அந்த நடுநிசி பேரிருள் வேளையில் 
நானும் என் கையில் தவழும் 
அந்த மது கோப்பையும் 
அந்த பேரமைதியை ரசித்து 
கிடக்கிறோம்...
இடை இடையே ஒரு அபூர்வ 
பறவையின் இறக்கையின் 
ஒலியை நாங்கள் இருவரும் 
மறக்காமல் ரசித்துக் கொண்டே...
ஒருவரையொருவர் 
சிறு புன்னகை சிந்தி 
ஆழ்ந்த பேரன்பில் 
பேச்சற்ற நிலையில் 
பெரும் காதலோடு ரசித்து 
கண்களால் காதலை பருகி 
கிடக்கிறோம் பல மணி நேரம்...
அண்டமெங்கும் பகல் முழுவதும் 
அலைந்து திரிந்த சோர்வில் 
அத்தனை மனிதர்களும் 
ஓய்வெடுத்து உறங்குகிறார்கள்...
என்று கோப்பை தான் முதலில் 
பேச்சை ஆரம்பித்து வைத்தது...
ஆம் கோப்பையே... அவர்கள் 
வாழ்க்கையோடு தினம் தினம் 
போராடி அந்த நாளின் முடிவில் 
எந்தவித திருப்தியும் இல்லாமல் 
சோர்ந்து தான் போகிறார்கள் 
என்றேன்...
என் கையில் தவழும் 
அந்த கோப்பையோ நீ மட்டும் எப்படி
எந்தவித போராட்டமும் இல்லாமல்
ஆழ்ந்த அமைதி கொண்டு 
இதோ என்னோடு தினம் தினம் 
காதலோடு 
உரையாடி களிக்கிறாய் என்று 
ஆச்சரியமாக கேட்டது...
நானோ கொஞ்சம் 
சிரித்துக் கொண்டே 
இங்கே எதுவும் எனக்கானது இல்லை 
நான் இதோ எனை தீண்டி 
கடந்து செல்லும் 
இந்த நொடிப்பொழுதை 
கொஞ்சம் வேடிக்கை பார்க்க வந்த 
மனுஷனாக தான் 
என்னை பாவித்து 
இந்த பிரபஞ்சத்தில் 
உன் உதவியோடு மிதக்கிறேன்...
இங்கே நீயும் நானும் கொண்ட 
பெரும் காதலின் உணர்வை 
அதோ அந்த காலமும் 
பிரிக்க மனமில்லாமல் 
இரவை இன்னும் சில 
மணித் துளிகள் நாம் இருவரும்
கேட்காமலேயே நீட்டித்து 
சத்தம் இல்லாமல் செல்கிறது 
பார்த்தாயா என்றேன்...
அந்த நுரை ததும்பும் 
மது கோப்பையும் பெரும்
ஆச்சரியமாக ஆம் என்று 
தலையசைத்தது...
இந்த புரிதல் தான் 
வாழ்வின் சூட்சமம் 
இங்கே பெரும் மாயையின் நிழலில் 
இளைப்பாறுபவர்களுக்கு
இந்த காலத்தின் லீலையோ 
நம் பெரும் காதலின் ஈரமோ 
உணர முடியாது அல்லவா என்றேன்..
அந்த மது 🍷 கோப்பையும் 
ஆம் என்று பெரும் காதலோடு 
என் இதழ்களில் முத்தமிட்டதை 
பார்த்து அந்த அதிசய பறவையும் 
தன் சிறகசைப்பை நிறுத்தி 
வேடிக்கை பார்த்தது...
நானும் அந்த கோப்பையில் உள்ள 
என் பெரும் காதலை 
என் இதழ் வழியே பருகி 
அதை என்னுள் 
ஒன்றாக்கிக் கொள்ளும் போது
அந்த நடுநிசி கடந்த பெரும் இரவோ 
இன்றைய பெரும் காதலின் 
அத்தியாயம் முடிந்த திருப்தியில் 
அமைதிக் கொள்கிறது...
நானும் மெல்ல மெல்ல 
ஆழ்ந்த உறக்கத்தில் பேரமைதியின்
சாயலை என் காலடியில் 
சரிந்து விழுந்த அந்த காலி 
கோப்பையும் உணர்ந்து 
அமைதியாக அந்த நடுநிசி இரவை 
மெல்ல மெல்ல விடுக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/12/24.
முன்னிரவு பொழுது...