பக்கங்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2018

மௌனம்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது மௌனம். நம்மில் பலர் இருக்க முடியாதது.என்ன அன்பர்களே உண்மைதானே.சில மனிதர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ தேவையில்லாமல் பேசுவதை அவர்களால் நிறுத்த முடியாது.எதையாவது பேசியே பொழுதை கழிப்பார்கள்.இவர்கள் நேரத்தின் அருமை அறியாதவர்கள்.
      நாம் பேசுவதால் அடுத்தவருக்கு பிரயோஜனமும் ஆனந்தமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இல்லை என்று தெரிந்தும் அவர்கள் பேசுவதை நிறுத்துவதில்லை.அடுத்தவர்களை பேசியே கொன்று விடுவார்கள். மௌனத்தின் அருமை தெரியாதவர்கள்.
     மௌனம் என்பது எப்போதும் யாருக்கும் இடையூறு இல்லாதது.இன்று நிறைய பேரை நீங்கள் பார்க்கலாம். மீடியாவில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக மிகவும் மோசமான வார்த்தைகளால் அடுத்தவர்களை தாக்கி பேசுகிறார்கள். இவர்கள் இவர்கள் பெருமையை தானே குறைத்து கொண்டதற்கு அந்த பேச்சே காரணம் ஆகிவிடும்.
      நாம் நமது குடும்பத்திலும் நமது வேலைகளை மட்டும் பார்த்து கொண்டு தேவையில்லாமல் பேசாமல் நல்ல புத்தகங்களை வாசித்துக்கொண்டு தேவைக்கேற்ப தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கி பேச்சை குறைத்தாலே நமது குடும்ப உறுப்பினர்களிடம் நமக்கு மரியாதை கூடும்.
           பெரியவர்கள் என்றால் எப்போது பார்த்தாலும் ஏதாவது அறிவுரை என்கிற பெயரில் பேசுவது இன்றைய தலைமுறைக்கு பிடிப்பது இல்லை. அதற்காக நாம் அவர்களை வழிநடத்தாமலும் விட்டு விடக்கூடாது. தேவைக்கேற்ப அவர்கள் வழியிலேயே சென்று திருத்த முயல வேண்டும். கொஞ்சம் சிரமம் தான். ஆனால் இதை இன்றைய விஞ்ஞான உலகத்தில் கைக்கொண்டு தான் ஆக வேண்டும்.
           மற்ற நேரங்களில் நாம் அமைதியாக தியானம் செய்து மனதை உள்முகப்படுத்துதலே நமக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. உங்களுக்கு தெரியுமா நாம் பேச்சை எவ்வளவு குறைக்கிறோமோ நமது சக்தி சேமிக்கப்படுகிறது.அதை உபயோகமான மற்ற விசயங்களுக்கு நாம் பயன்படுத்தலாம்.மௌனம் மிகவும் அழகானது.அதை கைக்கொண்டவர்களுக்கே தெரியும். அதன் அருமை.
           மௌனத்தால் நாம் நிறைய சக்திகளை சேகரிக்கிறோம்.மேலும் மௌனம் நமக்கு நிறைய உள்நோக்கிய தேடலுக்கு அழைத்து செல்கிறது. அந்த சக்தி நமக்கு ஆத்மஞானத்தை கொடுக்கிறது.
         எப்போதும் உங்கள் ஆன்மாவிடம் நிறைய பேசுங்கள். விடை தெரியாத கேள்விகளுக்கு ஆன்மாவே பதில் சொல்ல முடியும். நாம் இந்த பூமிக்கு வந்ததன் நோக்கத்தை நமக்கு சொல்லும். பிறவிபயனை நாம் மௌனத்தின் மூலமே அடையலாம்.
            அதைவிடுத்து எப்போது பார்த்தாலும் நாம் பேசிக்கொண்டே இருந்தால் நமது வாழ்க்கை அர்த்தம் அற்றதாகிவிடும்.இறைவனை பற்றி நிறைய பேசுங்கள். உலகியல் விசயங்களை மற்றவர்கள் பேசும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள். உங்களால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். முயற்சி செய்யுங்கள். நல்வழிப்படுவதும் இல்லை மாற்றுவழி தேர்ந்தெடுப்பதும் அவர்கள் விருப்பம்.
     அதற்காக விவாதம் நிறைய செய்யாதீர்கள். உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காதீர்கள்.ஏனெனில் மௌனம் அபூர்வமானது.அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    மௌனத்தால்தான் ஆனந்தம் கிடைக்கும். ஆனந்தமான வாழ்க்கை வாழ நீங்கள் தயாராகிவிட்டீர்கள்தானே அன்பர்களே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக