பக்கங்கள்

சனி, 1 செப்டம்பர், 2018

பறத்தல்

அன்பர்களே வணக்கம்.
       நாம் இப்போது பார்க்க இருப்பது பறத்தல். இந்த வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் மனம் சிறகடித்து பறப்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் நம் அனைவருக்கும் ஏதோவொரு நேரத்தில் நாம் வானத்தில் பறந்தால் எவ்வாறு இருக்கும் என்று தோன்றியிருக்கும்.ஆனால் என்ன செய்வது நம்மிடம்தான் சிறகுகள் இல்லையே.ஆனாலும் நாம் ஏதோவொரு வகையில் பறந்து கொண்டு தான் இருக்கிறோம். என்ன புரியவில்லையா?.ஆம் நேயர்களே நாம் தினமும் இல்லாவிட்டாலும் ஏதோவொரு விசயத்தை மனதில் அசைபோட்டு பறந்து கொண்டு தான் இருக்கிறோம்.
    நீங்கள் தயவுசெய்து சுற்றி வளைத்து பேசாமல் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
    சரி நாம் இப்போது சில தளங்களில் பறப்போமா?.வாருங்கள் பறப்போம்.சிறகுகள் இல்லாவிட்டால் என்ன?நாம் நமது எண்ண சிறகுகளை விரித்து சிறிது நேரம் நமக்கு பிடித்த விசயங்களை மனதில் அசைபோட்டு பறப்போம்.
    நமது பால்ய கால நினைவுகளை இந்த அழகான ஞாயிற்றில் நினைத்து பாருங்கள் நேயர்களே. நாம் நமது நண்பர்களுடன் துள்ளி குதித்த அந்த நாட்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.நாம் இன்றைய வாழ்க்கை சூழலில் அடிக்கடி பறந்து பறந்து சென்று பார்த்தது நமது பால்யகால நினைவுகளை தானே.அந்த பால்யகாலத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் அறியாமல் செய்த தவறுகள் அந்த தவறுகளுக்கு பெற்ற தண்டனைகள்..ஏராளம் ஏராளம். அந்த நினைவுகளை தேடி நமது எண்ணங்கள் சிறகடித்து பறப்பதில்தான் எவ்வளவு சுகம்?.இல்லையா அன்பர்களே.
    அடுத்து நமது பள்ளி பருவத்தில் நாம் செய்த குறும்புகள் மற்றும் நாம் பள்ளிஆண்டு விழாவில் செய்த சாதனைகள் நாம் மட்டும் சில பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்ததும் நம்மை நமது ஆசிரியர்கள் கொண்டாடியதும் சில பாடங்களில் மிக மோசமான மதிப்பெண் எடுத்து பிரம்படிபட்டு அடுத்த நாள் நமது பெற்றோரை பள்ளிக்கு கூட்டி சென்றதும் நமது பெற்றோர்களிடம் ஆசிரியர் நம்மை பற்றி பட்டியல் பட்டியலாக புகார் வாசித்ததும் நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?.இந்த நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் இப்போதும் சிறகடித்து பறந்து மனதில் சிரித்து கொண்டு தானே இருக்கிறோம்?.அன்று வேதனைப்பட்ட நாம் இன்று அதே விசயத்தை எண்ணி எண்ணி சிரிக்கிறோம். அப்படி தானே நேயர்களே.
   அடுத்து கல்லூரி காலங்கள்.இதை சொல்ல தேவையே இல்லை. கண்டிப்பாக நாம் செமஸ்டரில் ஸ்கோர் பண்ணுகிறோமோ இல்லையோ நமது பட்டியலில் காதல் மட்டும் வண்டி வண்டியாக ஸ்கோர் செய்து இருக்கிறோம். உங்களுக்கு அனுபவமா என்று கேட்காதீர்கள். ஏனெனில் நான் அப்போதெல்லாம் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.உங்களுக்கு சந்தேகம் என்றால் எனது கல்லூரி நண்பர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். அதுசரி நிறைய பேர் அவர்கள் எதிர்காலத்தை தொலைத்து பின்வரும் நாட்களில் அழுததை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் நிலையை இப்போதும் நமது எண்ணசிறகுகள் தேடி அலைகிறது. நாம் காதலிக்கவில்லை என்றாலும் காதலுக்கு தூது போன நினைவுகளை நோக்கி நமது எண்ணசிறகுகள் சிலிர்ப்பூட்டி சிறகடித்து பறக்கிறது இல்லையா.கல்லூரி மேடைகளில் வண்டிவண்டியாக இலட்சியத்தை உரக்க பேசிய நாம் அந்த இலட்சியங்களை எங்கோ தொலைத்துவிட்டு இப்போது வெறும் வயிற்று பிழைப்புக்காக எவரிடமோ அடிமையாக வேலை செய்வதை கண்டிப்பாக நம்மால் ஜீரணம் செய்து கொள்ள இயலுகிறதா சொல்லுங்கள் அன்பர்களே.நாம் தற்போது நாம் அந்த காலத்தில் பேசிய இலட்சியங்களை அசைப்போடும் மாடுகளாக மட்டும் ஆகிவிட்டோம்.என்ன செய்வது காலத்தின் கோலம்.
     அடுத்து திருமணம். இந்த காலம் எப்போது வரும் வரும் என்று நினைத்து ஏங்கி தொலைத்த நாட்கள் பலருக்கும் இங்கே இருக்கலாம். ஏன் திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்திருப்போம்.ஆனால் விதி வலியது.பலப்பேருடைய இலட்சியங்களை காற்றில் கரைத்து விடுகிறது. புயலில் புரட்டி போட்டு விடுகிறது. வெள்ளத்தில் அடித்து சென்று விடுகிறது.ஆனால் நமது எண்ணசிறகுகள் மட்டும் எப்போதும் அந்த இலட்சியத்தை நினைத்து நினைத்து வானில் வட்டமடித்து பறக்கிறது.
    அடுத்து நாம் தவறவிட்ட இலட்சியத்தை அப்படியே விட்டு விட்டு போக நாம் என்ன பைத்தியமா என்ன என்று பலபேர் முட்டாள்தனமாக தமது பிள்ளைகளை களம் இறக்குகிறார்கள்.இது எவ்வளவு கொடுமை.அவர்களது சிறகையும் நாம் ஒடித்து விடுகிறோம். நாம் இந்த தவறை எப்போதும் செய்யக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கும் பறப்பதற்கு உரிமை உள்ளது.
   என்ன நேயர்களே பறத்தலின் இனிமை எப்படி இருந்தது.நமது வாழ்வில் எத்தனை விசயங்கள் நடந்தாலும் நாம் பறப்பதை மட்டும் நிறுத்தி விடக்கூடாது. ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பதே அந்த பறத்தல் என்ற ஒன்றால் தான்.
   நம்முடன் அனைவரையும் இணைத்துக்கொள்வோம் பறப்பதற்காக.ஆனால் நமது சிறகுகளை ஒடித்துவிட மட்டும் அனுமதிக்காமல்.ஏனெனில் நமது சிறகுகளைக்கொண்டே நம்மால் பறக்க இயலும்.
    என்ன நேயர்களே பறத்தலில் மூழ்கி வானத்தை இந்த சிலநிமிடங்களில் அளந்து விட்டோம்.எது எப்படி இருந்தாலும் நம்மால் பறந்து பறந்து தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். நமது வாழ்வில் எத்தனையோ கனவுகள் சிதைக்கப்பட்ட போதும் நம்மால் ஆனந்தமாக எவ்வாறு வாழ முடிகிறது என்று இப்போது புரிந்ததா.
   சரி நேயர்களே மீண்டும் ஒரு அழகான பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன். நன்றி.🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக