இன்று சுந்தரி கார்டன் என்கின்ற படம் பார்த்தேன்.. மிகவும் அருமையான மெல்லிய உணர்வை நமக்குள் பிரதிபலிக்கும் படமது.. ஒரு விவாகரத்து ஆன பெண்ணின் கதை.. மிகவும் அழகாக எடுத்து சென்று இருக்கிறார் இயக்குனர்..
கதாநாயகி படம் முடிந்த பிறகும் நம் மனதில் மெல்லிய உறவாடுவார்.. ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு மெல்லிய எண்ணம் கொஞ்சம் கதாநாயகி மனதில் உதித்து அது கூடி வருவது போல கூடாமல் இறுதியில் கதாநாயகன் கதாநாயகியை சென்று பார்த்து உரையாடும் போது சொல்லும் வார்த்தைகள் அழகு.. ஒரு வாழ்வை வாழ துணை அவசியம் இல்லை தான்.. உனக்கு நான் தேவையில்லை.. ஆனால் எனக்கு நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லி முடியும் அந்த படத்தின் கதை..
இந்த படத்தில் அந்த கதாநாயகியின் விவாகரத்து வலியை கதாநாயகனிடம் விவரிக்கும் போது இதோ இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று நம்பினேன்.. ஆனால் எதுவும் சரியாகவில்லை என்று சொல்லும் போது ஒரு பெண்ணாக என்னால் அவள் வலியை உணர முடிந்தது.. ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக வாழும் அவளின் மன வலிமை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. ஆமாம்.. வாழ்வில் திருமண பந்தம் முடிந்து விட்டால் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுவதும் சோக கீதம் வாசிக்க வேண்டுமா என்ன? வாழ்வின் ஒரு துளியின் ஸ்பரிசத்தில் சமுத்திரத்தை உணர முடியாது.. வாழ்க்கை சமுத்திரம் போன்றது.. வாழ்வில் ஏற்படும் வலி ஒரு சிறு துளி போன்றது..
படத்தை பார்த்து விட்டு எழும் போது ஏனோ அந்த கதாநாயகியின் கதாபாத்திரம் மட்டும் அப்படியே மனதில் ஒட்டிக் கொள்கிறது.. நீங்களும் பாருங்கள்.. இப்படியான வாழ்வியலின் மறுபக்கத்தை உணர்த்தும் படங்கள் தமிழில் எப்போது வருமோ 😔..
#சுந்தரிகார்டன்
#திரைவிமர்சனம்
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக