பக்கங்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (9).

 


✨இந்த இரவு எப்போதும் எனக்கு ஏதோவொரு அமைதியை தருகிறது.பலருக்கு இரவு என்பது கவலைகளை அசைபோட வைக்கிறது; பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது; இன்னும் பலருக்கு அன்றைய தினத்தில் எவரோ மனதை நோகடித்த அந்த நேரத்தை ஞாபகப்படுத்துகிறது; இளைஞர்களுக்கு காதலை அனுபவிக்க தருகிறது; இன்னும் எத்தனை எத்தனை நிகழ்வுகளை இந்த இரவு சுமக்க வேண்டி உள்ளது.. ஆனால் அந்த இரவோ அதில் எதிலும் ஒட்டாமல் என்னோடு பயணம் செய்யவே விரும்புவதாக எனக்கு பல சமயங்களில் தோன்றுகிறது.ஏனெனில் எந்தவித சுவடுகளையும் அதன் மேல் திணிக்காமல் அதை மட்டும் ரசிப்பதால் கூட இருக்கலாம்..

இரவு உணவை முடித்துக் கொண்டு அப்படியே காலாற மொட்டை மாடியில் நடக்கிறேன்.தென்றல் எனது அனுமதி பெறாமலேயே என்னை தீண்டி மகிழ்ந்தது.


வானொலியில் பிபி சீனிவாசன் குரல் வசீகரிக்க கேட்டு கொண்டே நடக்கிறேன்.. இசையோடு பயணம் செய்வதில் தான் எவ்வளவு சுகம்..என்று நினைத்துக் கொண்டே..

இரவின் சுகத்தில் திளைக்கும் என் மேல் எவரோ பொறாமை கொண்டார்கள் போல..

எனது அலைபேசி அழைத்தது.. நான் அதை எடுத்து பார்த்தேன்.. பள்ளி கால தோழன் சுரேஷ் தான் அழைத்து இருந்தான்.. காதில் வைத்து வணக்கம் மாப்ளே.. என்றேன்..

வணக்கம் மதி..நீ நலமா என்றான்.நான் நலமே நீ எவ்வாறு இருக்கிறாய் என்றேன்.நானும் நலமே.என்ன செய்கிறாய்.. ஏதேனும் வேலையாக இருந்தால் பிறகு அழைக்கவா என்றான்..

அதெல்லாம் ஒன்றும் இல்லை..மாப்ளே..இங்கே நானும் இந்த இரவும் மௌனமாக பேசிக் கொண்டு இருக்கிறோம்.இதில் என்ன பிரச்சினை என்றால் எப்போது நான் உன்னோடு சுகமாக உரையாடும் போதும் எவரோ நமது தனிமையை கெடுக்க வந்து விடுகிறார்கள் என்று இரவு முணுமுணுக்கும்..வேறு ஒன்றுமில்லை..இரவெனும் தோழியை நான் பிறகு சமாதானம் செய்து கொள்கிறேன்..நீ பேசு என்றேன்..கலகலவென சிரித்தபடியே..

இதை கேட்ட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..ஏதோ எனக்கு ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டான் போலும்..

என்ன சொல்கிறாய் மதி.. ஒன்றும் புரியவில்லை என்றான்.

அது ஒன்றும் இல்லை.இரவும் நானும் மௌனமொழியை பகிர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.இப்போது நீ அழைத்து விட்டதால் அதற்கு கோபம் வந்து விட்டது.அதுதான் அப்படி சொன்னேன் என்றேன்.

அடடா..நீ இரவோடு எல்லாம் பேசும் அளவுக்கு உனக்கு நேரம் இருக்கிறது போலும்.. அவனவன் வாழ்க்கை எப்படி நடத்துவது என்று நொந்து போய் இருக்கிறான்..நீ இரவோடு சாவுகாசமாக உரையாடல் நடத்தி கொண்டு இருக்கிறாய்.வாழ்க்கையை ஓர் ரசனையோடு வாழ வேண்டும் என்று நீ புரியாத வயதில் ஏதேதோ சொன்னது எல்லாம் இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது..நீ மட்டும் எப்படி அப்போது இருந்து இப்போது வரை மாறாமல் அப்படியே இருக்கிறாய்..ஆச்சரியம் தான் டா..என்றான்..நீகொடுத்து வைத்தவன் கூட தான் என்றான்.

அதெல்லாம் ஓர் கொடுப்பினை தானே மாப்ளே.. நீ சொல்வது போல் ஒருவரின் இயல்பு எல்லாம் அவ்வளவு எளிதில் மாறாது..நாம் நமது குணாதிசயத்தை மாற்றாமல் எப்படி மாறும் என்றேன்..அதுசரி.நீ என்ன காரணத்திற்காக அழைத்தாய்..அதை சொல் என்றேன்..

ஒன்றும் இல்லை..மதி... சும்மா தான் அழைத்தேன்..பேசி நாட்கள் ஆகிவிட்டது என்று தான் அழைத்தேன்.. ஏன் உன்னை அழைக்க கூடாதா என்றான்..

அப்படி எல்லாம் இல்லை..நீ எனது நண்பன் தானே..நீ அழைக்காமல் வேறு யார் இப்படி ஞாபகத்தோடு அழைப்பார்கள்..என்று அவனை நகைச்சுவையாக கலாய்த்து விட்டு தொடர்ந்தேன் எனது பேச்சை..

அதுசரி மகிழ்ச்சி.. வீட்டில் அனைவரும் நலமா.அம்மா மனைவி குழந்தைகள்.. எல்லோரும் நலமா.. என்றேன்.

அனைவரும் நலம் மாப்ளே.. என்ன குழந்தைகள் தான் எது வேண்டும் என்றாலும் உடனே வாங்கி தர சொல்லி ஒரே பிடிவாதம்.. அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..இதை எனது வீட்டில் கூட கேட்டு விட்டேன் எனது தாயாரிடம்..நான் கூட சிறுவயதில் இப்படி தான் இருந்தேனா என்று..அதற்கு எனது தாயார் சொன்ன விசயம் தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது..அவர்கள் நான் உனக்கு பொம்மை எல்லாம் எங்கடா வாங்கினோம்..ஒரு டம்ளர் கரண்டி கொடுத்து விடுவோம்..அதை தட்டிக் கொண்டே இருப்பாய்..நான் எனது வேலையை முடித்து வரும் வரை என்றார்களே பார்க்கலாம்..எனக்கு தலை சுற்றியது..மாப்ளே என்றான்..

இப்போது என்னடா என்றால் கடைவீதியில் கண்டதையும் கேட்கிறார்கள்..வாங்கி தரவில்லை என்றால் ஒரே அழுகை அழுது மானத்தை வாங்கி விடுகிறார்கள்...

அதுதான் எனக்கு இப்போது மன உளைச்சல் என்றான்..

மாப்ளே நீ மட்டும் இல்லை.நிறைய பேர் இப்படி தான் தவிக்கிறார்கள்.குழந்தை எதை கேட்டாலும்உடனே  வாங்கி தந்தால் தான் நம் மேல் பாசம் இருக்கும் என்று நம்புபவர்கள் இங்கே அதிகம்..இது ஓர் உளவியல் நோய்.இதை சொன்னால் எவரும் கேட்பதே இல்லை.. என்றேன்.. மேலும் இதை பற்றி அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் பெரும்பாலும் பெற்றோர்கள் சொல்வது ஒரே விசயம் தான்..அது என்ன என்றால்  குழந்தைகளுக்காக தானே இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்..என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்கள்.. என்றேன்..

ஆம் மாப்ளே.அதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.. ஆனால் இப்போது இதை சமாளிக்க முடியாமல் தவிக்கிறேன்.கோபம் கோபமாக வருகிறது என்ன செய்ய.. என்றான் மிகவும் பரிதாபமாக.

நீயும் நானும் எவ்வாறு வளர்ந்தோம் ஞாபகம் உள்ளதா.நமது தலைமுறைக்கு வருடத்தில் இரண்டு உடைகள் கிடைப்பதே அதிகம்.அதை ஆவலோடு அனுபவித்து போடுவோம்.. இப்போது உடை கடையே ஒவ்வொரு வீட்டிலும் வைத்து விடலாம்.அந்தளவுக்கு ஆடை குவியல்கள் அதிகம்.. இப்படி தேவையில்லாத செலவுகள் நம்மையும் மீறி நமது குடும்பத்தில் நடப்பதை நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது இல்லையா என்றேன்.

ஆமாம் மதி.மனைவி ஜவுளி கடைக்கு போனால் இந்த உடை நன்றாக உள்ளது அந்த உடை நன்றாக உள்ளது என்று ஜவுளிக்கடையை மொத்தமாக விலை பேசாத குறையாக வாங்கி வருகிறார்கள்.. கேட்டால் இதைத் தானே உங்கள் சம்பாத்தியத்தில் அனுபவிக்க முடிகிறது.. அதற்கும் தடை போட்டால் எப்படி என்று கேட்கிறார்கள்.. மேலும் எதையும் அளவுக்கு அதிகமாக அனைத்தையும் வாங்கி அதை பாதியிலேயே பயன் படுத்தாமல் தூக்கி எறிந்து விடுவது சாதாரண விசயமாகி விட்டது..

உலகம் வேகமாக ஓடுகிறது.நாமும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஓட வேண்டும் என்று நாம் மன கற்பனை செய்து கொண்டு உள்ளோம்.அதன் விளைவு ஒருமுறை பயன் படுத்தி தூக்கி எறியும் பொருட்கள் இங்கே அதிகம்...நமது வீட்டில் கூட.உதாரணமாக முக சவரம் செய்யும் பொருள்.. நாம் அதற்கு ஓர் செட் வைத்து பயன் படுத்தி வந்தோம்.. மீண்டும் மீண்டும் பிளேடை மட்டும் மாற்றி பயன் படுத்தி வந்தோம்.நமது பிள்ளைகள் அப்படியா.. நடக்கிறது.. இங்கே இதை ஓர் சின்ன விசயமாக கடந்து சென்று இயற்கை அன்னையை சீரழிக்கிறோம் என்பது எவருக்கும் ஏன் புரிய மாட்டேன் என்கிறது.. இந்த ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் சமாச்சாரம் ஓர் வியாபார உத்தி..அதை இந்த சோம்பேறிகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்..எல்லாமே இங்கே நாகரிகம் என்கின்ற போர்வையில் நடப்பது தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்றேன்.

ஆம்.. உண்மை தான் மாப்ளே.. வாழ்வியலை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் நாகரிகம் என்கின்ற ஒற்றை சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு நமது தலைமுறையை ஒழுங்குப்படுத்த மறந்து விட்டு நாம் நமது இயற்கை எனும் தாயை குறை சொல்கிறோம் அல்லவா என்றான்.

நாமும் நமது குழந்தைகளுக்கு நிறைய இயற்கை பற்றிய புரிதலை சொல்லி கொடுக்க வேண்டும்.. இயற்கை பற்றி

பலவிசயங்களை நமது குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.அதாவது பொருட்கள் பின்னால் போவது ஒன்று தான் வாழ்க்கை என்று அவர்கள் புத்தியை மழுங்கடித்து விட்டோம்.நாமே தவறு செய்து விட்டு பழியை பிள்ளைகள் மேல் போட முயற்சி செய்யக் கூடாது.இல்லையா..எப்போதும் குழந்தைகளை இயற்கையோடு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.. இப்போது இந்த இரவை ரசிக்க கற்றுக் கொடுப்பவர்கள் எத்தனை பேர்?? விடியற்காலை பொழுதை அழகாக துதித்து அந்த இனிமையை அணுஅணுவாக ரசிக்க கற்றுக் கொடுப்பவர்கள் எத்தனைபேர்? இங்கே நமக்கு பொறுமை சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இல்லையா.. என்றேன்.

ஆம் மிகவும் உண்மை.நமக்கு பிள்ளைகள் தொல்லை கொடுக்கும் போது தற்காலிக தொந்தரவு தள்ளி போடலுக்காக அலைபேசியை கொடுத்து விட்டு அதற்கு அந்த குழந்தைகளை அடிமையாக்கும் குற்றவாளிகள் நாம் தான்.. என்றான்..

இப்போது உணர்கிறாயா.. வாழ்வியல் ஓர் கலை..அதை நாமே மறந்து எதையோ தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம்.. அந்த மாயவலையில் நமது பிள்ளைகளையும் ஓட ஊக்குவிக்கிறோம்.. அதன் விளைவாக அவர்கள் பிடிவாத போக்கை ஊக்குவிக்கிறோம்.. ஒரு பொருளை கேட்டால் அதை உடனே வாங்கி கொடுக்காமல் தேவை என்றால் வாங்கி தரலாம்.. இல்லை என்றால் கண்டிப்பாக கிடையாது என்று சொல்லி விடலாம்..அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்லி புரிய வைத்து..

வாழ்க்கை ஓர் அரிய கலை.. அதில் குழந்தை வளர்ப்பது அதிலும் சிறந்த கலை.. இந்த கலையை அழகாக கையாள்பவர்கள் புன்முறுவலோடு வாழ்வை ரசித்து கடக்கிறார்கள்.இந்த கலையை கையாள தெரியாதவர்கள் வாழ்வியல் சுழல் எனும் சுழலில் மாட்டிக் கொண்டு திணருகிறார்கள்.. அவ்வளவு தான் என்றேன்.

அதுசரி மாப்ளே.. இவ்வளவு அழகாக குழந்தை வளர்ப்பு பற்றி சொல்கிறாயே.நீயோ பிரம்மச்சாரி.. இதில் இவ்வளவு நுணுக்கங்கள் எவ்வாறு கற்றாய் என்றான் ஆச்சரியமாக..

நான் அதற்கு எல்லாம் அனுபவம் தான் வேண்டும் என்று அவசியம் இல்லை .. சுற்றுப்புற சூழலில் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள் எனும் நாடகங்களை கூர்ந்து கவனித்தாலே போதும் என்றேன்..

மிகவும் அருமை..மாப்ளே.. நான் குழந்தை வளர்ப்பில் இனி கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என்றான்.

நிச்சயமாக.. வாழ்க்கை ரொம்ப ஆனந்தமயமானது..அது ஜடபொருட்களில் இல்லை என்று சொல்லி வளர்க்க முயற்சி செய்.. வாழ்த்துக்கள் என்றேன்.

மிகவும் மகிழ்ச்சி மாப்ளே.. உன்னோடு பேசியதில் மகிழ்ச்சி இனிய இரவாகட்டும்..என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டு மீண்டும் வானொலி கேட்டு கொண்டே நடந்தேன்..

இரவு என் மேல் கோபத்தை மறந்து என்னை ரசித்தது.

நான் அதனிடம் ஏன் கோபம் கொள்ளவில்லை என்றேன்.

என்னை ரசிக்க இருக்கும் ஒரே மனிதனையும் நான் கோபித்துக் கொண்டு இழக்க விரும்பவில்லை என்றது புன்னகைத்து கொண்டே.

நானும் மகிழ்வோடு அதனிடம் விடை பெற்றேன்.. கொஞ்ச நேரம் அதனோடுஉரையாடி விட்டு..

மீண்டும் சந்திப்போம் அடுத்த சந்திப்பில் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (9).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக