பக்கங்கள்

வியாழன், 17 நவம்பர், 2022

அவளோடு ஒரு பயணம்


 அவளோடு ஓர் பயணம்:-

அந்திமாலையில் நதியின் வீட்டை நோக்கி என்கால்கள் நகர்ந்தது..என் அலுவலக பணி முடித்துவிட்டு..

சாலையில் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.. எவரும் நிதானமாக சாலையை கடந்து செல்லவில்லை. இந்த நேரத்தில் நதி என்னோடு இருந்திருந்தால் ஏதாவது தத்துவ ஆராய்ச்சி செய்ததை சொல்லி இருப்பாள் மக்கள் இவ்வாறு ஓடுவதை பார்த்து. நல்ல வேளை அவள் தற்போது தன்னோடு இல்லை என்று ஓர் புன்னகை செய்தபடி சாலையை கடந்து நதியின் வீட்டை அடைந்தேன்.

  கொஞ்சம் ஆவலாக இருந்தது என்ன தான் இன்று அலுவலகம் வராமல் செய்து கொண்டு இருப்பாள் என்று.

  வீடு முழுவதும் தேடினேன் அவள் எங்கும் காணவில்லை. நான் வந்ததை கவனித்து இங்கே வா கிருஷ் என்றாள். அவள் அழைத்த திசையை நோக்கினேன். ஏதோ செடி ஒன்று நட்டு வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் வீட்டு பின்புறம் உள்ள சிறுநந்தவனத்தில்.

நான் ஆவலாக என்ன செடி இது நதி என்றேன்.

அவளோ இது ஓர் ரோஜா செடி என்றாள்..உனக்கு தான் ரோஜாவே பிடிக்காதே..நீ தலையில் எந்த பூவையும் சூடி நான் பார்த்ததே இல்லை..என்றேன் ரொம்ப பாவமாக.

 அவள் நான் இந்த ரோஜாவை இப்போது வைத்தது நான் சூடிக்கொள்ள அல்ல.. நான் இங்கே இந்த தோட்டத்தில் வந்து உலாவும் போது இது காற்றில் அசைந்து என்னை வரவேற்கும். அந்த வரவேற்பு என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இப்போது எல்லாம் நீ எவர் வீட்டுக்கு சென்றாலும் பெரும்பாலும் அவர் அழைக்காமல் இருக்கும் போது நீ சென்றால் வரவேற்பு ஏதோ வேண்டாவெறுப்பாக இருப்பதை கவனித்து இருப்பாய் அல்லவா..எனக்கு அந்த அனுபவம் நிறைய நடந்து உள்ளது. ஒருவேளை உனக்கு அந்த அனுபவம் நிகழாமல் கூட இருக்கலாம் என்று சொல்லி கொண்டே அதற்கு நீர் நிற்பதற்கு கரை கட்ட தொடங்கினாள்..என் பதிலை எதிர்பார்க்காமலேயே.

  நான் அவ்வாறு எனக்கும் நடந்து இருக்கிறது எனது உறவுகள் மத்தியில். ஏனெனில் நான் அப்போது ஓர் வேலை இல்லா பட்டதாரி.. என்றேன் புன்னகைத்து கொண்டே.

அதற்கு அவள் சிரித்து கொண்டே சொன்னாள் இப்போது கூட நீ வேலை இல்லாமல் எங்கேயேனும் போனாய் என்றாலும் அதே கதிதான்..கிருஷ்.அது எப்போதும் மாறப்போவது இல்லை என்றாள் புன்னகை மாறாமலேயே..

சரி அதற்கும் இப்போது நீ இந்த ரோஜா செடி நடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றேன் புரியாமல்.

அதுவா நீ எப்போது இங்கே வந்தாலும் உனக்கு வேலை இருக்கிறதா எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று எல்லாம் இந்த ரோஜா செடி கேட்காது.தனது மலர்ந்த புன்னகை மாறாத முகத்தோடு உன்னை வரவேற்கும்.. இதற்கு இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு தெரியாது என்றாள்.கரைகட்டி முடிக்க உதவிய அந்த மண்வெட்டியை எடுத்து சென்று கழுவிக்கொண்டே.

நான் ஆமோதித்து அந்த செடியை கொஞ்சம் வருடிக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதுவும் தனது பாசத்தாலேயே என்னை முள்ளால் கொஞ்சம் கீறியது.இதுவும் ஓர் அன்பு கீறல் தான் என்று நினைத்து நகர்ந்தேன்.கீறிய கையை தடவியபடியே.

  அதற்குள் அவள் அழைப்பு வர இதோ வந்து விட்டேன் என்று நகர்ந்தேன்.. கையில் தேநீர் கோப்பையோடு தோட்டத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.

  நான் அவள் போட்ட தேநீரை பருகினேன். இன்று கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கிறது நதி என்றேன் புன்னகைத்து.

 தேநீர் எப்போதும் சுவைதான். நாம் தான் அதை ரசித்து பருக நேரம் இல்லாமல் வேகமாக பருகி அதன் மரியாதையை குறைக்கிறோம் என்றாள்.

   நான் புன்னகைத்து கொண்டே சரிதான் என்று தலையாட்டினேன்.

 அவள் என்னருகில் அமர்ந்து பறவைகளின் ஒலியில் இசையை கேட்டு ரசித்தாள்.தோட்டத்தில் பறக்கும் பறவைகளின் ஒலியில் தன்னை மறந்து தலையாட்டிக்கொண்டே நடந்தாள் மிகவும் மெதுவாக.

கொஞ்ச நேரம் நான் அவள் மென்னடையை ரசித்து கொண்டே அவளிடம் நாளை அலுவலகத்தில் பார்க்கலாம் என்றேன். இனிமையான அந்த தருணத்தில் இருந்து விடைபெற்றபடியே.

பார்க்கலாம் என்றாள் பறவைகளிடம் இருந்து தன் கண்களை விலக்காமலேயே..

இவள் ஓர் அதிசயம் தான் என்று என் வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.

மீண்டும் அவளோடு பயணம் நாளைக்கு .

#அவளோடுஓர்பயணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக