பக்கங்கள்

திங்கள், 21 அக்டோபர், 2024

அந்த ஜீவனுக்காக பழியை தீர்த்துக் கொள்கிறது எங்கிருந்தோ வந்த மழை...


சில பல மழைத் துளிகளின் 

மேனி தீண்டலை 

ரசிக்காமல் அந்த சாலையில் 

இங்கும் அங்கும் பயணிக்கும் 

பாதசாரிகள்...

நாற்சக்கர வாகனத்தின் உள்ளே 

இருந்துகொண்டே மழையை 

திட்டி தீர்க்கும் சிக்னலிடையே 

சிக்கி தவிக்கும் அந்த 

சில பல மனிதர்கள்...

தனது இருசக்கர வாகனத்தினோடே 

போராடி 

எரிச்சலோடு வண்டியை 

நகர்த்தும் அந்த மனிதர்கள்...

இதை எல்லாம் வெறுமனே 

வேடிக்கை பார்த்து அந்த மழையின் 

தழுவலில் சிலிர்த்து 

உற்சாகம் அடைந்து வழி மறித்து 

நிற்கும் ஏதுமறியாத

இந்த ஜீவனை வசை பாடி

தனது ஆற்றாமையை 

தீர்த்துக் கொண்டு 

பெரும் மனப்பாரம் 

இறங்கிய உணர்வோடு 

வெகுவேகமாக நகர்ந்து செல்லும் 

அவர்களை மீண்டும் 

பெரும் வேகத்தில் நனைத்து 

அமைதியாக அந்த ஜீவனுக்கான 

பழியை தீர்த்துக் கொள்கிறது 

எங்கிருந்தோ வந்த அந்த மேகத்தின் 

வெடிப்பில் தங்கிய மழை....

#மழைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/10/24/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளை கடந்து சில மணி நேரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக