பக்கங்கள்

வியாழன், 14 நவம்பர், 2024

அந்த மழையின் அபூர்வ இசையின் ஈரம் மட்டும்...


தீர்ந்துக் கொண்டே இருக்கும் 

இந்த நாளின் பொழுதுகளில் 

குறையாமல் 

தொடர்ந்துக் கொண்டே 

வருகிறது....

எனது வாழ்வின் 

சுவாரஸ்யமான தருணங்களும்...

இப்படியே சத்தம் இல்லாமல் 

முடிந்தது 

இந்த நாளின் பொழுது 

அதோ அங்கே கூடு தேடி 

மிகவும் நிதானமாக சிறகை விரித்து 

பறந்து சென்றது 

அந்த வானத்தை அளந்தபடி 

அங்கே ஒரு பறவை கூட்டம்...

அந்த அந்தி மாலையின் தூறலை 

அறிவித்தபடியே 

அங்கே சில பல தும்பிகள் கூட்டம் 

எனை உரசி செல்கிறது...

அங்கே மேற்கில் விழுந்துக் கொண்டு 

இருக்கிறது கொஞ்சம் வேகமாக 

ஐப்பசி மாதத்தின் கதிரவன் 

தன் பணியை திருப்தியாக முடித்த 

எண்ணத்தில்...

எந்த வெப்பத்தின் தாக்கத்தையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஜீவராசிகள் 

உணர்ந்து விடாமல்...

இங்கே நானும் 

அந்த வண்ணத்து பூச்சியும் மட்டும் 

இந்த இரவின் நீட்சியில் 

மழையின் நனைதலில் 

அந்த மேகங்கள் நள்ளிரவு வரை 

மீட்டிக் கொண்டு இருக்கும்

கேட்பாரற்ற 

அந்த அபூர்வ ராகங்களை

கேட்டுக் கொண்டே 

இருந்த வேளையில் கொஞ்சம் 

கொஞ்சமாக ஸ்வரம் குறைத்து 

விடை பெற்ற அந்த மழையின் 

அபூர்வ இசையின் ஈரம் மட்டும் 

என்னையும் 

அந்த வண்ணத்து பூச்சியின்

சிறகையும் விட்டு விலகாமல் 

பயணிக்கிறது...

#மழை நேர கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/11/24/வியாழக்கிழமை.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக