கழுதையும் நானும்:-
***************************
அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார்க்கிறது.. போய் விடும் என்று நினைத்தேன்.. ஆனால் அது அங்கிருந்து அசையாமல் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நின்று கொண்டு எனது முகத்தை பார்த்தது.. நான் அதற்கு பசியாக இருக்குமோ என்று நினைத்து ஏதேனும் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன்..அது இல்லை என்று தலையாட்டி விட்டு ..ஏதோ கேட்க தயங்கியது.. நான் சிரித்துக்கொண்டே எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேள்.. கண்டிப்பாக என்னால் முடியும் என்றால் உனக்கு உதவுகிறேன் என்றேன்..அது மெல்ல மெல்ல தனது தயக்கத்தை விட்டு விட்டு மிகவும் மெதுவாக உனது குரலை எனக்கு ஒரு நாள் மட்டும் தானமாக கொடுக்க முடியுமா என்று கேட்டது...
நான் அதை ஒரு பார்வை பார்த்தேன்..அது பயந்து விட்டது போலும்.. வேண்டாம் வேண்டாம்.. உனக்கு விருப்பம் இல்லை என்றால் என்றது வேக வேகமாக..
நான் சிரித்தபடியே இதுதானா.. இதற்கு ஏன் இந்த தயக்கம்.. என்று அதனிடம் எனது குரலை கொடுத்து விட்டு அதன் குரலை வாங்கி கொண்டேன்..
அந்த குரலை வைத்தே என்னோடு உரையாடியவர்களுடன் பேசினேன்..
அவர்கள் ஒவ்வொருவரும் என்னை பார்த்து மிகவும் நகைத்தார்கள்;பரிகசித்தார்கள்; என்னோடு மிகவும் நெருக்கமாக பயணித்தவர்கள் கூட அந்த நாளில் என்னை விட்டு சொல்லாமல் விலகி சென்று விட்டார்கள்..
அதேசமயத்தில் அந்த கழுதையின் பின்னால் தற்போது மிகவும் ஆச்சரியமாக அத்தனை பெரிய கூட்டம் சென்றது... எதையும் காதில் வாங்காமல் அந்த கழுதை எங்கே சென்றாலும் கண்மூடி தன்னை மறந்து பயணித்தார்கள்...
எனக்கு அந்த ஒரு நாள் முடிந்தபோது அவ்வளவு மன உளைச்சலை இங்கே என்னோடு பயணித்தவர்கள் எனக்கு ஏற்றி விட்டார்கள்..
அந்த கழுதை மிகவும் உற்சாகமாக வந்தது.. அந்த நாளின் முடிவில்.. என் வாழ்வில் இப்படி ஓர் ஆனந்தத்தை உணர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்லி எந்த சலனமும் இல்லாமல் எனது குரலை என்னிடம் கொடுத்தது...
நானோ அது கேட்பதற்கு முன்பாகவே அதன் குரலை அவசரம் அவசரமாக அதனிடம் ஒப்படைத்து விட்டு அதனிடம் கேட்டேன்.. ஏன் நீ எனது குரலை வைத்துக் கொள்ள எண்ணம் இல்லையா.. உன் பின்னாடி தான் அத்தனை பேர் சுற்றினார்களே.... ஏன் நீ கூட இப்போது எனது குரலால் ஆனந்தமாக இருப்பதாக தானே சொன்னாய் என்றேன் மிகவும் சுவாரஸ்யமாக அதன் பதிலை எதிர்பார்த்து..
அதற்கு அந்த கழுதையோ எப்போதும் இயல்பை விட்டு பயணிப்பது ஆபத்தாக தான் முடியும்.. அதனால் எனக்கு உன் குரல் வேண்டாம்..நீயே வைத்துக் கொள்.. இந்த ஒரு நாள் ஆனந்தம் எப்போதும் என் வாழ்வின் இறுதி வரை பயணிக்கும்..அது போதும் எனக்கு..என்றது..
அதன் பதிலில் ஆயிரம் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து நான் வாய் மூடி மௌனியானேன்...