பக்கங்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

நாணம்

அன்பர்களே வணக்கம்.
             நாணம் என்ற சொல்லைக்கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்கள். பெரும்பாலானாவர்கள் அட போங்க நீங்க வேற .இல்லாத ஒன்றை ப் பற்றி கேட்டுக்கொண்டு என்கிறீர்களா. அதுவும் சரிதான். ஆமாம் இல்லை. நீங்கள் நினைப்பதும் சரிதான்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பெண்களின் நாணம் பற்றி அப்படி தானே.அதுவும் நாணம் தான். ஆனால் காலத்தின் மாற்றத்தில் அந்த குணம் கரைந்து போனது.அதனால் ஒன்றும் நஷ்டம் இல்லை.
             நான் சொல்ல வரும் நாணத்தை பற்றி இப்போது பார்ப்போம். நாணம் என்பது மனிதர்கள் பால்பேதம் இல்லாமல் தேவையான ஒன்று. ஏனெனில் அந்த உணர்வு ஒன்று இல்லை என்றால் நாம் மனிதர்கள் மனிதத்தன்மை இல்லாமல் இருப்போம்.
      மனிதர்கள் ஒவ்வொருவரும் மோசமான விசயங்களில் ஈடுபடுவதை நினைத்து நாணப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மோசமான ஒரு செயலில் ஒருவர் இறங்குகிறார் என்றால் அதை மற்றவர்கள் சுட்டி காட்டும் போது கூட நாணம் வரமாட்டேன் என்கிறது.இது வேதனையான விசயம். ஒருவர் நமது செயல் அருவருப்பானது என்று சுட்டி காட்டும் போது கூனிகுறுகி நாணம் கொள்ள வேண்டும். நானா இப்படி செய்தேன் என்று. ஆனால் மாறாக இங்கே என்ன நடக்கிறது. சுட்டிக்காட்டுபவர்கள் மேலேயே கோபம் கொள்கிறோம்.
இது ஆரோக்கியமான விசயமா?யோசித்து பாருங்கள்.
       இப்போது சமுதாயத்தில் மனிதர்களிடையே அருவருக்கத்தக்க முறையில் வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொள்வது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இது சரிதானா. நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை நமது வார்த்தைகளால் கெடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நமது மனம் ஏன் உணர்ந்து நாண மறுக்கிறது.நாம் ஜடத்தன்மை அடைந்து விட்டோமா.சொல்லுங்கள்.
        முகநூலை திறந்தால் நாம் எதிர்கொள்ளும் நல்ல விசயங்களை விட மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகள் நிரம்பிய பக்கங்களே அதிகம் என்று சொல்லலாம். ஒருவரை விமர்சிக்க எவ்வளவோ ஆரோக்கியமான வழிகள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழி பக்கம் தலைக்கூட வைத்து படுப்பதில்லை.ஏன் என்று புரியவும் இல்லை.
   முதலில் நாம் மோசமான வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் நாம் நமக்கு நாமே வெட்கப்பட்டு திருத்தி கொள்ள வேண்டும். அதைவிடுத்து இல்லை இல்லை நான் இப்படி தான் பேசுவேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று சொல்வது ஆரோக்கியமான போக்கு அல்ல.மேலும் அப்படி பேசுபவர்களை நம்மால் முடிந்த அளவு திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
       நமக்கு எப்போதும் சுயக்கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களையும் சுயக்காட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அது நமது கடமையும் கூட. ஏனெனில் எல்லாவற்றையும் சகஜம் சகஜம் என்று எடுத்து கொண்டால் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க தவறிவிடுகிறோம். அதனால் நாம் எப்போதும் இந்த விசயத்தில் விட்டு கொடுக்க கூடாது.
       அடுத்து பெண்களை கேவலமாக போகப்பொருளாக நாம் நடத்துவதை பெருமையாக நினைக்கிறோம்.ஒருசிலர் பெண்களின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாவிட்டாலும் தடையாக இருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் நல்ல வழியில் நடப்பதற்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களை மோசமாக நடத்த நடத்த அவர்களையும் அறியாமலேயே தீய வழியில் பயணம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் மன அழுத்தத்தால்.ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு பெண்களின் அளப்பரிய பங்கு அவசியம். பெண்களை துன்புறுத்தி விட்டு அவர்களிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்காதவர்கள் மனித உருவில் உள்ள மிருகங்களாக கணிக்கப்படுகிறார்கள்.
      பெண்களை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களிடம் மோசமாக எந்த விதத்திலும் நடக்க கூடாது. அப்படி தெரியாமல் கவனக்குறைவாக நடந்து கொண்டாலும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களிடம் தான் செய்த செயலுக்கு நாணம் கொள்கிறேன். இனி அவ்வாறு நடக்காது என்று உறுதி கொடுக்க வேண்டும். அதைவிடுத்து அசட்டை செய்தால் அது மிகப்பெரிய தவறு ஆகும்.
       இப்படி நாணம் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. மனிதர்களாகிய நாம் நாணம் கொள்ள வேண்டிய விசயத்தில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அப்போது தான் ஒரு நல்ல வாழ தகுந்த சமுதாயத்தை உருவாக்கிய திருப்தி நமக்கு கிடைக்கும்.
      என்ன நேயர்களே இப்போது சொல்லுங்கள். நாணம் என்பது நம் அனைவருக்கும் தேவையான ஒன்று தானே.அதை உணர்விழக்க செய்து விட்டோம். தற்போது மீட்டெடுப்பது காலத்தின் அவசியம் ஆகும். நீங்களும் மற்றவர்கள் நாணம் கொள்ளும் விசயத்தை செய்யாதீர்கள். மற்றவர்களையும் செய்ய விடாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆரோக்கியமான ஆனந்தமான சமுதாயத்தை உருவாக்கி நமது சந்ததியர் வாழும் சூழலை விட்டு செல்வோம்.
    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை👐👐🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக