பக்கங்கள்

வெள்ளி, 3 மே, 2024

அந்த சாலையோர புளிய மரத்தில்...


அந்த சாலையோர

புளிய மரத்தில்

வசித்து வந்த பறவைகளின்

கீச்சிடும் குரல் தற்போது

நம்மிடம் இல்லை...

அந்த பறவைகளின் ஓராயிரம் சிறகுகள் இளைப்பாறிய 

அந்த கிளையின் முறிவு

சொல்லொணா துயரத்தை

எழுதி சென்றது

வானின் வழியே...

இரை தேடி அலைந்து திரிந்து 

தனது கூட்டை தேடி

இரவு முழுவதும் திரிந்து

சோர்ந்து அங்கே ஏதோவொரு சுவற்றில்

அடைக்கலம் ஆன போது

விடியல் தோன்றியது...

மீண்டும் சிறகை விரித்து

வானில் பறந்து இரை தேடி

அலைந்து திரிந்தது

அந்த பறவை...

நிதர்சனத்தை

புரிந்துக் கொண்டு எங்கோ ஒரு முள் காட்டில் கிடைத்த அந்த செடியில் இளைப்பாறி

இரவை கடத்துகிறது

உறங்கியும் உறங்காமலும்...

அந்த முட்களின் உரசலின் வலியை 

அதற்கு அந்த நிலையை பரிசளிக்க அனுமதி தந்த

நாம் இங்கே 

அந்த சூரியனை சபித்து

சாலையில் நடமாடி

இரவினை வெந்தணலில்

கழித்து வெப்ப காற்றை

சபித்து சலசலக்கிறோம்...

இன்னும் ஓரிரு மாதங்களில்

விடை பெறும் கோடை தானே என்று...

இப்போதும்

அங்கே அந்த பறவைகளின் இருப்பிடத்தை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லாமல் கடக்கும்

நாங்கள் மானுடர்கள் தான்...

நம்புங்கள் கவலையுற்ற பறவைகளே.....

#கோடை

#மரங்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:03/05/24.

வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக