பக்கங்கள்

வியாழன், 21 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (11).

 


✨நெருங்கி கொண்டிருந்த மாலை நேரத்தில் கொல்லைப்புறம் சென்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினேன்.. நான் எப்போது வருவேன் என்று காத்திருந்ததை போல செடிகளும் என்னை கண்டதும்  அழகாக தலையசைத்து வரவேற்றது.. இன்றாவது நீ எங்களுக்கு நீர் ஊற்றுவாயா என்பது போல இருந்தது அதன் அசைவதில்.. ஏனெனில் நேற்றே நீர் பாய்ச்சி இருக்க வேண்டும்..சிலபல வேலைகளில் விட்டு விட்டேன்.

இப்போது அது அசைந்து கேட்பதை உணர்ந்து இதோ வந்து விட்டேன் என்று மோட்டார் போட்டு ஓஸ் குழாயில்  தண்ணீர் பாய்ச்சினேன்...

மது கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தாள்.. என்ன அண்ணா நீர் பாய்ச்சுகிறீர்களா என்றாள்.ஆமாம் மது..நேற்றே செய்ய வேண்டிய வேலை என்று சொல்லி கொண்டே நீர் பாய்ச்சினேன்..

அண்ணா இங்கே எனக்கு உன்னோடு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. ரொம்ப அமைதியான தருணங்கள் இங்கே கிடைக்கிறது.. நிறைய புத்தகங்களை வாசிக்க எனக்கு ஓர் வாய்ப்பு.. மேலும் நீ இசையில் ஓட விடும் வீணையின் ஒலி..மனதை ஆழ்ந்த அமைதிக்கு எடுத்து செல்கிறது..

எவரை பற்றிய பேச்சும் இங்கே இல்லை.. மாறாக உன்னிடம் ஆறுதல் தேடி வரும் அழைப்புகள்..நீ பொறுமையாக அவர்களுக்கு சொல்லும் பக்குவமான பதில்கள்.. இங்கே வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து நீ கவனித்து கொள்ளும் அந்த வாழ்வியல்..எல்லாமே எனக்கு வாழ்க்கையை பற்றிய புரிதலை தந்து இருக்கிறது என்றாள்..

அப்படியா மது.. மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க்கை என்பது சிக்கலான விசயமே இல்லை..மது..அதை நாம் தான் மேலும் மேலும் சிக்கலாக்கி விட்டு அந்த சிக்கலை தீர்க்க வழியும் தேடுகிறோம்..

இதோ இங்கே மலர்ந்து இருக்கும் மலர்களை பார்..பல மலர்கள் இன்னும் சில கணங்களில் உதிர்ந்து விடும் தன்மை கொண்டது.. ஆனால் இப்போது கூட அது தலையசைத்து இருக்கும் நிமிடங்களில் தன் ஆனந்தத்தில் மூழ்கி திளைக்கிறது.. பார்.. கொஞ்சம் கூட சோர்வில்லாமல்.. என்றேன்..

ஆம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் வாழ்க்கை என்பது நமக்கு அப்படி அல்லவே.. இந்த பூக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.. நமக்கு அன்றாட நிகழ்வுகள் மற்றும் நாம் சந்திக்கும் மனிதர்கள் பொருளாதார ரீதியாக குடும்ப ரீதியாக நிறைய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறோம் அல்லவா.. இந்த மாதிரி பிரச்சினை இந்த பூக்களுக்கு இல்லையே என்றாள்.. என்னோடு நடந்து கொண்டே சில பூக்களை வருடியபடி..

உண்மை தான்.. ஆனால் இந்த படைப்புகளை போல தானே நம்மையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படைத்து இருப்பான்.. ஆனால் நாம் ஏன் எப்போதும் பிரச்சினைகளை சுமந்து செல்கிறோம் எங்கே போனாலும் என்று யோசித்தாயா மது? என்றேன்..

இல்லையே..அது ஏன் நமக்கு மட்டும் பிரச்சினை துரத்தி துரத்தி வருகிறது என்றாள் யோசித்தவாறே!

அது ஏன் என்றால் இங்கே இறைவன் படைப்பில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் இறைவன் படைப்பிலேயே இன்புற்று வாழ்க்கையை கழிக்கிறது.. நாம் மட்டுமே நமது அகங்காரத்தால் இறைவன் படைப்பை விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் மற்றும் நமது பேராசை எனும் உணர்வில் சின்னாபின்னமாக்கி பிறகு உட்கார்ந்து அந்த பிரச்சினையை தீர்க்க போராடுகிறோம்.. மேலும் சக ஜீவராசிகளின் வாழ்வியல் இடங்களை ஆக்கிரமித்து அதன் நிம்மதியை கெடுத்து அந்த விலங்குகள் ஊருக்குள் வரும் போது ஏதோ எதிராளியை போல அதன் உயிரை பறித்து..இத்தனை விசயங்கள் எதனால் நடக்கிறது.. அரசியல் . இந்த அரசியல்வாதிகளின் சுயநலம் மற்றும் மக்களின் இன்னும் இன்னும்.. சேர்த்து வைக்க வேண்டும் என்கின்ற பேராசை.. எல்லாம் தான் காரணம்.. என்றேன்.

ஆம் அண்ணா.. உண்மை தான் என்றாள்..

நகரங்களை இணைத்து புதிய புரட்சி செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் அரசாங்கம் அந்த புரட்சி எனும் தணலில் எத்தனை ஜீவராசிகளின் வாழ்விடம் மற்றும் அதன் வயிற்றில் கை வைத்தது ஞாபகம் வருமா? வனத்தின் ஆக்கிரமிப்பில் கமிஷன் பார்க்கும் நேர்மையற்ற ஒரு சில அதிகாரிகளுக்கு தெரியாது வனம் என்பது பலகோடி ஜீவராசிகளின் புகலிடமாக இறைவன் அளித்த கொடை வீடு என்று..

இவர்கள் செய்த ஒவ்வொரு தவறுகளும் மொத்தமாக திருப்பி இயற்கை பரிசாக கொடுத்து கொண்டு இருக்கிறது நமக்கு..ஒரு போரில் ஏதும் அறியாத ஜீவன்களும் கொல்லப்படுவது போல இந்த நவீன யுகத்தில் ஒன்றும் அறியாத ஜீவராசிகளும் மனிதாபிமான மனிதர்களும் நரக வேதனை அடைகிறார்கள்..

ஆம் அண்ணா.. மிகவும் வேதனையான விஷயம் தான்.. ஆனால் இதை தடுத்து நிறுத்த முடியாதா அண்ணா.. என்றாள் அப்பாவியாக..

தடுத்து நிறுத்த முடியும்.. ஆனால் அது இயற்கையை நேசிக்கும் மக்கள் தீவிரமாக இருக்கும் போது..இயற்கையை மட்டும் பாதுகாத்து மக்கள் இழந்த அழகான வாழ்வியலை மீட்டு தர மென்மையான மனதுடைய அரசனை நாம் பெறும் போது.. மேலும் இந்த வல்லரசு வல்லரசு என்று கிறுக்கு தனமாக சுற்றி திரியும் மனிதர்கள் இல்லாமல் போகும் போது இதெல்லாம் நடக்கும் என்றேன்.

நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக உள்ளது.. ஆனால் இதெல்லாம் நடக்காதே அண்ணா என்றாள் பாவமாக..

ஆம்..நடக்காது.. அதனால் தான் நான் அதை பற்றி எல்லாம் அதிகம் யோசிக்காமல் எனக்கான உலகத்தில் ஆனந்தித்து இருக்கிறேன்..புற விசயங்களை நோக்கி ஓடுவதால் தேவையில்லாத விகாரங்கள் தான் குப்பைகளாக சேர்கிறது.. அந்த குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது..

சாலை குப்பைகளை கூட்டி பெருக்கவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆள் வருகிறது.. இதில் மனகுப்பைகளை நீக்க எங்கே ஆள் தேடுவது? அப்படி கிடைத்தாலும் நாம் தானே சுத்தம் செய்ய முடியும்..வெளி ஆள் எவ்வாறு உதவ முடியும் என்று கேட்டேன்.. சிரித்து கொண்டே..

உண்மை தான் அண்ணா என்றாள் அவளும் சிரித்துக்கொண்டே..

நாங்கள் பேசி முடிக்கவும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ஞ்சி முடிக்கவும் சரியாக இருந்தது..

மது போய் மோட்டாரை நிறுத்து என்றேன்..

இதோ அண்ணா என்று ஓடி போய் நிறுத்தி விட்டு வந்தாள்..

அண்ணா தற்போது உங்கள் கைபக்குவத்தில் தேநீர் கிடைக்குமா என்றாள் சிரித்துக்கொண்டே..

இதோ அதற்கு தான் தயாராகிறேன் நானும் என்று சொல்லி கொண்டே நாங்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தோம்..

சிறிது நேரத்தில் எங்கள் கைகளில் தேநீர் கோப்பையை ஏந்தி சுவைத்து பருகிறோம் கொல்லைப் புறத்தில் உள்ள திண்டில் உட்கார்ந்து..

அந்திநேர சூரியன் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தது..

நாங்களும் அதன் அழகையும் சேர்த்து பருகிய படியே தேநீரையும் சுவைத்தோம்..

மீண்டும் பிரிதொரு சந்திப்பில்

 சந்திக்கலாம் வாசகர்களே 😊

#பயணத்தில் ஒரு சந்திப்பு (11).

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக