பக்கங்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2022

அவளோடு ஒரு பயணம்

 


அவளோடு ஓர் பயணம்(4):-

அன்று மாலை நதியை பார்த்தது தான்.. கொஞ்சம் வேலை காரணமாக மீண்டும் அவளை அலைபேசியில் கூட தொடர்புக் கொள்ளவில்லை.எனக்கும் கொஞ்சம் வேலை அதிகம். நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகிறோம் என்றாலும் வெவ்வேறு கட்டிடங்கள். அதனால் அவளை சந்தித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை. அவளை போய் பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்து பிற்பகலில் அவள் வீட்டுக்கு சென்றேன் எனது புல்லட்டில்..இந்த வண்டியில் போவதே ஓர் கெத்துதான்..என்று மகிழ்ந்து கொண்டே சாலையில் இலகுவாக பயணித்து அவள் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்தினேன்.

  அவள் ஏதோ கர்னாடிக் பாடிக்கொண்டே கதவை திறந்தாள்.என்னை பார்த்தவுடன் ஓர் வழக்கமான புன்னகை உதிர்த்து விட்டு உள்ளே வர அனுமதித்தாள்.


நான் என்ன பாடல் எல்லாம் பலமாக உள்ளது இந்த மதிய நேரத்தில் என்றேன்.. ஆமாம் கிருஷ்.எனக்கு முத்துசாமி தீட்சிதர் கிருதி மிகவும் பிடிக்கும் என்றாள்.எப்போதாவது அந்த கிருதியை ஸ்வரம் மாறாமல் பாடும் போது மனதில் ஓர் அமைதி நிலவும். அதுதான் அந்த பாடல்.. பாடினேன்.

  சரி நாளை சோமவாரம் எங்கள் குடும்பம் பூசை கொடுக்கிறது நமது ஏரியாவில் உள்ள சிவன் கோயிலில். நீ வருகிறாயா..உன்னை நாளை பூசைக்கு அழைப்பு விடுக்கதான் வந்தேன்.. என்றேன்.

 அவளோ பூசையா..அதெல்லாம் நான் வரவில்லை கிருஷ்.நீ பூசை முடித்து சுண்டல் பொங்கல் பிரசாதம் மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எடுத்து வந்து கொடுத்து விடு என்றாள்..தனது துவைத்த துணிகளை மடித்தபடி..

 நானோ இந்த பதிலை எதிர்பார்த்து இருந்தேன். ஆனாலும் காரணம் தெரிந்து கொள்ள மட்டும் ஆவல்.. ஏன் வரமாட்டாய் கோவிலுக்கு. அதுதான் இவ்வளவு பக்தியாக தீட்சிதர் கிருதியெல்லாம் பாடுகிறாயா என்றேன்.

 எனது கேள்வியை கேட்டு விட்டு ஏதோ வேண்டாத நகைச்சுவை சொன்னது போல விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அவளை புரியாமல் பார்த்து கேட்டேன் ஏன் சிரிக்கிறாய்.நான் காரணத்தைதானே கேட்டேன் என்றேன்.

அவள் அதற்கு தீட்சிதர் கிருதி பாடினால் கோவிலுக்கு வர வேண்டும் என்று ஏதாவது உள்ளதா என்ன என்று என்னையே திருப்பி கேள்வி கேட்டாள்.

 நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். அவளே எனது நிலையை பார்த்து தொடர்ந்தாள்.

கிருஷ் நீ கோவிலுக்கு நாளை சென்று என்ன செய்வாய் என்று கேட்டாள்.

நான் அங்கே சென்று இறைவா இந்த வருடத்தில் எனக்கு புரோமஷன் வரனும். மேலும் எனக்கு விரைவில் நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடு என்று கேட்பேன் என்றேன்.

 அதற்கு அவள் அப்படி நீ கேட்டு விட்டால் அவர் தந்து விடுவாரா என்று நக்கலாக கேட்டாள். நானோ தெரியவில்லை ஆனால் தந்தால் மகிழ்வேன் என்றேன்.


 அவள் புன்னகைத்தபடியே வேண்டுதல் எதுவும் இல்லாமல் இறைவனை வழிபட இயலாதா உன்னால் என்றாள்.நானோ என்னால் இயலாது..ஏனெனில் எனக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் நான் பூசை செய்தால் என்றேன். அவ்வாறு கிடைக்காவிட்டால் இறைவனை திட்டுவாயோ என்றாள் நகைத்தபடியே..வேறு என்ன செய்ய சொல்கிறாய் என்றேன் கொஞ்சம் கோபமாக.

கிருஷ் கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதை கேள்.நீ பூசை செய்ய சொல்லி அந்த இறைவன் உன்னிடம் கேட்டாரா என்றாள்.இல்லை என்றேன்.

 பிறகு நீ இறைவனை ஏன் குறை சொல்கிறாய்.அவர் கேட்காமலேயே நீ பூசை செய்து படையல் போட்டு விட்டு அவரிடம் ஓர் கோரிக்கை வைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றாள்.மேலும் அவள் தொடர்ந்தாள்.நீ செய்வது எப்படி இருக்கிறது தெரியுமா.தெருவில் நாம் பாட்டுக்கு போகும் போது உன்னை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து ஓர் பொருளை கொடுத்து விட்டு நீ வாங்கிய இந்த பொருளுக்கு நீ விலை கொடுத்து தான் போக வேண்டும் என்று சொல்வது போல உள்ளது.. அவ்வாறு செய்தால் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று கேட்டாள்.அதெப்படி முடியும் என்றேன் மிகவும் அவசரமாக. உன்னால் முடியாது என்றால் வலுக்கட்டாயமாக நீ ஓர் பூசையை செய்து இறைவனிடம் கோரிக்கை ஒன்றை அவர் அனுமதி இல்லாமல் வைத்து அதை நிறைவேற்று என்று எவ்வாறு ஆணையிட முடியும் என்றாள் மிகவும் தெளிவாக.

இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.அமைதியாக இருந்தேன்.

 கிருஷ் பிரார்த்தனை என்பது இல்லாமல் அந்த இறைவனை மானசீகமாக பூசை செய்து பார்..உன் வாழ்க்கையில் நீ கேட்காமலே கோரிக்கை வைக்காமலே இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கலாம். நீ ஏதோ பிரார்த்தனை என்று வைத்தால் அந்த பிரார்த்தனை ஏதேச்சையாக நடந்தும் விடும் போது அடுத்த பிரார்த்தனை என்ன வைக்கலாம் என்று உனது மனது தேடும்.அப்புறம் பிரார்த்தனை மட்டுமே உனது செயலாக இருக்கும்.. அது ஓர் இயந்திரதனமானது.


எந்த பிரார்த்தனையும் இல்லாமல் எல்லாமே முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று. இதில் நாம் ஏன் தலையிட்டு மாற்றத்தை வேண்டி அந்த இறைவனை கெஞ்ச வேண்டும்?நடப்பதை ஏற்றுக்கொள்ளும் போது உன் பூர்வஜென்ம கர்மா கழியும் தானே..மேலும் இறைவனை மட்டும் நாடும் நெஞ்சில் அந்த இறைவன் திருக்காட்சியில் உன்னை மறந்து ஆனந்தம் அடையலாம். கொஞ்சம் யோசித்து பார் என்று சொல்லி கொண்டே சமையலறையில் சென்று வெங்காய பக்கோடா சூடாக போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.நானும் அதை ருசித்து கொண்டே அவள் சொன்ன விசயத்தை சிந்தித்தேன்.. இதை வீட்டில் போய் சொன்னால் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.. ஆனால் அவள் சொன்ன விசயம் எனக்கு பிடித்து இருந்தது.. கூடிய விரைவில் தனது குடும்பத்திலும்புரிந்து கொள்ள கூடும்..என்று நினைத்தபடியே சரி நதி நான் கிளம்புகிறேன்..அம்மா கேட்டால் அவளுக்கு வேலை என்று சொல்லி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வாசற்புறத்தை அடைந்தேன். அவளும் பின்னாடியே வந்து வழியனுப்பி வைத்து ஒரு கையசைத்து புன்னகையோடே உள்ளே சென்றாள்..

நானும் இவளிடம் நான் எப்போது வந்தாலும் எதையோ ஒன்றை கற்பித்து அனுப்பி விடுகிறாள் என்று மனதில் எண்ணிக்கொண்டே வண்டியில் பயணித்தேன் எனது வீடு நோக்கி...

#மீண்டும்பயணிக்கலாம்அவளோடுகாத்திருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக