பக்கங்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2018

வலி

வணக்கம் அன்பர்களே
       இன்று நாம் பார்க்க இருப்பது வலி.என்ன நேயர்களே வித்தியாசமாக இருக்கிறதா? ஆம். நாம் பார்க்க இருப்பது வலியைப்பற்றி தான். வலி என்பது  பலருக்கும் ஞாபகம் வருவது உடல் ரீதியான வலி மட்டுமே. ஆனால் அது மட்டுமே வலி இல்லை. குறிப்பாக உடல் ரீதியான வலிகூட நாட்கள் சென்றால் ஆறிவிடும். ஆனால் மனோ ரீதியான வலி?.சிலபேர் இருக்கிறார்கள்.அடுத்தவரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
            நாம் யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க தேவையில்லை. மற்றவர்களின் மனதை காயப்படுத்தி வலிகளை ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும். நாம் அடுத்தவரை காயப்படுத்தும் போது நம்மை எவரேனும் அதேபோல காயப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
        வலிகளை நம்மால் ஒருமுறை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி விட்டால் அது நீங்காத வடு ஏற்படுத்தி விடும் அவர்களுக்கு. எப்போதும் அடுத்தவர்களை மிகவும் மரியாதையாக நடத்துங்கள். உங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பீர்களோ அதைப்போல.ஏன் என்றால் யாரையும் காயப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. வார்த்தைகளால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது.
        இனிமையான வார்த்தைகள் பல இருக்க ஏன் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை காயப்படுத்த வேண்டும். காயப்படுத்துவது என்பது அதாவது வலி ஏற்படுத்துவது என்பது பல வழிகளில் ஏற்படுத்தப்படுகிறது.அதாவது உடல் மொழிகளால் மற்றும் மற்றவர்களை கண்டும் காணாமல் இருப்பது கேவலமாக மற்றவர்கள் முன்னிலையில் நடத்துவது மற்றவர்கள் முன் தேவையில்லாமல் வேலை சொல்லி ஏவுவது.இப்படி பல.இப்படி காயப்படுத்துபவர்கள் இப்போது சமூகத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள். இது நிச்சயமாக கவலைக்குரியது.
         வலிகளை உள்ளே நிறுத்தி சிலர் மனம் புழுங்குகிறார்கள்.பலர் பழிவாங்குகிறார்கள்.நல்ல சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.நல்ல சமுதாயம் என்பது இனிமையான சூழல் மற்றும் இனிமையான மனிதர்களை உள்ளடக்கியது.
       இன்றைய இளைஞர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக்கொள்ளட்டும்.சில இளைஞர்கள் அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி வரவேற்பது என்று கூட தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவர்களை வாருங்கள் என்று கைகள் கூப்பி வணக்கம் வைத்து எத்தனை பேர் வரவேற்கிறார்கள்?.முதலில் விருந்தினரை நல்ல விதமாக இன்முகத்துடன் வரவேற்று விருந்தினருக்கு மனவலியை ஏற்படுத்தாமல் சந்தோஷப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும்.
      விருந்தினர்கள் உபசரிப்பு என்பது எப்படி என்று சுத்தமாக பல இளைஞர்களுக்கு தெரிவதில்லை. வந்தவர்களை இருக்கை அளித்து அமர வைத்து பருக தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் அவர்களுடன் உரையாட வேண்டும். நிறைய இளைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் விருந்தினர்கள் மனோரீதியாக வலியை சந்திக்கிறார்கள்.
     இவ்வாறு நடந்து கொள்வதை வீட்டில் உள்ள பெற்றோர் ஊக்குவிக்கக்கூடாது.அவன் அப்படி தான் என்றோ அவள் அப்படி தான் என்றோ சொல்லி நிறைய பெற்றோர்கள் சமாளிக்கிறார்கள்.இது தவிர்க்க பட வேண்டும். நீங்கள் அவர்கள் வீட்டில் இவ்வாறு உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டால் நீங்கள் அவர்களிடம் சொல்லாமல் வெளியே வந்து புறம் கூறுவீர்கள் தானே.
      நாம் வாழ்க்கையில் அனைவருடனும் முடிந்த வரை சுமுகமாக பழக வேண்டும். அடுத்தவர்களை எப்போதும் காயப்படுத்தக் கூடாது. வலிகளை ஏற்படுத்தும் சொற்களை நாம் எப்போதும் பயன்படுத்தாமல் இருப்பதை ஒரு கொள்கையாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
    ஆனந்தம் என்பது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்தாத வாழ்க்கை வாழ்வதுதான். இவ்வாறு நமது வாழ்க்கையை அமைத்து கொண்டு நாமும் ஆனந்தமாக வாழ்வோம். மற்றவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்போம்.என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக