பக்கங்கள்

திங்கள், 21 ஜூலை, 2025

உயிர் நாடி சிறுகதை//


அந்த பச்சை வயல்வெளியை

பேருந்து பயணத்தில் நான் 

கடந்து செல்லும் போது 

அன்று என்னிடம் இருந்த 

என் வயலில் 

உழைத்து களைத்த 

காளை மாட்டின் சத்தம் 

இன்னும் என் காதில் 

ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இன்றோ நான் விற்ற வயலை 

அதே பேருந்து பயணத்தில் கடக்க 

நேர்ந்த போது 

அங்கே காணும் காட்சியில் 

டிராக்டர் உழும் சத்தத்தில் 

என் உயிர் நாடி சற்றே சில நொடிகள் 

அடங்கி போக 

என்னையும் அறியாமல் 

என் கண்களில் தாரை தாரையாக 

நீர் வழிந்தபோது 

என் அருகில் இருந்தவர் 

என்னாச்சு என்று ஆறுதலாக 

கேட்டபோது நான் சுதாரித்து 

கண்களை 

துடைத்துக் கொண்டு 

ஒன்றும் இல்லை ஐயா என்று 

சொல்லியபடியே பேருந்தை விட்டு 

இறங்கி அங்கிருந்த 

பயணியர் இருக்கையில் சற்றே 

ஆறுதலாக அமர்ந்தேன்...

என் வலியை சமிக்ஞையால்

உணர்ந்த ஏதோவொரு 

பறவையொன்று 

நான் அமர்ந்து இருந்த 

இருக்கை 

அருகே உள்ள மரத்திலிருந்து 

சற்றே சிறகை சிலிர்த்து எழுந்து 

தன் சிறகாலே என்னை மிருதுவாக 

வருடி கீச் கீச்சென்று 

என் காதருகே பேசி ஏதோ 

ஆறுதல் செய்ய முயன்றதில் 

மீண்டும் என் கண்களில் கண்ணீர்...

அந்த பறவையின் எச்சத்தை 

அங்கே வேகமாக வந்த 

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 

என்றோவொரு நாள் வரும் 

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தை 

ஸ்பரித்து சிலிர்த்து எழ காத்திருக்கும் 

ஒரு விதையின் சிறு முனகலின் 

வலியை நான் உணர்ந்ததை போல 

அதில் பயணித்த பயணிகளின்

செவிகளை எட்டி இருக்க 

நியாயமில்லை ...

மீண்டும் மீண்டும் 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

அங்கே இருந்த மரங்களும் ,

செடி கொடிகளும் செய்வதறியாது 

திகைத்தது...

அங்கே மழைக்கான

அறிவிப்பாக பறந்து திரிந்த 

தட்டான்களும் சற்றே 

என் சோகத்தை கடக்க முடியாமல் 

மௌன சாட்சியாக அங்கேயே 

என்னை விட்டு அகலாமல் என்னை 

சுற்றி சுற்றி பறந்ததை 

பெரும் வியப்போடு 

போவோர் வருவோர் பார்த்து 

கடந்து செல்கிறார்கள்...

அவர்களுக்கோ அது வியப்பு..

எங்களுக்கோ அது நுட்பமான 

உயிரை உருக்கும் வலி என்று 

அவர்களுக்கு யாரேனும் 

புரிய வைக்க முயற்சி 

செய்யுங்களேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/25/திங்கட்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக