பக்கங்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஒரு பசுவின் கதறல்

 இன்று அதிகாலை ஒரு நான்கு முப்பது இருக்கும். ஒரு நிகழ்வு... மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்து இருந்தது.பக்கத்து வீட்டில் மாட்டு பட்டியில் வேறொருவரின் மாடுகள் கட்ட அனுமதித்து இருந்தார்கள்.. அந்த மாடு கன்று ஈனும் நிலையில் இருந்தது.. நாங்கள் மாடியில் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் அந்த பசுவின் கதறல் எங்களை எழுப்பி விட்டது.. ஏன் பசு கதறுகிறது என்று வேகமாக எழுந்து வெளியே வந்து பார்த்தோம் நானும் என் கணவரும்.மாடியில் இருந்து அவர்கள் மாட்டு பட்டி கொஞ்சம் தெரியும்.நான் ஏதோ பாம்பு வந்திருக்குமோ அதனால் தான் கத்துகிறதோ என்று நினைத்தேன்.. ஆனால் அது மிரண்டு கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் கூர்ந்து கவனித்த போது தெரிந்தது..கன்று ஈனும் நிலையில் உள்ள பசு என்று.ஆனால் அது கன்றை ஈன்று விட்டது.. எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து.. பிறகு பக்கத்து வீட்டுக்காரருக்கு அலைபேசியில் அழைத்து விசயத்தை சொன்னோம்.. சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் அலைபேசியில் சொல்லி விட்டார்.. நல்ல வேளையாக உடனடியாக வந்து விட்டார்கள்.இங்கே எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..மாடு என்பது ஒரு உயிருள்ள ஜீவன் தானே..அது கன்று ஈனும் நிலையில் இருக்கும் போது மாடு இருக்கும் இடத்தில் தானே படுத்து உறங்க வேண்டும்.ஆனால் மாடு ஒரு பக்கம் உரிமையாளர் ஒரு பக்கம்..நினைக்கவே கோபமாக வருகிறது.அதன் கதறல் எனக்கு உயிர் வலியை தந்தது..நானோ விரைவாக அலைபேசியில் அழைத்து விசயத்தை சொல்லுங்கள் என்கிறேன்.என் கணவரோ கொஞ்சம் பொறுமையாக இரு இளையவேணி என்று என்னை அமைதிப்படுத்துகிறார்.எனக்கு அவர்கள் வரும் வரை பதட்டமாக இருந்தது.என் கணவருக்கும் எனக்கும் சண்டையே வந்து விட்டது..நீ இவ்வளவு பதட்டம் அடையாதே என்கிறார்.அது எப்படி பதட்டம் அடையாமல் இருக்க முடியும்?

இதே வேளையில் மாட்டின் உரிமையாளர் மனைவி இப்படி கர்ப்பமாக இருக்கும் போது விட்டு விட்டு அமைதியாக உறங்கிக் கொண்டு இருப்பாரா?

கலி யுகத்தில் மாடு மற்றும் மற்ற ஜீவ ராசிகள் இவர்களிடம் படும் பாடு என்ன சொல்வது..

இப்போது மாடு என்பது ஒரு உயிருள்ள ஜீவன் என்பதை மறந்து அதை வருமானம் ஈட்டும் ஒரு ஜடமாக கருதுவது மனதிற்கு மிகவும் துன்பமாக உள்ளது..

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாடு கன்று ஈன்ற அடுத்த ஐந்து அல்லது பத்துநிமிடத்தில் கன்று எழுந்து உற்சாகமாக ஓட ஆரம்பிப்பது பார்க்கவே மிகவும் பரவசமாக இருக்கும்.. ஆனால் இந்த கன்று இப்போது வரை எழுந்திருக்கவே இல்லை..ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.நான் சிறு வயதில் இருக்கும் போது காலையில் பால் கறந்தவுடன் வீட்டுக்கு போக கன்றிற்கு தான் விடுவார்கள்..அது நாட்டு மாடு.. கற்றுக் குட்டியோ நம்மை பார்த்ததும் துரத்தி வரும்.. அதற்கு பயந்து ஓடிய நாட்கள் நினைவுக்கு வருகிறது..

எங்கே செல்கிறோம் நாம் நமது வாழ்வியலை மறந்து..

#ஒரு #பசுவின் #கதறல்.

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக