பக்கங்கள்

வெள்ளி, 18 அக்டோபர், 2024

அந்த பெரும் நேசத்தின் மகிமையை உணராமல்...

 


பெரும் தவிப்போடு

கடந்து செல்கிறேன் 

எனை நேசித்த அந்த இறப்பின் 

யாசிப்பை...

என் புறங்கையால் 

தள்ளி விட்டு விட்டு...

கால சுழற்சியில் எல்லாம் 

மறந்து விட்டது...

இதோ முதுமை நெருங்கி 

எனை ஒரு மூலையில் 

உட்கார வைத்து காட்சி பொருளாக்கி 

வேடிக்கை பார்க்கும் நேரத்தில் 

என் ஆழ் மனதில் பளிச்சிட்டது... 

என்றோவொரு நாள் 

எனை ஆழமாக நேசித்த 

அந்த இறப்பின் பெரும் நேசத்தை புறங்கையால் தள்ளி விட்டு பெரும் கர்வத்தோடு பயணித்த அந்த நாட்கள்...

இப்போது நான் யாசிக்கிறேன் பெரும் நேசங்கொண்டு அந்த இறப்பின் பெரும் காதலை...

அதுவோ எனை ஒரு கேலி சிரிப்போடு கண்டும் காணாதது போல 

எனை கடந்து செல்கிறது...

நான் என் கைகளை நீட்டி 

அதன் குறுக்கும் நெடுக்குமான ஓட்டத்தை 

நிறுத்தி விட வேண்டுமென...

என் கைகளோ எவ்வளவு முயற்சி செய்தும் எழாமல் 

போகும் போது 

பெரும் நேசத்தின் அவமதிப்பை 

இங்கே 

எவர் எவருக்கு செய்தாலும் 

அதன் கொடுமையின் சீற்றத்தை 

இங்கே தாங்கும் துணிவு 

துர்லபம் என்று 

மௌனமாக கண்ணீர் வடிக்கிறேன்...

என் கண்ணீரின் 

நுண்ணிய சத்தங்கள் கேட்டு 

நான் சாய்ந்து கொண்டு இருந்த சுவரோ 

பரிதாபமாக எனை கெஞ்சி கேட்கிறது...

கொஞ்சம் உன் அழுகையை நிறுத்துகிறாயா...

உன் அழுகையின் சத்தத்தை 

என்னால் தாங்க இயலவில்லை என்று....

#இரவுகவிதை.

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக