பக்கங்கள்

புதன், 13 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (2)

 


இதோ இந்த அந்திமாலை✨✨ எனக்கு மேலும் ஓர் உற்சாகத்தை தருகிறது.. எப்போதும் காலை பொழுது சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.. ஆனால் மாலை பொழுது இயற்கையை ரசிக்க வைக்கும்.. அந்த வகையில் இன்றைய மாலையை எப்போதும் போல ரசிக்கிறேன்.. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மறைத்து கொள்ளும் சூரிய பகவான் பகல் முழுவதும் தனது பணியை செவ்வனே செய்து விட்டு இரவானதும் நம்மிடம் இருந்து பிரியா விடை பெறுவது போல் தான் இருந்தது அதன் மறைவு..

அந்த நேரத்தில் எனது தேநீர் காதலி உடன் இருந்து சுவையை கூட்டினாள்.. அருகில் வந்து என்னையும் கொஞ்சம் நேசித்தால் தான் என்ன என்று தென்றல் என்னை இலேசாக இடித்து வருடியது..

இந்த மாலைநேர மயக்கத்தை நான் கொல்லைப்புற தோட்டத்தில் ரசித்து கொண்டு இருக்க...ஏதோ பேரின்பம் வேறெங்கோ இருப்பது போல பலர் கவலைப்படுவது எனக்கு சிரிப்பை தந்தது..இறைவனை கூட அப்படி தானே வெளியே தேடுகிறார்கள்.. பிறகு இந்த இன்பத்தை மட்டும் எவ்வாறு உள்ளே தேடுவார்கள்?? இப்படி யோசித்து கொண்டே இருக்கும் போது வீட்டு அழைப்பு மணியை எவரோ அழுத்தி அழைத்தது காதில் விழுந்தது..யாராக இருக்கும் என்று போய் பார்த்தேன்.. அங்கே எனது பள்ளி தோழி சுவேதா வந்து இருந்தாள்..அவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.. ஏனெனில் அவள் கொஞ்சம் தடிமனாக இருப்பாள்.ஆனால் இப்போது மிகவும் ஒல்லியாக இருந்தாள்.முகம் மட்டும் மாறவே இல்லை..வா சுவேதா.. நலமா என்றேன்.. நான் நலம் மதி..நீ நலமா என்றாள்.. குரலில் உயிரோட்டம் இல்லாமல்..ஏதோ நடந்து இருக்கிறது என்று நினைத்து அவளை உள்ளே அழைத்தேன்..

ஏன் எல்லோரும் இப்போது என்னை நோக்கி படையெடுக்கிறார்கள் என்று யோசித்தபடியே.. நான் மட்டும் தான் வேலைவெட்டி இல்லாமல் இருப்பதாக நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன்..

என்ன யோசனை மதி..வந்தவளை மறந்து என்றாள்.. நான் வேகமாக ஒன்றும் இல்லையே என்றேன்..

சரி சுவேதா நீ அங்கே இருக்கும் அறையில் தங்கி கொள்..எனது சித்தப்பா மகள் அங்கே தங்கி இருக்கிறாள்...ஏதோ புத்தகம் தான் வாசித்து கொண்டு இருந்தாள்.போய் கதவை தட்டு.. என்றேன்..

அவளும் அங்கே போய் கதவை தட்டினாள்.இதோ வந்து விட்டேன் அண்ணா என்றாள்.. வேகமாக வந்து கதவை திறந்தவளுக்கு இன்னொரு பெண்ணை பார்த்தவுடன் கொஞ்சம் திகைப்பு.. நான் அவளை அவளுக்கு எனது பள்ளி கால தோழி சுவேதா என்று அறிமுகம் செய்து வைத்தேன்.. உன் அறையில் அவளுக்கு தங்க இடம் கொடுக்கலாம் தானே என்றேன் சிரிப்போடு..

இது என்ன கேள்வி அண்ணா.. கண்டிப்பாக என்று சொல்லிக்கொண்டே சுவேதாவை வரவேற்றாள்..

சுவேதா தனது பையை வைத்து விட்டு குளிக்க சென்று வருவதாக சொல்லி விட்டு குளியலறை நோக்கி நடந்தாள்.

அவளை கண் கொட்டாமல் பார்த்து விட்டு அண்ணா என்ன இவர்கள் உங்கள் தோழியா இல்லை காதலியா என்றாள் கிண்டலாக..

அம்மா தாயே என்னோடு படித்தவள்.. எனக்கு கணக்கு நிறைய சொல்லி கொடுத்து இருக்கிறாள்.. இவள் இல்லை என்றால்  நான் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருந்து இருந்திருப்பேன்.. அவ்வளவு நன்றாக கணக்கு பாடம் எடுப்பாள்.இப்போது என்ன செய்கிறாள் என்று கேட்டால் தான் தெரியும் என்றேன்..

சரி சரி அண்ணா.கூல்.‌ஏன் இவ்வளவு பதட்டம்..நீ எல்லாம் காதலித்து விட்டாலும் என்று கிண்டலடித்து கொண்டே மாடியில் இருக்கும் அறைக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்று விட்டாள்..

சுவேதா குளித்து முடித்து வந்தாள்..மதி வீடு ரொம்ப அழகாக வைத்து இருக்கிறாய்.. மேலும் வீட்டில் ஏதோவொரு நல்ல அதிர்வலை உள்ளது என்று நினைக்கிறேன்.இங்கே வந்தவுடன் ஏதோ எனது பாரம் இறங்கியது போல உள்ளது என்று சொல்லி கொண்டே கண்களால் தேடினாள்.. ஏதோவொன்றை..

நான் அவள் எனது தங்கையை தான் தேடுகிறாள் என்பதை அறிந்து அவள் மேலே மாடியில் உள்ள அறைக்கு சென்று விட்டாள் என்று சொல்லி முடித்து அவளுக்கு தேநீர் தயாரிக்க சென்றேன்..

சுவேதா ஹாலில் அமர்ந்து அங்கே உள்ள தினசரியை கொஞ்சம் புரட்டினாள் சுவாரஸ்யம் இல்லாமல்..

நான் தேநீர் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தேன்.. அவள் ஆச்சரியமாக அதை வாங்கி கொண்டாள்..

கொஞ்சம் சுவைத்து மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டினாள்..

ரொம்ப நன்றி சுவேதா என்று சொல்லி விட்டு எங்கள் பழைய கால நட்புகளை விசாரித்து கொண்டோம் ஒருவரையொருவர்.. இருவரில் ஒருவர் தொடர்பில் மட்டுமே இருக்கும் நட்புகளின் எண்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம்..

பின்னர் கொஞ்ச நேரம் அவள் திறந்து இருந்த வாசல் கதவு வழியே சாலையை வேடிக்கை பார்த்தாள்..

நானும் அவளாக விசயத்தை சொல்லும் வரை காத்திருந்தேன் சாலையை வேடிக்கை

பார்த்தபடியே..

பத்து நிமிட அமைதிக்கு பின் சுவேதா என்ன விசயம்.நலம் தானே என்றேன்..

இல்லை மதி.. நலம் இல்லை.. என்றாள் வெறுப்பாக..

ஏன் என்னாச்சு என்றேன்..

எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது.. ஆனால் இன்னும் குழந்தை பேறு இல்லை.. அதற்காக நான்ஏறாத மருத்துவமனை இல்லை.. இருவரும் சிகிச்சை எடுத்து சலித்து விட்டோம்.. இப்போது அந்த மன உளைச்சல் தான் எங்கள் இருவரையும் வாட்டுகிறது மதி என்றாள்..

சுவேதா.. இதற்கு ஏன் இவ்வளவு மன உளைச்சல் சுவேதா என்றேன்..

நீ மிகவும் சாதாரணமாக இந்த கேள்வியை கேட்டு விட்டாய் மதி.. நான் இந்த குறைபாட்டால் தினம் தினம் செத்துக் கொண்டு இருக்கிறேன் என்றாள் மிகவும் வேதனை கலந்த கண்ணீர் முகத்தோடு..

எனக்கு அவள் வேதனைப்படுவதை பார்க்க சகிக்கவில்லை..

சரி சுவேதா சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் ஓர் குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாமே.அதற்கு ஏன் இவ்வளவு வருத்தம் என்றேன்.

மதி அதற்கு அவர் மற்றும் அவர்கள் வீட்டில் ஒத்து கொள்ளவில்லை என்றாள்.

இதற்கு உங்கள் இருவரின் சம்மதமும் வேண்டும் தான்..என்று யோசித்து விட்டு உங்களுக்கு குழந்தை தான் பிரச்சினை என்றால் தத்து எடுத்து வளர்க்கலாம்.. அதற்கு உங்கள் மனம் ஒத்துக் கொள்ளவில்லை.. அதுதான் பிரச்சினை என்றேன்.

அதனால் இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக அவரின் தாயார் சொல்கிறார் மதி.. இவரும் ஒத்து கொள்வார் போல தெரிகிறது என்று சொல்லும் போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது..

சிறிது நேரம் அவள் அழட்டும் என்று விட்டு விட்டேன்..

திருமண பந்தம் என்பது ஏதோ குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள என்பது போல ஓர் பிம்பத்தை எந்த முட்டாளோ ஏற்படுத்தி அதை ஆழமாக பதியும் அளவுக்கு செய்து விட்டு போய் விட்ட மடையர்கள் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.வம்ச பைத்தியம் பிடித்து அலையும் இந்த கிறுக்கர்களை எவராலும் திருத்த முடியாது என்பதை நவீன உலகமும் உணர்த்துகிறது என்பது தான் வேதனை தருகிறது..

ஓர் ஆதர்ஷண தம்பதிகளாக வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தை பெரிதாக மாட்டி அதற்கு பூசை புனஸ்காரம் செய்யும் வீட்டில் கூட இந்த அநியாயம் நடப்பது தான் அசிங்கமான விசயமாக உள்ளது.. இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அந்த இறைவனுக்கு கூட புரியாத விசயம் தான் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே மதி என்று அழைத்தாள் சுவேதா..

சொல் சுவேதா.. இப்போது என்ன தீவிரமாக பெண் பார்க்க தொடங்கி விட்டார்களா உனது கணவருக்கு என்று கேட்டேன்.

ஆமாம் மதி.. அதற்கு என்னிடம் விவாகரத்து கேட்டு கடந்த இரண்டு நாட்களாக தொல்லை கொடுக்கிறார்கள்.. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. நான் என் கணவரை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் மதி.. ஆனால் நேசிப்பது என்பது கூட ஓர் எல்லைக்குள் அடங்கி விடும் போது வலிக்கிறது என்றாள்.

நீ சொல்வது நியாயம் தான் சுவேதா.. ஆனால் நன்றாக யோசித்து பார்..நீ மட்டும் நேசத்தை சுமந்து கொண்டு இருப்பதால் இலாபம் இல்லையே.. உன் கணவர் அவர் குடும்பத்தினரோடு உனக்காக சண்டை போட்டு இருக்க வேண்டுமே.. அப்படி அங்கே நடக்காத போது நீ எவ்வாறு அந்த இடத்தில் நிம்மதியாக வாழ்க்கை பயணத்தை தொடர முடியும்.. கொஞ்சம் யோசித்துப் பார் என்றேன்..

ஆனால் இந்த சமுதாயத்தில் நான் தனி மனுஷியாக இருந்து எவ்வாறு போராடுவேன் மதி.. குடும்பம் என்கிற பிம்பம் தானே எனக்கு பாதுகாப்பு அளிக்கிறது.அதை விட்டு வெளியே வந்து விட்டால் நவீன காலத்தில் கூட பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையே என்றாள்.. மிகவும் ஏக்கமாக..

இப்போது உனக்கு இந்த சமுதாயம் தான் பிரச்சினையா.. உன் கணவர் உன்னிடம் நடந்து கொள்வது பிரச்சினை இல்லை.அப்படிதானே என்றேன்..கோபமாக.

அப்படி எல்லாம் இல்லை.. ஆனாலும் எதிர் காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது மதி என்றாள்..

ஏன் தனியாக வாழ இவ்வளவு பயப்படுகிறாய் நீ.. உன்னை எல்லாம் படிக்க வைத்தது வீண் வேலை என்று நினைக்கிறேன்.நீயும் சராசரி பெண் போல தானே பேசுகிறாய் என்றேன்..

நீ வேறு என்ன செய்ய சொல்கிறாய் மதி.. உன் பேச்செல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாள் பிடிவாதமாக..

நீ வாழ்க்கையை ஓர் வட்டத்தில் அடைத்து வாழ பழகி விட்டாய்.. இந்த உலகம் மிகவும் பரந்தது.அதில் குழந்தை என்கின்ற விசயம் எல்லாம் ஓர் துளி.. அந்த ஓர் துளி உனது அழகான வாழ்க்கையை பறிக்கிறது என்பதற்காக இதோ இங்கே நீ அழுவது எனக்கு வேடிக்கையாக உள்ளது.. உனக்கு குழந்தை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் நீ விவாகரத்து கொடுத்து விட்டு ஓர் நல்ல ஆரோக்கியமான குழந்தையை தத்து எடுத்து வளர்க்க தயாராக இரு.. அவர்கள் கேட்ட விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு..அதை விடுத்து இப்படி உட்கார்ந்து அழுது வடியாதே சுவேதா.. அப்படி அதற்கு உனக்கு பயமாக உள்ளது என்றாலும் நீ உன்னை சுற்றி திரியும் குழந்தைகளை நேசி.. அவர்களுக்கு தேவையான விசயத்தை செய்.. உன்னால் என்ன முடிகிறதோ.. ஓர் அநாதை ஆசிரமத்திற்கு சென்று கற்பிக்கும் பணியை செவ்வனே செய்..அது ஓர் ஆத்மார்த்தமான நிகழ்வு.. அதை நீ செய்து பார்..நீயே உன்னை மறந்து விடுவாய்..அடடா உலகம் எவ்வளவு மகிழ்ச்சியை ஆனந்தத்தை வேறு ஓர் ரூபத்தில் நமக்கு வைத்து இருக்கிறது என்று.. என்றேன்..

நீ சொல்வது சரியான விசயம் தான்.. ஆனால் விவாகரத்து என்பது எவ்வளவு பெரிய விசயம் .அது ஏன் என் வாழ்வில் நடக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டாள்..

சுவேதா அது நீ எடுத்த முடிவு இல்லை..அது உன் மேல் திணிக்கப்பட்ட முடிவு.. அதனால் நீ ஏன் உன்னை குற்றவாளி போல நினைக்கிறாய்.. குழந்தை இல்லை என்பது எல்லாம் ஓர் சிறிய விசயம் தான் என்னை பொறுத்தவரை.. அதற்காக பெரிய பெரிய முடிவை எடுக்கும் அறிவாளிகளே அதை பார்த்து கவலைப்படாத போது நீ இப்படி உடைந்து போகக் கூடாது சுவேதா.. புரிந்ததா என்றேன்.

மேலும் அவர்கள் கேட்ட பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வா.. இந்த உலகம் பரந்தது.இங்கே நேசிக்க ஆயிரம் விசயங்களை கொட்டி வைத்து உள்ளார் அந்த இறைவன்..அத்தனை விசயத்தையும் நேசி நேசி நேசித்து கொண்டே இரு.. இறைவன் இந்த உலகை நேசத்தை மட்டுமே கொட்டி வைத்து படைத்து இருக்கிறான்.ஆனால் நாமோ நேசத்தை விட்டு விட்டு எதில் எதிலோ தொலைந்து வாழ்வில் நமது சுயத்தை இழந்து தவிக்கிறோம் என்றேன்..

நான் சொல்வதை மிகவும் அமைதியாக கேட்டு கொண்டவள்..எனது பெற்றோர் பாவம் இல்லையா மதி என்றாள்.

அப்படி இல்லை.உனது வாழ்க்கை பற்றி அவர்களுக்கு புரிய வை.. எந்த பெற்றோரும் தமது குழந்தை ஆனந்தமாக வாழவே நினைப்பார்கள் என்றேன்..

சரி மதி..நீ பேசியது எனக்கு மிகவும் ஆறுதல் அளித்து மன இறுக்கத்தை குறைத்து உள்ளது என்று சொல்லி விட்டு மணியை பார்த்தாள்..மணி எட்டை நெருங்கியது..

நான் சிரித்து கொண்டே கேட்டேன்.என்ன பசி வந்துவிட்டதா என்று..

ஆம் மதி.. நான் சமையல் செய்கிறேன் என்றாள்..

அதெல்லாம் வேண்டாம்.ஆப்பத்திற்கு மாவு ஆட்டி வைத்து உள்ளேன்.. கொஞ்ச நேரம் பொறு..இரவு உணவு தயாராகிவிடும்.நீ மேலே போய் மதுவிடம் பேசி விட்டு வா.. அதற்குள் தயாராகிவிடும் என்றேன் சிரித்தபடியே..

மதி மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி.. ஓர் நட்புக்கு தான் நட்பின் பிரச்சினை உள் வாங்கி தீர்வு சொல்ல முடியும் என்பதை உன் மூலம் உணர்ந்தேன்.இறைவனுக்கு நன்றி.. உன்னை போல ஓர் நட்பை கொடுத்ததற்கு என்று சொல்லி கொண்டு மாடிப்படியில் ஏறினாள்..

நான் அவள் வாழ்க்கைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இரவு உணவை தயார் செய்தேன்.


மீண்டும் பிரிதொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊.

#பயணத்தில் ஒரு சந்திப்பு

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக