பக்கங்கள்

திங்கள், 25 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு(14)

 


✨விடியற்காலை பயணங்கள் எப்போதும் இனிமை தான்.எனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.அங்கே எனது நட்பு வட்டாரத்தில் அவர்கள் லாவண்யா மகள் திருமணம்.. லாவண்யா பள்ளி கால தோழி.. ரொம்ப அமைதியானவள்.. படிப்பில் சுட்டி..பள்ளியில் எந்த போட்டி என்றாலும் இவள் முதல் ஆளாக பெயரை கொடுத்து விடுவாள்..ஆனால் என்ன..பையன்களாகிய எங்களிடம் பேச மிகவும் கூச்சப்படுவாள்.. அதுதான் பிரச்சினையே..ஏதேனும் நோட்ஸ் கேட்டால் கூட பயந்து கொண்டு தருவாள்.. ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்று பார்த்தால் கூட அவள் கண்ணில் தெரியும் பயத்தில் வந்து விடுவோம் நாங்கள்.. ஏனெனில் அவள் அழுது ஊரை கூட்டி விட்டால் என்ன செய்வது..அதனால் தான் நமக்கு ஏன் வம்பு என்று..

அவள் மகள் திருமணம் தான் தற்போது.

இருள் விலகாத இந்த நேரத்தில் எனது பயணம் எனது தோழன் புல்லட்டில் தான்..

ஏனோ இருசக்கர வாகனம் என்றாலே கல்லூரி காலங்களில் இருந்து இந்த வாகனத்தின் மீது ஓர் கண் இருந்து விடுகிறது..எங்களை போன்ற இளைஞர்களுக்கு..

மிகவும் ரம்மியமான சூழல்.இந்த விடியற்காலை பொழுதை எத்தனை வர்ணனை செய்தாலும் தகும்..இதமான குளிர் காற்று என்னை வருடியது.. வழியில் அந்த விடியற்காலை இருளில் தெரிந்த அத்தனை காட்சிகளையும் ஒன்று விடாமல் ரசித்தேன்..எனது மனதால் பருகினேன்..அதில் அப்படியே லயித்து போன நான் எனது பயணத்தை மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டி பயணித்தேன்.. என் வேகம் குறைவாக இருப்பதை பார்த்து எனது தோழன் கோபம் கொண்டான்.தோழனா நீ மட்டும் தானே வண்டியில் பயணிப்பதாக இதுவரை சொல்லி வந்தாய் என்று சண்டைக்கு வராதீர்கள்..அந்த தோழன் எனது புல்லட் தான்..என்னை நீ மெதுவாக ஓட்டி அசிங்கப்படுத்துகிறாய் என்று வழிநெடுகிலும் என்னோடு சண்டை போட்டு வந்தது..ஓர் காதலியை எனது வண்டியில் ஏற்றி வந்து இருந்தால் கூட இவ்வளவு சண்டை வந்து இருக்காது..அப்படி ஓர் சண்டை என்னோடு எனது தோழன் போட்டுக் கொண்டே வந்தான்..நானோ அதை சமாதானப்படுத்தும் விதமாக சிரித்து கொண்டே சொன்னேன்.உன்னையும் இந்த உலகத்தை ரசிக்க வைக்கிறேன் தோழா.. ஏன் இந்த கோபம் என்னிடம்  என்றேன்.. உன்னிடம் பேசி வெற்றி பெற முடியுமா என்று சொல்லி அமைதியானது..சரி தோழனின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் தானே என்று நினைத்து கொஞ்சம் வேகத்தை கூட்டினேன்..எனது புல்லட் சத்தம் காற்றை கொஞ்சம் சலனப்படுத்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..என் மேல் அந்த இளந்தென்றல் காற்று  திடீரென வேகமாக மோதியது.அதன் அறைதலை தாங்கிக் கொண்டேன் புன்முறுவலோடு.

வேறு என்ன செய்ய இயலும்.. நான் வேகமாக செல்வது அதற்கு பிடிக்கவில்லை போலும்.இங்கே ஒருவரை சமாதானப்படுத்தினால் இன்னொருவர் கோபித்துக் கொள்கிறார்..எனது நிலை கூட பரவாயில்லை.. இங்கே மனிதர்கள் பலபேருக்கு சமாதானப்படுத்துவதிலேயே வாழ்க்கை தொலைந்து விடுகிறது..அது மிகவும் மோசமான விசயம்.. அவர்கள் நிலை நினைத்து இப்போது கலங்குகிறேன்.. எப்படி அவர்கள் வாழ்க்கையை இந்த சமாதானப்படுத்துதலோடு ஓட்டுகிறார்கள்..என்று..


இப்படி அதிகாலை பயணம் செய்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.பயணத்தின் எதிர் படும் எந்த விசயத்தையும் நான் அப்படியே கடந்து செல்லவில்லை.மிகவும் ரசித்தேன்.. ரசித்தேன் என்று சொல்வதை விட மெல்ல மெல்ல பருகினேன்..

நான் ரசித்து இயற்கை காட்சிகளை பருகியதை பார்த்து மெல்ல மெல்ல விடியலை எனக்காக அந்த இறைவன் பரிசளித்தான்.அந்த விடியலில் 🐦 பறவைகள் மிகவும் அழகாக சிறகடித்து வானில் பறந்தது.. பறவைகள் எப்போதும் தனது உற்சாகத்தை கைவிடுவதில்லை..சோர்ந்து எப்போதாவது நாம் இருந்தாலும் கூட நம்மை அதன் உற்சாகத்தால் சோர்வை விரட்டி விடுவது தான் விந்தை..அது தனது உயிரை நீட்டித்து கொள்வதற்கான உணவை தேடி பறந்தது இந்த அதிகாலை பொழுதில்.. அதற்கான உணவை எத்திசையில் மறைத்து வைத்து இருக்கிறானோ அந்த இறைவன்.அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் தனது உணவை தேடுதலில் மும்முரமாக சிறகடித்து வானில் பறந்து திரிந்தது..அது மிகவும் அழகாக இருந்தது.. வானில் வரிசை மாறாமல் அமைதியாக பறந்து நமக்கு ஏதோ சொல்கிறது..அது இந்த இயற்கை ஆழ்ந்த அமைதியை இழந்து தவிக்கிறது.மனிதர்களே நீங்களோ அதை பற்றி கண்டுக் கொள்ளாமல் உங்கள் சுயநல பயணத்தை விடாமல் தொடர்கிறீர்கள் என்பது போல இருந்தது. அதற்கு தேவையான அமைதியை நீங்கள் பறித்து கொண்டு வேதனைப் படுத்தலாமா என்பது போல இருந்தது.

இயற்கை தாம் படைத்த எதுவும் படைப்பின் ஒழுங்கில் இருந்து மாறாமல் பாதுகாத்து அதே ஒழுங்கில் பயணிக்க வைக்கிறது.நாமோ நம் ஆக்ரோஷமான பேராசை எனும் பயணத்தை மூர்க்கத்தனமாக அதன் மேல் திணித்து திக்கு முக்காட வைக்கிறோம்.


விடியலின் அடையாளமான சூரிய பகவான் அடி வானத்தில் இருந்து எட்டி பார்த்தது.இந்த உலகம் இரவின் மடியில் ஓய்வெடுத்தது  போதும் என்பது போல..தனது முகத்தில் பாதி தெரியும் படி.. கொஞ்சம் அப்படியே பார்வையை செலுத்தியது..இன்றேனும் சில மனிதர்கள் மாறி இருக்கிறார்களா என்கின்ற ஆவலோடு.. ஆனால் எதுவுமே மாறப்போவது இல்லைஎன்பது நன்கு உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..அந்த சூரிய பகவானை அப்படி பார்க்கும் போது பரிதாபமாக தான் இருந்தது.

அதன் உதிப்பின் அழகை ஓர் ஓரமாக ரசனையோடு நின்று கவனிக்க சாலையில் எவரும் இல்லை.அந்த இனிய காலைப்பொழுதிலும் சாலையில் தனது சுயத்தை இழந்து பரபரப்போடு கூடிய பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்.. வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ரசிக்கப் படக் கூடியது..என்பதை அவர்களிடம் சொல்லி எவரும் இல்லை..அப்படியே எவரேனும் அவர்கள் கையை பிடித்து நிறுத்தி சொன்னாலும் அவர்கள் வெறுப்போடு கையை உதறி விட்டு ஓர் எரிச்சல் பார்வையை அவர்கள் மேல் வீசி விட்டு செல்வார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை..இவர்கள் எல்லாம் எதற்காக ஓடுகிறார்கள்..என்று புரியவில்லை.. இயற்கை தரும் அமிர்தம் பருகாமல் ஓடி ஓடி அலுத்து கொண்டு தனது வாழ்வை தொலைத்து விட்டு பின்பு புலம்புபவர்கள் தான் இங்கே அதிகம்..


கடந்து செல்லும் நிமிடங்கள் நிலையாமையை உணர்த்துகிறது மிகவும் மௌனமாக.. வாழ்க்கை பயணிகளோ அந்த மௌனமொழி புரியாமல் அலைகிறார்கள் தனது வாழ்வை சுமையாக்கி..அவர்களை எல்லாம் மாற்ற முடியாது.. ஆனால் நான் எனது ரசனையை விடுவதாயில்லை..

நான் சாலையின் ஓரத்தில் எனது வண்டியை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் அந்த கதிரவன் எழும் அழகை ரசித்தேன்.. நான் ரசிப்பதை பார்த்து அந்த கதிரவன் கொஞ்சம் நிம்மதி அடைந்தது..ஏதோ இவனாவது தனது உதயத்தில் மனதை பறிக்கொடுக்கிறானே என்று..அது முழு முகம் எப்போது வந்தது என்று எனக்கு தெரியவில்லை.நான் அந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்று நிகழ்ந்த நொடிப் பொழுதை தேடுகிறேன் மிகவும் சுவாரஸ்யமாக.. சூரியன் ⛅ அழகாக சிரித்தது..எனது தேடுதலை பார்த்து..உனது தேடலை நான் ரசிக்கிறேன் என்று நட்போடு ஒளியால் ஆசீர்வதித்தது.

மீண்டும் எனது தோழனை இயக்கி சாலையில் இறங்கினேன்.. கடந்து செல்லும் மனிதர்கள் எல்லாம் எனக்கு ரோபாக்களாகவே காட்சி அளித்தார்கள்..

அதை புன்முறுவலோடு ரசித்து கொண்டே சென்றேன்..

ரசனை பயணத்தில் திருமணம் நடைபெறும் கோயிலும் வந்தது.

அங்கே திருமண சடங்குகள் நிறைவேறிக் கொண்டு இருந்தது.என்னை பார்த்த பள்ளி கால நட்புகள் வந்து கைக்குலுக்கி வரவேற்றார்கள்.அவர்களை பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம் என்னை தொற்றிக் கொண்டது..ஒவ்வொருவரும் என்னை பார்த்தவுடன் நலம் விசாரித்தார்கள் மிகவும் ஆவலோடு..நானும் அவர்கள் நட்பில் கரைந்து திக்குமுக்காடி போனேன்.அங்கே கொஞ்ச நேரம் எங்கள் பள்ளி கால பழைய  கதைகளை பேசி சிரித்து கொண்டு இருந்தோம்..

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.. என்ற பாடல் இன்றும் கூட மிகவும் பொருத்தமாக இருக்கிறது..என்பதை உணர்ந்தோம்..

பலபேரின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது..சிலபேரின் கதை வேடிக்கையாக இருந்தது..

லாவண்யா திருமண சடங்குகள் வேலை முடிந்தவுடன் எங்களோடு கொஞ்ச நேரம் பேசினாள்.அவள் கண்ணில் தனது மிகப்பெரிய கடமை முடிந்ததாக நினைத்த நிம்மதி உணர்ந்தேன்.பிறகு இருக்காதா பின்னே..ஒரு பெண்ணை நல்லபடியாக வளர்த்து நல்ல பண்புள்ள பையனின் கையில் ஒப்படைப்பது சாதாரண காரியமா என்ன.. கண்டிப்பாக மிகப் பெரிய சாதனை தான்..

நான் அப்படியே லாவண்யாவை பார்க்க சென்றேன்.. அவள் மிகவும் இயல்பாக நன்றாக இருக்கிறாயா மதி என்று கேட்டாள்.. என் கண்களை நேருக்கு நேராக பார்த்து..எந்தவித பதட்டமும் இல்லாமல்..அந்த பள்ளி கால பயத்தை தேடினேன் அவளிடம்.அது சுத்தமாக அவளிடம் இல்லை..அவளை பற்றி இங்கே அவர்கள் உறவினர்களிடம் நான் சொல்லலாமா என்று நினைத்தேன்.. (அதாவதுஅவளுடைய பயந்த சுபாவத்தை பற்றி..)அதை பற்றி நான் இங்கே சொன்னால் என்னை வேடிக்கையாக தான் பார்ப்பார்கள்..அது மட்டும் இல்லை.சிரித்து மகிழ்வார்கள்..அப்படி இருந்தது அவள் நடவடிக்கை.. காலம் தான் எல்லோரையும் எப்படி மாற்றுகிறது பாருங்கள்!

திருமண விருந்தை வெளியே ஓர் உணவகத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அங்கே சென்று சாப்பிட்டு விட்டு எனது பள்ளி கால நட்புகளிடம் விடைபெற்று லாவண்யாவிடமும் சொல்லி விட்டு செல்ல வந்தேன்..

அங்கே அவளது கணவரை லாவண்யா ஏதோவொரு தவறுக்காக திட்டிக் கொண்டு இருந்தாள்.. நான் அவளிடம் வந்தேன்.. அவள் திட்டுவதை கொஞ்ச நேரம் ஒத்தி வைத்து விட்டு சொல் மதி.. சாப்பாடு நன்றாக இருந்ததா என்றாள் சிரித்துக்கொண்டே.. நன்றாக இருந்தது லாவண்யா..நீ என்னை மறக்காமல் திருமணத்திற்கு அழைத்தது மகிழ்ச்சி என்றேன்.. அவளும் உன்னை எவ்வாறு மறக்க முடியும்?.உனது பள்ளிகாலமிரட்டல் பார்வை தான் உன்னை எனக்கு ஞாபகம் வைத்திருக்க உதவியது என்றாள் வேடிக்கையாக..

எந்த நிகழ்வுகளும் இங்கே மறக்கப்படுவது இல்லை..எங்கோ ஓர் மூலையில் தேக்கி வைத்து அழகு பார்க்கப்படுகிறது என்று நினைத்து கொண்டு விடைபெற்றேன் அவளிடம் இருந்து.. மறக்காமல் இருக்கும் நினைவுகள் ஆனந்தம் தான் அது எந்த ரூபத்தில் இருந்தாலும் இல்லையா ..என்று யோசித்தபடியே எனது தோழனை நோக்கி சென்றேன்.அது இப்போதேனும் என்னை அசிங்கப்படுத்தாமல் வேகமாக இயக்கு என்றது மிரட்டலாக.. ஏனெனில் இது விடியற்காலை இல்லை..பல மனிதர்கள் சாலையை நிரம்பி வழிகிறார்கள் என்றது கூடுதல் தகவலோடே..

நான் சரி என்று தலையசைத்தேன்..வேறு வழி? இங்கே ஜடப் பொருட்கள் கூட கௌரவத்தை எதிர்பார்க்கிறது.தனது சுயத்தை விட்டு விடாமல் பயணிக்கிறது..மனிதர்களோ தனது சுயத்தை இழந்து ஜடமாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது..

என்ன அங்கே முணுமுணுப்பு.வா விரைவாக என்றது புல்லட்..இதோ வந்து விட்டேன் என்று வேகமாக அதன் மேல் ஏறி காற்றை கிழித்து பறந்தேன் படுவேகமாக.. என் முகத்தை வேகமாக அறையும் காற்றிடம் மன்னிப்பு கேட்டு கொண்டே..

மீண்டும் ஓர் பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (14).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக