பக்கங்கள்

திங்கள், 21 செப்டம்பர், 2026

நீள் இரவின் கொடுமை...

 


நீ பிரிந்து சென்ற 

ஒவ்வொரு நாளின் 

இரவையும் 

கடந்து செல்வது 

அவ்வளவு எளிதல்ல 

எனக்கு...

அது நரகத்தின் வேதனையை 

எனக்கு தந்து 

அந்த காயத்தில் இருந்து 

இரத்ததை சிதற விடுகிறது 

கொஞ்சமும் கருணையினால்...


ஒவ்வொரு இரவும் 

அந்த நாளில் ஓடிய 

களைப்பு தீர 

நாம் இருவரும் அமர்ந்து 

பேசி தீர்த்த 

அந்த மொட்டை மாடி 

மௌனமாக அழுகிறது...

நம் பிரிவின் துயரத்தை 

ஜீரணிக்க முடியாமல்...


வானொலியில் எங்கோ 

ஒலித்த பாடல் 

நீ வேடிக்கையாக 

எனக்கு பாடி காட்டிய 

அந்த நேரத்தை 

நினைவுப் படுத்தி 

நகர மனமில்லாமல் 

நகர்கிறது...


ஏன் பிரிந்தாய் என்று 

ஒரு காரணமும் 

இதுவரை நீ எனக்கு 

அறிவிக்கவில்லை...

இருந்தாலும் கேட்கிறேன்... 


ஏன் என்னை தவிக்க விட்டு 

தன்னந்தனியாக 

சென்றாய் என்று 

எனக்கு சொல்ல வேண்டாம் 


இன்று இரவு மொட்டை மாடியில் 

என் மீதும் உன் மீதும் 

மிகுந்த நேசம் கொண்ட 

அந்த பௌர்ணமி நிலவு 

நலம் விசாரிக்க 

காத்திருக்கும்...

அதன் காதிலாவது 

சூட்சமமாக வந்து 

ரகசியமாக சொல்லி விட்டு 

சென்று விடு 

என் ஆசை கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/09/26.





வெள்ளி, 18 செப்டம்பர், 2026

முதுமையின் கோடுகள்...


வாழ்வின் 

நீண்ட தூர பயணத்தில் 

பல பல நிகழ்வுகள் 

வண்ண சிதறல்களாக 

அலங்கரித்து செல்ல...

சில பல நிகழ்வுகள் 

துயரத்தின் சாயலை 

என் மீது தூவி செல்ல...


இதோ இது வரை பயணித்து 

இங்கே முதுமையின் நிழலில் 

சற்றே இளைப்பாறுகிறேன்

கொஞ்சம் ஆசுவாசத்தோடு...

என் சந்ததிகள் வாழும் வாழ்க்கை 

எனக்கு ஒரு புரியாத புதிராக 

ஒரு ஆச்சரியம் கலந்த 

உணர்வோடு 

உறைந்து பார்க்கிறேன்... 


அவர்களோ என்னை 

அப்படி ஒன்றும் 

கண்டுக் கொண்டதாக 

தெரியவில்லை...

காலில் சக்கரத்தை 

கட்டிக் கொண்டு 

ஒவ்வொரு நாளும் ஓடுகிறார்கள் 

எதை நோக்கியோ...


சற்றே என் ஒற்றை கேள்விக்கு 

நின்று பதில் சொல்ல கூட 

நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டே 

ஏதோ கடனே என்று 

பதில் சொல்லி செல்லும் 

அவர்களை பார்த்து 

எனக்கு நானே 

அவர்கள் அப்படி தான் என்று 

ஆறுதலும் தேறுதலும் 

சொல்லிக் கொண்டே 

அவர்கள் சென்ற சாலையை 

நான் வேடிக்கை பார்க்கிறேன் 

எந்தவித குற்றம் சுமத்துதலும் 

இல்லாமல்...


வயது முதிர்வின் காரணமாக 

என் நெற்றியில் உள்ள சுருக்கங்களோ 

என் நிலையை பார்த்து 

மௌனமாக கண்ணீர் 

வடிக்கிறது...

அது முதுமை கோடுகளின் 

அடையாளமாக 

இந்த உலகில் சுற்றி திரியுமோ 

நான் இந்த மண்ணில் இருந்து 

விடை பெற்ற பிறகும் என்று 

ஆழ்ந்து யோசித்து 

எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் 

கேள்விக்கு விடைதான் 

இல்லை இங்கே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/09/26.






வியாழன், 17 செப்டம்பர், 2026

யாரோ நான்?

 


ஒவ்வொரு கருவிலும் 

உலாவி உலாவி 

களைப்படைந்து...

ஒரு இளைப்பாறுதலுக்காக 

இங்கே எதுவும் 

பற்றிக் கொள்ள 

கிடைக்காதா என்று 

தேடி தேடி அலைந்து 

அதிலும் சோர்வடைந்து 

அமரும் போது ...


என் அருகில் வந்து 

ஒருவர் நீ யார் என்று 

கேட்டு கேள்வி கணைகளால் 

துளைத்தெடுக்கிறார்... 

நான் அவரை சற்றே 

நிமிர்ந்து அமைதியாக 

பார்த்து சொல்கிறேன் 

உனக்கு போன பிறவியில் 

ஏதோவொரு வகையில் 

உறவு என்று 

சலிப்பாக சொல்ல...


அவரோ நீயா அவன் என்று 

கோபமாக கேட்க 

நானோ அவரை பார்த்து 

மிகவும் நிதானமாக 

ஆம் நானே அவன் என்று 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 

அந்த காலம் 

எங்கள் உரையாடலை 

அமைதியாக கேட்டுக் கொண்டே 

நமட்டு சிரிப்பு சிரித்து 

எங்களை கடந்து செல்வதை 

நான் மட்டும் பார்த்து 

ரசித்து சிரிக்கிறேன்...


என் அருகில் அமர்ந்தவனோ 

உன் கிறுக்கு தனத்தை 

என் மீது படர விடாதே என்று 

சொல்லி எழுந்து செல்கிறார்...

நான் அவர் போகும் பாதையை 

சற்றே நிதானமாக 

வேடிக்கை பார்த்து 

நகைக்கிறேன்...


என்னை பார்த்து 

என் ஆன்மா பலமாக 

சிரிக்கும் சத்தத்தை கேட்டு 

உன்னை சுமந்துக்கொண்டு

நான் அலைகிறேன்...

உனக்கு என்ன 

கவலையில்லாமல் 

இந்த உடல் எனும் பல்லக்கில் 

அமர்ந்து என் செயல்களை 

வேடிக்கை பார்த்து 

என் வேதனையை 

அதிகரிப்பதை புரிந்துக் கொண்டும் 

புரியாதது போல 

நடிப்பதை நான் என்ன என்று 

சொல்வேன் என்று 

முணுமுணுத்துக் கொண்டே 

அவ்விடத்தை விட்டு 

மெதுவாக நகர்கிறேன்...

அந்த காலம் மட்டும் 

என்னை மிகுந்த கவலையோடு 

பார்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/09/26.


செவ்வாய், 8 செப்டம்பர், 2026

வாழ்வின் போக்கில் நான் யாராக?


ஒரு மலையின் உச்சியில் 

உருவான சிறு ஊற்று 

ஒரு நதியாக பரிணமித்து 

காலமெனும் ஓடத்தில் 

சலசலத்து 

ஓடிக் கொண்டிருக்கிறது

வாழ்க்கையாக...


அந்த ஓடிக் கொண்டிருக்கும் 

வாழ்க்கையெனும் நதியில் 

சில மனிதர்கள் 

தோஷத்தை கழிக்க 

கரையில் விடப்பட்ட 

அந்த பழைய 

ஆடைகளை கவர்ந்து 

இழுத்துக் கொண்டு 

ஓடும் நதியை போல 

நானும் இங்கே 

சில பல கிழிசலான 

நிகழ்வுகளை 

தேவையே இல்லாமல் 

இழுத்துக் கொண்டு 

ஓடுகிறேன் 

காலமெனும் சாலையில்....


ஒன்றுக்கும் உதவாத 

அந்த கடும் நாற்றமடிக்கும்

கழிவெனும் 

விஷய சுகத்தில் மூழ்கி 

மூச்சடக்கி பயணிக்கிறேன் 

மிகுந்த அருவெறுப்பாக 

இந்த வாழ்வெனும் 

தோணியில்...


என்றொவொரு நாள் 

அங்கே ஏதோவொரு 

நறுமண மலர்களால் 

சூழப்பட்ட புனித நீர் 

திடீரென பெருக்கெடுத்து 

ஓடி வந்து 

என்னை புனிதமாக்கி

அழகு பார்க்கும் நாளில்

என் வாழ்வின் போக்கு 

ஒரு நந்தவனத்தில் 

அமைதியாக உலாவும் 

தென்றலால் தீண்டப்பட்டு

நான் இந்த பிரபஞ்சத்தின் 

பேரழகில் லயித்து 

அங்கே கிடக்கும் 

மர பலகையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

கையில் ஏந்தி 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

தேநீரை மிடறு மிடறாக 

பருகி கிடப்பேன் 

என்னை மறந்து....


அந்த நாள் எப்போது 

என்று மட்டும் கேட்காதீர்கள்...

அது தெரியும் போது 

உங்களுக்கு அறிவிக்காமல் 

இந்த பிரபஞ்சத்தை விட்டு 

அப்படி ஒன்றும் 

அவசர அவசரமாக 

விலகி விட மாட்டேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/09/26.