடியால் 

அலங்கரிக்கப்பட்ட 

சன்னலை அங்கே பறந்து வந்த 

குருவி ஒன்று 

இலேசாக தட்டுகிறது...

நானும் நீ சிருஷ்டித்த உலகத்தில் 

வசிக்கட்டுமா என்று...

ஏன் இந்த கேள்வி சற்றே சத்தம் 

இல்லாமல் நீ உள்ளே வா 

அதோ அங்கே உன் வாழ்நாளை 

களவாட வேகமாக ஒரு மனிதன் 

உன்னை நோக்கி வருவதற்குள் 

நீ என் உலகத்தில் இயைந்து விடு 

இல்லை என்றால் அவன் சிருஷ்டித்து 

அலங்கரித்த வயிறெனும் 

நரகத்தில் உன்னை தள்ளி 

மாபெரும் வீரனாக கதை பேசி 

இன்றைய அந்த அற்புதமான 

மாலைப் பொழுதை காயப்படுத்தி 

கடும் சிரிப்பை பரப்பி இரவின் 

அமைதியை கெடுக்கும் ராட்சசன் 

ஆகி கடும் தாண்டவம் ஆடுவான் 

என்றேன்...

ம்ம் சற்றே நீ பேச்சை குறைத்து 

உன் சன்னலை விரைவாக திற 

என்றது ...

என் சிருஷ்யில் 

அடைக்கலம் கேட்டு வந்த 

அந்த குருவி...

நானும் அதன் பேச்சை ஆமோதித்து 

சற்று வேகமாக சன்னலை திறந்து

என் அந்த அதிஅற்புதமான 

சிருஷ்டியில் அதை 

ஒரு ஓவியமாக பாவித்து 

அதை உள்ளே அனுமதித்தேன்...

இங்கே நானும் அதுவும் 

புதிய அனுபவத்தை அணு அணுவாக 

ரசித்துக் கொண்டே இருக்கும் போது 

அந்த மனிதன் அந்த குருவியின் 

பறந்து வந்த அடையாளத்தை 

தொடர்ந்து வந்து பாதியில் 

மறைந்த இடத்தில் நிற்கிறான்...

எங்கே சென்று இருக்கும் 

அதற்குள் என்று...

திகைத்து நிற்கும் போது 

நாங்கள் இருவரும் பல கதைகளை 

பேசி கள்ளம் கபடமற்ற சிரிப்பில் 

அந்த சிருஷ்டியை 

மகிழ்வித்து கொண்டு 

இருப்பதை இங்கே 

எங்களை தவிர அந்த மனிதன் அறிய 

நியாயம் இல்லை தானே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/08/25/சனிக்கிழமை.


 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக